19. இதுவுமது

குண்டலகேசி முகப்பு

நாதகுத்தனார் இயற்றிய

குண்டலகேசி

Kundalakesi

பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்

19. இதுவுமது

வேரிக் கமழ்தா ரரசன்விடு கென்ற போழ்தும்

தாரித்த லாகா வகையாற்கொலை சூழ்ந்த பின்னும்

பூரித்தல் வாடுதலென் றிவற்றாற்பொலி வின்றிநின்றான்

பாரித்த தெல்லாம் வினையின்பய னென்ன வல்லான்.

எளிமையாக:

வேரிக் கமழ் தார் அரசன் விடுக என்ற போழ்தும்

தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்

பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொலிவு இன்றி நின்றான்

பாரித்ததெல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்

வேரி - Fragrance, scent; வாசனை

தார் - Wreath, garland, chaplet; மாலை.

கமழ்-தல் -1. To emit fragrance; மணத்தல்

தாரி²-த்தல் - To bear, endure; பொறுத்தல்.

The king wearing a fragrant garland orders, 'Let him go'.

His anger not satiated he orders 'Execute him!'. But even then

no sign of exulting or sorrow on his (the prisoner) face is to be seen. He stood expressionless and calm.

'All that is experienced is the fruit of Kamma,' knew the strong one.

(இ - ள்.) வேரிக் கமழ் தார் அரசன் - மணங்கமழ்கின்ற மலர்

மாலையணிந்த மன்னவன்;

விடுக என்ற போழ்தும் - சிறைவீடு செய்க என்று கட்டனையிட்ட காலத்தும்;

தாரித்தல் ஆகா வகையால் - இவன்பால் எழுந்த சீற்றம் பொறுக்கலாகாமையாலே;

கொலை சூழ்ந்த பின்னும் - கொலை செய்யும்படி கட்டளையிட்ட பின்னரும்;

பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் - உவகையாலே தோன்றும் பூரிப்பாகிய மெய்ப்பாட்டினாலாதல்

அல்லது துன்புற்று வாடுதல் என்னும் மெய்ப்பாட்டினாலாதல்;

பொலிவு இன்றி - தன் உடம்பின்கண் யாதொரு தோற்றமும் காணப்படுதலின்றி;

நின்றான் - அமைதியாக நின்றனன், அஃதெற்றாலெனின்;

பாரித்ததெல்லாம் - தனக்கு நுகர்ச்சியாக விரிந்து வருகின்ற நிகழ்ச்சிகள் எல்லாம்;

வினையின் பயன் என்ன வல்லான் - தான் முன் செய்த பழவினையின் பயன்களேயன்றிப் பிறவில்லை என்னும் மெய்யுணர்வினால் வன்மையுடையோன்ஆகலின் என்பதாம்.

(வி - ம்.) இதனால் குறிக்கப் படுகின்ற மெய்யுணர்வாளன் யார் என்றும் அவன் சிறைப்படுதற்கும் சிறையீடு பெறுதற்கும் பின்னர்க் கொலை செய்க என்று மன்னன் கட்டளை யிடுதற்கும் உற்ற வரலாறு சிறிதும் அறிகின்றிலேம். இதனால் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்தில்

இன்னோரன்ன வரலாறுகள் இருந்தன என்று மட்டும் அறிகின்றோம்.

இனி இச் செய்யுளால் ஒரு மன்னன் ஒருவனைச் சிறைப்பிடித்து ஒருகால் சிறைவீடு செய்க என்றும் பின்னும் (அமைச்சர் முதலியோர் அறிவுரை கேட்டமையாற் போலும்) கொன்று விடுக! என்றும் கட்டளையிட்டான் என்றும்; இதற்கு ஆளாகியவன் தன் மெய்யுணர்வு காரணமாகச் சிறைவீடு செய்க என்றபோது மகிழாமலும், கொலை செய்க என்றபோது வருந்தாமலும் அமைதியுடனிருந்தான் என்றுணருகின்றோம்.

இச் செய்யுள் இராமகாதையுள் தயரதன் இராமனை அழைத்து இனி நீ இவ்வரசாட்சியை ஏற்றுக் கொள்க என்று வேண்டிய பொழுது,

“தாமரைக் கண்ணன்

காதலுற்றிலன் இகழ்ந்திலன்“ --கம்ப - மந்திர - 70

எனவரும் கம்பநாடர் மொழியும்;

தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன் - தாமரை போன்ற கண்களை

யுடைய இராமன் அரசாட்சி கிடைத்தது என்றுவிரும்பினான் அல்லன்;

இகழ்ந்திலன் - அரசாட்சி துன்பமானது என்று வெறுத்தான் அல்லன்; Source அயோத்தியா காண்டம் 1382

யசோதர காவியத்துள் மாரிதத்தன் என்னும் மன்னவன் மாரி என்னுந் தெய்வத்திற்குப் பலியிடுதற்குப் பிடித்து வந்த அபயருசி, அபயமதி என்னும் அண்ணனும் தங்கையும் தம்மைப் பலியிடப் போதலறிந்தும் அமைதியுடனிருத்தல் கண்டு அவ்விளந் துறவியை நோக்கி அவ்வேந்தன்:

“இடுக்கண் வந்துறவு மெண்ணா

தெரிசுடர் விளக்கி னென்கொல்?

