நல் வாழ்வு

நல் வாழ்வு Right Livelihood

Excerpts from a Dhamma talk by Ajahn Thanissaro Bhikkhu

English version follows the Tamil Translation

அஜான் தணிசாரோ பிக்கு அவர்களின் பேச்சிலிருந்து தொகுக்கப்பட்டது

நாம் பௌத்தப் பயிற்சியின் போது அடிக்கடி பொறுமை இழந்து விடுகின்றோம். ஆழ்ந்த அறிவை உடனே கண்டுவிட வேண்டுமென்றும் நம் பிரச்சினைகளெல்லாம் விரைவில் தீர்ந்து விட வேண்டும் என்றும் எண்ணுகின்றோம். உடனடித் தீர்வு கண்ட பிறகு எப்பொழுதும் போல நம் வாழ்க்கையைத் தொடர விருப்பப் படுகின்றோம். ஆனால் மனதை நல் வழியில் நிலைநிறுத்திய பின்னரே நாம் ஆழ்ந்த அறிவைப் பெற முடியும். மனதிற்கு மனஒருமைப்பாடென்ற சத்துணவைத் தர வேண்டும். புத்தர் ஒரு முறை சொன்னார்: 'மன ஒருமைப்பாட்டினால் வரும் திருப்தியும், பெறும் ஆனந்தமும் இல்லா விட்டால் நாம் எப்போதும் புலன் ஆசைகளினால் விளையும் இன்பத்தைத் தான் தேடிச் சென்றுகொண்டிருப்போம்'. புலன் ஆசைகளினாலும், பற்றுகளினாலும் வரும் சிற்றின்பங்களின் குறைபாடுகள் நமக்குத் தெரிந்தாலும் அதை நம்மால் தவிர்க்க முடியாது. நிலையான இன்பம் காண இந்த மாற்று வழி (மன ஒருமைப்பாட்டினால் வரும் வழி) இல்லை யெனில் பழைய தவறான வழியைத் தேடியே அலைந்து கொண்டிருப்போம். எவ்வளவுதான் தர்மத்தைப் படித்திருந்தாலும் புத்தரின் போதனைகளின் உட்கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தாலும் புலன்களைப் பயன் படுத்த வேண்டிய நேரத்தில் அவை சிற்றின்பங்களையே நாடிச்செல்லும். அஜான் சா ஒரு முறை சொன்னார்: 'பெருங் கழுகைப் (vulture) போல (பிணந்தின்னிக் கழுகைப் போல) இருக்காதீர்கள். அது பறக்கும் போது உயரப் பறந்துவிட்டு உண்ணும் போது கீழ்மையையே உண்ணும் (பெருங் கழுகு உண்ணுவது இறந்து போன மிருகங்களை). அவர் சொன்னது ஒரு ஆழ்ந்த அறிவுரையை நமக்குப் புகட்டுகின்றது. பொதுவாக நாம் மன ஒறுமைப் பாடு பெறுவதற்கான அடிப்படை வேலையைத் தவிர்க்கவே முயல்கின்றோம்.

புத்தர் மன ஒருமைப்பாட்டினால் வரும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் நாம் உண்ணும் உணவுடன் ஒப்பிடுகிறார். மன ஒருமைப்பாடு என்பது நாம் மனதுக்குத் தரும் ஊட்டச் சத்து. இப்படி மனதுக்கு ஊட்டமளிப்பதுதான் ஒரு சரியான வாழ்க்கை நெறி. மேலோங்கிய ஆழ்ந்த அறிவை அடையவில்லையெனினும் மாசற்ற வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடுவது நல்லது. உள்ளத்திலிருந்து மகிழ்வையும், நல்வாழ்வையும், உறுதியையும் தேடுவதினால் வெளியுலகில் நமது காலடிச் சுவடு சிறியதாய்ப் பதியும். அதாவது நமது பிழைப்பைத் தேடும் போது மற்றவருக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிப்பது (உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்) குறைவாய் இருக்கும். நாம் மன ஒருமைப்பாட்டினை வளர்க்கும்போது பௌத்தப் பாதையின் பல அம்சங்களை ஒரே சமயத்தில் வளர்த்துக் கொள்கின்றோம். புலன் ஆசைகளைக் குறைத்துப் புலன் ஆசைகளற்ற மகிழ்வைத் தேடுவதே சரியான தீர்மானமாகும் (Right Intention). முறையான மனக் கவனம் (Right Mindfulness) தான் மன ஒறுமைப்பாட்டிற்கு இட்டுச் செல்லும் சரியான பாதை. உங்கள் தேவைகளைத் திறமையுடன் அடைவது தான் சிறந்த வாழ்க்கை (Right Livelihood).

