புத்தர் அவதாரம்

ஆசிய ஜோதி முகப்பு


ஆசிய ஜோதி

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

1. புத்தர் அவதாரம் 


"வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்டேன்;

வழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்;

மெய்யிதுஎன்று உய்யுநெறி காட்டி நன்மை

விளைவிப்பார் எவரையுமே கண்ணிற் காணேன்.                                          1        


            உய் – ஈடேறுகை, துன்பம் நீங்குகை;            உய்யுநெறி – வாழும் வழி 


எண்ணரிய சென்மங்கள் எடுத்து முன்னம்

எவ்வுடம்பின் எவ்வுயிர்க்கும் இடர் களைந்தேன்;

மண்ணுலகம் ஈடேற இன்னும் ஓர்கால்

மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன்;                                           2 


            இடர் – துன்பம்;            களைந்தேன் - நீக்கினேன்;             ஈடேற்றம் – உய்வு, liberation

            விளக்கம்: போதி சத்துவர் (புத்தர் ஆகப் போகிறவர்)  எண்ணரியாச் சென்மங்கள் எடுத்துத் தமது மாசுகளை 

            ஒவ்வொன்றாக நீக்கியிருக்கிறார். இப்போது புத்தராக அவதரிக்கத் தயாராகிவிட்டார் . 


இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு

எனக்குமில்லை; என்னைவழி பட்டு வாழும்

ஒப்பரிய அடியவர்கள் எவர்க்கும் இல்லை;

உண்மைஈது எந்நாளும் உண்மை யாமால்.                                                     3 


            ஈது = இது;             எந்நாளும் உண்மை யாமால் - என்றைக்கும் உண்மையாகும்                                      

            விளக்கம்: மனிதர்களின் ஈடேற்றத்திற்காகப் போதி சத்துவர் கடைசி  முறையாகப் பிறப்பெடுக்கிறார். இந்தப் பிறப்பில் 

            புத்தராகி அறத்தை உபதேசம் செய்கிறார். எண்ண முடியாத சென்மங்கள் பிறந்து, வருத்தமுற்று இறக்கும் சம்சாரச்

             சக்கரத்திலிருந்து விடுதலை  கிடைக்கிறது. ஈடேற்றம் கண்ட  எவர்க்கும் மறுபிறப்பு இல்லை. இது  உண்மை. மேலும் இந்த

            வாய்மை காலவரையற்றது. 


வானெழுந்து வளர்இமய மலையின் தென்பால்

வாழும்உயர் சாக்கியர்தம் மன்ன னுக்கு

யானுமொரு மகனாகச் செல்வேன்" என்றான்.

இமயவரை நோக்கிஅருள் இறைவன் மாதோ!                                              4 


            இமயவர் – தேவர். 

            தேவர்களைப் பார்த்துப் போதிசத்துவர், ‘நான் சாக்கிய 

            மன்னனுக்கு மகனாப்  பிறப்பேன்’ என்று கூறுகிறார். 


            “Yea!” spake He, “now I go to help the World 

            This last of many times; for birth and death 

            End hence for me and those who learn my Law. 

            I will go down among the Sàkyas, 

            Under the southward snows of Himalay, 

            Where pious people live and a just King.” 

                     “Light of Asia”, by Sir Edwin Arnold -  Book the First


வேறு 

அந்நாளில் அவ்விரவில் சுத்தோத னப்பேர்

அண்ணற்கு வாய்த்தமனை அலர்மங்கை யனையாள்

எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்

எந்நாடும் எவ்வுயிரும் இன்புறவே அம்மா!                                                     5 


            விளக்கம்: "வேறு" என்பது கவிதையின் சந்தம் (metre) மாறுபடுகிறது என்பதைக் குறிக்கும். 

            அலர் – மலர்;            அனையாள் - போன்றவள்;            அலர்மங்கை - திருமகள் 

            அலர்மங்கை யனையாள் – திருமகளைப் பொன்றவள் 

            திருமகள் – திருமாலின் மனைவி இலக்குமி. 

            "எந்நாடும் எவ்வுயிரும் இன்புறவே - அம்மா! " என்பதை 

            "எந்நாடும்  எவ்வுயிரும் இன்புறவே" என்று மட்டுமே படிக்க வேண்டும். "அம்மா!" என்ற  வார்த்தை அசை.  


வேறு

ஆறு கதிரொளி செய்திடுமீன் - கண்ணுக்கு

அற்புதக் காட்சி அளித்திடுமீன்

ஏறும் அழகு பொலிந்திடுமீன் - திசை

எட்டும் ஒளிர ஒளிவிடுமீன்.                                                                               6 


            ஆறு கதிரொளி - six rayed;            மீன் – நட்சத்திரம்


சின்னஞ் சிறுமருப் பாறுளதாய்க் - காம

தேனுவின் பால்நிறம் பெற்றுளதாய்,

மன்னும் மதவேழம் போன்றிடுமீன் - இந்த

வையம் ஒளிர ஒளிவிடுமீன்.                                                                            7 


            மருப்பாறு - மருப்பு + ஆறு ;            மருப்பு - யானைத்தந்தம்;

            பால் போன்ற வெண்மையான ஆறு யானைத்தந்தம் போன்ற கூர்முனை கொண்ட நட்சத்திரம். நட்சத்திரம் ஆறு முனையுடையது. 

            காமதேனு - தேவ லோகப் பசு;   

           மன்னும் மதவேழம் – மிகுந்த வலிமையுடைய யானை;       மன்னும் – மிகுதியான;       மதம் – வலிமை;    வேழம் - யானை             

            விளக்கம்: யானை வருவது போன்று மாயா தேவியார் கண்ட கனவின்   காரணமாகப் புத்தருக்கு விநாயகர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. 


