கடவுள் வாழ்த்து

குண்டலகேசி முகப்பு

நாதகுத்தனார் இயற்றிய

குண்டலகேசி

Kundalakesi

பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்

1. கடவுள் வாழ்த்து

முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காறு

நன்றே நினைந்தான் குணமேமொழித் தான்ற னக்கென்

றொன்றானு முள்ளான் பிறர்க்கேயுறு திக்கு ழந்தான்

அன்றே யிறைவ னவன்றாள்சர ணாங்க ளன்றே.

எளிமையாக:

முன் தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்

நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கு என்று

ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்

அன்றே இறைவன் அவன் தாள் சரண் நாங்கள் அன்றே

He was the first to reach the exalted place - the state of Nibbana

He discovered the path of release, taught the good Dhamma.

He was selfless. He strove for the welfare of others.

He (the Buddha) is our supreme leader. We take refuge at his feet.

(Nibbana - Absense of greed, hatred and delusion)

(இதன் பொருள்)

முன் தான் பெருமைக்கண் நின்றான் - உலகின்கண் பிறர் யாரும் மெய்யுணர்ந்து வீடுபெற்று நெறியின் கண் நிற்றற்கு முன்பே தான் அம்மெய்யுணர்வினை யெய்தித் துறவின்கண் நிலைபெற்று நின்றானாகி;

பெருமைக்கண் - பெருமையில், பெருமையின் இடத்தில்

கண் - Place, site; இடம், ஏழாம் வேற்றுமை உருபு.

முடிவு எய்துகாறும் - தான் பரிநிருவாணம் என்னும் அவ் வீடுபேற்றினை எய்துமளவும்:

எய்துகாறும் - அடையும்வரை

எய்து-தல் - To obtain, acquire, attain; அடைதல்.

நன்றே நினைந்தான் - பிறவுயிர்கட்கெல்லாம் நன்மையுண்டாகும் நெறியினையே ஆராய்ந்துணர்ந்தான்;

அன்றே - அந்நாளே

குணமே மொழிந்தான் - அங்ஙனம் தான் ஆராய்ந்துணர்ந்த நல்லறங்களையே மக்கட்குச் செவியறிவுறுத்தினான்:

குணம் - நல்லவற்றை, நல்ல அறத்தை

தனக்கு என்று ஒன்றானும் உள்ளான் - தனக்கென்று யாதொரு நன்மையையும் வேண்டுகிலனாய்;

பிறர்க்கே உறுதிக்கு உழந்தான் - பிறருடைய நன்மையின் பொருட்டே முயன்றனன்;

அவன் இறைவன் - அத்தகைய சான்றோனாகிய புத்த பெருமானே எமக்குக் கடவுள் ஆவான் :

நாங்கள் சரண் - ஆதலால் அவ்விறைவன் திருவடிகளுக்கே அடியேங்கள் அடைக்கலமாகி வணங்குவேம் என்பதாம்.

தாள் - திருவடிகள்

(விளக்கம்) உலகின்கண் முதன்முதலாக மெய்க்காட்சி பெற்று அக்காட்சிவழி நின்றொழுகியவன் எங்கள் புத்தபெருமானே! என்பாள் முன்றான் பெருமைக்கண் நின்றான் என்றாள். பெருமை, ஈண்டுத் துறவொழுக்கம். என்னை?

என்றாள் - குண்டலகேசி அம்மையை குறிக்கும்

ஈண்டுத் துறவொழுக்கம். என்னை? - இங்கு துறவு ஒழுக்கம் என்றால் என்ன என்பதனை கீழே விளக்குவோம்.

"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு" --குறள், 21


ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும். (மு.வரதராசனார் உரை)

The books (written by the wise) are clear in praising those who are steadfast in virtue and free from attachments. Kural 21

ஒழுக்கத்து - ஒழுக்கத்தில் நிலைத்துநின்று,

நீத்தார் - பற்றுவிட்டவர்கள்

நீத்தல் - To renounce, as the world; துறத்தல்

விழுப்பம் - ஆசை, சிறப்பு, நன்மை, உயர்வு.