நல்வாழ்வு என்பது எட்டுப் பிரிவுகள் அடங்கிய பௌத்தப் பாதையினுள் ஒன்று. இதனைப் புத்தர் வரையறுத்து விளக்கிக் கூறவில்லை. 'மேன்மையாளரின் சீடர்கள் முறையற்ற தொழில்களைக் கைவிட்ட பிறகு, தங்கள் வாழ்வை நேர்மையான தொழில் புரிந்து நடத்துகின்றனர். இதுவே சரியான தொழில் வகித்தல் என்பது.' என்று மட்டுமே கூறுகிறார். இதற்கு ஒரு காரணம் புத்தரின் செயலாற்றும் முறையாக இருக்கலாம். அவரது கோட்பாட்டில் ஓர் இடத்தில் மட்டுமே ஐந்து விதமான தவறான தொழில்களைக் குறிப்பிடுகின்றார். விஷமுள்ள பொருட்களோடும், ஆயுதங்களோடும், போதைதரும் பொருட்களோடும், இறைச்சி யோடும், மனித அடிமைகளோடும் வியாபாரமோ தொழிலோ செய்யக் கூடாது என்கிறார். மற்றபடி மக்களின் தொழில் பற்றிப் புத்தர் மிகவும் முன் யோசனையோடும் சந்தர்ப்பத்திற்கிணங்கவும் மட்டுமே போதித்தார்.

இரண்டு சம்பவங்களில் தொழில் சம்பந்தமான கேள்விகளுடன் மக்கள் அவரிடம் வருகின்றனர். ஒரு சம்பவத்தில் வந்தவர் ஒரு நடிகர். மற்றதில் ஒரு இராணுவ வீரர். இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கேள்விகளையே அவரிடம் கேட்கின்றனர். நடிகர் புத்தரைக் கேட்கின்றார் 'எங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்கள் நாங்கள் வாழ்நாள் முழுவதும் மக்கள் பொழுது போக்கிற்காக நடித்து, அவர்களைச் சிரிக்க வைப்பதனால் எங்கள் வாழ்க்கை முடிந்த பின் சிரிப்புச் சொர்க்கத்திற்குச் செல்வோம் என்கின்றனர். அது குறித்துத் தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?' புத்தர் அவருக்கு பதில் தர மறுக்கிறார். ஆனால் நடிகர் விடவில்லை. மூன்றாவது தடவையாகக் கேட்ட பின் புத்தர் 'பதில் தராவிட்டால் விட மாட்டீர் போலிருக்கிறதே' என்று கூறிவிட்டுப் பதில் தருகிறார். “ உங்கள் நடிப்பால் பார்ப்பவர்களுக்குப் பேராசையும், வெறுப்பும், அறியாமையும் உருவாகுமானால், மேலும் நடிப்பதற்கான உள் நோக்கமும் பேராசையும், வெறுப்பும், அறியாமையையும் வளர்ப்பதற் கென்றால் மரணத்தின் பின் நீங்கள் போய்ச் சேரும் இடம் சிரிப்பு நரகத்திற்குத் தான். அந்த நரகத்தில் மக்கள் உங்களோடு சேர்ந்து சிரிக்க மாட்டார்கள், உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்". இதைக் கேட்ட நடிகர் நொந்து போய் அழத் தொடங்குகிறார். புத்தரும் “இதனால் தான் நான் உங்கள் கேள்விக்குப்பதில் தரத் தயங்கினேன்” என்கிறார். நடிகர் “ஐயா நீங்கள் சொன்னதற்காக நான் அழவில்லை. இது நாள் வரை எனது ஆசிரியர்கள் என்னை ஏமாற்றி விட்டார்களே என்பதை நினைத்துத் தான் அழுகிறேன்” என்கிறார்.