விண்ணகம் விட்டு விரைந்திறங்கி - வரும்

வீதி யெலாம்ஒளி வீசிவந்து,

மண்ணகம் வாழ வலந்திரிந்து - தேவி

மாயை வயிற்றில் புகுந்ததுவே.                                                                         8 


            விண்ணகம் – மேலுலகம், ஆகாசம்;            மண்ணகம் – பூமி

            வலந்திரிந்து – வலது பக்கம் சுற்றிவந்து. 

            விளக்கம்: ஒரு உயிர் உண்டாகத் தாயும் தந்தையும் மட்டுமின்றி 

            மறு பிறப்பு  எடுக்கவிருக்கும் ஒரு சக்தியும் தேவை. 

            போதிசத்துவர் மேலுலகத்திலிருந்து வந்து மாயா தேவியார் வயிற்றில் வலதுபக்கமாகப் புகுகிறார். 


வேறு

வலமருங்கில் விண்மீனும் வயிற்றில் பாய

மாதேவி துயிலுணர்ந்து மகிழ்ச்சி யுற்றாள்;

உலைவறியாத் திருவருளை வியந்து நின்றாள்;

ஒருதாயுங் கண்டறியா இன்பங் கண்டாள்.                                                     9


            வலமருங்கில்: மருங்கு என்றால் பக்கம், side. வலமருங்கில் - வலது பக்கமாக, right side 

            உலைவறியா - உலைவு + அறியா - துன்பம் அறியாத 

            உலைவு – தோல்வி, துன்பம், தோல்வியறியாத இறைவனுடைய அருளை, அதாவது வெற்றித் திருமகனின் அருளை 


            That night the wife of King Suddhodana, 

            Màyà the Queen, asleep beside her Lord, 

            Dreamed a strange dream; dreamed that a star from heaven 

            Splendid, six-rayed, in colour rosy-pearl, 

            Whereof the token was an Elephant 

            Six-tusked, and white as mild of Kàmadhuk 

            Shot through the void; and, shining into her, 

            Entered her womb upon the right. Awaked, 

            Bliss beyond mortal mother’s filled her breast .. 

                     “Light of Asia”, by Sir Edwin Arnold 


வேறு

காலைக் கதிரோன் உதிக்குமுன் - ஆசிய

கண்ட மெலாம்ஒளி கண்டதுவே;

வேலைத் திரைகள் அடங்கினவே - திசை

வெற்புகள் நின்றுகூத் தாடினவே.                                                                   10 


            வேலைத் திரைகள் - கடல் அலைகள் 

            திசை வெற்புகள் - எட்டுத் திசைகளில் உள்ள மலைகள் 

            திரை – அலைகள், கடல் அலைகள் ; வெற்பு - மலை 


பட்ட மரங்கள் தளிர்த்தனவே - எங்கும்

பாழ்ங்கிண றும்ஊறிப் பொங்கினவே;

திட்டுத் திடர்மணற் காடும் - சுடுகாடும்

சில்லென்று பூத்துச் சிலிர்த்தனவே.                                                             11 


            பட்டமரம் - உலர்ந்துபோன மரம்

            திட்டுத் திடர்மணற் காடும் - பாலைவனம். பாலைவனத்தில் மணல் 

            திட்டுத் திட்டாகப் படிந்திருக்கும். அங்கு எதுவும் விளையாது. 


சீரிய ஓடை குளங்களிலே -நல்ல

செந்தா மரைகள் மலர்ந்தனவே;

பாரிலே அவ்விராக் கண்ட - புதுமையைப்

பாடிட வல்லவர் யாரேயம்மா!                                                                      12 


            பாரிலே அவ்விராக் கண்ட: உலகிலே அந்த இரவு கண்ட.. 


வேறு

ஒண்சுடர் உலகில் உதித்தெழு காலை

மன்னிருட் சோலையோர் பொன்னிறம் பொலிய,

நிரந்தொளி பரந்து நிறைவது போல,

மாயையின் மனத்தெழு மகிழ்ச்சியும் பொங்கி

இடைவெளி யின்றி எவ்வெவ் வுலகும்


                                                      

            ஒண்சுடர்: ஒளிவிடுகின்ற கதிரவன்;            சுடர் - சூரியன். ஒண் - ஒளி பொருந்திய 

            மன்னிருட் சோலை: மிகுந்த இருள் படிந்த சோலை பொன்னிறம் பொலிந்தது.

            மன் - மிகுந்த;             நிரந்தொளி : இடைவெளியற்ற ஒளி 


பாதல மீறாப் படர்ந்து சென்றது.              

"பிறந்திட இறந்தீர்! இறந்திடப் பிறந்தீர்!

எழுமின்! எழுமின்! யாவரும் எழுமின்!

புத்த பெருமான் புவியில் உதித்தனன்;

அவனை வணங்குமின்; அவன்வழி பற்றுமின்;


            பாதல மீறாப்: பாதால (கீழ் உலகம் - நரகலோகம்) உலகம்

            இறுதியாக, ஈறு - முடிவு 


அவனுரை கேண்மின்; அழிமனம் ஒழிமின்;

நலமுறு மெனவே நம்பி நாடுமின்;

உள்ளந் தெளிமின்; உறுதி கொண்மின்;

உய்யும் வழிஈது; உண்மையும் ஈதாம்!"

