நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி 
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்

பதிப்புரை


தாய்மொழியாய செந்தமிழ் மொழியிற் சிறந்த நூலுள்ளனவெல்லாம்
ஆய்ந்து கண்டெடுத்து நன்முறையில் அச்சியற்றி வெளிப்படுத்தி நாட்டுக்கு
நலம் விளைப்பதே நம் கழகத்தின் நோக்கமாகும். அந்நோக்கம்
நிறைவேற்றுமுறையில் அரியபெரிய நூல்கள் ஆண்டுதோறும் புது முறையில்
வெளிவருவதைத் தமிழன்பர் பலரும் அறிவர், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை,
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களனைத்தும் கழகப்பதிப்பாக வந்துள்ளன
காணலாம். சூளாமணி, பெருங்கதை, கல்லாடம் போன்ற அருமையான
நூல்களுக்கும் எளிய இனிய உரைவிளக்கம் வரைவித்துப் பதித்தனம்..
ஐம்பெருங்காப்பியங்களிற் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
மூன்றும் கழக வாயிலாக வெளிவந்துள்ளன. குண்டலகேசி நூல் முழு
வடிவத்திற்கிடைக்கும் என இதுகாறும் எதி்ர்நோக்கினம். அந்நோக்கம்
நிறைவேறாது வறிதே கழிந்தன. குண்டலகேசி என்ற நூற்பெயர்
நிலைத்திருப்பதற்கும் அந்நூற்கவிகளின் சுவை கற்றோருள்ளத்திற்
பதிந்திருப்பதற்கும் இஞ்ஞான்று கிடைத்துள்ள பாக்களையாவது
வெளிப்படுத்துவது நலம் எனக் கருதியது கழகம்.

புறத் திரட்டு என்ற நூலைத் தொகுத்த புரவலர் சான்றோர், அந்நூலுள்
குண்டலகேசி நூற்செய்யுள் எனக் கண்டவை பத்தொன்பதே இவ்
நூற்கவிகளை தொகுத்து உரையாசிரியர், பெருமழைப் புலவர் உயர்திரு
பொ.வே.சோமசுந்தரனாராவர்கள்பால் விளக்கவுரை வரைந்து தருமாறு
வேண்டிப் பெற்று இற்றைநாள் வெளியிடுகின்றோம். உரையாசிரியர்
அவர்களுக்குக் கழகம் என்றும் நன்றி பாராட்டும் உரிமையுடையது.

குண்டலகேசி மூலமும் உரையும் என இருவகையாகப் பகுத்து ஒரு
புத்தகம் ஆக்கினம். எளிய இனிய உரையும் விளக்கமும் அமைந்துள்ளது.
செய்யுட்கள் யாவும் நன்கு சீர்பிரித்துக் கற்போர் மனத்தைக் கவருமாறு
பெரிய எழுத்திற் பதிக்கப்பட்டுள்ளது. கட்டும் வனப்பு வாய்ந்ததே,

தமிழன்பர் பலரும் குண்டலகேசியை தமிழ்த்தாய்க்கு நல்லணியாகக்
கண்டு, கிடைத்துள்ள பொருளைப் போதுமெனப்போற்றி மகிழ்வார்போற்
கிடைத்த பாக்களைப் போற்றிவாழ்க.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்