வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
தமிழாக்கம் Tamil Translation
நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa
* * *
V ஆம் அத்தியாயம்
நாலாவது உயர் வாய்மை : மார்க்கம்
The Fourth Noble Truth : Magga : 'The Path'
துக்கத்தை ஒழிக்கும் மார்க்கமே நாலாவது உயர் வாய்மை. இது 'துக்க நிரோத காமினி படிபதா ஆரியசச்ச' என பாளியில் கூறப்படும். இதுவே மத்திய வழி (மஜ்ஜிமா படிபதா) எனெனில் இது இரு தீவிரமான கொள்கைகளை விலக்கி நடுவழியைப் பின்பற்றுகிறது. இதன் ஒரு முனை புலன்வருமின்பங்களில் சுகத்தைக் காண்பது. இவ்வழி 'கீழானது, சாதாரணமானது, பயனற்றது, பொது மக்களால் பின்பற்றப்படுவது'. மற்ற முனை தன்னை ஒறுத்துப் பலவகையான கடுந்தவங்களில் ஈடுபட்டுச் சுகம் தேடுவது. இது 'துன்பமுண்டாக்குவது, தகைமையற்றது, பயன் தராதது'. இவ்விரு வழிகளிலும் ஈடுபட்டு இவை பயனற்றவை என்று கண்ட பகவான் தன் அனுபவத்தின் மூலம் இந்த மத்திய வழியைக் கண்டார். இது 'காட்சி உதவி அறிவைக் கொடுக்கும். இதன் பயனாக உள்ளத்தமைதியும், அகக்காட்சியும், ஞான ஒளியும், நிர்வாணமும் கிட்டும்.' இந்த நடு வழியே உயர்ந்த எட்டுக் கூறுகளையுடைய மார்க்கம் (அரிய அட்டாங்கித மக்க) என வழங்கப்படும்.
இது எட்டுப் பிரிவுகளை உடையது. இவை:
1. நற்காட்சி (சம்மாதிட்டி)
2. நல்லூற்றம் (சம்மாசங்கப்ப)
3. நல்வாய்மை (சம்மாவாசா)
4. நற்செயல் (சம்மாகம்மந்த)
5. நற்சீவனோபாயம் (சம்மா ஆஜீவ)
6. நல்லூக்கம் (சம்மா வாயாம)
7. நற்கடைப்பிடி (சம்மா சதி)
8. நல்லமைதி (சம்மாசமாதி)
நாற்பத்தைந்து வருடமாகப் புத்த பகவான் செய்த போதனை முழுவதும் இந்த மார்க்கத்தோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய தாயிருக்கிறது. அவர் இம்மார்க்கத்தைப் பலவகையில், பல வார்த்தைகளால், பலபேருக்கு அவ்வவர் தகமைக்கும், திறமைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு விளக்கினார். ஆயிரக்கணக்கான உபதேசங்களை அவர் செய்தார். அவை பிடக நூல்களெங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. அட்டாங்க மார்க்கத்தின் சாரம் அவற்றில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.
இந்த அட்டாங்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அனுசரிக்கப்பட வேண்டியவையல்ல. ஒரு சேர ஒரே சமயத்தில் பலபட அனுட்டிக்கப்பட வேண்டியவை. ஒவ்வொருவருடைய தகைமைப்படி இவை ஒரே நேரத்தில் பின்பற்றப்பட வேண்டியவை. ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்று, மற்றதை அனுசரிப்பதற்கு உதவியாயிருக்கும். பௌத்தர்களுடைய பயிற்சி, விநயம் என்பவற்றில் மிக முக்கிய மானவை (அ) சீலம், ஒழுக்கம் (ஆ) சித்தத்தை ஒருமுகப்படுத்துதல், சமாதி (இ) ஞானம், பஞ்ஞா-பிரக்ஞா என்பனவாகும். இவற்றை வளர்ப்பதற்கும் பூரணப்படுத்துவதற்கும் இந்த எட்டு மார்க்கங்களும் உதவுகின்றன. அட்டாங்க மார்க்கத்தை நன்கு புரிந்து கொள்வதற்கு அவற்றைச் சீலம், சமாதி, பிரக்ஞை என்ற மூன்று பிரிவுகள் கீழ் அடக்குவது உதவியாயிருக்கும். இவ்வாறு பிரித்து விளக்குவதும் பொருத்தமாகும்.