என்னும் மொழிகள் எவ்வெவ் விடத்தும்


            அழி – அழிந்து போதல்;            அழிமனம்: பக்குவமில்லா மனம். அழிவுக்கு எடுத்துச் செல்லும் மனம். 


மந்திர மொழிகளாய் வந்தெழக் கேட்டனர். 

அதனால்,

அமைதி நிலவி, அன்பு தழைத்துக்

குவலய முழுதும் குதூகல முற்றது.

கடலும் மலையும், காடும் மேடும், 


            குவலயம் – பூமி


பூவுல கறியாப் புதுமணம் கமழ,

இனிய தென்றல் எழுந்து வீசியது.

மறுநாட் காலை மகிழ்ச்சி மிகவே

கற்ற பெரியோர் கனவின் பயனைக்

கொற்றவன் அறியக் கூறியது இதுவாம்;                                                     13 


            கொற்றவன் – அரசன்


வேறு

"பாரரசி கண்டகனா நற்க னாவாம்;

பானுவுமே கற்கடக மனையில் நின்றான்;

சீரமையும் ஆண்மகனைப் பெறுவாள்; அந்தச்

செல்வமகன் தெய்வீக மகனே யாவான் 


            பாரரசி – பார் + அரசி;            பானு – சூரியன்;            கற்கடகராசி Cancer in the Zodiac; நண்டு;            சீர்- சிறப்பு

            விளக்கம்: சூரியன் கற்கடகராசியில் இருப்பது மிக நல்ல சகுனமாகக்  கருதப்படுகிறது.

 

ஓருமுயர் ஞானகுரு வாகி எங்கும்

உண்மையுப தேசங்கள் செய்வான்; வேண்டின்

வாரிதிசூழ் புவிமுழுதும் ஆள்வான்; அன்னோன்

மகிமையெலாம் எடுத்துரைப்பது எளிதோ? ஐயா!"                                     14 


            வாரிதி – கடல்


            And over half the earth a lovely light 

            Forewent the morn. The strong hills shook; the waves 

            Sank lulled; all flowers that blow by day came forth 

            As ’twere high noon; down to the farthest hells 

            Passed the Queen’s joy, as when warm sunshine thrills 

            Wood-glooms to gold, and into all the deeps 

            A tender whisper pierced. “Oh ye,” it said, 

            “The dead that are to live, the live who die, 

            Uprise in Limbos numberless much peace 

            Spread, and the world’s heart throbbed, and a wind blew 

            With unknown freshness over lands and seas. 

            And when dream-readers said, “The dream is good! 

            The Crab is in conjunction with the Sun; 

            The Queen shall bear a boy, a holy child 

            Of wondrous wisdom, profiting all flesh, 

            Who shall deliver men from ignorance, 

            Or rule the world, if he will deign to rule.” 

            In this wise was the holy Buddha born. 

                 “Light of Asia”, by Sir Edwin Arnold 


வேறு

ஒருநாள் பகலில் உச்சியம் பொழுதில்

அரண்மனை யருகில் அணிமலர் மலர்ந்து

நறுமணம் வீசுமோர் நந்த வனத்தில்

தழையும், பூவும் தலையில் தாங்கிக்

கோயிலில் நட்டஓர் கொடிமரம் போல


            தழைத்தல் – செழித்தல்;        தழை – இலை, தளிர் 


வளருமோர் அசோக மரத்தின் நிழலில்

மாயா தேவி வந்து நின்றனள். 

நிற்கவே,

உரிய காலம் உறுவதை உணர்மரம்,

உணராப் பொருளெதும் உலகினில் இல்லை;


மலர்முடி வணங்கி வளைந்து கவிந்தொரு

தழைவீ டாகச் சமைந்து நின்றது.

பாரிடம்,

பன்மலர் மலர்ந்தொரு பஞ்சணை யாயது;

பக்கத் தெழுமொரு பாறையும் பிளந்து,


மதலையை ஆட்ட மஞ்சன நீரை

ஓடும் அருவியாய் ஒழுக விட்டது.

தேவி,

நோவு நொம்பலம் நோக்கா டின்றியோர்

மகவினைப் பெற்று மகிழ்ச்சி யுற்றனள். 


            தழைவீ டாகச் சமைந்து நின்றது - வீடு போல மறைவிடத்திற்காகத் தடுப்பு   அமைத்தது 

            மஞ்சனம் – நீராட்டம், Ablutions, used of great persons; ceremonial bath as of a deity. 

            நோவு, நோக்காடு, நொம்பலம்: துன்பம், Distress;

            விளக்கம்: பேறு காலம் நெருங்கி வந்ததால் அசோக மரத்தின் நிழலில்

            நின்று கொண்டிருந்த மாயாதேவியாருக்கு வசதியாக அம்மரம் வளைந்து

            தழை வீடுபோல் அமைந்தது. பாரில் மலர்கள் சொரிந்து பஞ்சனையாக

            அமைந்தன. அருகில் இருந்த பாறை பிளந்து குழந்தையைக் குளிப்பாட்ட

            மஞ்சன நீர் (அபிடேக நீர்) பொழிந்தது. துன்பமேதும் இன்றிக் குழந்தையும் பிறந்தது. 


மகவின் அழகிய வடிவினில் அமைந்த

எண்ணான் கரிய இலக்கணம் கண்டு, இது

தெய்விக மகனெனச் செப்பினர் தெரிந்தோர். 


            இலக்கணம் – சிறப்பியல்பு, அடையாளம், Sign, symbol, distinctive mark; 

            எண்ணான்கு = எட்டு X நான்கு = 32 

            எண்ணான் கரிய இலக்கணம்: 32 முக்கியமான அடையாளங்களும் 

            (80  சிறிய அடையாளங்களும்) குழந்தையின் உடலில் காணப்பட்டன. 


