உள்ளத்தை நல்லதாக்குவது

உள்ளத்தை நல்லதாக்குவது

அஜான் சா

Making the Heart Good

A Dhamma talk by Ajahn Chah

English

(வாட் பா போங் (Wat Pah Pong) விகாரைக்கு நன்கொடை வழங்கப் பெருந்திரளாக வந்திருந்த இல்லற மக்களுக்கு வழங்கப்பட்ட போதனை.)

இந்தக் காலத்தில் மக்கள் புண்ணியத்தைத் தேடி அலைகின்றனர். [1] இப்படித் தேடுதலின் போது அவர்கள் எப்போதுமே வாட் பா போங் விகாரைக்கும் வந்து செல்வதாகத் தெரிகிறது. போகும் போது இங்கு தங்கவில்லையென்றால் திரும்புகையில் இங்கு வருகின்றனர். வாட் பா போங் விகாரை தங்கிச் செல்லும் ஒரு இடமாகி விட்டது. சிலருக்கு மிக அவசரம். அவர்களிடம் பேசவோ, அவர்களைப் பார்க்கக்கூட எனக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. பெரும்பான்மையானோர் புண்ணியத்தைத் தேடுகின்றனர். தவறு செய்வதிலிருந்து விலக வழி தேடுபவர்கள் அதிகம் காணப் படுவதில்லை. புண்ணியம் தேடுவதில் அவர்களுக்கு உள்ள அக்கறையின் காரணமாக அதை எங்கே வைக்கப் போகிறோம் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. இது அழுக்குள்ள, துவைக்கப் படாத ஒரு துணிக்கு வண்ணம் தோய்ப்பதைப் போல.

துறவிகள் இவ்வாறு நேரடியாகப் பேசுவார்கள். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இது போன்ற போதனைகளை நடைமுறைப் படுத்துவது கடினம். ஏன் கடினம் என்றால் அவர்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டிருந்தால் பயிற்சி செய்வது மிக எளிதாக ஆகியிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு துவாரம் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் அடிப்பகுதியில் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது. அந்தத் துவாரத்தில் கையை நுழைத்து அதன் அடியைத் தொடமுடியாதோர் துவாரம் மிகவும் ஆழமானது என்பார்கள். நூறு பேர் அல்லது ஆயிரம் பேர் கையைவிட்டாலும் அவர்கள் அனைவரும் துவாரம் ஆழமானதென்றுதான் சொல்வார்கள். தங்கள் கை குட்டையானது என்று யாரும் சொல்லப்போவதில்லை!

புண்ணியம் தேடுபவர்கள் நிறையப்பேர் உள்ளனர். இப்போதில்லையென்றாலும் எப்போதாவது அவர்கள் தவறு செய்யாமல் விலகி வருவதற்கான வழியைத் தேட ஆரம்பிக்கப் போகின்றனர். ஆனால் இதில் ஆர்வம் உள்ளவர்கள் மிகச் சிலரே. புத்தரின் போதனை மிகச் சுருக்கமானது, அதனால் பலரும் பட்டும் படாமலும் அதன் ஓரமாக ஒதுங்கிச் சென்று விடுகின்றனர். இந்த வாட் போ போங் விகாரை வழியாகச் செல்பவர்களைப் போலத்தான் இதுவும். பலருக்கும் அதுவே அறமாகத் தோன்றுகிறது, பயணத்தின் போது தற்காலிகமாக நிற்க ஒரு தங்கும் இடம்.

மூன்றே வரிகள் தான், அதிகம் சொல்வதற்கேதும் இல்லை: "சப்பா-பபஸா-அகரணம்": அதாவது முதலில் தீயதைக் கைவிட வேண்டும், தவறானவற்றைக் கைவிட வேண்டும். எல்லாப் புத்தர்களின் போதனையும் இதுவே. பௌத்தத்தின் சாரம்சம் இதுவே. ஆனால் மக்கள் இதைத் தாண்டிக் குதித்து விடுகின்றனர். இதைச் செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை. தீயவற்றை எல்லாம் கைவிடுதல். அவை பெரிதோ சிறிதோ, உடலால், சொல்லால், மனத்தால் தீயவற்றைச் செய்யா திருத்தல்....இதுவே புத்தர்களின் போதனை.