உயிர்வாழும் எல்லாப் பிராணிகளிடத்தும் அன்பும் கருணையும் உடையவராயிருக்க வேண்டுமென்ற சீலம் அடிப்படையிலே தான் புத்தருடைய போதனை தாபிக்கப் பட்டுள்ளது. மகா கருணையே பகவானுடைய போதனையின் பேரிலட்சியம். ஆனால் அறிஞர் பலர் இதனை மறந்து புத்த தர்மத்தைப் பற்றிப் பேசும் போதும் எழுதும் போதும் வெறும் அத்யாத்மக் கோட்பாடுகளையும், சாரமற்ற தத்துவ விரிவுரைகளையும் செய்துவருவது வருந்துவதற்குரிய விஷயமாகும். பெரும்பாலான மக்களின் நன்மைக்காகவும், பெரும் பாலானவர்களின் சுகத்துக்காகவும் உலகத்தவர் மீதுள்ள பெருங் கருணையினால் (பகுஜன ஹிதாய பகுஜன சுகாயலோகானுகம்பாய) பகவான் இத் தருமத்தைக் கூறினார்.
மனிதன் பூரணமடைய வேண்டுமானால் அவனிடம் கருணை, ஞானம் என்ற இரு பண்புகள் மலர வேண்டும். இங்கே கருணை என்றால் அன்பு ஒப்புரவு, தயை, சகிப்புத் தன்மை என்பவற்றையும் உள்ளத்தில் உணர்ச்சியினால் உண்டாகும் நற்பண்புகளையும் குறிக்கும். பிரக்ஞா என்ற ஞானம், மனத்தில் தோன்றும் விவேகம் சார்பான பண்புகளைக் குறிக்கும். உணர்ச்சி சம்பந்தமான பண்புகளை ஒருவர் விருத்தி செய்து, புத்தியை அலட்சியஞ் செய்வரானால் அவர் நல்மனமுள்ள ஒரு முட்டாளாகி விடுவார். புத்தியை வளர்த்து உணர்ச்சிகளை அலட்சியஞ் செய்தால் ஒருவர் கருணையில்லாத விவேகியாக வளர்ச்சியடைவார். எனவே பூரண வளர்ச்சி பெறுவதற்கு உணர்ச்சியையும் வளர்க்க வேண்டும். விவேகத்தையும் வளர்க்க வேண்டும். பௌத்த வாழ்வு நெறி இதுவே. இதில் கருணையும் ஞானமும் பிரிவின்றிச் சேர்ந்திருக்கின்றன. இதை மேலே காண்போம்.
அன்பையும் கருணையையும் அத்திவாரமாகக் கொண்ட சீலம், அட்டாங்க மார்கத்தில் காணப்படும் நல்வாய்மை, நற்செயல், நற்சீவனோபாயம் (இல. 3,4,5 என் அட்டவணையிலுள்ள படி) என்பவற்றைத் தன்னுள்ளடக்கியிருக்கிறது.