சோபன மறிந்து சுத்தோ தனனும்

தாயை மகவொடு தண்டிகை ஏற்றி

அரண்மனை உய்த்திட ஆணை யிட்டனன். 


            சோபனம் – நல்ல முகூர்த்த நேரம், 

            உய்த்தல் – செலுத்துதல், To direct, guide; 

            தண்டிகை – பல்லக்கு, A kind of palanquin; 


தண்டிகை அந்நாள் தாங்கிட வந்தவர்,

மாநில மீது மனிதர் அனுதினம்

செய்யும் வினைகளைச் செப்பே டுகளில்

தீட்டி நான்கு திசைகளும் நின்று


காக்கும் காவலர், கனக மால்வரை

வாழிடம் விட்டு வந்த தேவரென்று

உண்மை யுணர்ந்தோர் உரைக்கின் றனரே.                                                  15


            விளக்கம்: தண்டிகையைத் தாங்கி வந்தவர்கள் மனிதர்களின் 

            வினைகளை  எழுதி வைக்கும், நான்கு திசைக் காவலர்கள்.

            மேருமலையில் வாழும் தேவர்கள் இவர்கள். 

            திசைக் காவல் தேவர்கள்:  Source

            வடக்குத் திசைக் காவலன்: குபேரன். பின் பற்றுவோர்: யக்‌க்ஷர்கள். நிறம்: மஞ்சல் 

            தெற்குத் திசைக் காவலன்: யமன். பின் பற்றுவோர்: கும்பாண்டர்.  நிறம்: நீலம் 

            கிழக்குத் திசைக் காவலன்: உம்பர்கோன், இந்திரன், . பின் பற்றுவோர்.  காந்தர்வர். நிறம்: வெள்ளை 

            மேற்குத் திசைக் காவலன்: வருணன். பின் பற்றுவோர்: நாகர். நிறம்: சிவப்பு. 

            

            கனகமலை – மேருமலை, இமயமலை. Meru, the golden mountain; 

 

வேறு

வெள்ளியில் அங்கி அணிந்து கொண்டு - கையில்

வெண்முத் தொளிரும் பரிசை யேந்தி

ஒள்ளணி வீரர் தொடர்ந்து வர - அங்கே

உம்பர்கோன் போகியாய் வந்து நின்றான்.                                                      16 


            அங்கி - உடுப்பு ;            உம்பர்கோன் – இந்திரன். Indra, the lord of the celestials;. 

            வெண்முத் தொளிரும்: வெண் முத்து ஒளிரும்;            போகி - சிவிகை சுமப்போர், Palanquin-bearer;. 

            ஒள்ளணி - ஒளி பொருந்திய ஆடை. 

            ஒள்ளணி : ஒள் – ஒளி, அழகு. ஒளி பொருந்திய அழகிய உடை  அணிந்த வீரர்கள். 


நீலக் குதிரையின் மீதிலேறி - ஒளிர்

நீல மணிவட்டம் கையிலேந்தி,

காலகும் பாண்டர் தொழுதுவர - எமன்

கஞ்சியை யாளாக வந்து நின்றான்.                                                              17 


            மணிவட்டம் – வீரக்கழல், சிலம்பு, Warrior's ankle-ring; 

            கும்பாண்டர் - kumbhandas Followers of Virūḍhaka blue, south 

            தென்புலக்கோன் – யமன். தென்புலம் – தெற்குத் திசை.

            Yama, as the Lord of the South; [தென்புலத்தின் தலைவன்]. 

            கஞ்சியை – கஞ்சிகை, சிவிகை, Palanquin. 


செக்கச் சிவந்த குதிரையேறி - உயர்

செம்மணிக் கேடகம் கையிலேந்தி,

பக்கத்தில் நாகர்கள் சூழவ ருணனும்

பள்ளிச் சிவிகையா ளாக வந்தான்.                                                                  18 


            மேற்றிசைப்பாலன் - வருணன் (மேற்றிசை + பாலன்), Varuna,  as the regent of the west. 

            பாலன் – காப்போன், உரிமையாளன் 

            செம்மணி – மாணிக்கம், Ruby. 

            கேடகம் – கேடயம், Shield 


பொன்னிறமான குதிரையேறி - நல்ல

பொன்னிலே செய்த கிடுகுமேந்தி,

மன்னிய யக்‌க்ஷர்க ளோடுகு பேரனும்

வண்ணச் சிவிகையா ளாக வந்தான்.                                                          19 


            கிடுகு – கேடகம், Shield

            குபேரன்: அஷ்டதிக்குப்பாலகருள் வடதிசைக்கு உரியவனும்

            நிதிக்கிழவனும் இயக்கர்களுக்கு அதிபதியுமான தேவன், kupēraṉ 

            சிவிகை pallanquin;             மன்னியர் – மதிக்கத்தக்கவர்


வேறு

ஆண்ட விருதுகள் யாவும் கரந்துலகு

ஐயுறா தங்குவந்தார் - அவர்

பூண்ட வடிவால் உடையால் அப்பல்லக்குப்

போகியர் தாமேயானார்.                                                                                  20 


            விருதுகள் - தலைவருக்குரிய விருதுகள், Paraphernalia of a king; 

            கரந்து - மறைந்து, துறந்து 


தேவர் இவரென யாவருங் கண்டு

தெளிந்திடா வாறுவந்து - திசைக்

காவலர் கூடிச் சிவிகையைத் தோளிலே

காவியெ டுத்தனரே.                                                                                              21


உம்பரும் அன்று மனிதராய் மாறி

உலாவிக் களித்து நின்றார் - என்றும்

அம்புவி வாழ இறைவனும் வந்தங்கு

அவதரித் தான் எனவே.                                                                                         22 


            உம்பர் – தேவர், உயர்ந்தோர்

            களித்து – மகிழ்ந்து, Merry 

            அவதரித்தல் - To be born, as when a god descends to become a creature or  when a saint is born;


            Of which the great news to the Palace came. 