பின்னர் இராணுவ வீரர் புத்தரிடம் கேள்வி கேட்கிறார். 'நான் போரிட்டுச் செத்து மடிந்தால் மாவீரர் சொர்க்கத்திற்குச் செல்வேன் என்று எனக்கு சொல்லித் தரப்பட்டது. அது குறித்துத் தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?' மறுபடியும் இரண்டு முறை புத்தர் பதில் கூற மறுக்கிறார். மூன்றாவது முறையும் கேட்ட போது 'போரில் சண்டை போடும் போது மற்றவருக்குத் தீங்கு செய்யும் எண்ணமும், மற்றவர் அவதிப்பட வேண்டும் என்ற எண்ணமும், மற்றவர் சாகட்டும் என்ற எண்ணமும் எழுவதால் அந்த மன நிலையோடு மரணமடைந்தால் நீங்கள் மாவீரர் செல்லும் நரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்’. இதைக் கேட்ட இராணுவ வீரரும் அழத்தொடங்குகிறார். 'இதோபார், உனக்குப் பதில் கூற நான் முதலில் விரும்பவில்லை. நீ கட்டாயப்படுத்தியதனால் தான் நான் பதில் கூற வேண்டியதாயிற்று' என்கிறார் புத்தர். வீரனும் 'ஐயா நீங்கள் சொன்னதைக் கேட்டு நான் அழவில்லை. இது நாள் வரை நான் ஏமாற்றப்பட்டேனே என்பதை நினைத்துத் தான் அழுகிறேன்' என்கிறார்.

புத்தர் செயலாற்றும் முறையை நாம் இங்கு கவனிக்க வேண்டும். நடிகர்கள் மேலும், இராணுவ வீரர்கள் மேலும் அறப்போர் நிகழ்த்தும் எண்ணம் அவருக்குக் இல்லை. அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்ட பிறகுதான் அவர்களது தொழிலால் என்ன நிகழக் கூடும் என்று சுட்டிக் காட்டுகின்றார். அவர் விரும்புவது இதுதான்: ஒவ்வொருவரும் அவரவர் தொழிலைப் பற்றி நன்கு சிந்தித்து, அந்தத் தொழிலின் காரணமாக மற்ற உயிருக்குத் தீங்கு விளையுமென்றாலோ, அல்லது பொய் பேச நேரிடுமென்றாலோ, அல்லது திறமையற்ற மன நிலைகள் உருவாகுமென்றாலோ வேறு தொழில் செய்வது பற்றி எண்ண வேண்டும். தொழிலை மாற்றுவதென்பது எளிதல்ல என்பதால் புத்தரின் செயலாற்றும் முறை இப்படி இருந்திருக்கலாம். பலரும் அவரவர் செய்யும் தொழிலில் மூழ்கி விடுகிறார்கள். சரிப்படாத தொழிலிலிருந்து தொடர்பை அகற்றி விடுபடுவதற்குக் கொஞ்ச நாள் தேவைப்படும் மல்லவா?