நல்வாய்மை என்பது (1) பொய் பேசாதிருத்தல் (2) புறங்கூறாதிருத்தல், தூவேஷத்தையும் பகைமையையும், வேற்றுமையையும் பிணக்கையும் மக்களிடையே உண்டு பண்ணும் பேச்சையும், பழி கூறுவதையும் விலக்குதல் (3) இன்னா சொல்லாமை, கொடிய மரியாதையற்ற சொற்களைப் பேசாதிருத்தல், (4) பயனில் சொல் பேசாமை, வீண்வார்த்தை பேசாதிருத்தல், வதந்தி பரப்பாதிருத்தல். இத்தகைய பேச்சுக்களைக் கைவிட்டால் மனிதன் உண்மையையே பேச நேரிடும். இனிமையும், பயனுள்ளவையுமான பேச்சைப் பேசுவான். ஒருவன் சொற் சோர்வுபடப் பேசக்கூடாது. கருத்தின்றிப் பேசக்கூடாது. சரியான நேரத்திலே சரியான இடத்தில் பேசவேண்டும். பயனுள்ளவற்றைப் பேசமுடியாவிட்டால், பெருந்தன்மையோடு பேசாதிருந்து விட வேண்டும்.
நற்செயல் நல்லொழுக்கத்தையும், நல்லாசாரத்தையும் வளர்க்கும். கௌரவமாய்ப் பழகச் செய்யும். உயிர்களைக் கொல்லாதிருக்கவும், களவு செய்யாதிருக்கவும், நேர்மையற்ற விவகாரங்களில் ஈடுபடாமலும், தவறான முறையில் இணைவிழைச்சில் ஈடுபடாமலிருக்கவும் துணை செய்யும். மற்றவர்களையும் சமாதானமான நல்வழியில் நடக்கத் தூண்டும்.
நற் சீவனோபாயம் என்பது மற்றவர்க்குத் துன்பத்தை உண்டாக்கும் தொழில்களில் ஒருவன் ஈடுபடாது, தன் சீவனோபாயத்துக்கான ஊதியத்தைச் சம்பாதித்தல். ஆயுதங்களில் வியாபாரஞ் செய்தல், மரணத்தை உண்டாக்கக் கூடிய ஆயுதங்களை விற்றல், போதைக்குரிய பொருள்களையும் விஷப் பொருள்களையும் வியாபாரஞ் செய்தல், மிருகங்களைக் கொன்று அவற்றை விற்றல் என்பன விலக்கப்பட வேண்டியவை. மற்றவர்களை வஞ்சித்தல்போன்ற தொழில்களில் ஈடுபடாதிருத்தல், மதிப்புக்குரியதும், மற்றவரால் பழிக்கப்படாததும், மற்றவர்க்கு இன்னா செய்யாததுமான தொழில்களால், சீவனோபாயத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். ஆயுதங்களில் வியாபாரம் நடத்தக்கூடாதெனவும், மரணத்தை விளைவிக்கக் கூடிய ஆயுத வியாபாரத்தில் ஈடுபடக் கூடாதெனவும் அது தீமை நிறைந்த சீவனோபாய மென்றும் கூறுவதால் பௌத்தம் எந்தவிதமான யுத்தத்தையும் வெறுக்கிறதென்பதைத் தெளிவாகக் காணலாம்.
அட்டாங்கமார்க்கத்தில் நல்வாய்மையும், நற்செயலும் நற்சீவனோபாயமும் ஆகிய மூன்றும் சீலத்தில் அடங்கும். தனிப்பட்டவர்களும், சமூகத்திலுள்ளவர்களும் சுகமாகவும், பிணக்கின்றியும் நல்வாழ்வு வாழ்வதையே பௌத்த சீலம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உயர்ந்த ஆத்மீகப் பேறுகளைப் பெறுவதானால் இவை இன்றியமையா அடிப்படையாக மதிக்கப்படுகின்றன. இந்தச் சீல மென்ற அத்திவாரமில்லாவிட்டால் எந்தவிதமான ஆன்மீக வளர்ச்சிக்கும் இடமில்லை.
அடுத்ததாக மனத்தை வழிப்படுத்தும் மூன்று அமிசங்கள் அட்டாங்க மார்க்கத்தில் உண்டு. அவை நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி என்பன. அட்டாங்க நிரலில் இவை 6,7, 8 ஆகக் காணலாம் (நல்லமைதி என்பது நற்சமாதி).