            But when they brought the painted palanquin 

            To fetch him home, the bearers of the poles 

            Were the four Regents of the Earth, come down 

            From Mount Sumeru 

            they who write men’s deeds 

            On brazen plates 

            the Angel of the East, 

            Whose hosts are clad in silver robes, and bear 

            Targets of pearl: the Angel of the South, 

            Whose horsemen, the Kumbhandas, ride blue steeds, 

            With sapphire shields: the Angel of the West, 

            By Nàgas followed, riding steeds blood-red, 

            With coral shields: the Angel of the North, 

            Environed by this Yakshas, all in gold, 

            These, with their pomp invisible, came down 

            And took the poles, in cast and outward garb 

            Like bearers, yet most mighty gods; and gods 

            Walked free with men that day, though men knew not: 

            For Heaven was filled with gladness for Earth’s sake, 

            Knowing Lord Buddha thus was come again.

                  “Light of Asia”, by Sir Edwin Arnold 


வேறு

உண்மையிது சிறிதேனும் உணரா னாகி

ஒப்பரிய சுத்தோத னப்பேர் மன்னன்,

அண்மையில் நேர்ந்தது, அபசகு னமென்ன

அயர்ந்து மனம்வாடி யங்குஇருந்த காலை,                                                  23 


            ஒப்பரிய - ஒப்பில்லா மன்னன் 

            விளக்கம்: இவற்றையெல்லாம் உணராமல் மாயா தேவியார் கண்ட 

            கனவு அபசகுனமென நினைத்துச் சோர்ந்து விடுகிறான் சுத்தோதன  மன்னன். 


வேறு

கற்ற பெரியோர் கனாநூல் அறிந்தவர்கள்

கொற்றமுடி மன்னவனைக் கோயிலிலே சென்றுபணிந்து

"உலகம் முழுதும் ஒருகுடைக்கீழ் ஆளுமன்னன்,

அலகில் புகழுடையான், ஆண்மைத் திருவுடையான்,

ஓரா யிரமாண்டுக்கு ஒருமுறை தோன்றுமவன்.                                     24


            அலகில் புகழுடையான் அலகு – அளவு, அலகில் – (அலகு + இல்) 

            அளவு இல்லாத, அளவற்ற புகழுடையோன். 


சீரார் பெருமான், உன் செல்வமக னாய்வந்தான்;

எண்ணற் கரியபேறு ஏழுபெரும் பேறுஇந்த

மண்ணில் அவனுக்கு வாய்த்திருப்ப துண்டுஐயா!

தெய்வீக மான திருவாழி ஒன்றாகும்;


எய்தற் கரிய இரத்தினம் ஒன்றாகும்;

ஆகாய வீதிசெலும் அசுவமும் ஒன்றாகும்;

வாகான வெள்ளை வாரணமும் ஒன்றாகும்;

மதியிற் சிறந்தவொரு மந்திரி தானுண்டு;

சதுரில் தளராவோர் தளகர்த்தன் தானுண்டு;

காலைத் திருவின் கவினிற் சிறந்தநங்கை

சேலொத்த கண்ணியொரு தேவியும் உண்டு" என்றார்.


வேறு

இவ்வரிய பேறெல்லாம் எய்தற் கான

இம்மகனைப் பெற்றுமகிழ் கொண்டு மன்னன்,

"திவ்வியமா நகரெங்கும் சிறப்புச் செய்து

திருவிழாக் கொண்டாட வேண்டும்" என்றான்.                                            25 


            சீரார் பெருமான் - சிறப்புப் பொருந்திய பெருமகன் 

            சீரார் – (சீர் +ஆர்) சீர் – அழகு, ஆர் – நிறைவு, சீர் + ஆர் – அழகு நிறைந்த 

            பேறு - எழுபெரும் பேறு - ஏழு பேறுகள், Fortune, blessing 

            விளக்கம்: அரிய ஏழு பேறுகள்: 

            1. திருவாழி – சக்கராயுதம், Discus. 

            2. இரத்தினம் (தனிச்சிறப்புக் கொண்டது) 

            3. ஆகாயத்தில் பறக்கும் அசுவம் – பறக்கும் குதிரை, Horse; 

            4. வாரணம் – யானை, புகர்முக வாரணம் (மணி. 7, 115). Elephant; 

            5. அறிவு மிக்க மந்திரி, அறிஞன், Learned man 

            6. போர்த் திறன் மிக்க தளகர்த்தன் – படைத்தலைவன், Captain, general, 

            7. அழகான பண்புள்ள மனைவி 

            சதுர் – சாமர்த்தியம், அறிவு, Ability, skill, dexterity 

            காலைத் திருவின்: இளம் சூரியனின் அழகைவிட சேலொத்த - மீன்  போன்ற கண்ணுடையாள் 

            திவ்விய - பெருமை படைத்த 

            Saptaratna or seven jewels of a chakravartin, a ruler of the temporal world. 