நல்வாழ்வு என்பது சரியான தொழில் புரிதல் என்பது மட்டுமின்றி அதற்குப் பிறிதொரு பொருளும் உள்ளது. அது நாம் உபயோகப்படுத்தும் பொருட்களின் மேல் நமக்குள்ள மனப் பான்மை தான். அதனால் தான் நாம் தினமும் மாலையில் (பௌத்த விகாரையில்) அந்தந்த நாளில் நமது தேவைகளை எவ்வாறு நிறைவு செய்தோம் என்று நினைவுகூர்ந்து அது சம்பந்தமான திருப்பாடலை ஓதுகிறோம். அன்றைக்குத் தேவைப் பட்ட பொருட்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று பயன் படுத்தும் போதே எண்ணிப் பார்ப்பது நல்லது. இப்போது எதற்காக உணவு உண்கிறோம்? ஆடை அணியும்போது ஏன் இந்தக் குறிப்பிட்ட உடையை அணிகிறோம்? வீட்டைப் பழுது பார்க்கும் போது ஏன் இந்த வகையில் பழுது பார்க்கிறோம்? மருந்து எடுக்கும் போது ஏன் இந்தக் குறிப்பட்ட மருந்தைக் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொள்கிறோம்? உங்கள் குறிக்கோள் என்ன என்பதை நினைக்கும் போதே சிறந்த உள் நோக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் நினைவுக்கு வந்து விடும்.

நாம் ஆடை அணிவதற்குக் காரணம் இயற்கையினால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து (மழை, வெயில், பூச்சி போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள்) உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாணம் விளைவிக்கத்தக்க உடல் உறுப்புகளை மறைக்கவுந்தான். உணவு உட்கொள்வது உடல் பருப்பதற்கோ விளையாட்டுக்காகவோ அல்ல. நமக்கு உணவை விளைவித்துத் தந்தவர்கள் - கடுமையாக உழைத்த விவசாயிகள், பாடுபட்ட மிருகங்கள், இறைச்சிக்காக உயிரைக் கொடுத்த மிருகங்கள் - வேடிக்கைக்காகத் தரவில்லை. நாம் உணவை உண்பதற்குக் காரணம் பசியைக் களைந்து ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்வதற்கே. உணவைச் சுவைக்காக உண்பதில்லை. உடலுக்குப் போதிய போஷாக்கு இருந்தால் பயிற்சியை எளிதாகத் தொடரலாம் என்பதற்காகவே உண்கிறோம்.

தங்க இடம் எதற்கு? இயற்கைச் சீற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், ஆன்மீகப் பயிற்சி செய்வதற்கேற்ற அமைதியான, தனிமையான இடம் அமைவதற்கும் தான். மருந்து எதற்கு? வலியை அகற்றவும் நோயைத் தடுப்பதற்கும் தான். வேறு எதற்கும் அல்ல. இதையெல்லாம் எண்ணும் போது நீங்கள் உண்ணும் உணவினாலும் உடுத்தும் உடையினாலும் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைச் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. உயிருடன் இருக்கும் வரை நமக்குப் பற்பல தேவைகள் உள்ளன. அத்தேவைகளை மற்றவரைச் சார்ந்துதான் நிறைவு செய்து கொள்ள வேண்டியுள்ளது. மற்றவரைச் சார்ந்து இருக்கும் நாம் அவர்களைப் புண்படுத்தாமலும் அவர்களுக்குத் தேவையற்ற வேதனைகளை உருவாக்காமலும் இருப்பது அவசியம். சான்றோரின் பழக்க வழக்கங்களில் ஒன்று தங்களிடம் இருக்கும் பொருளோடு திருப்தி அடைவதுதான். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற நிறைவு மனதில் ஏற்பட்டால் நாம் வாங்கும் பொருளும், பயன் படுத்தும் பொருளும் ஒரு காலக்கட்டத்தில் குறைந்து கொண்டே வருவதை உணரலாம். ஏனெனில் இந்தப் பொருட்களை நம்பி உங்கள் மகிழ்ச்சி இல்லை. நீங்கள் மகிழ்ச்சியை உங்கள் உள்ளத்துள் தேடுகின்றீர்கள். இங்கு தான் நல் மன ஒருமைப்பாடு பயன் படுகிறது. இதனால் தான் நல் மன ஒருமைப்பாடு நல் வாழ்வின் ஒரு அம்சமாகத் திகழ்கிறது. அது உங்கள் மனதிற்கு ஊட்டமளிக்கிறது. இந்தப் போஷாக்கினால் உங்கள் உள்ளத்தை ஆழ்ந்து நோக்கும் போது மேன்மையான மகிழ்ச்சியைக் காண முடிகிறது. நீங்கள் மறுபிறப்பெடுப்பதற்கான வெவ்வேறு காரணங்களை எண்ணும்போது மேலும் மேலும் ஆழ்ந்த அறிவைக் காண்பதற்கு இந்த மகிழ்ச்சிதான் அடித்தலமாக அமைகிறது. மறு பிறப்பெடுத்தால் மற்றவர்களுக்கும் உலகிற்கும் பாரமாகிவிடுகிறோம். மறுபிறப்பெடுக்காமல் இருக்க நமக்கு வேண்டிய ஆழ்ந்த அறிவுச் சிந்தனைகள் சில சமயம் மிகக் கடுமையானவைகளாக அமைந்து விடுகிறது.

