upali

உபாலி என்ற நாவிதர்

மூன்று அடிகள் கொண்ட அத்தியாயம்

பாலி மொழியிலிருந்து மொழிபெயர்த்தது

வண.பிக்கு சுஜாதா மற்றும் ஜெஸ்ஸிகா வால்டன்.

Upāli

Theragāthā 3.11.

Verses of the Senior Monks

Chapter of the Threes

Translated from th Pali

Bhikkhu Sujato with Jessica Walton

புதிதாகத் துறவு பூண்ட ஒருவர்

நம்பிக்கையின் காரணமாக வீட்டைத்

துறந்து சென்றவர்,

தூய்மையான வாழ்க்கை வாழும்,

சோம்பலற்ற ஆன்மீக நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

One newly gone forth,

Who has left their home out of faith,

Should associate with spiritual friends,

Whose livelihood is pure, and who are not lazy.

புதிதாகத் துறவு பூண்ட ஒருவர்

நம்பிக்கையின் காரணமாக வீட்டைத்

துறந்து சென்றவர்,

சங்கத்துடன் கூடி வாழும் துறவி

அறிவுடையவர் என்பதால்,

துறவற விநயங்களைப் (விதி முறைகளை) பயிற்சி செய்வார்.

One newly gone forth,

Who has left their home out of faith,

A monk who stays with the Saṅgha,

Being wise, would train in monastic discipline.

புதிதாகத் துறவு பூண்ட ஒருவர்

நம்பிக்கையின் காரணமாக வீட்டைத்

துறந்து சென்றவர்,

திறமையானது எது , திறமையற்றது எது என்பதை நன்கறிந்தவர்

தடுமாற்றமேதுமின்றி வந்து போவார்.

One newly gone forth,

Who has left their home out of faith,

Skilled in what is appropriate and what is not,

Would wander undistracted.

* * *

Original Source for following information on Upali Thera

"Dictionary of Pali Names" by G P Malalasekera (1899-1973) online

உபாலி தேரர் - புத்தரின் பெருமை மிகுந்த சீடர்களில் முக்கியமானவர் இவர். கபிலவத்துவில் ஒரு நாவிதர் குடும்பத்தில் பிறந்து, சாக்கிய இளவரசர்களின் பணியில் சேர்ந்தார். அனுருத்தரும் (Anuruddha) அவரது தமையனரும் வீடு துறந்து அனுபியா தோப்பில் தங்கியிருந்த (Anupiyā Grove) புத்தரிடம் துறவறம் கேட்கச் சென்றபோது, உபாலியாரும் அவர்களோடு சென்று கொண்டிருந்தார். அவர்கள் தங்களது விலையுயர்ந்த உடைமைகளையும், ஆபரணங்களையும் உபாலியாருக்குத் தானமாகத் தந்துவிட்டுச் செல்ல விரும்பியபோது உபாலியார் அவைகளை வாங்க மறுத்துத் தானும் அவர்களோடு துறவு மேற்கொள்ள முடிவு செய்தார்.

அந்த சாக்கிய இளவரசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, புத்தர் உபாலியாருக்கு முதலில் துறவுப் பட்டம் சூட்டினார். அந்த இளைஞர்கள் தங்கள் அகம்பாவம் குறைய வேண்டுமென்பதற்காகவே புத்தரிடம் இவ்வாறு வேண்டினர். (பௌத்த துறவிகள் தங்களுக்கு முன்னர் துறவு ஏற்றவரை வணங்குவது முறை.)

உபாலியரின் உபாத்தியாயர் (ஆசிரியர்) கப்பிதகர் (Kappitaka) என்பவர். ஒரு முறை உபாலியர் புத்தரிடம் தியானப் பயிற்சி கேட்கச் சென்றபோது, தான் வனத்தில் தனிமையில் பயிற்சி செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஆனால் புத்தர் அந்த வேண்டுகோளை மறுத்து விட்டார். உபாலியர் வனத்துக்குச் சென்றால் தியானம் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும் என்றும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்தால் தியானத்தோடு தம்ம வாழ்வையும், நெறிமுறைகளையும் கற்றுக் கொள்வார் என்பது புத்தரின் கருத்து. உபாலியர் புத்தரின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு விபாஸனத் தியானப் பயிற்சி செய்து நாளடைவில் அரஹந்தரானார். விநய பிடகத்தைப் (துறவிகள் ஒழுக வேண்டிய விதிமுறைகளை) புத்தரே உபாலியருக்கு முழுமையாகக் கற்றுத் தந்ததாகக் கூறப் படுகிறது.