ஒரு துணிக்கு வண்ணம் தோய்க்க வேண்டு மென்றால் முதலில் அதைத் துவைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்வதில்லை. துணியைப் பார்ப்பதற்கு முன்னரே அதைச் சாயத்தில் நனைத்து விடுகின்றனர். துணி அழுக்காக இருந்தால், சாயம் தோய்த்த பின் அது முன்பைவிட மோசமாகி விடும். நினைத்துப் பாருங்கள். அழுக்குக் கந்தல் துணிக்குச் சாயம் தோய்த்தால் அது அழகாக இருக்குமா?

தெரிகிறதா? இப்படித்தான் பௌத்தம் கற்பிக்கிறது. ஆனால் பெரும்பாலானோர் இதைத் தவிர்த்து விடுகின்றனர். நல்லதை மட்டும் செய்ய விரும்புகின்றனர், ஆனால் தீயதைக் கைவிட விரும்புவதில்லை. இது "துவாரம் மிகவும் ஆழமானது," என்று சொல்வதைப் போலத்தான். எல்லோரும் துவாரம் மிக ஆழமானது என்கின்றார்களே ஒழியத் தங்கள் கை மிகக் குட்டையானது என்று எவரும் சொல்வதில்லை. நாம் நம்மிடமே திரும்பி வர வேண்டும். இந்தப் போதனையைக் கொண்டு ஒரு படி பின் வாங்கி நம்மையே கவனிக்க வேண்டும்.

சில சமயம் புண்ணியத்தைத் தேடிப் பேருந்து வழியக் கூட்டமாகச் செல்வார்கள். பேருந்தில் சண்டை சச்சரவுகளும் இருக்கும். அல்லது அவர்கள் குடித்தும் இருப்பார்கள். அவர்களிடம் எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். தாங்கள் புண்ணியத்தைத் தேடிச் செல்வதாகக் கூறுவார்கள். புண்ணியம் வேண்டும், ஆனால் களங்கத்தைக் கைவிட எண்ணுவதில்லை. இந்த வழியில் ஒருநாளும் அவர்களுக்குப் புண்ணியம் கிடைக்கப் போவதில்லை.

இப்படித்தான் மக்கள் இருக்கின்றனர். மிகவும் உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். உங்களையே பார்த்துக் கொள்ளுங்கள். புத்தர் எந்தச் சூழ்நிலையிலும் தெரிந்த நிலையிலும், சுய நினைவோடும் இருக்கக் கற்பித்தார். உடலால், சொல்லால், மனத்தால் தவறான நடத்தை எழுகிறது. நல்லது, கெட்டது, நன்மை மற்றும் தீமை அவை அனைத்துக்கும் காரணம் நமது நடத்தையிலும், சொல்லிலும், எண்ணங்களிலுமே உள்ளன. இன்றைக்கு உங்கள் நடத்தையை, சொல்லை, எண்ணங்களை உங்களுடன் கொண்டுவந்தீர்களா? அல்லது அவற்றை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தீர்களா? இங்கு தான் பார்க்க வேண்டும், இதோ இங்கேயே! தொலைவில் எங்கும் பார்க்க வேண்டியதில்லை. உங்கள் நடவடிக்கைகளை, பேச்சினை ,எண்ணங்களைப் பார்க்க வேண்டும். உங்கள் நடத்தை தவறானதா இல்லையா என்று பாருங்கள்.

மக்கள் இது போன்ற செயல்களைப் பார்ப்பதில்லை. குடும்பத்தலைவி பாத்திரம் கழுவும் போது முகத்தைச் சுளித்துக் கொண்டு செய்வதைப் போல. பாத்திரங்களைச் சுத்தமாக மிகுந்த ஈடுபாட்டோடு கழுவும் தலைவி தனது மனத்தில் படிந்துள்ள அழுக்குகளை உணர்வதில்லை! இதைக் கவனித்திருக்கின்றீர்களா? அவர் பாத்திரங்களை மட்டுமே பார்க்கிறார். நெடுந்தூரம் பார்க்கின்றார், இல்லையா? உங்களில் சிலர் இதை அனுபவித்திருப்பீர்கள் எனக் கருதுகிறேன். இதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும். மக்கள் பாத்திரங்களில் உள்ள அழுக்குகளைக் கழுவுவதில் கவனம் செலுத்துகையில், தங்கள் மனத்தில் அழுக்குப் படிய விட்டு விடுகின்றனர். இது நல்லதல்ல. அவர்கள் தங்களையே மறந்து விடுகின்றனர்.