புத்தர் உணவு உண்ணும் போது இந்தக் கதையை நினைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு கதை சொல்லுகிறார், ஒரு தாயும் தந்தையும் தங்கள் ஒரே குழந்தையுடன் ஒரு பாலைவனத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். பாதி துரம் கடந்த பின்னர் அவர்களிடம் இருந்த உணவு முற்றாகத் தீர்ந்துவிடுகிறது. உணவு இல்லாவிட்டால் மூவரும் இறப்பது உறுதி. என்ன செய்வது? அவர்கள் ஒரு முடிவிற்கு வருகிறார்கள். குழந்தையைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ண முடிவு செய்கிறார்கள். அப்படிச் செய்தால் இருவராவது பிழைத்துக் கொள்ளலாம். பின் மீண்டும் குடும்ப வாழ்வைப் புதிதாகத் துவங்கி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். புத்தர் கேட்கிறார். அப்படித் தங்கள் குழந்தையின் மாமிசத்தை உண்ணும் அவர்கள் எந்த மனப் பாங்கோடு அந்த உணவைச் சாப்பிடுவார்கள்? உணவை ரசிப்பதற்காகச் சாப்பிடுவார்களா? இல்லை. அவர்கள் துயரத்துடன் தங்கள் குழந்தையையே உண்ண நேரிட்ட கொடூரமான சூழ்நிலையையல்லவா நினைத்துக் கொண்டிருப்பார்கள்? நாம் ஒவ்வொரு வேளையும் உணவை உண்ணும்போது அப்படி ஒரு மனோ நிலையோடு தான் உண்ண வேண்டும் என்கிறார் புத்தர். இன்பத்துக்காகவோ சுவைக்காகவோ அல்லாமல் வாழ்க்கையை நீட்டிப்பதற்காவே உண்ண வேண்டும். ஏனெனில் வாழ்க்கை துக்கம் நிறைந்தது. தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டிய அவசியமே ஒரு வலி தானே?

இந்தக் கதை மிகக் குரூரமானதென்றாலும் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. இது போன்று பல கசப்பான சிந்தனைகள் புத்தரின் போதனைகளில் அடங்கி உள்ளன. இத்தகைய சிந்தனைகளை மனம் சீரணிக்க வேண்டும் என்றால் சரியான மன ஒருமைப்பாட்டினால் வரும் உறுதியான மன நிலை இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் தியானத்தினால் வரும் ஆழ்ந்த அறிவு நம்மை நிலை குலைய வைத்துவிட நேரிடும்.

எனவே உங்கள் பயிற்சியின் அத்திவாரமாக இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மனதை அமைதிப் படுத்துவதன் உயர் குணத்தை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சைக் கவனித்து அதனுடன் ஆறுதல் அடையுங்கள். மூச்சைக் கவனிப்பதால் மட்டற்ற மகிழ்ச்சியும் மன அமைதியும் காணலாம். இவ்வாறு மனதுக்கு நல்ல உணவளிப்பதே சரியான வாழ்வு முறை அமைய உதவும்.

