தூய்மை என்றால் என்ன?
குறிப்பிட்ட ஒரு ஜாதியிலோ, வம்சத்திலோ, குடும்பத்திலோ பிறந்து விட்டால் தூய்மையானவராகிவிட முடியுமா?
புனிதமானதெனக் கருதப்படும் குளத்திலோ, ஆற்றிலோ மூழ்கியெழுந்தால் தூய்மையானவராகிவிட முடியுமா?
இது புனிதமான இடம். இங்கு புனித யாத்திரை மேற்கொள்பவருக்குச் சொர்க்க வாசம் உறுதி என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். சொர்க்கத்துக்குச் செல்வது அவ்வளவு எளிதான காரியமா?
கோவில் உண்டியில் தங்கச் சங்கிலியைத் தானமாகப் போட்டுவிட்டால் (அல்லது புத்தருக்குச் சிலை செய்து வைத்து விட்டால்) செய்த தவறுகளுக்கு அது பரிகாரம் ஆகி விடுமா?
யாகங்கள் மற்றும் சடங்குகள் செய்வதனால் தூய்மை பெற்றுவிட முடியுமா?
ஆறு திசைகளையும் வணங்குவதாலோ, நல்ல நேரத்தில் ஒன்றைச் செய்வதாலோ, சோதிடம் பார்த்து ஒரு செயலை மேற்கொள்வதாலோ ஒருவர் செய்யும் காரியம் தூய்மையாகிவிடுமா?
பெயரில் எழுத்துக்களை மாற்றியோ, சேர்த்தோ அமைத்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்வினை நிகழச் செய்ய முடியுமா?
அழகான வீட்டை இடித்து, ஒரு திசையில் உயரமாகக் கட்டி, சமையல் அறையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டால் எதிர்காலம் சிறப்புற்று விடுமா?
பதில்: இல்லை; இவை எதுவும் இல்லை.
உள்ளத்தில் எந்த முயற்சியும் எடுக்காமல் நல்ல பலன் பெற்றுவிடலாம் என்று நினைப்பவரின் எண்ணப்போக்கில் தான் இவை எல்லாம் தூய்மைப் படுத்தும் செயல்கள் என்று தோன்றும்.
தூய்மை என்றால் உள்ளத் தூய்மை. ஐந்து நல்லொழுக்கங்களைக் கடைப் பிடித்தல். அவை
1) கொல்லாமை. எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல். இதற்கு நேர்மறையான இயல்பு அன்பு. அனைத்து உயிர்களிடத்தும் அன்போடு இருத்தல்.
2) கள்ளாமை. கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல். இதற்கு நேர்மறையான இயல்பு தயாள குணம்.
3) தவறான பாலியல் உறவுகள் கொள்ளாமை. (சிறுவர்க்குச் சொல்லும்போது பேராசை இல்லாமை). இதற்கு நேர்மறையான இயல்பு திருப்தியுடன் வாழ்தல்.
4) பொய்யாமை. தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல் (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்). இதற்கு நேர்மறையான இயல்பு உண்மையே பேசுவது. உண்மை மட்டும் பேசினால் போதாது. அதை அன்போடும், உதவிகரமான, முரண்பாடற்ற வகையிலும் பேச வேண்டும்.
5) கள்ளுண்ணாமை. போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல். இதற்கு நேர்மறையான இயல்பு மனக் கவனத்தோடு இருத்தல். உணர்ந்த நிலையில் இருத்தல்.
நல்லதைச் செய்து தீயதைத் தவிர்த்தால் மனம் தூய்மை அடையும். மனம் தூய்மை பெற்றால் நாம் மேலும் நல்லதைச் செய்வோம், தீயதைத் தவிர்ப்போம். நல்வினைப் பயன் தானாக நம்மை வந்து சேரும்.
* * * * *
சமீபத்தில் பத்திரிக்கையொன்றில் படித்த செய்தி மக்கள் எப்படியெல்லாம் புண்ணியம் சேர்க்க முயற்சிக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
மக்களில் ஒரு சில பிரிவினர் கோவிலுக்குச் சென்று பூசாரியைத் தங்கள் தலையிலேயே தேங்காயை உடைக்கச் சொல்லி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விவரங்கள் இங்கே.
பூசாரியும் தான் 29 வருடங்களாக மற்றவர் தலையில் தேங்காய் உடைக்கும் "புனிதக்" கடமையை நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். மேலும் பூசாரி அவரது தந்தை 56 ஆண்டுகளாக மக்கள் தலையில் தேங்காய் உடைத்ததாகவும், அவரது பாட்டன் 62 வருடங்களாக மக்கள் தலையில் தேங்காய் உடைத்ததாகவும் கூறுகிறார். இது குருடரிடம் வழி கேட்பது போல. அவர் காட்டும் வழியை நாம் நம்பி விடுகிறோம். அவர் யாரிடம் தெரிந்து கொண்டார்? இன்னொரு குருடரிடம். அந்த இரண்டாவது குருடரும் வேறொரு குருடரிடம் வழியைக் கற்றுக் கொண்டவர்தான்.
மற்றொரு கோவிலில் மக்கள் பிராமணர்கள் சாப்பிட்டுவிட்டு மிஞ்சிய எச்சில் இலைச் சோற்றில் புரள்வதைப் புண்ணியம் சேர்க்கும் செயலாகக் கருதுகின்றனர். விவரங்கள் இங்கே. மேன்மையானோர் எவரும் தங்கள் மாணவர்களையோ சீடர்களையோ இப்படி நடந்து கொள்ள அறிவுறுத்த மாட்டார்கள். யார் பிராமணர் என்று புத்தர் தெளிவாக விளக்கியுள்ளார். அப்படிப்பட்ட உண்மையான மேன்மையானோருக்கு மரியாதை அளித்துப் புண்ணியம் சேர்க்கலாம். எப்படி மரியாதை அளிப்பது? அவர்கள் சொல்லையும், நடத்தையையும் கவனித்து, அதன் படி நாமும் நடந்து தூய்மை பெறலாம். அப்படித்தான் அவர்கள் அருகில் இருந்து புண்ணியம் சேர்க்கமுடியும்.
* * * * *
புத்தரின் வார்தைகள்
யாகங்கள் செய்வோருக்கு தந்த அறவுரை
புனித நீர் பற்றி (கடைசி பகுதி 5. பார்க்க)
கேவலமான கலைகள் (முதல் கேள்விக்கான பதில் பார்க்கவும்)