மக்கள் தங்களை உணர்ந்து கொள்ளாததால் பல்வேறு தீய செயல்களைச் செய்கிறார்கள். தங்கள் மனதை அவர்கள் பார்ப்பதில்லை. மக்கள் ஏதாவது தகாத செயலைச் செய்வதற்கு முன்னால் சுற்று முற்றும் பார்க்கிறார்கள். "வேறுயாரவது பார்க்கிறார்களா?" "அம்மா என்னைப் பார்த்துவிடுவாரா?" "கணவன் என்னைப் பார்த்துவிடுவாரா?" "எனது குழந்தைகள் என்னைப் பார்த்துவிடுவார்களா?" "எனது மனைவி என்னை பார்த்துவிடுவாளா?" என்று நோக்குகிறார்கள். யாரும் கவனிக்கவில்லையென்றால் அச்செயலைச் செய்ய அவர்கள் தயங்குவதில்லை. இது தங்களையே அவமதித்துக் கொள்ளும் செயலாகும். அவர்கள் மற்றவர் யாரும் தங்களைப் பார்க்காதபோது சட்டென்று தகாத செயலைச் செய்து முடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னவானார்கள்? அவர்களும் தன்னைத் தானே கவனித்துகொண்டிருக்கும் "ஒருவர்" தானே?

தெரிகிறதா? தங்களையே இவ்வாறு கவனிக்காததால், மக்கள் எது மதிப்பு உடையது என்பதைத் தெரிந்து கொள்வதே இல்லை, அவர்கள் அறத்தைக் கண்டுபிடிப்பது இல்லை. உங்களையே கவனித்தீர்களென்றால், உங்களையே பார்ப்பீர்கள். எப்போதாவது தவறு செய்யப்போகும் போது, உங்களையே சரியான நேரத்தில் கவனித்து விட்டால் தவறு செய்வதை நிறுத்தி விடலாம். எதாவது பயனுள்ளதாகச் செய்ய விரும்பினால் உங்கள் மனத்தையே கவனித்துக் கொள்ளுங்கள். உங்களை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டால் சரி எது, தவறு எது, தீமை, நன்மை, கெட்டது, பண்பானது என்பனவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளலாம். இவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை யென்றால் உங்களால் அவற்றைத் தெரிந்து கொள்ள முடியாது. மனத்தில் பேராசையும், அறியாமையும் இருக்கின்றது, ஆனால் உங்களுக்கு அது தெரிவதில்லை. புறத்தில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு எதுவும் தெரியாது. அகத்தில் பார்க்காதவரிடம் உள்ள பிரச்சனை இது தான். அகத்தில் பார்க்கும் போது நல்லதும், தீயதும் தெரியவரும். நன்மையைப் பார்க்கும் போது, நாம் அதை உள்ளப்பூர்வமாக எடுத்துக் கொண்டு அதன்படி பயிற்சி செய்யலாம்.

தீயதை விட்டுவிடு, நல்லதைப் பயிற்சி செய்...இதுவே பௌத்தத்தின் உள்ளம். "சப்பா-பபஸா-அகரணம்": உடலாலும், பேச்சாலும், மனத்தாலும் தவறானவற்றைச் செய்வதைக் கைவிட வேண்டும். அதுவே சரியான பயிற்சி, புத்தர்களின் போதனைகள். இப்போது "நமது துணி" சுத்தமானது.

அடுத்தது 'குசல-சுப-சம்பதா' - அதாவது மனத்தை ஒழுக்கப்படுத்தித் திறமையுடன் இருக்கச் செய்வது. மனம் பண்புடனும் திறமையுடனும் இருந்தால் ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு புண்ணியத்தைத் தேடி ஊரெல்லாம் போக வேண்டியதில்லை. வீட்டில் இருந்து கொண்டே புண்ணியம் சேர்க்கலாம். ஆனால் பெரும்பாலானோர் புண்ணியத்தைத் தேடி ஊரெல்லாம் அலைகின்றனர். ஆனால் தங்கள் தீய செயல்களை விட்டுவிட விரும்புவதில்லை. வீடு திரும்பும் போது வெறும் கையோடும் பழைய இருண்ட முகத்தோடும் திரும்புகின்றனர். அதோ! முகத்தைச் சுளித்துக் கொண்டே பாத்திரங்களைக் கழுவுகின்றனர். பாத்திரம் கழுவுவதில் அவ்வளவு அக்கறை! இதைத் தான் மக்கள் பார்ப்பதில்லை. அவர்கள் புண்ணியத்திட மிருந்து வெகு தொலைவில் இருக்கின்றனர்.