நடுக்கமொன் றின்றி தம்பால்

நகுபொருள் கூறுகென்ன,”

அது கேட்ட அவ்விளந்துறவி, வேந்தே!

“அடுக்குவ தடுக்கு மானால் அஞ்சுதல் பயனின் றென்றே

நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்“

என விடை யிறுத்தமையும் நம்நினைவிற்கு வருகின்றன.

Yasodara Kaviyam 61.

இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் [கொல்

நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன

அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே

நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்.

(இ-ள்.) இடுக்கண் வந்து உறவும் - (உங்கள் உயிருக்கே) இறுதி வரவும், எண்ணாது (அதனை ஒருபொருட்டாகக்) கருதாது, எரிசுடர் விளக்கின் - எரிகின்ற விளக்கின் சிகை நடுங்குவது போல, நடுக்கம் ஒன்று இன்றி - நடுக்கம் சிறிது மின்றி, நம்பால் - நம்மிடத்தில், நகுபொருள் என் கொல் - நீவிர் சிரித்த காரணம் என்னை? கூறுக - இயம்புக, என்ன - என்று (அரசன்) கேட்க, அடுக்குவது அடுக்கும்ஆனால் - ஒன்றன்மேலொன்றாகப் பிணித்துள்ள பழவினை (பயனீயுங்கால் உதயமாகி) வெளிவருமாயின்,அஞ்சுதல் பயன் இன்று என்று - (அதற்கு) அஞ்சுவதனால் உண்டாகும் பயன் சிறிதும் இல்லை என்று கருதி, நடுக்கம் அது இன்றி நின்றாம் - நடுக்கம் என்பது சிறிதும் இலரானோம், நல் அறத் தெளிவு சென்றாம் - திருவறத்தைத் தெளிதலாகிய நற்காட்சியை அடைந்துளோம். (எ-று.) இடுக்கணை நினையாது சிரித்தது யாது காரணம் என்று வினவிய அரசனுக்கு, யாம் நற்காட்சி யுடையேமாதலின் அச்சமிலரானோம் என்றன ரென்க.

சுடர் - சிகைவு; விளக்கின் கொழுந்து, விளக்கு எரியும் போது சிகை காற்றிலசைவது போல நடுங்கும் நடுக்கம். Source

இன்னும்,

"இடுக்கண்வந் துற்ற காலை

யெரிகின்ற விளக்குப் போல

நடுக்கமொன் றானு மின்றி

நகுகதா நக்க போழ்தவ்

விடுக்கணை யரியு மெஃகா

மிருந்தழு தியாவ ருய்ந்தார்

வடுப்படுத் தென்னை யாண்மை

வருபவந் துறங்க ளன்றே."

எனவரும் சீவகசிந்தாமணியும் (509),

(இ - ள்.) இடுக்கண் வந்து உற்ற காலை - துன்பம் வந்து கூடியபோது;

எரிகின்ற விளக்குப் போல நடுக்கம் ஒன்றானும் இன்றித் தாம் நகுக - எரியும் விளக்குக் காற்றால் நடுங்குவது போல நடுங்கும் நடுக்கம் எவ்வாற்றானும் இல்லாமல் துன்புற்றார் மகிழ்க;

நக்க போழ்து அவ் இடுக்கணை அரியும் எஃகாம் - மகிழ்ந்தால் அஃது அத் துன்பத்தைப் பிளக்கும் படையாகும்;

இருந்து அழுது யாவர் உயர்ந்தார் - அத் துன்பத்தை யெண்ணி அமர்ந்து துக்கமுற்று எவர்தாம் அத்துக்கத்தினின்றும் நீங்கினார்?;

ஆண்மை வடுப்படுத்து என்னை? - வீரத்தை வடுப்படுத்தி வரம் பயன் என்னை?

வருபவந்து உறும் - வரத்தக்கவை வந்து சேரும். Source 509

“பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம,” --குறள், 376

எனவும்,

ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா. (மு.வரதராசனார் உரை)

தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா.இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.(மணக்குடவர் உரை)

பரி - Cherishing, supporting; பாதுகாக்கை

பால் - Fate, destiny; ஊழ்

உய் - த்தல் - To drive away, dispel as darkness; அனுப்புதல், நுகர்தல்.

சொரி-தல் - To give away in plenty; பொழிதல், மிகக் கொடுத்தல்

If the fruit (result) of your kamma is that you will loose things they will be lost even if you protect it.

If the fruit of your kamma is that you will keep things even if you give it away it will remain with you.

"நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்

அல்லற் படுவது எவன்?" --குறள், 379

நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ? (மு.வரதராசனார் உரை)

நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?

இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது. (மணக்குடவர் உரை)

நன்றுஆம்கால் - நல்லது + ஆகும் + காலத்தில்.

எனவும் வரும் திருக்குறள்களும் ஈண்டு நினையற் பாலனவாம். (19)

குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்தின்கண் பெரும்பாலும் அழிந்தனபோக எஞ்சி நின்று இற்றைநாள் கிடைத்துள்ள செய்யுள் பத்தொன்பதிற்கும் பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் வகுத்த

சொற்பொருள் உரைகளும் விளக்கவுரையும் ஒப்புமைப் பகுதிகளும் முற்றும்.