நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
18. இடுக்கணழியாமை
மறிப மறியு மலிர்ப மலிரும்
பெறுப பெரும்பெற் றிழப்ப விழக்கும்
அறிவ தறிவா ரழுங்கா ருவவா
ருறுவ துறுமென் றுரைப்பது நன்று.
எளிமையாக:
மறிப மறியும் மலி்ர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறுமென்று உரைப்பது நன்று
இடுக்கணழியாமை - துன்பக் காலத்து மனங்கலங்காமை Imperturbability in distress, serenity of mind, courage in trouble;
Things that can get destroyed will get destroyed. Those that will grow will grow.
Those that will be gained will be gained and that to be lost will be lost
So those who know the nature of things neither get perturbed nor do they exult
To say, 'what will happen will happen,' is good.
(இ - ள்.) மறிப மறியும் - அழியும் பொருளெல்லாம் அழிந்தே தீரும்; (அவற்றை யழியாமற் பாதுகாத்த லியலாது)
மலி்ர்ப மலிரும் - அங்ஙனமே வளரும் ஊழுடையன வெல்லாம் வளர்ந்தே தீரும்; (அவற்றை வளராமற் றடுக்கவுமியலாது)
பெறுப பெறும் - பயன் பெறுகின்ற ஆகூழுடையன பெற்றே தீரும்; (அப்பயனைப் பெறாவண்ணம் செய்தலு மியலாது);
பெற்று இழப்ப இழக்கும் - அங்ஙனமே, பெற்றபயனை இழக்கும் போகூழுடையன அவற்றை இழந்தே தீரும்; (இழவாதபடி செய்ய வியலாது)
அறிவது அறிவார் - ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர்;
அழுங்கார் - தமக்குப் பொருளிழவு நேர்ந்துழி இது பொருளியல்பென் றுணர்ந்து அவ்விழவின்பொருட்டு வருந்துதலிலர்.
உவவார் - அங்ஙனமே தாம் சிறந்த பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின் செயலென் றுணர்ந்து அப்பேறு கருதியும் பெரிதும் களிப்பதுமில ராவர்;
உறுவது உறுமென்று உரைப்பது நன்று - ஆதலால் “வருவது வந்தே தீரும்” என்று உலகோர் கூறும் பழமொழி மிகவும் வாய்மையுடையதென்று கொண்மின் என்பதாம்.
(வி - ம்.) உறுவதுறும் என்பது ஒரு பழமொழி.
மறிப, மலிர்ப, பெறுப, இழப்ப என்பன பலவறிசொல். மெய்யுணர்வுடையோர் யாது நிகழ்ந்தாலும் எல்லாம் ஊழின் செயலென்று கருதி அமைதியுடனிருப்பர். செல்வம் வந்துழிக் களிப்பதிலர். வறுமை வந்துழி வருந்துவதுமில்லை என்றவாறு, இக்கருத்தோடு,
“யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படுஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியந்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே”
எனவரும் கணியன் பூங்குன்றனார் பொன்மொழியும் காண்க. (புறநா - 192)
உரை: யாதும் ஊர் - எமக்கு எல்லாம் எமது ஊரே; யாவரும் கேளிர் - எல்லாரும் எமது சுற்றத்தார்; தீதும் நன்றும் பிறர் தர வாரா - கேடும் ஆக்கமும் தாமே வரி னல்லது பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன - நோதலும் அது தீர்தலும் அவற்றை யொப்பத் தாமே வருவன; சாதலும் புதுவ தன்று - சாதலும் புதி தன்று, கருவிற் றோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலம் - வாழ்தலை யினிதென்று உவந்தது மிலம்; முனிவன் இன்னா தென்றலும் இலம் - ஒரு வெறுப்பு வந்து விடத்து இன்னாதென்று இருத்தலும் இலம்; மின்னொடு வானம் தண் துளி தலைஇ - மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான்; ஆனாது - அமையாது; கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று - கல்லை யலைத் தொலிக்கும் வளவிய பேரியாற்று; நீர் வழிப்படூஉம் புணை போல் - நீரின் வழியே போம் மிதவை போல; ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது - அரிய வுயிர் ஊழின் வழியே படும் என்பது; திறவோர் காட்சியின் தெளிந்தனம் - நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தெளிந்தே மாகலான்; மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலம் - நன்மையான் மிக்கவரை மதித்தலும் இலம்; சிறியோரை இகழ்தல் அதனினும் இலம் - சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினு மிலேம் எ-று. Source 192
“மெய்த்தி ருப்பத மேவென்ற போதினும்
இத்தி ருத்துறந் தேகென்ற போதினும்
சித்தி ரத்தி னலர்ந்தசெந் தாமரை
யொத்தி ருக்கும் முகத்தினை யுன்னுவாள்”
எனவரும் கம்பநாடர் கவின்மொழியும் ஒப்புநோக்கற் பாலன. (18)
5088. எளிய நடை:
'மெய்த்திருப்பதம் மேவு' என்ற போதினும்,
'இத் திருத்துறந்து ஏகு' என்ற போதினும்,
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும்முகத்தினை உன்னுவாள்.
மெய்த்திருப்பதம் - உண்மையான அரசபதவியை;
மேவு என்ற போதினும் - அடைக என்று (மன்னவன்) கூறிய சமயத்திலும்;
இத்திருத்துறந்து - இந்த அரச பதவியை விட்டு விட்டு;
ஏகு என்ற போதினும் - கானகம் செல்க என்று (கைகேசி) கூறிய சமயத்திலும்;
சித்திரத்தின் அலர்ந்த - சுவர் ஓவியத்திலே மலர்ந்த;
செந்தாமரை ஒத்திருக்கும் - செந்தாமரையைப் போன்று எந்த வேறுபாடும் காட்டாதிருக்கும்;
முகத்தினை உன்னுவாள் - திருமுகத்தை நினைப்பாள்.
தாமரை பகலில்மலரும். இரவில் குவியும். ஓவியத் தாமரை எப்போதும்
ஒருபடித்தாக இருக்கும். ஓவியத் தாமரை போன்றிருந்தது இராமன் முகம். (20) Source 5088