இவற்றைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் உள்ளத்தினுள் தெரியாவிட்டால் உண்மையில் நமக்குத் தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். பௌத்தம் நம் உள்ளத்தில் நுழையவில்லை . மனம் நன்றாகவும் ஒழுக்கமாகவும் இருந்தால் அது மகிழ்ச்சியாக இருக்கிறது. உள்ளத்தில் புன்னகை உள்ளது. ஆனால் நம்முள் பெரும்பாலானோருக்குப் புன்னகை செய்யவே நேரம் கிடைக்காமல் போய் விடுகிறதில்லையா? நாம் விரும்புவதுபோல நிகழ்ச்சிகள் அமைந்தால் மட்டுமே நாம் புன்னகைக்கிறோம். பெரும்பாலானோரின் மகிழ்ச்சி தாங்கள் நினைத்தவாறு நிகழ்வுகள் செல்வதை நம்பித்தான் அமைகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சிகரமான வற்றையே சொல்லவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இப்படியா மகிழ்ச்சியைக் கண்டு பிடிப்பது? உலகில் எல்லோரையும் உங்களுக்குப் பிடித்த செய்திகளை மட்டுமே பேசவைக்க முடியுமா? அப்படியென்றால் நீங்கள் மகிழ்ச்சியை எப்போது கண்டு பிடிக்கப் போகிறீர்கள்?

அறத்தைப் பயன்படுத்தி மகிழ்ச்சியைக் கண்டு பிடிக்க வேண்டும். சரியானதோ, தவறானதோ, எதுவாக இருந்தாலும் கண்மூடித்தனமாக அதனோடு பற்றுக் கொள்ள வேண்டாம். அதைக் கவனித்து விட்டு வைத்துவிடுங்கள். மனம் ஆறுதலோடு இருக்கும் போதுதான் நீங்கள் புன்னகை செய்ய முடியும். எப்போது எதன் மீதாவது வெறுப்புக் கொள்கிறோமோ, அப்போதே மனம் கெட்டு விடுகிறது. அதன் பின் எதுவுமே நல்லதாகத் தெரிவதில்லை.

'சட்சித்த பரியோத பானம்': மனக்கிலேசங்களை ஒதுக்கிய மனம் கவலைகளிடமிருந்து விடுதலை பெறுகிறது...அமைதியோடும், அன்போடும், பண்போடும் இருக்கிறது. மனம் பிரகாசமாக இருக்கும் போதும், தீயதை விலக்கிய பின்பும் எந்நேரமும் ஆறுதலாக இருக்கும். சாந்தமான, அமைதியான மனம் மனித சாதனையின் உண்மையான உச்சக் கட்டம்.

மற்றவர் நமக்குப் பிடித்ததைச் சொன்னால் நாம் சிரிக்கிறோம். அவர்கள் நமக்குப் பிடிக்காததைச் சொன்னால் நாம் முறைக்கிறோம். ஒவ்வொரு நாளும் எப்படி மற்றவர்களை நமக்குப் பிடித்ததையே சொல்ல வைப்பது? சாத்தியமா இது? உங்கள் குழந்தைகளையே எடுத்துக்கொள்ளுங்கள்....அவர்கள் எப்போதாவது உங்களுக்குப் பிடிக்காததைச் சொல்லியிருக் கின்றார்களா? உங்கள் பெற்றோரை எப்போதாவது நீங்கள் மனத்துயரம் அடையச் செய்திருக் கின்றீர்களா? மற்றவர் மட்டும் அல்ல, நமது மனங்களே நம்மைச் சீர்குலைய வைத்திருக்கின்றன. சில சமயம் நாம் நினைப்பதே நமக்குப் பிடிப்பதில்லை. என்ன செய்வது? நீங்கள் நடந்து கொண்டிருக்கையில் ஒரு மரக்கட்டையில் உங்கள் கால் உதை படலாம்.. அய்ய்ய்!..."ஓ!... எங்கு பிரச்சனை? யார் யாரை உதைத்தது? யாரைக் குறை கூறுவது? தவறு உங்கள் மீதுதான். நமது மனம் கூட நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இது உண்மையென்பது தெரியும். சில சமயம் நாம் செய்வது நமக்கே பிடிப்பதில்லை. நம்மால் சொல்ல முடிவதெல்லாம் "சைய்!", வேறுயாரையும் குறைகூற முடிவதில்லை.

பௌத்தத்தில் புண்ணியம் அல்லது வரம் என்பது தீயதைக் கைவிடுவதுதான். தீயதை விட்டு விட்டால் நாம் தவறு செய்வதில்லை. அழுத்தம் இல்லாத போது அங்கு அமைதி இருக்கும். அமைதியான மனம் தூய்மையான மனம், அதனுள் கோபமான எண்ணங்கள் இல்லை, அது தெளிவானது.