சங்கக் கூட்டத்திலேயே, புத்தர் விநயத்தில் உபாலியரே மிகுந்த தேர்ச்சி பெற்றவர் என்று கூறியருளினார். (விநயதாரானம் என்பது அப்படிப்பட்டவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம்). விநயத்தின் உச்சத்தை எட்டியவராக அவர் பேசப்பட்டார். உபாலியர் விநய விதி முறைகளுக்கு இருப்பிடமாக உள்ளவர் என்றும் பேசப்பட்டார் (புத்தர் அவரை "விநயே அக்காணிகித்தோ" என்றே அழைத்தார்)

Vinayadharānaṃ, the one most proficient in the discipline

agganikkhitto : agga + nikkhitto: the highest + having laid down

புத்தர் மறைந்த சில ஆண்டுகளிலேயே அஜாதசத்துரு மன்னரின் தலைமையில் இராஜகிருகத்தில் முதல் சங்க சபை (First Council) கூட்டப் பட்டது. புத்தரின் போதனைகள் கூடியிருந்தோர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் திரும்ப ஓதப் பட்டது. அந்தச் சபையில் உபாலியர் தலைமையில் விநய பிடகம் ஓதப்பட்டது. அது சம்பந்தமாக எழுந்த கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் உபாலியர் விளக்கம் அளித்தார். தம்மம் சம்பந்தமான விஷயங்களுக்கு விளக்கம் தர ஆனந்தர் பொறுப் பேற்றார்.

உபாலியர் விநயத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் சங்க விதிமுறைகளைப் பொறுத்தவரை அவருக்கு விசேட அதிகாரம் இருந்தது. விநய விதிமுறைகள் அனைத்தையும் புத்தர் முதலிலேயே கூறிவிடவில்லை. ஒவ்வொரு விதிமுறையும் சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது உருவானது. விநயபிடகத்தில் பல இடங்களில் உபாலியர் புத்தரிடம் பல சிக்கலான விநய விதிமுறைமைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்கிறார். உதாரணமாக: “முடிவு செய்யப் படாத ஒரு விஷயம் இருக்குமேயானால் எந்தச் சூழ்நிலையில் ஒரு துறவி தானே ஒருமுடிவுக்கு வந்து அதன் படி நடந்து கொள்ள முடியும்? எப்படிப் பட்ட தகுதி கொண்டவராக இருந்தால் ஒரு துறவி மற்றொரு துறவி, விதிகளை மீறுவதைக் கண்டு அவரிடம் குறைகளைக் கூறித் திருத்த முடியும்? நன்னடத்தையை மீறிய ஒரு துறவி பரிசோதனை நிலையில் வைக்கப் பட்டிருந்தால் (probation) எந்தச் சூழ்நிலையில் பரிசோதனை நிலை காலத்திற்கேற்ப இடையீடு (interruption of the probationary period) செய்யலாம்?”

உபாலியர் கேட்ட கேள்விகளும் புத்தர் விநய விதிமுறைகள் சம்பந்தமான அந்த கேள்விகளுக்குத் தந்த பதில்களும் விநயபிடகத்தின் உபாலி-பாஞ்சக (Upāli-Pañcaka) என்ற அதிகாரத்தில் குறிபிடப்பட்டிருக்கிறது.

புத்தர் வாழ்ந்த காலத்திலேயே துறவிகள் விநயத்தைப் பற்றி உபாலியரிடம் கற்றுக் கொள்வதில் பெருமை கொண்டனர் என்று கூறப்படுகிறது. தங்களுக்கு எதேனும் சிக்கல் ஏற்பட்டால் உபாலியரை ஒரு நண்பராகக் கருதி அவரிடம் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கேட்டுச் செல்வார்களாம்.

புத்தகோசர் (5 ஆம் நூற்றாண்டு. இவர் ஒரு தமிழர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. களப்பிரர் ஆட்சியின் போது தமிழகதில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளது) தனது உரைநூலில் புத்தர் உயிருடன் இருக்கும் போதே உபாலியர் தனக்குப் பின் வரும் விநயதாரானர்கள் விநய விதிகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று சில அறிவுரைகளைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றும் மற்றவர்களுடன் சேர்ந்து விநயம் சம்பந்தமான விளக்க உரைகளையும் தொகுத்துள்ளார் என்றும் கூறுகிறார்.

உபாலியருக்குப் பின் தாசகர் (Dāsaka) என்பவர் விநயதாரானராகப் பொறுப்பேற்றார். உபாலியர் வளிகாராமா (Valikārāma) என்ற இடத்தில் தங்கியிருந்தபோது தாசகரை முதன் முதலில் சந்தித்ததாகவும் விநயத்தை முழுமையாக அவருக்குக் கற்பித்ததாகவும் கூறப்படுகிறது.

* * *