            The seven jewels of a chakravartin are 

            the sacred wheel, 

            the white elephant of state,

            the perfect horse,

            the wish-fulfilling gem,

            the perfect minister(sometimes minister of state; sometimes of finance),

            the perfect wife and 

            the perfect general.

            At his birth Siddhartha had the choice of becoming either a chakravartin

             or a spiritual ruler of the universe. He chose the later and became 

            the Buddha Shakyamuni. The concept of chakravartin which predates

            Buddhism was absorbed into Buddhist theology so that Shakyamuni 

            could be considered the spiritual counterpart of the "world monarch".

                               Source: Metropolitan Museum of Art Publication

            

            Cakkavatti Sutta - With the appearance of a Cakkavatti there appear seven 

            treasures in the world; similarly, with the appearance of a Tathagata 

            there appear the seven treasures of wisdom - 

            mindfulness, searching of the Dhamma, energy, zest, tranquillity,  concentration, equanimity. 

                                Source Dictionary of Pali Proper Names - By G.P. Malalasekera


            But King Suddhodana wist not of this; 

            The portents troubled, till his dream-readers 

            Augured a Prince of earthly dominance, 

            A Chakravartãn, such as rise to rule 

            Once in each thousand years; seven gifts he has 

            The Chakra-ratna, disc divine; the gem; 

            The horse, the Aswa-ratna, that proud steed 

            Which tramps the clouds; a snow-white elephant, 

            The Hasti-ratna, born to bear his King; 

            The crafty Minister, the General 

            Unconquered and the wife of peerless grace, 

            The Strã-ratna, lovelier than the Dawn. 

            For which gifts looking with this wondrous boy, 

            The king gave order that his town should keep 

            High festival;

                    “Light of Asia”, by Sir Edwin Arnold 


வேறு

மாநகர் வீதி விளக்கிநின்றார் - குலை

வாழைகள் வாசலில் கட்டிநின்றார்;

வானுயர் தோரணம் நட்டுநின்றார் - எங்கும்

வாசமெழு பன்னீர் வீசிநின்றார்                                                                         26 


            விளக்குதல் - துலக்குதல், To clean, brighten, polish; 

            தோரணம் - தெருவில் குறுக்காகக் கட்டும் அலங்காரத் தொங்கல், 

            Festoons of leaves and flowers suspended across streets and entrances on auspicious occasions; 


கோல மிட்டார்கொடி தூக்கிவிட்டார் - உயர்

கோபுரம் எங்குமே தீபமிட்டார்;

சாலை கடை கோயில் வீதியெலாம் - மலர்த்

தாமங்களால் பந்தல் செய்துவைத்தார்.                                                          27 


            தாமம் – மாலை


பக்தியாய்ப் பூரண கும்பம் வைத்தார் - முளைப்

பாலிகைப் பக்கம் பொலிய வைத்தார்;

குத்து விளக்குகள் ஏற்றிவைத்தார் - முத்துக்

கோவைகள் எங்குமே தொங்கவிட்டார்.                                                      28 


            கும்பக்குடம் - கமண்டலம், பூக்குடம், 

            அழுகு படுத்திய நீர்க் குடம், Decorated water- pot carried in procession;   

            முளை கட்டுதல் : நவதானியங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு சுபச்சடங்கு. 

            பாலிகை – தாம்பாளம், அகன்ற தட்டு. 

            பாலிகை கொட்டுதல் – பாலிகைகளில் உள்ள முளை விட்ட பயிர்களை

            நீர்நிலைகளில் கலத்தல், The ceremony of emptying sprouts in the pālikai 

            கோவைகள் – முத்துக்களால் கோத்த மாலைகள். 

            கோ – ஒழுங்காக்குதல் Stringing, filing, arranging. 


தேகப் பயிற்சிகள் காட்டிடுவார் - சிலர்

செப்படி வித்தைகள் செய்திடுவார்;

வேக அரவைவிட் டாட்டிடுவார் - சிலர்

விண்ணில் வடங்கட்டித் தாவிடுவார்.                                                          29 


            செப்படி வித்தை – கண்கட்டு வித்தை, இல்லாததை இருப்பது போலத் தோற்றுவிப்பது. 

            வேக அரவு - வேகமாகச் செல்லும் பாம்பு,             அரவு – பாம்பு, பாம்பாட்டி வித்தைகாட்டுவது 

            விண்ணில் வடங்கட்டித் தாவிடுவார் - rope walking ;             வடம் – கயிறு


வாளினை வீசிவிளை யாடிடுவார் - சிலர்

மாறியெழும் ஊஞ்சல் ஆடிடுவார்!

தாளிற் சதங்கை இசைதரவே - பல

தாசிக ளும்சதிர் ஆடிடுவார்.                                                                              30 


            தாள் – கால்;            சதங்கை – கிங்கிணி, Strịng of small metal bells; 

            சதிர் – நாட்டியம், Nautch performance, Nautch 

            தாசி – தேவடிமை, (தேவ + அடிமை) Dancing-girl, as a servant of God;  


மானைப்போல் வேடமிட் டாடிடுவார் - சிலர்

வன்கரடி யாட்டம் ஆடிடுவார்;

கானப் புலியைப் பழக்கி - விளையாட்டுக்

காட்டிடு வார்நகர் வீதியெலாம்.                                                                         31 


            கானம் – காடு


மல்ல யுத்தம்சிலர் செய்திடுவார் - கோழி

வாத்துக்கள் சண்டைக்கு விட்டிடுவார்;

வெல்லுந் தகர்களை தாக்கவிட்டுச் - சுற்றி

வேடிக்கை பார்த்துக் களித்துநிற்பார்.                                                              32 


            தகர் - செம் மறியாட்டுக்கடா, Ram; 

            மல்ல யுத்தம் – மல் யுத்தம், Wrestling 


ஒத்த குழலிசை ஊதிடுவார் - கசிந்

துள்ளம் உருகவே பாடிடுவார்;

மத்தளம் கொட்டித் தலையசைப்பார் - வீணை

வாசித் தமுதம் வடித்திடுவார்.                                                                          33 


            ஒத்த குழல் - நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் 

            ஒத்து - A reed instrument conical in shape and enlarging downwards.