மனத்தை எப்படித் தெளிவாக்குவது? அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் நினைக்கலாம், "இன்றைக்கு நான் மோசமான மனோபாவத்துடன் இருக்கிறேன். எதைப் பார்த்தாலும் அது என் மனத்தைப் புண்படுத்துகிறது, அலமாரியில் உள்ள தட்டுகளும் கூட." அவை ஒவ்வொன்றையும் உடைத்துவிடலாம் என்று கூடத் தோன்றுகிறது. எதைப்பார்த்தாலும் அது சரியில்லாததாகத் தோன்றுகிறது. கோழிகள், வாத்துகள், பூனைகள், நாய்கள்...அவற்றை எல்லாம் வெறுக்கின்றீர்கள். உங்கள் கணவன் கூறுவதெல்லாம் உங்களை அவமதிப்பதாகத் தோன்றுகிறது. உங்கள் மனத்தைப் பார்த்தாலும் உங்களுக்குத் திருப்தி இல்லை. இந்தச் சூழ் நிலையில் நாம் என்ன செய்வது? இந்தத் துக்கம் எங்கிருந்து வருகிறது? இதுதான் "புண்ணியமே இல்லாதது" என்பது. இந்தக் காலத்தில் தாய்லாந்தில் யாராவது இறந்தால் அவர்கள் புண்ணியம் முடிந்து விட்டதென்று சொல்வது வழக்கம். ஆனால் உண்மையில் அப்படி அல்ல. புண்ணியத்தை முடித்து விட்டு, உயிரோடு உள்ள பலர் இருக்கின்றனர்...புண்ணியம் தெரியாத மக்கள் அவர்கள். மோசமான மனம் மேலும் மேலும் தவற்றைச் சேர்க்கிறது.

இது போன்று புண்ணியம் சேர்க்கும் பயணம் போவதென்பது, நிலத்தைச் சீர் செய்யாமலே அழகான வீடு கட்டுவது போல. அந்த வீடு இடிந்து விழ அதிக நாட்கள் ஆகாது. இல்லையா? செயற்திட்டம் சரியில்லை. இனி வேறு விதமாக மீண்டும் முயற்சிக்க வேண்டும். உங்களுக்குள்ளேயே பார்க்க வேண்டும். உங்கள் செய்கையில், சொல்லில், எண்ணங்களில் உள்ள தவற்றைப் பார்க்க வேண்டும். உங்கள் செய்கையில், சொல்லில், எண்ணத்தில் அல்லாமல், வேறு எங்கு பயிற்சி செய்யப் போகின்றீர்கள்? மக்கள் தொலைந்து விடுகின்றனர். அவர்கள் அறத்தை அமைதியான இடத்தில், காட்டிலோ, வாட் போ போங் விகாரைக்கோ சென்று பயிற்சி செய்ய விரும்பு கின்றனர். வாட் போ போங் அமைதியாக இருக்கிறதா? இல்லை, இங்கு அப்படிப்பட்ட அமைதி இல்லை. உண்மையான அமைதி உங்கள் இல்லத்திலேயே இருக்கிறது.

மெய்யறிவு இருந்தால் எங்கு சென்றாலும் நீங்கள் கவலை இல்லாமல் இருக்கலாம். உலகம் முழுதும் இருக்கும் நிலையில் சரியாகவே இருக்கிறது. காட்டில் உள்ள எல்லா மரங்களும் எப்போதும் போலவே நன்றாக இருக்கின்றன: உயரமானவை இருக்கின்றன, குட்டையானவை, குழிவிழுந்தவை.. எல்லா விதமான மரங்களும் உள்ளன. அவை எப்போதும் போலவே இருக்கின்றன. அவற்றின் உண்மையான இயல்பு தெரியாமல் நமது கருத்துக்களை அவற்றின் மீது திணிக்கப் பார்க்கிறோம்... "ஓ, இந்த மரம் மிகவும் குட்டையாக இருக்கிறது! இந்த மரம் குழி விழுந்து கிடக்கிறது!" அந்த மரங்கள் வெறும் மரங்களே. அவை நம்மைவிட நல்ல நிலையிலேயே இருக்கின்றன.

