ஒரு துண்டுத் துணி பற்றிய உவமை
(சுருக்கப்பட்டது)
Translated from the book 'What the Buddha taught' by Venerable Walpola Rahula
Alternate English Translation and source for some of the commentary
Vatthupama sutta வத்துபமா சுட்டா
நான் கேள்விப் பட்ட நிகழ்ச்சி இது. ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தார். அங்கு இருந்த பிக்குமார்களுக்கு உரை நிகழ்த்தினார்.
1.
'ஒரு கறை படிந்த அழுக்குத் (துண்டு) துணியைச் சாயம் தோய்ப்பவர் சாயத்தில் மூழ்குவித்தால், அது எந்த நிறச் சாயமாக இருந்தாலும் சரி - நீலம், மஞ்சள், சிவப்பு, இளஞ் சிவப்பு - அது அழுக்கான துணி யாகத்தான் தொடர்ந்து இருக்கும். ஏன்? ஏனெனில் அந்தத் துணி அழுக்குப் படிந்தது. அது போலத் தான், உள்ளம் ஒழுக்கங் கெட்டு இருந்தால், எதிர்காலமும் கெட்டதாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
'ஒரு முழுமையான சுத்தமான (துண்டு) துணியைச் சாயம் தோய்ப்பவர் சாயத்தில் மூழ்குவித்தால், அது எந்த நிறச் சாயமாக இருந்தாலும் சரி - நீலம், மஞ்சள், சிவப்பு, இளஞ் சிவப்பு - அது அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஏன்? ஏனெனில் அந்தத் துணி சுத்தமான துணி. அது போலத் தான், உள்ளம் தூய்மையாக இருந்தால், எதிர்காலமும் நல்லதாகவே அமையும் என எதிர்பார்க்கலாம்.
2.
'மன மாசுகள் யாவை?
பேராசை மனதின் ஒரு அசுத்தம். வன்மை ... கோபம் ... துவேஷம் .... வஞ்சனை ... கபடம் ... பகைமை .. பொறாமை .. ஏமாற்றுதல் .. பித்தலாட்டம் ... பிடிவாதம் .... அகந்தை ... அகம்பாவம் ... திமிர் .... தற்பெருமை ... சோம்பல் மனதின் ஒரு அசுத்தம்.
'பிக்குகளே, யாரொருவர் பேராசையை மனதின் அசுத்தம் என்பதை உணர்கிறாரோ, அதை அவர் கைவிடுகிறார். வன்மையை மனதின் அசுத்தம் என்பதை உணருகிறாரோ ... கோபத்தை ... துவேஷத்தை .... வஞ்சனையை ... கபடத்தை ... பகைமையை .. பொறாமையை .. ஏமாற்றுதலை .. பித்தலாட்டத்தை ... பிடிவாதத்தை .... அகந்தையை ... அகம்பாவத்தை ... திமிரை .... தற்பெருமையை .. சோம்பலை மனதின் அசுத்தம் என்பதை உணர்கிறாரோ, அதை அவர் கைவிடுகிறார்.
3.
'பிக்குகளே, பேராசையை மனதின் அசுத்தம் என்று உணர்ந்து கைவிட்டவர்; வன்மையைக் கைவிட்டவர் ... கோபத்தைக் கைவிட்டவர் ... துவேஷத்தைக் கைவிட்டவர் .... வஞ்சனையைக் கைவிட்டவர் ... கபடத்தைக் கைவிட்டவர் ... பகைமையைக் கைவிட்டவர் .. பொறாமையைக் கைவிட்டவர் .. ஏமாற்றுதலைக் கைவிட்டவர் .. பித்தலாட்டத்தைக் கைவிட்டவர் ... பிடிவாதத்தைக் கைவிட்டவர் .... அகந்தையைக் கைவிட்டவர் ... அகம்பாவத்தைக் கைவிட்டவர் ... திமிரைக் கைவிட்டவர் .... தற்பெருமையைக் கைவிட்டவர் .. சோம்பலை மனதின் அசுத்தம் என்று உணர்ந்து கைவிட்டவர்:
ஞானம் பெற்ற அவரின் (புத்தரின்) பண்புகளை நினைத்து மன நிறைவு பெறுகிறார்; "புத்தர் தகுதியானவர், முழுமையாக விழிப்புற்றவர், முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர், மகிழ்ச்சியானவர், பிரபஞ்சத்தை அறிந்தவர், தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆசிரியரானவர்; விழிப்புற்றவர்; ஆசிர்வதிக்கப்பட்டவர்;"
தர்மத்தை நினைத்து மன நிறைவு பெருகிறார்; ஆசீர்வதிக்கப்பட்ட அவர் தர்மத்தை நன்கு தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார்; இப்போதே இங்கேயே காணக் கூடியது தர்மம்; அனைவரையும் வரவேற்று பார்த்து (விசாரணை செய்து) புரிந்து கொள்ள அழைக்கிறது; ஆன்மீகத்தை வளர்க்கிறது, அறிவுள்ளவர் தாங்களாகவே புரிந்து கொள்ளக் கூடியது."
