அகதவிநய சுத்தம் 1: மனத் தொந்தரவு அகற்றுதல்.

அகதவிநய சுத்தம் 1: மனத் தொந்தரவு அகற்றுதல்.

Aghatavinaya Sutta: Removing Annoyance 1

பாலி மொழியிலிருந்தது மொழி பெயர்த்தவர் ஞானமொழி தேரர்

English Source

"பிக்குக்களே, ஒருவரிடத்தில் சினம் ஏற்பட்டால் ஒரு பிக்கு ஐந்து வழிகளில் அதனை முழுமையாக அகற்ற முடியும். அந்த ஐந்து வழிகள் யாவை?

நாம் கோபப்படும் ஒருவரிடத்தில் நட்புணர்வான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, அந்த எண்ணங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவரிடம் நமக்கு உள்ள சினத்தை அகற்ற முடியும்.

நாம் கோபப்படும் ஒருவரிடத்தில் கருணை கொள்ள வேண்டும். அந்தக் கருணையான எண்ணங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அவரிடம் நமக்கு உள்ள சினத்தை அகற்ற இதுவும் ஒரு வழி.

நாம் கோபப்படும் ஒருவரிடத்தில் நடுநிலையான மனநிலையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அவரிடம் நமக்கு உள்ள சினத்தை அகற்ற இதுவும் ஒரு வழி.

நாம் கோபப்படும் ஒருவரை முழுமையாக மறந்து அவரைப் புறக்கணித்துவிட வேண்டும். அவரிடம் நமக்கு உள்ள சினத்தை அகற்ற இதுவும் ஒரு வழி.

நம்மைக் கோபப்படுத்தியவர் செய்த காரியங்களுக்கு அவரே உரிமையாளர் என்பதை இவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும்: 'இந்த நல்ல மனிதர் தன் செய்கைக்குத் தானே உரிமையாளர். தன் செய்கைக்குத் தானே வாரிசு. தன் செய்கையென்ற கருப்பையிலிருந்து பிறந்தவர் அவர். அவர் செய்கை தான், அவரது சொந்தக்காரரைப்போல, அவருக்குப் புகலிடம் அளிக்கிறது. தன் செய்கையின் ஆதரவோடு அவர் நிலைத்து நிற்கிறார். நல்லதோ, கெட்டதோ தன் செய்கைக்குத் தானே வாரிசாகிறார்.' அவரிடம் நமக்கு உள்ள சினத்தை அகற்ற இப்படி எண்ணுவதும் ஒரு வழி.

ஒருவரிடத்தில் நமக்கு சினம் ஏற்பட்டால் அதனை முழுமையாக அகற்ற இவையே ஐந்து வழிகளாகும்.