எனவே உயிருடன் இருக்கும் வரை உலகில் எளிமையாக இருந்துவிட்டுச் செல்ல வேண்டும். அதே சமயம் நாம் நம் திறமைகளை வளர்ந்துக் கொள்ளவும் வேண்டும். மறுபடியும் இவ்வுலகில் தோன்றி உலகிற்குப் பாரமாக இல்லாதிருக்க இத்திறமைகள் நமக்குத் தேவை. இதனால் தான் புத்தரின் போதனைகள் தன்னலமற்றவை. உங்களுக்காவும் உங்களைச் சுற்றியுள்ள உலகிற்காகவும் அவர் ஆற்றிய அன்பான செயல் இது.

We are often impatient at the practice. We want to go straight to insight, straight to the solution to all our problems. So then we can go back home and get back to the rest of our lives. But you first have to put the mind in good shape. Before you can gain any insight. You have to feed it well . That is what concentration is all about. As the Budhha once said: 'If you don't have the pleasure and rapture that comes from concentration you are always going to be tempted by sensuality'. Even if you understand the drawbacks of sensual pleasures, the drawbacks of sensual desires. If you don't have this alternative way of finding happiness you are going to go back to your old ways. No matter how much dharma you may have read or how precise your understanding of the intricacies of the Buddha's teachings. When the time comes to feed you are going to feed on the same old things you have been feeding on all your lives. As Ajahn Chah once said: 'Don't be a vulture. When they fly they fly high but when they eat they eat low'. It is very insightful. We do tend to overlook the need for the ground work that is provided by concentration.

The Buddha himself compared the happiness and equanimity that comes from concentration with kinds of food. Concentration he says is like stores of food. These are ways of nourishing the mind. And providing for the mind is right livelihood. Even if you don't have any higher levels of insight at least you are finding pleasure in a blameless place. You could say that this falls under the factor of right livelihood in the path. The more pleasure the more sense of wellbeing and stability you can develop from within, the lighter your foot print on the rest of the world, the less harm you are doing in searching for your livelihood both physical and mental. So as you are practicing concentration you are developing several factors of the path all at once, there is the right resolve the resolve to renounce sensuality, to find a pleasure that is not involved with sensual passion. Right mindfulness which is the theme of right concentration and right livelihood - looking after your needs in a skillful way.

Right livelihood is part of the eightfold path. It is a factor that the Budhha hardly defines at all. He simply says that the deciple of the noble ones avoids wrong livelihood and makes his or her living of right livelihood. Doesn't tell you much. Part of it may be simply a question of etiqeutte. There is only one passage of the cannon where the Buddha clearly comes out in a general statement that there are five types of wrong trade: trading in poison, trading in weapons, trading in intoxicants, trading in meat and trading in human beings as slaves. Disiple of the noble ones avoids those kinds of trade. You don't set yourself up with as shop that sells alcohol or poison or weapons or meat or slaves. But other wise the Buddha is very circumpsect about talking about different peoples occupations. There are two cases where people come to him. One case is an actor and the other is a professional soldier. They say pretty much the same thing. The actor says 'Our teachers who taught us to be actors said if you spend your life entertaining people with your imitations of reality and making them laugh you are going to the the heaven of laughter. What does the Buddha have to say about that? And the Buddha refuses to answer twice but the actor keeps after him and asks him a third time and the Buddha finally says looks like I can't get anywhere with you by saying I don't want to answer that, so I will answer it. He says if as you are acting you give rise to greed, anger and delusion in people and your motivation for acting is greed, anger and delusion then after you die you are going to go to the hell of laughter, i.e. not the place where people laugh with you but the place where people laugh at you. And the actor breaks down and starts crying and the Buddha says, 'See I didn't want to answer your question. But the actor says I am not crying because of what you said but because I have been deceived by my teacher for so long. Similarly with the soldier. The soldier says that I was taught that if I die in battle I will go to the heaven of heroes. What does the Buddha have to say about that? Again the Buddha refuses to answer twice and when pushed for the third time he finally says well when you are in battle and giving rise to the desire of killing of other beings, may these other beings suffer, may they be harmed, may they be killed, that mind state when you die in battle that is going to take you to the hell of heroes those who die in battle. Again the soldier cries and the Buddha says, 'Look I did not want to answer your question and the soldier again says I am not crying because of your answer but because I have been deceived for so long. The Buddha's etiquette here is interesting. He did not set out to have a crusade against actors or actresses or against professional soldiers or what ever. Only if he was pushed would he condemn a particular occupation. Otherwise what he'd have you do is have you reflect on your means of livelihood. Is it harming other beings, does it involve lying, does it involve unskillful mental states. If it is maybe you should look for another occupation. This may have been one of the reasons why the Buddha had that etiquette, because a lot of people are stuck in there occupations. It is going to take a while for them to disentangle themselves if they find it is unskillful.