நல்லூக்கம் என்பது (1) மனத்திலே தீய எண்ணங்களும், மன ஆரோக்கியத்துக்கு ஒவ்வாத எண்ணங்களும் தோன்றாது தடுக்கும் ஊக்கமான மன உறுதி (2) அவ்வாறு எழுந்த தீய எண்ணங்களை நீக்கும் ஊக்கமான மனவுறுதி (3) மனத்திலே நல்ல எண்ணங்களையும் தூய எண்ணங்களையும் எழச் செய்யும் மன உறுதி (4) ஏற்கனவே மனத்தில் உண்டான நல்ல தூய எண்ணங்களை விருத்தி செய்து நிறைவாக்கும் மன உறுதி.
நற்கடைப்பிடி என்பது எப்பொழுதும் விழிப்பாயிருத்தல், கருத்தோடிருந்தல், கவனமாய் இருத்தல் (1) அதாவது காயத்தின் தொழிற்பாடுகள் (2) உணர்ச்சிகள், நுகர்வுகள் (3) சித்தத்தின் செயல்கள் (4) எண்ணங்கள், கற்பனைகள், கருத்துக்கள், பொருள்கள் (தம்ம) என்பவற்றை விழிப்புடன் கருத்தில் கடைப்பிடித்தல், நினைத்தல்.
மூச்சை உள்ளே வாங்கும்போதும் வெளியே விடும்போதும் அதைத் தியானித்துக் கொண்டிருத்தல் ஆனாபான சதி எனப்படும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு இந்தத் தியானமுறை பௌத்தத்தில் மிகப் பிரசித்தமானது. இது உடம்பு சம்பந்தப்பட்ட தியானம். உடம்பின் தொழிற்பாட்டைப் பற்றி விழிப்பாயிருப்பதற்கு வேறு பல தியானமுறைகளுமுண்டு.
மனத்தில் உண்டாகும் வேதனைகள் (நுகர்வுகள்), உணர்ச்சிகள் என்பவற்றைப் பொறுத்தவரையில் இன்பமானவையோ, துன்பமானவையோ, நொதுமலானவையோ எவையாயிருந்தாலும் அவற்றை விழிப்போடு கருத்திற் கொள்வதோடு அவை எவ்வாறு தம்முன்தோன்றி மறைகின்றன எனபதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
சித்தத்தின் தொழிற்பாடுகள் சம்பந்தமாக மனம் காம விருப்புடையதயிருக்கிறதா இல்லையா, துவேஷப் பான்மையுடையதாயிருக்கிறதா இல்லையா, ஒன்றை வேறொன்றாக மயங்கி மோக முற்றிருக்கிறதா இல்லையா, அலைகின்றதா, ஒரு நிலைப்பட்டிருக்கின்றதா என இவ்வாறு மனத்தின் நிலைகளைப் பற்றி விழிப்பாயிருக்க வேண்டும். இவற்றின் பலவகையான இயக்கங்களையும் கவனித்து அவை எவ்வாறு எழுகின்றன மறைகின்றன என்பதை விழிப்போடு ஆராய வேண்டும்.
எண்ணங்கள், கருத்துக்கள், கற்பிதங்கள், பொருள்கள் என்பன பற்றி அவற்றின் தன்மையையும், அவை எவ்வாறு தோன்றி மறைகின்றன என்பனபற்றியும் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன, எவ்வாறு ஒடுக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன என்பனபோன்ற வற்றைப்பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த நான்கு வகையான தியானங்களைப் பற்றி சதிபட்டான சுத்திரம் என்ற நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது (சதிபட்டான என்றால் தியான நிலை [1]).