"சங்கத்தை நினைத்து மன நிறைவு பெறுகிறார்; ஆசிர்வதிக்கப் பட்டவரின் சீடர்களின் சங்கம் நல்ல நடத்தையும், நேர்மையும், அறிவும், கடமையுணர்வும் கொண்டுள்ளனர்; ஆசிர்வதிக்கப் பட்டவரின் சீடர்கள், அதாவது நான்கு ஜோடிகள் - எட்டு வகையான - மேன்மையானோர் [1], அவர்கள் நன்கொடை பெறத் தகுதியானவர்கள், அவர்கள் உபசரிக்கத் தகுதியானவர்கள், பரிசு பெறத் தகுதியானவர்கள், மதிக்கத் தக்கவர்கள். உலகில் புண்ணியம் செய்ய ஒப்பில்லாச் சந்தர்ப்பம் இது."
4.
இறுதியாக மாசுகளைத் துறந்து விட்டு, உதறிவிட்டு, அவற்றிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு, ஞானம் பெற்ற அவரையும் (புத்தரின்), அவரின் போதனைகளையும் (தர்மத்தை), அவரின் சங்கத்தையும் நினைவில் கொள்வதால் மன நிறைவு கொண்டு - வாய்மையைச் சற்று உணர்ந்து - அதனால் திருப்தி அடைகிறார். திருப்தி அடைந்ததால் மனதில் மகிழ்வு எழுகிறது. மனம் மகிழும் போது உடல் அமைதியாகிறது. அமைதி காணும் போது மன நிறைவு அடைகிறார். மன நிறைவு கொண்டவரது மனம் மனஒருமைப்பாடு கொள்கிறது.
....
நட்புணர்வும் அன்பும் (love), கருணையும் (compassion), மற்றவர் அதிர்ஷ்டத்தில் மகிழ்வும் (sympathetic joy), சமானமான மன அமைதியும் (equanimity) கொண்ட எண்ணங்களோடு அவர் உலகின் நான்கு பகுதிகளையும், மேலும் கீழும், எதிர்ப்பக்கத்திலும் எல்லா இடங்களிலும் ஊடுருவுகிறார்; பரந்து விரிந்த உலகை, அகன்ற தன்மை கொண்ட, எல்லையற்ற, வெறுப்பற்ற தீய எண்ணங்கள் இல்லாத அவர் மனதின் பிரகாசமான எண்ணங்களோடு ஊடுருவுகிறார்.
....
விடுதலை கண்ட அவர் விடுதலை பெற்று விட்டதை அறிவால் உணர்கிறார். அவருக்குத் தெரியும்: பிறப்பு தீர்ந்தது. ஆன்மிக வாழ்வு முடிந்தது. செய்ய வேண்டியது செய்யப்பட்டு விட்டது. மேலும் இதன் காரணமாகச் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.'
பிக்குகளே, இத்தகைய பிக்கு உள்ளத்தினுள் குளித்தவராவார்.
5.
அச்சமயத்தில் அருகில் அமர்ந்திருந்த சுந்தரிகா-பரத்வாஜா என்ற பிராமணர் புத்தரைக் கேட்டார் 'கௌதமரே, பாஹுகா ஆற்றில் குளிக்கச் செல்வீர்களா?'
'பாஹுகா ஆற்றில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது, பிராமணரே? அது என்ன (நலன்) செய்கிறது?'