 

தேசம் புகழும் குலவணிகர் - மன்னன்

செல்வக் குமரனைக் கண்டிடவே,

ஆசை யெழத்தங்கத் தாலங்களில் - பல

அற்புதப் பண்டங்கள் ஏந்திவந்தார்.                                                              34 


            தாலம் - தட்டம், தாம்பாளம்


கம்பளி, சால்வை, கரும்படங்கள் வாசக்

கத்தூரி பச்சைக்கற் பூரங்களும்

அம்பொன் மணிமுத்து மாலைகளும் - வகைக்கு

ஆயிர மாயிரம் கொண்டுவந்தார்.                                                                  35 


            கத்தூரி – மான்மதம், ஒரு வாசனைப் பொருள். 

            பச்சைக் கற்பூரம் - Un Refined camphor;             அம் - அழகிய 


பத்து மடிப்பிலே மூடினாலும் - முகம்

பார்வை மறைந்திடாப் பட்டுக்களும்,

சித்திரச் சேலைத் தினுசுகளும் - நல்ல

செம்பொற் சரிகையுந் தாங்கிவந்தார்.                                                              36 


            பத்து மடிப்புக்குப் பின்னும் முகம் தெரியத் தக்க மெல்லிய துணி.

            உதாரணம்: Dhakka muslin - famous for transparency. 

            தினுசு – வகை, மாதிரி, Pattern, sample, 

            சரிகை - Gold or silver thread, used as lace; 


வந்தவர் யாவரும் வாழ்த்தி நின்றார் - திறை

வைத்தடி போற்றி வணங்கி நின்றார்;

சிந்தைக் கினிய திருமகனுக்கு - அவர்

சித்தார்த்தன் என்னவே நாமமிட்டார்.                                                                  37 


            திறை – காணிக்கை, கப்பம் Tribute;. 

            ...therefore the ways were swept, 

            Rose-odours sprinkled in the street, the trees 

            Were hung with lamps and flags, while merry crowds 

            Gaped on the sword-players, and posturers, 

            The jugglers, charmers, swingers, rope-walkers, 

            The nautch-girls in their spangled skirts, and bells 

            That chime light laughter round their restless feet; 

            The masquers wrapped in skins of bear and deer, 

            The tiger-tamers, wrestlers, quail-fighters, 

            Beaters of drum and twanglers of the wire, 

            Who made the people happy by command. 

            Moreover, from afar came merchant-men, 

            Bringing, on tidings of this birth, rich gifts 

            In golden trays; goat-shawls, and nard, and jade, 

            Turkises, “evening-sky” tint, woven webs 

            So fine twelve folds hide not a modest face 

            Waist-cloths sewn thick with pearls, and sandal-wood; 

            Homage from tribute cities; so they called 

            Their Prince Savàrthasiddh, “All-Prospering,” 

            Briefer, Siddhàrtha. 

                     “Light of Asia”, by Sir Edwin Arnold 


வேறு

மன்னன் திருமா மகனைக் காணப்

பற்பல நாட்டுளார் பற்பலர் வந்தனர்.

அவரோடு,

மண்நசை விட்டு மறச்செவி அடைத்தோன்,

ஐம்புலன் அடக்கி அறச்செவி திறந்தோன். 


            மண்நசை - மண்ணாசை 

            மறச்செவி - பாவம் பயக்கும் மொழிகளைக் கேட்குங் காது.     Ear that listens to sinful things; 

            அறச்செவி திறந்து மறச்செவி யடைத்து (மணி. 9, 60). 


அரச நீழலில் அனுதினந் தங்கி

அருந்தவம் புரிந்த அசிதமா முனிவன்

புத்த ஞாயிறு புவியில் உதித்ததென்று

இமையவர் எடுத்த இசையொலி யதனைத்

தியான வேளையில் தெளிவுறக் கேட்டு


            அனுதினம் - தினந்தோறும் ;            ஞாயிறு – சூரியன்

            இமையவர் - கண் இமைக்காதவர், தேவர், Celestials who have characteristic eyelids; Devas. 


மனத்தில் அடங்கா மகிழ்வொடு வந்தனன்; 

வந்த முனிவனை மன்னவன் அடிபணிந்து,

ஆசனம் உதவி, அர்ச்சனை செய்து,

மாயையை நோக்கி, மதலையை எடுத்துஅவன்

திருவடி வைத்திடச் செப்பினன். அவளும்


கணவ னிட்ட கட்டளை போற்றி

மைந்தனை எடுத்து வருவது கண்டு,

மாமுனி எழுந்து வணங்கி நின்று,

"பொறு,பொறு, தாயே! பொறு" எனத் தடுத்து,

"மதலாய்! நின்னடி மலரிணைத் தொழுதேன். 


            விளக்கம்: அசித மாமுனிவரை அரசன் வணங்குகிறான். முனிவரின் ஆசி

            வேண்டிக் குழந்தையை அவர் திருவடி அருகில் வைக்கச் சொல்கிறான்

            மன்னன். ஆனால் அந்த மாமுனியோ எழுந்து அந்தக் குழந்தையின்

            பாதங்களைத் தொட்டு வணங்குகிறான். The King bows to Asita Muni, 

            but Asita gets up and worships the feet of the baby - the Buddha to be. 