அதனால் தான் நாம் இந்த விகாரையில் உள்ள மரங்களில் சிறு சிறு கவிதைகளை எழுதி வைத்திருக்கிறோம். மரங்களாவது உங்களுக்குக் கற்றுத் தரட்டும். அவற்றிடமிருந்து எதையாவது நீங்கள் கற்றுக் கொண்டீர்களா? அவற்றிடமிருந்து ஏதாவது ஒன்றையாவது நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அத்தனை மரங்கள் இருக்கின்றன. எல்லாம் உங்களுக்குக் கற்றுத் தருவதற்கே இருக்கின்றன. அறம் எல்லா இடங்களிலும், இயற்கையில் எல்லாவற்றிலும் இருக்கின்றது. இந்தக் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். குழி பெரிதாக இருப்பதாகக் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம்...திரும்பி உங்கள் கையையே பாருங்கள்! இதைப் பார்க்க முடிந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

புண்ணியம் அல்லது பண்பைச் சேகரித்தால், அதை மனத்தினுள் வைத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது தான் அவற்றை வைத்திருக்கச் சிறந்த இடம். புண்ணியத்தை இன்று செய்தது போலச் செய்வதும் நல்லது தான், ஆனால் இது சிறந்த முறை அல்ல. கட்டிடங்கள் கட்டுவது நல்லது. ஆனால் அது சிறந்தது அல்ல. உங்கள் மனத்தைச் சிறப்பாகக் கட்டுவதே மிகச் சிறந்த வழி. இப்படிச் செய்தால் இங்கு வந்தாலும் வீட்டிலேயே இருந்தாலும் நல்லதைக் காண்பீர்கள். இந்த உன்னதமானதை உங்கள் மனத்திலேயே கண்டுபிடியுங்கள். இந்த மண்டபம் போன்ற கட்டிடங்களெல்லாம் மரத்தின் வெளிப்பட்டைகளைப் போலத்தான். இவை மரத்தின் தண்டாகாது.

மெய்யறிவு இருந்தால் எங்கு நோக்கினாலும் அங்கு அறத்தைக் காணலாம். மெய்யறிவு இல்லையென்றால் நல்லதும் கெட்டதாகிவிடும். இந்தக் கெட்டது எங்கிருந்து வந்தது? நமது மனத்திலிருந்து தான். அங்கிருந்தே தான் வந்தது. இந்த மனம் எப்படி மாறுகிறது என்பதைப் பாருங்கள். எல்லாம் மாறுகிறது. கணவனும் மனைவியும் ஒரு சமயத்தில் ஒன்றாக ஒற்றுமையோடு இருப்பார்கள். ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் ஒரு நாள் அவர்கள் மனோபாவம் மாறி விட்டால், மற்றவர் சொல்வதெல்லாம் தங்களைப் புண்படுத்துவ தாகவே தெரிகிறது. மனம் கெட்டுவிட்டது, மாறிவிட்டது. நடப்பது அப்படித்தான்.

எனவே தீயதை விட்டுவிட்டு நல்லதைப் பேண வேறு எங்கும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. உங்கள் மனம் கெட்டுவிட்டால் அவரைத்தேடி, இவரைத்தேடிச் செல்ல வேண்டாம். உங்கள் மனத்தையே பாருங்கள், இந்த எண்ணங்கள் எங்கிருந்து வந்தன என்பதைப் பாருங்கள். மனம் ஏன் இப்படிப்பட்ட எண்ணங்களை நினைக்கிறது? எல்லா நிலைமைகளும் தற்காலிகமானவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அன்பும் தற்காலிகமானது, வெறுப்பும் தற்காலிகமானது. நீங்கள் உங்கள் குழந்தைகளை எப்போதாவது நேசித்திருக்கின்றீர்களா? கண்டிப்பாக நேசித்திருப்பீர்கள். அவர்களை எப்போதாவது வெறுத்திருக்கின்றீர்களா? அதற்கும் நானே பதில் கூறிவிடுகிறேன்..சில சமயம் வெறுத்திருக் கின்றீர்கள், இல்லையா? அவர்களைத் தூக்கி எறிந்துவிட முடியுமா? இல்லை, அவர்களைத் தூக்கி எறிந்துவிட முடியாது. ஏன் முடியாது? குழந்தைகள் துப்பாக்கிக் குண்டுகளைப் போல அல்ல, அப்படித்தானே? [2] துப்பாக்கிக் குண்டுகள் வெளியே பாய்கின்றன, ஆனால் குழந்தைகள் திரும்பப் பெற்றோரை நோக்கியே பாய்கின்றனர். அவர்கள் கெட்டவர்களாக இருந்தால் அது பெற்றோரையே சேர்கிறது. குழந்தைகள் உங்கள் கம்மம் (செய்கை) என்று கூறலாம். நல்ல குழந்தைகளும் உள்ளனர், கெட்ட குழந்தைகளும் உள்ளனர். நல்லதும் கெட்டதும் உங்கள் குழந்தைகள் மத்தியிலேயே இருக்கின்றன. ஆனால் கெட்டுப்போனவர்களும் உங்களுக்கு மிக முக்கியமானவர்களே. ஒரு குழந்தை போலியோ நோயோடு பிறந்திருக்கலாம், நொண்டியாகவும் உடல் குறைபாடுகளோடும் இருக்கலாம். ஆனால் மற்றவர்களைவிட அந்தக் குழந்தைதான் உங்கள் உயிருக்குயிரான குழந்தையாகவும் இருக்கும். எப்போது நீங்கள் வீட்டைவிட்டுச் சென்றாலும், "சின்னவனைப் பார்த்துகொள், அவனுக்கு அவ்வளவு வலிமை இல்லை," என்று சொல்லி விட்டுத் தான் செல்வீர்கள். அவனிடம் மற்றவர்களைவிடக் கூடுதலான அன்பு காட்டுவீர்கள்.