'கௌதமரே, பலராலும் பாஹுகா ஆறு புனிதப்படுத்துவதாகவும் பரிசுத்தமானதாகவும் கருதப்படுகிறது. அவர்கள் தங்கள் உள்ளத்து மாசுக்களை பாஹுகா ஆற்றில் குளிப்பதால் சுத்தம் செய்கின்றனர்.'
இதை கேட்ட புத்தர் பிராமணர் சுந்தரிகா-பரத்வாஜாவிடம் இவ்வாறு கூறினார்:
'பாஹூகாவிலும் அதிகக்காவிலும்,
கயா, சுந்தரிகா, சிராஸத்தியிலும்,
பயாக, பாஹுமதி [2] ஆற்றிலும் - தீமை செய்த முட்டாள்
தினந்தோறும் மூழ்கினாலும், தூய்மை அடையமாட்டான்.
சுந்தரிகா, பயாக அல்லது பாஹுகாவினால் என்ன செய்ய முடியும்?
தீமையும் வெறுப்பும் கொண்டவனை அவை சுத்தம் செய்ய முடியாது.
யாதொருவர் மனத்தூய்மை கொண்டுள்ளாரோ அவருக்கு
எந்நாளும் சுப நாள் தான்,
எந்நாளும் புனிதமான நாள் தான்.
சுத்தமான அவர், செய்கையில் தூய்மையான அவர்
எப்போதும் செய்ய வேண்டியதைக் கவனமாகச் செய்வார்.
எனவே பிராமணா, இங்கு வந்து குளியுங்கள் [3]:
உயிரினங்களுக்கு அன்பைக் காட்டுங்கள்.
பொய் சொல்லாமலும், கொல்லாமலும், திருடாமலும்,
கருமியாக இல்லாமலும் நம்பிக்கையோடு வாழ்ந்தால்,
கயா ஆற்றுக்குப் போவதால் என்ன பயன்?
உங்கள் வீட்டுக் கிணறே கயா ஆறு போலத்தான்.'
இதைக் கேட்ட பிராமணர் சுந்தரிகா-பரத்வாஜா புத்தரிடம் சொன்னார்:
"அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும் - பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கியுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். என்னைச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டு கௌதமரின் சீடனாகத் துறவிப் பட்டம் அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.'
பிராமணர் சுந்தரிகா-பரத்வாஜா சங்கத்தில் அனுமதிக்கப்பட்டுத் துறவிப் பட்டமும் பெற்றார். துறவியாகிச் சில காலம் கழித்து, போற்றுதலுக்குரிய பரத்வாஜா தனிமையுடனும் விலகியும் வாழ்ந்து, ஊக்கமுடனும், ஆர்வத்துடனும், உறுதியுடனும் அந்தத் 'தன்னிகரில்லா நிலையை' அடைந்தார். அதுவே ஆன்மீக வாழ்வின் அடிப்படைக் குறிக்கோள். இதன் காரணமாகத்தான் மக்கள் இல்லறத்திலிருந்து துறவியாகின்றனர். அவரது உயர்ந்த அறிவினால் அவருக்குத் தெரிந்தது: 'பிறப்பு தீர்ந்தது. ஆன்மிக வாழ்வு முடிந்தது. செய்ய வேண்டியது செய்யப்பட்டு விட்டது. மேலும் இதன் காரணமாகச் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.' இவ்வாறு போற்றுதலுக்குறிய பரத்வாஜாவும் ஒரு ஞானி ஆனார்.
சில விளக்கங்கள்:
[1] ஆசிர்வதிக்கப் பட்டவரின் சீடர்கள், அதாவது நான்கு ஜோடிகள் - எட்டு வகையானோர்
இதன் விளக்கத்தை திருப்பாடல்கள் --> சங்க வந்தனா -- பக்கத்தில் பார்க்கவும்.
[2] இவை எல்லாம் ஆற்றின் பெயர்கள் இதில் மூன்று சிற்றாறுகள் நான்கு ஆறுகள்.
[3] ஆற்றில் குளித்துத் தூய்மை பெறலாம் என்று நம்பியவருக்கு திறமையுடன் புத்தர் உள்ளத்தை எப்படிக் குளிக்க வைப்பது என்பதைக் கூறி அவருக்கு உணர்ச்சியூட்டி ஊக்குவிக்கிறார்.