பனுவல் - நூல்

துணிவு - முடிவான கருத்து

என்பவாகலான் நிற்றலாவது - அவ்வொழுக்கத்திற் பிறழாது ஒழுகுதல் முடிவு என்றது. பரிநிருவாணத்தை (வீடுபேற்றினை) - நன்று நன்மை தரும் அறம் குணம் - ஈண்டு - நன்மைமேற்று, தனக்கு என்று - தான் இன்புறுதற் பொருட்டு. ஒன்றானும் - யாதொரு பொருளையும்,

என்பவாகலான் - என்ப வாகலான் - என்று சொல்லப்படுவதால்

நிற்றலாவது - பெருமைக்கண் நின்றான் என்பதில் வரும் நிற்றல்

பரிநிருவாணம் என்பது நிருவாணம் என்றே கூறப்படவேண்டும்

"இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து" --குறள், 344

( தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும்; பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குதற்கு வழியாகும். (மு.வரதராசனார் உரை)

Non attachment gives rise to concentration. If there is attachment it gives rise to delusion, thus dislodging concentration. Kural 344

மற்றும் - மீண்டும்

பெயர் - போக்குதல் )

எனவும்,"விடல்வேண்டும் வேண்டியவெல்லாம் ஒருங்கு" எனவும், "பிறப்பறுக்கனுற்றார்க் குடம்பும் மிகை" எனவும்,"தலைப்பட்டார் தீரத் துறந்தார்" எனவும், ஓதுபவாகலான் 'தனக்கென்று ஒன்றானும் உள்ளான்' எனல் வேண்டிற்று அன்று ஏ: அசைகள்.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு. -- குறள், 343

ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விடல் வேண்டும். (மு.வரதராசனார் உரை)

We must conquer the desires of the five senses. Give up attachment towards the objects of those senses. Kural 343

அடல் - Kill; கொல்லுகை.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை?

பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள்; ஆகையால் அதற்குமேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ? மு.வரதராசனார் உரை)

For those who try to remove the existential suffering even the body is superfluous. So why be attached to anything else? Kural 345

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

முற்றத் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர். அவ்வாறு துறக்காத மற்றவர், அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர். (மு.வரதராசனார் உரை)

Those who are completely detached are in the highest stage. Those who are not detached are stuck in the web of ignorance. Kural 348

இனி, துறந்தோர் சிலர் காடுபற்றியும் கனவரை பற்றியும் மலை முழைஞ்சு புக்கிருந்தும் தனித் துறைதலும் ஒருவகையாற் றன்னலமே கருதிப் பிறர் நலம் பேணாப் பீழையுடத்து ; எம்மிறையனோ தான் மெய்யுணர்ந்து நன்றின்கண் நிலைபெற்றுழியும் அவ்வாறு தனித்திராமல் மன்னுயிரின் துன்பமெல்லாம் போக்குதல் வேண்டும் என்னும் பேரருள் காரணமாகப் பெரிதும் முயல்வானாயினன் என்பாள் பிறர்க்கு உறுதிக்குழந்தான் என்றாள். அவன் என்றது அத்தகைய சான்றோனாகிய எங்கள் புத்தபெருமான் என்பதுபட நின்றது. அவன் இறைவன், அவன் தாள் சரண் என அவன் என்பதனை முன்னுங் கூட்டுக. சரண் அடைக்கலம். அடைக்கலம் புகுதலாவது அவன் கூறிய அறநெறியிலே உறுதியாக நின்றொழுகுதல்,

காடுபற்றியும் - காடுகளோடு பற்று கொண்டும் attached to forests

கனவரை - உயர்வான (கன) மலை (வரை)

மலை முழைஞ்சு - மலைக்குகை

புக்கில் - புகு- + இல் 1. Abode; தங்குமிடம்.

பீழை - துன்பம்

இனி இக் குண்டலகேசிச் செய்யுளை வழிமொழிந்து வருகின்ற நீலகேசிச் செய்யுளும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. அது வருமாறு.

"ஆதிதான் பெரியனா யறக்கெடு மளவெல்லா

மூதியமே யுணர்ந்தவ னுறுதரும மேயுரைத்தான்

யாதனையுந் தான்வேண்டா னயலார்க்கே துன்புற்றான்

போதியா னெம்மிறைவன் பொருந்தினா ருயக்கொள்வான். --நீலகேசி, குண்டல, 27

எனவரும்.

எளிமையாக:

"ஆதிதான் பெரியனாய் அறக்கெடும் அளவெல்லாம்

ஊதியமே உணர்ந்தவன் உறுதருமமே உரைத்தான்

யாதனையும் தான் வேண்டான் அயலார்க்கே துன்புற்றான்

போதியான் எம் இறைவன் பொருந்தினார் உயக்கொள்வான்.

--நீலகேசி, பகுதி 3 குண்டலகேசி வாதனம் 176 பாடல்

அறக்கெடும் - முழுதும் அற்றுப்போதல்

ஊதியம் - Benefit, advantage; பயன்.

உறுதருமமே - மிகுந்த தருமமே.

தருமம் - கடமை, நற்செயல், நீதி.

பொருந்தினார் - அவர் வழிச் செல்வோர்

உய்தல் - வாழ்தல்