உங்கள் மனத்தைச் சரியாக ஏற்றுக் கொள்ளத் தக்கதாக வைத்துக் கொள்ள வேண்டும் - பாதி அன்பு, பாதி வெறுப்பு (அதாவது இரண்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்). ஒரு பக்கத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டாம், இரு புறத்தையும் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்கள் கம்மம், அவர்களின் பெற்றோருக்குத் தகுந்தார்ப்போல நடந்து கொள்கின்றனர். அவர்கள் உங்கள் வினைப்பயன். எனவே அவர்கள் உங்கள் பொறுப்பு. அவர்கள் உங்களுக்குத் துக்கம் விளைவித்தால் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், "இது என் கம்மம் (செய்கை)." அவர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியூட்டினாலும் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், "இது என் கம்மம்." சில சமயம் வீட்டில் தாங்க முடியாத தொல்லைகள் இருக்கும், வீட்டைவிட்டு ஓடிவிடலாமா என்றுகூடத் தோன்றலாம். சில சமயம் பிரச்சனைகளைத் தாங்க முடியாமல் சிலர் தூக்கு போட்டுக் கொள்வது பற்றிக் கூட நினைக்கின்றனர்! அது கம்மம். இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தவறான செயலைச் செய்ய வேண்டாம். அப்போதுதான் உங்களையே நீங்கள் தெளிவாகப் பார்க்க முடியும்.

எனவே தான் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பது முக்கியம். பொதுவாகத் தியானிக்கும் போது ஒரு தியானப் பொருளைப் பயன்படுத்துவது வழக்கம், புத்-தோ, தம்-மோ அல்லது சங்-கோ போன்றவை. இதைவிடச் சுருக்கமாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். உங்களுக்குச் சினமுண்டானாலும், மனம் மோசமான நிலையில் இருந்தாலும், "அதனால் என்ன!" என்று சொல்லிக் கொள்ளுங்கள். பின் மனம் ஆறுதலடைந்தபின் , "அதனால் என்ன!" என்று சொல்லிக்கொள்ளுங்கள். கோபம் உண்டாவது போலத் தோன்றினால், "அதனால் என்ன!" என்று சொல்லிக் கொள்ளுங்கள். புரிகிறதா? திரிபிடகத்தை [3] எடுத்து அதில் தேட வேண்டுமென்று இல்லை. வெறும், "அதனால் என்ன!" என்று சொல்லிக் கொள்ளுங்கள். அப்படியென்றால் "இது தற்காலிகமானது," என்று பொருள். அன்பு தற்காலிகமானது, வெறுப்பு தற்காலிகமானது, நல்லது தற்காலிகமானது, தீயது தற்காலிகமானது. அவை எப்படி நிரந்தரமானவையாக இருக்க முடியும்? அவற்றில் நிரந்தரமானது எங்கு உள்ளது?

அவை உறுதியாக நிலையற்றவை என்பது மட்டுமே நிரந்தரமானது. இந்த விதத்தில் அவை உறுதியானவை. வேறு எப்படியும் இருக்க முடியாது. ஒரு நிமிடம் அன்பு இருக்கும், அடுத்து இருப்பது வெறுப்பு. அதுதான் நிலமைகளின் இயல்பு. இந்த விதத்தில் அவை நிரந்தரமானவை. அதனால் தான் நான் சொல்வது எப்போது அன்பு தோன்றினாலும் அதனிடம் "அதனால் என்ன!" என்று சொல்லிவிடுங்கள். இது உங்கள் நேரத்தை மிகவும் மிச்சப்படுத்தும். நீங்கள் "அனிச்சம், துக்கம், அனத்தம்," என்று சொல்ல வேண்டியதில்லை. தியானத்தின் போது பிரதிபலிக்க நீண்டதாக எதுவும் வேண்டா மென்றால் இதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்..அன்பு எழுந்தால், அதனுள் மூழ்கிவிடுவதற்குள், உங்களிடமே "அதனால் என்ன!" என்று சொல்லிக் கொள்ளுங்கள். இது போதும்.