சமாதியின் மூன்றாவது அமிசம் நல்லமைதி. இது நான்குவகையான தியானங்களுக்கு இட்டுச் செல்லும். இது பொதுவாக சுழுத்தி நிலை எனப்படும். முதலாவது தியான நிலையில் இச்சைகளும், புலன்வரும் இன்ப வேட்கைகளும், குரோத நினைவுகளும், மடிமையும், கவலையும், சஞ்சலமும், சந்தேகங்களும், இவை போன்ற அசுப நினைவுகளும் மனத்தைவிட்டு நீங்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் சித்தத்தில் நிரம்பியிருக்கும், சித்த விருத்திகள் சில நிலவும். இரண்டாவது தியான நிலையில் புத்தி சார்ந்த செயற்பாடுகளெல்லாம் ஒடுக்கப்படும். அமைதியும் ஏகாக்கிரசித்தமும் வளரும்; மனத்தில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நீங்காதிருக்கும். மூன்றாவது தியான நிலையில் ஆனந்தம் நீங்க மகிழ்ச்சியும், உபேக்கா என்ற பற்றற்ற நிலையும் நிலவும். நாலாவது தியான நிலையில் எல்லா உணர்வுகளும் இன்ப துன்பம், சுகதுக்கம் என்ற வேதனைகளும் மறைந்துவிடும். தூய உபேக்கையும், விழிப்புணர்ச்சியும் மாத்திரம் மிஞ்சியிருக்கும்.
இவ்வாறு நல்லூக்கம் நற்கடைப்பிடி, நற்சமாதி என்பவற்றால் மனம் பயிற்சி பெற்று அடங்கி உயர் நிலையடையும்.
எஞ்சிய இரண்டு அங்கங்களான நற்காட்சியும், நல்லூற்றமும் ஞானத்தை உண்டாக்கும்.
நல்லூற்றம் என்பது தன்னலமற்ற வைராக்கியம் அல்லது பற்றற்ற நிலை. எல்லா உயிர்களிடத்தும் இந்நிலையில் கருணையும், அஹிம்சையும் மனத்திலே நிலவும். இப்பண்புகள் ஞானத்தைச் சேர்ந்தவையாகத் தொகுக்கபட்டிருக்கின்றன. உண்மையான ஞானம் இப்பண்புகளைக் கொண்டன என்பது தெளிவாகிறது. ஞானமில்லாதவரிடமே தன்னலமும், குரோதமும், துவேஷமும், இம்சையும் காணப்படும். தனிப்பட்டவரிடமோ, சமூகத்திலோ, அரசியல் துறையிலோ இந்த அமைப்பைக் காணலாம். ஞானமில்லாத இடத்தில் பலாத்காரமும், துவேஷமும், தன்னலமும் பகைமையும் காணப்படும்.
நற்காட்சி என்பது உள்ளதை உள்ளபடி அறிதல். நான்கு உயர் வாய்மைகளே இந்த ஞானத்தைக் கொடுக்கும். எனவே நற்காட்சியென்பது நான்கு உயர்வாய்மைகளை உணர்தல். இந்த ஞானமே பரமார்த்த தரிசனத்தைக் கொடுக்கக்கூடியது. இதுவே மிக உயர்ந்த ஞானம். புத்த சமயத்தின்படி இருவகைக் காட்சிகளுண்டு. சாதாரணமாக நாம் காட்சி என்று கூறுவது அறிவு. கொடுக்கப்பட்ட தரவுகளின்படி ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுதல். இது ஞாபகங்களின் திரட்சி. இதனை 'வரன்முறை அறிவு' என்பர் (அனுபோதம்). இது ஆழ்ந்த காட்சியன்று. உண்மையான ஆழமுள்ள காட்சி, உள்ளார்ந்த காட்சி (படிவேதம்). அதாவது ஒரு பொருளின் உண்மையான தன்மையை உள்ளபடி அறிதல். பெயர் சொல்லியோ, அடையாள அட்டையின்றியோ அறிதல். மனம் சகல களங்கங்களுமின்றித் தியானத்தில் பக்குவமடைந்த போது தான் இந்தக் காட்சி கைவரும்.