But there is another side to Right Livelihood and that is looking at your attitude to what you consume. That is why we have that chant every evening looking back at the use of the requisites during the day. Why did we use the requisites? It is best to reflect when you are using the requisites. Why are you eatin now? When you put on your clothes why are you putting these cloths on. When you fix up your house, why are you fixing up the house in this way? When you take your medicine why are you taking this particular medicine now? What is your motivation and it reminds you of the ideal motivation.

You wear clothing to protect your selves from the elements and to cover the parts of the body that cause shame. You take food not for putting on bulk or the fun of it after all those who provided the food that you are eating din't provide it in fun. The farmers who worked, the animals that gave up their lives. You take the food simply so that you can continue practicing, so you can eliminate hunger pains and yet at the same time not over stuff your selves and get the pain that comes from eating too much. You are not eating just for the flavour of the food, you are eating simply for the nourishment of the body so you can practice in ease.

For shelter, shelter is to protect yourselves from the elements and to provide a space for quiet and privacy so you can practice. Again for medicine: to eliminate pain and to maintain freedom from dis ease. That's all. When yout think about these thinks what it does is that it forces you to look at your impact when you eat when you buy clothing when you buy any of these things and you use them, what is your impact on the world. The fact that you are alive and breathing means that you have lots of needs and the needs can only be met by relying on others. Can you rely on others so that you are not harming them. or cause them unecessary pain. This ties in with one of the customs of the noble ones which is contentment with your material things. When you think in these ways you find that you are buying less, using less because you are looking somewhere else for you happiness i.e. you are looking inside. This is where concentration comes in why concentration is an important element of Right Livelihood. It provides you with the nourishment for the mind, the honey and butter and grain that you need for your true happiness deep down inside. At the same time this happiness provides you with a good foundation for the insights that are going to come as you start looking at various ways in which you keep on taking birth. The fact that you are taking birth is placing a burden on other beings placing a burden on the world. The insights you need to stop the process of rebirth can be prety harsh.

As the Buddha said when you take food think about the story of the couple who were going to cross the dessert with their only child. They got more than half way across the desert and they were totally out of food. And they realized that if they did not have any food all three of them would die. So they decide they would kill their child and make meat out of baby. That way atleast two of them would survive and then they could start a family again when they got to the other side of the desert. And then the Buddha said: What would be their attitude towards food while they were eating it? Would they be eating out of fun? No. They would be thinking of all the sorrow and what had to do in the horrible circumstances. The Buddha said that is how you should regard physical food. Not something you eat out of joy or out of flavour but simply to keep life going realizing that it causes pain, it causes suffering the fact that you have to eat . That is a harsh contemplation, one of many harsh contemplations in the Buddha's teachings. The only way the mind can stand up to to these kinds of contemplations is if you have a strong sense of well being that comes from nourishing the mind with right concentration. Otherwise the insights that come from meditation, if you don't have a good solid foundation can be disorienting, destabilizing.

So as the foundation for your practice you want to work on these skills keep at them appreciate the simple quality of getting the mind still finding a sense of ease with the breath find a sense of ease with being able to settle down. Simply by breathing and gaining sense of well being, rapture, equanimity when you need them. This way you nourish the mind with good food and this is Right Livelihood in the highest sense.

So you are in a position while you are alive this time around you weigh lightly on the world around you and you are developing the skills so that you don't have to come around and weigh the world again. This is why the Buddhas teachings are not selfish. They are an act of kindness both for you and the whole world around you.