எல்லாமே தற்காலிகமானவை என்பதுதான் நிரந்தரம். இதை மட்டுமே தெரிந்து கொண்டால் அறத்தின் உள்ளத்தைப் பார்த்தது போல. இதுவே உண்மையான அறம்.

இப்போது எல்லோரும் "அதனால் என்ன!" என்று சொல்ல முயன்று , இவ்வாறு பயிற்சி செய்யத் தொடங்கினால், பற்றுக் குறைந்து கொண்டே வரும். மக்கள் அன்போடும் வெறுப்போடும் இந்த அளவு ஒட்டிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நிகழ்வுகளோடு பற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் உண்மையின் மீது நம்பிக்கை வைப்பார்கள். மற்றவற்றோடு அல்ல. இது மட்டும் தெரிந்து கொண்டால் போதும். வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

இந்தப் போதனையைக் கேட்ட நீங்கள் அதை நினைவில் நிலை நிறுத்தி வைக்க வேண்டும். எதை நினைவில் வைக்க வேண்டும்? தியானம்... புரிகிறதா? புரிகிறதென்றால் அறம் உங்களுக்கு விளங்குகிறது. மனம் நின்றுவிடும். மனத்தில் கோபம் தோன்றினால் வெறும், "அதனால் என்ன!"... அது போதும். சினம் உடனே நின்றுவிடும். இன்னமும் தெளிவாகப் புரியவில்லையென்றால் நிலைமைகளை ஆழமாகப் பார்க்க வேண்டும். அறிந்து கொண்ட பின், மனத்தில் கோபம் தோன்றினால் அதை "அதனால் என்ன! அது நிலையற்றது" என்று சொல்லி உடனே அதை நிறுத்தி விடலாம்.

இன்று அறத்தை அகத்திலும் புறத்திலும் பதிவு செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அகத்தில் சப்தம் காதினுள் நுழைந்து மனத்தில் பதிவாகியது. இதைக்கூட உங்களால் செய்ய முடியவில்லை யென்றால் அது சரி அல்ல, வாட் பா போங் விகாரையில் இருந்த உங்கள் நேரம் வீணாகிவிட்டது. புறத்தில் பதிவுசெய்து, அகத்திலும் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்தப் பதிவு இயந்திரம் (டேப் ரிகார்டர்) முக்கியமில்லை. முக்கியமானது மனத்தினுள் உள்ள "ரிகார்டர்" தான். இந்த டேப் ரிகார்டர் அழியக் கூடியது. ஆனால் அறம் உங்கள் மனத்தில் பதிவாகிவிட்டால் அதை அழிக்கமுடியாது, எக்காலத்துக்கும் நிலத்திருக்கும். பின் பேட்டரிக்குக் காசு செலவு செய்ய வேண்டிய தேவையிருக்காது.

* * * * * * *

1 "புண்ணியம் தேடுவது" என்பது தாய் மொழியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர். விகாரைகளுக்குச் சென்று போற்றுதற்குரிய ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி நன்கொடை வழங்குவதைக் குறிக்கும்.

2. தாய் மொழியில் "லுக்" என்றால் குழந்தைகள், "லுக் பிபியூன்" என்றால் "துப்பாக்கிக் குழந்தைகள்" அதாவது துப்பாக்கிக் குண்டுகள். இவ்விரண்டு வார்த்தைகளை வைத்து அஜான் சா விளையாடுகிறார்.

3. பௌத்த அற நூட்கள்.

* * * * * * *

© Copyright

Provenance: 1992 The Sangha at Wat Pah Nanachat. First impression, 1992. Transcribed from the print edition in 1994 by David Savage under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.

Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.

"Living Dhamma", by Venerable Ajahn Chah, translated from the Thai by The Sangha at Wat Pah Nanachat. Access to Insight, 1 December 2012,

http://www.accesstoinsight.org/lib/thai/chah/living.html . Retrieved on 23 August 2013.

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

http://bautham.net/