இவ்வாறு சுருக்கமாகக் கூறப்பட்ட இந்த அட்டாங்க மார்க்க வரலாற்றிலிருந்து, இது ஒவ்வொருவரும் அனுசரிக்க வேண்டிய வாழ்க்கை முறை என்பதை அறியலாம். மனம், வாக்கு, காயங்களினால் இதை அப்பியாசிக்க வேண்டும். அதன் பயனாக ஒருவர் தன்னை மேனிலைக்குக் கொண்டு வரலாம். மனத்தைத் தூய்மைப் படுத்தலாம். இதற்கு நம்பிக்கையோ, பிரார்த்தனையோ, வழிபாடோ, கிரியைகளோ அவசியமில்லை. பொதுவாகச் 'சமயவாழ்வு' என்று சொல்லப்படும் எதுவும் இதில் இல்லை. இது ஒரு வழி. பரமார்த்தத்தைக் காணும் வழி. இங்கே ஒழுக்கம், ஆன்மார்த்தம், விவேகம் என்பவற்றின் நிறைவு உண்டாகிறது. அவற்றால் பூரண விடுதலையும் சுகமும், சாந்தியும் கிட்டுகிறது.
சமய விழாக்களின் போது பௌத்த நாடுகளிலே எளிமையும் அழகும் வாய்ந்த கிரியைகளையும் வழக்கங்களையும் காணுகிறோம். அவற்றுக்கும் பௌத்தக் கோட்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. சில சமய உணர்ச்சிகளைத் திருப்திப்படுத்தவும் அறிவு குறைந்தவர்களைத் தர்ம வழியில் திருப்பவும் அவை பயனுடையனவே.
நாலு உயர்வாய்மைகள் சம்பந்தமாக நாம் செய்ய வேண்டிய நான்கு கடமைகளுண்டு.
முதலாவது உயர்வாய்மை துக்கம். அதாவது இல்வாழ்வின் தன்மை. அதில் உண்டாகும் துன்பம், கவலை, மகிழ்ச்சி, குறைகள், அதிருப்திகள், அதன் நிலையாமை, அனாத்மத் தன்மை என்பன. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது நம் கடமை. தெளிவாகவும், முற்றாகவும் உணர்ந்து கொள்ள வேண்டும் (பரிஞ்ஞெய்ய).
இரண்டாவது உயர்வாய்மை துக்கத்தின் தோற்றம். அதற்குரிய காரணம் - வேட்கையே துக்கத்துக்குக் காரணம். வேட்கை, பற்றுக்கள், ஆசவங்கள், களங்கங்கள் என்பவற்றோடு சேர்ந்து வரும். இதைப் புரிந்து கொண்டால் மாத்திரம் போதாது. அவ்வேட்கையைக் களைந்து விட வேண்டும். தூரத் துறந்து விட வேண்டும். அழித்து விட வேண்டும். ஒழித்து விட வேண்டும் (பஹாதப்ப).
மூன்றாவது உயர்வாய்மை துக்க நிவாரணம். இது நிர்வாணமென்னும் பரமார்த்தத்தை உணர்த்தும். இதுவே பரம்பொருள். இவ்விஷயத்தில் நாம் அதை அடைய வேண்டும். சாட்சாத்காரப்படுத்த வேண்டும் (சச்சிகாதப்ப).
நாலாவது உயர்வாய்மை நிர்வாணத்தை அடையும் வழி. இந்த வழியைப் பூரணமாக அறிந்து கொண்டால் மாத்திரம் போதாது. நமது கடமை அவ்வழியில் செல்வது. அதைவிட்டு விலகாதிருப்பது. (பாவேதப்ப).
* * *
[1] தியானம் பற்றிய ஏழாம் அத்தியாயம் பார்க்க