            மலரிணை - மலர் + இணை;            இணை - இரட்டை ,  மலர் போன்ற இரு பாதங்கள்.            


அவனே நீயாம் ஐயம் அதற்கில்லை!

பகவன் நீயே! பரமன் நீயே!

புனிதன் நீயே! புராணன் நீயே!

தருமன் நீயே! தலைவன் நீயே!

ஆதிநீயே! அறவோன் நீயே!


ஆயிர வாரத் தாழியான் நீயே!

உண்மை ஒளியால் உள்ளிருள் போக்கி

நன்மை விளைக்கும் ஞாயிறு நீயே!

யானும் இன்றுஉன் இணையடி பணிந்து,

பாரிற் பிறந்த பயனெலாம் பெற்றேன். 


            ஆயிர வாரத் தாழியான் - திருமால் 

            இணையடிகள் - A pair of feet; 


மன்னர் மன்னவ! மானிடத் தருவில்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு அப்பால்

மலரிதன் மணமே அறிவின் மணமாய்

ஒருமுறை மலரும் ஒண்மலர் இதுவாம்,

மலரிதன் மணமே அறிவின் மணமாய்


மனத்தின் மாசு மாற்றிடும், ஐயா!

மலரிதன் மதுவே அருளின் மதுவாய்

மன்னுயிர்க்கு இன்பம் வளர்த்திடும், ஐயா!

இம்மா மகனை ஈன்றவர் போல

மாதவஞ் செய்தோர் மாநிலத்து உண்டோ? 


            மானிடத் தருவில் - இந்த உலகு, தரு - மரம் 

            ஆயிரமாயிரம் ஆண்டு வளர்ந்த மரத்தில் அறிவின் மணமாய்ப் பூத்திருக்கும் ஒரு ஒளிமிக்க மலர் 

            மாசு மாற்றிடும் - மாசு நீக்கிடும் 

            மலரிதன் மதுவே அருளின் மதுவாய் 

            மன்னுயிர்க்குப் பயன் விளைக்கும். (மது – தேன்) 


ஆயினம், அரசே! அரிவாள் போல்உன்

நெஞ்சினை அறுக்கும் நெடுந்துயர் ஒன்றுஇம்

மகவால் உனக்கு வருவது திண்ணம்;

மங்கையர்க் கரசி, மாயா தேவி!

வாழ்கையோ துன்ப மயமாம்; அதனால் 


            திண்ணம் – உறுதி


ஏந்திய முத்தினை ஈன்றபின் இப்பி

மாண்டு மண்ணில் மறைவது போல,

இற்றைக்கு ஏழாம் நாளில் இறவா

இன்ப வீட எய்துவது

உண்மையாம்" என்று உரைத்து ஏகினனே. 38 


            இப்பி - முத்துச்சிப்பி. Pearl-oyster shell; 

            விளக்கம்: சிப்பி முத்தினை ஈன்றபின் எப்படி மாண்டுவிடுகிறதோ,

            அதேபோலப் போதிசத்துவரை ஈன்ற பின் மாயாதேவியாரும்

            இன்றிலிருந்து ஏழாம் நாள் மேலுலகம் சென்றடைவார் 

            என்பது அசிதமாமுனிவர் கூற்று. 


            ’Mongst the strangers came 

            A grey-haired saint, Asita, one whose ears, 

            Long closed to earthly things, caught heavenly sounds, 

            And heard at prayer beneath his peepal-tree 

            The Devas singing songs at Buddha’s birth. 

            Wondrous in lore he was by age and fasts; 

            Him, drawing nigh, seeming so reverend, 

            The King saluted, and Queen Màyà made 

            To lay her babe before such holy feet; 

            But when he saw the Prince the old man cried, 

            “Ah, Queen, not so!” and thereupon he touched 

            Eight times the dust, laid his waste visage there, 

            Saying, “O Babe! I worship! Thou art He! 

            I see the rosy light, the foot-sole marks, 

            The soft curled tendril of the 

            Swastika, 

            

            The sacred primal signs thirty and two, 

            The eighty lesser tokens. Thou art Buddh, 

            And thou wilt preach the Law and save all flesh 

            Who learn the Law, though I shall never hear, 

            Dying too soon, who lately longed to die; 

            Howbeit I have seen Thee. Know, O King! 

            This is that Blossom on our human tree 

            Which opens once in many myriad years 

            But opened, fills the world with Wisdom’s scent 

            And Love’s dropped honey; from thy royal root 

            A Heavenly Lotus springs: Ah, happy House! 

            Yet not all-happy, for a sword must pierce 

            Thy bowels for this boy 

            whilst thou, sweet Queen! 

            Dear to all gods and men for this great birth, 

            Henceforth art grown too sacred for more woe; 

            And life is woe, therefore in seven days 

            Painless thou shalt attain the close of pain.” 

            Which fell: for on the seventh evening 

            Queen Màyà smiling slept, and waked no more, 

            Passing content to 

            Trayastrinshas-Heaven 

            Where countless Devas worship her and wait 

            Attendant on that radiant Motherhead. 

            But for the Babe they found a foster-nurse, 

            Princess Mahàprajàpati 

            her breast 

            Nourished with noble milk the lips of Him 

            Whose lips comfort the Worlds. 

                    “Light of Asia”, by Sir Edwin Arnold 

            

*    *    *    *    *    *