நல்லூக்கம்
நல்லூக்கம் அல்லது நன்முயற்சி (சம்மா வாயாம)
Right Effort (Samma Vayama)
மனத்தைப் பயில்விக்கும் செயற்பாட்டைப் புத்தர் நல்லூக்கத்துடன் தொடங்குகிறார். பயிற்சி செய்வதற்கு உழைப்பும், ஊக்கமும், முயற்சியும் தேவைப்படுகிறது என்பதால் தான் அவர் நல்லூக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார். புத்தர் ஒரு இரட்சகர் இல்லை: "ஞானிகள் மார்க்கத்தைச் சுட்டிக் காட்டுவார்கள். முயற்சி எடுத்து மார்க்கத்தைத் தொடர்வது உங்கள் கையில் தான் உள்ளது," என்கிறார். மேலும் அவர், "இந்த அறம் ஊக்கமுள்ளவருக்குத்தான், சோம்பலானவர்க்கு அல்ல," என்றும் கூறுகிறார். இங்குதான் பௌத்தத்தின் பிரகாசமான கொள்கையை நாம் காண்கிறோம். நல்லூக்கத்தினால் நமது வாழ்க்கைக் கட்டுமானங்களை மாற்ற முடியும் என்கிறார் புத்தர். நமது பழக்கவழக்கங்களுக்குக் கட்டுப்பட்டு அவற்றுக்கு அடிமைகளாக நாம் இருக்க வேண்டியதில்லை. நமது சுற்றுச் சூழலுக்கோ, பிறப்புக்கோ நாம் அடிமைப் பட்டவர்கள் இல்லை. மனப் பயிற்சியினால், மனத்தை உயர்ந்த மெய்ஞ்ஞான நிலைக்கு, விடுவிக்கப்பட்ட நிலைக்கு நம்மால் உயர்த்த முடியும்.
நல்லூக்கத்தை நான்கு அம்சங்களாகப் பகுக்க முடியும். மனதில் எழும் மனநிலைகளைக் கவனிக்கும் போது அவை இரண்டு வகைப் பட்டவை என்பதைப் பார்க்கிறோம்:
1. திறமையான நன்மை பயக்கும் மனநிலைகள்.
2. திறமையற்ற தீமை பயக்கும் மனநிலைகள்.
திறமையற்ற மனநிலைகள் மாசுகளில் மூழ்கி இருக்கின்றன - பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை, அவற்றிலிருந்து தோன்றும் பிற மாசுகள்.
திறமையான மனநிலைகள் நற்பண்புகளைக் கொண்டுள்ளன. அட்டாங்கமார்க்கம், விழிப்பு நிலையின் (கடைப்பிடி) நான்கு அடித்தளங்களை அவதானித்து இருத்தல், ஏழு ஞான அங்கங்கள் போன்றவற்றை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த நன்மை பயக்கும் மனநிலைகளையும் தீமை பயக்கும் மனநிலைகளையும் பொருத்தவரை அவை ஒவ்வொன்றுக்கும் இரண்டு கடமைகளை நாம் ஆற்ற வேண்டும். நல்லூக்கத்தின் நான்கு அம்சங்கள் கீழ்வருமாறு:
1. இதுவரை எழாத தீய, பயனற்ற குணங்களை இனிமேலும் தோன்றாமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
மனம் அமைதியாக இருக்கும்போது, ஏதாவது ஒரு நிகழ்ச்சி மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டு செய்து விடுகிறது. உதாரணமாக, ஒரு இனிமையான பொருள் மீது ஆசை கொள்வது அல்லது ஒரு அருவருக்கத் தக்க பொருளின் மீது வெறுப்புக் கொள்வது போன்றவை. புலன்களின் மீது தொடர்ந்து கவனம் செலுத்தும் போது, நாம் இதுவரை தோன்றாத தீமை பயக்கும் மனநிலைகள் எழாமல் இருக்கச் செய்யலாம். ஒரு பொருளைக் கவனித்தாலும், அதன் மீது விருப்பு, வெறுப்பு போன்ற எதிர்ச்செயல் உருவாகாமல் பார்த்துக் கொள்ள நம்மால் முடியும்.
2. ஏற்கனவே தோன்றியுள்ள தீய, பயனற்ற குணங்களைக் கைவிட முயற்சி செய்ய வேண்டும்.
அதாவது தோன்றியுள்ள இடையூறைப் போக்குதல். தடை தோன்றி விட்டதை அறிந்தவுடன் முயற்சி செய்தால் தான் அதனைக் களைய முடியும். இதனைப் பலதரப்பட்ட வழிகளில் செய்யலாம்.
3. இதுவரை எழாத நல்ல, பயனுள்ள குணங்களை, உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
நமது மனத்தில் பல அழகான, பயன்தரத்தக்க இயல்புகள் உள்ளன. அவற்றை ஆழ்மனத்திலிருந்து மேலுக்குக் கொண்டுவர வேண்டும். உதாரணமாக நட்புணர்வு, கருணை போன்ற இயல்புகள்.
4. ஏற்கனவே தோன்றியுள்ள நல்ல, பயனுள்ள குணங்களை, மேம்படுத்தி, வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
மெத்தனமாய் இருந்து விடாமல், ஏற்கனவே மனத்தில் தோன்றிய நன்மை பயக்கும் மனநிலைகளைத் தொடர்ந்து நிலைக்கச் செய்து முழுமையாக வளர்க்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
நல்லூக்கத்தைப் பொருத்தவரை ஒரு எச்சரிக்கையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மனம் ஒரு மென்மையான கருவி என்பதால், அதன் வளர்ச்சியைப் பொருத்தவரை பல மன இயல்புகளையும் சமநிலையில் நுட்பமாக, நுண்ணிய கவனத்துடன் வைத்திருக்க வேண்டியுள்ளது. கூர்மையான நற்கடைப்பிடி இருக்க வேண்டும். அப்போது தான் எத்தகைய மனநிலை தோன்றியிருக்கிறது என்பதை அறிந்து, தேவையான விவேகத்துடன் மனத்தைச் சமநிலையில் நிறுத்தி, அதை எல்லை மீறிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதுவே மத்திய வழி.
நல்லூக்கத்தையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அளவுக்கு மீறி முயற்சி செய்து மனத்தைச் சோர்வடையச் செய்துவிடக் கூடாது. அதே சமயம் முயற்சி எடுக்காமல் மனம் சோம்பலாக இருக்கவும் விடக்கூடாது. புத்தர் ‘யாழ் இசைக் கருவியிலிருந்து நல்ல நாதம் எழ வேண்டுமானால் அதன் நரம்புகளைச் சரியான அளவில் சுறுதி கூட்ட வேண்டும் - மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல் தளர்ந்தும் இல்லாமல் – சரியான நிலையில் இருக்க வேண்டும்; என்கிறார்.
பயிற்சியை மேற்கொள்வதும் இதைப் போன்றது தான். மத்திய வழியின் படி பயிற்சி செய்ய வேண்டும்: ஊக்கத்தையும், அமைதியையும் சமநிலையில் வைத்தபடி பயிற்சி செய்ய வேண்டும்.