நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
6. இதுவுமது
அனலென நினைப்பிற் பொத்தி யகந்தலைக் கொண்ட காமக்
கனலினை யுவர்ப்பு நீராற் கடையற வவித்து மென்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னா னீக்குது மென்று நிற்பார்
புனலினைப் புனலினாலே யாவர் போகாமை வைப்பார்.
இதுவுமது - முன் கவிதை கருத்தைத் தழுவி வரும் இது
எளிமையாக:
அனல் என நினைப்பிற் பொத்தி அகந்தலைக் கொண்ட காமக்
கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார்
நினைவிலாப் புணர்ச்சிதன்னால் நீக்குதும் என்று நிற்பார்
புனலினைப் புனலினாலே யாவர் போகாமை வைப்பார்
Like kindle that catches fire easily a heart consumed by lust contained in the mind
can be extinguished with hate without a trace, say some.
A heart that can think of nothing else can be used to uproot lust, say some (foolishly).
Who can dam a flood with another flood?
(இ - ள்) அனல் என நினைப்பிற் பொத்தி - நொய்யவிறகினில் தீக்கதுவுமாறுபோல நினைவின்கண் கதுவிக் கொண்டு; அகந்தலைக் கொண்ட காமக் கனலினை - நெஞ்சத்தை யிடமாகக் கொண்டு வளருகின்ற காமமாகிய பெரு நெருப்பை; உவர்ப்பு என்னும் நீரால் - வெறுப்பு என்னும் நீர் பெய்து; கடையற அவித்தும் என்னார் - எச்சமின்றி அவித்துவிடுவேம் என்று கருதாராய்; நினைவிலாப் புணர்ச்சிதன்னால் நீக்குதும் என்று நிற்பார் - நினைவிழந்து அதுவேயாகி அழுந்துதற்குக் காரணமான புணர்ச்சியினாலேயே அக்காமத்தை அகற்றுவேம் என்று முனைந்து நிற்கின்றனர் மடவோர் ; புனலினைப் புனலினாலே யாவர் போகாமை வைப்பார் - மிக்குப் பெருகுகின்ற வெள்ளத்தை மற்றுமொரு வெள்ளத்தாலே அணையிட்டுத் தடுத்துவைக்கும் ஆற்றலுடையோர் யாவரே உளர் என்பதாம்.
(வி - ம்.) பொத்துதல் - மூடிக்கோடல். அகம் - நெஞ்சு. உவர்ப்பு நீர்: பண்புத்தொகை. உவர்ப்பு - வெறுப்பு.
காமத்தீ மெய்யுணர்வால் அவிவதன்றி நுகர்ச்சியால் அவியாது என்பதனையும், காமத்தாற் கதுவப்பட்டார் அதனிடத்தே அழுந்தி உலகினையே மறப்பர் என்பதனையும்,
கதுவு-தல் - To seize, catch, grasp, lay hold of; பற்றுதல்.
"சிற்றிடைச் சீதையென்று நாமமுஞ் சிந்தை தானும்
உற்றிரண் டொன்றா நின்றா லொன்றொழித் தொன்றை யுன்ன
மற்றொரு மனமு முண்டோ மறக்கலாம் வழிமற் றியாதோ
கற்றவர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்க லாமோ"
எனவரும் கம்பநாடர் மொழியானும் உணர்க. (6)
எளிமையாக:
சிற்றிடைச் சீதை என்னும்
நாமமும் சிந்தைதானும்
உற்று, இரண்டு ஒன்று ஆய் நின்றால், ஒன்று
ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ? மறக்கல்
ஆம் வழி மற்று யாதோ?
கற்றவர் ஞானம் இன்றேல்,
காமத்தைக் கடத்தல் ஆமோ?
கம்பராமாயணம் 3150.
Sita with a narrow waist
whose name and his (Ravana) mind
come closer. And if they fuse
to forget Sita and think of anything else
is there another mind? (no) To forget
her is there another way? (no)
Even the learned, if they have no wisdom (to discern good and evil)
can they overcome lust?
உரை: கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு Source 3150
சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் - மெல்லிய இடையை உடைய சீதை என்னும் பெயரும்;
சிந்தை தானும் - இராவணன் மனமும்;
உற்ற - நெருங்கி;
இரண்டு ஒன்றாய் நின்றால் - இரண்டு என்ற நிலை கடந்து
ஒன்றாகப் பொருந்திப் போய்விட்டால்;
ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன -
சீதை என்ற ஒன்றின் பெயரை நீக்கி மற்றொரு பொருளை எண்ணுதற்கு;
மற்றொரு மனமும் உண்டோ? - இன்னொரு மனமும் இருக்கின்றதோ?
(இல்லை); (எனவே); மறக்கல் ஆம் வழி மற்று யாதோ - சீதையை மறப்பதற்குப் பொருந்திய வழி வேறு யாது உள்ளது? (எதுவும் இல்லை) ;
கற்றவர் - கல்வி வல்லவராயினும்;
ஞானம் - நன்மை தீமை பற்றிய உயரறிவு;
இன்றேல் - இல்லையெனில்; காமத்தைக் கடத்தல் ஆமோ? -
(பொருந்தாக்) காமத்தை வெல்லுதல் இயலுமோ? (இயலாது).