நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
14. இதுவுமது
எனதெனச் சிந்தித்த லான்மற்
றிவ்வுடம் பின்பத்துக் காமேற்
றினைப்பெய்த புன்கத்தைப் போலச்
சிறியவு மூத்தவு மாகி
நுனைய புழுக்குலந் தம்மா
னுகரவும் வாழவும் பட்ட
வினைய வுடம்பினைப் பாவி
யானென தென்னலு மாமே.
எளிமையாக:
எனது எனச் சிந்தித்தலால் மற்றும்
இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போல
சிறியவும் மூத்தவும் ஆகி
நுனைய புழுக்குலந் தம்மால்
நுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினை பாவி-
யான் எனது என்னல் ஆமோ
By thinking this body belongs to us
if we expect to get pleasure from this body:
Like the grains of cooked husked millet
which are of small and big sizes,
a bed of worms (small and big) with sharp teeth
experiences and lives in this body.
A body with such characteristic, you evil fellow
can it be taken as me and mine?
(இ - ள்.) பாவி-தீவினையாளனே!;
எனது எனச் சிந்தித்தலால் - என்னுடையது என்று யான் உரிமை கொண்டாடுதற்கிடனாயிருத்தலாலே;
இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல் - இந்த உடம்பு யான் இன்புறுதற்குரியதாகும் என்பாயாயின்; இஃது உன்னுடையதாதல் தான் எங்ஙனம்? ;
தினைப்பெய்த புன்கத்தைப் போல - தினையரிசி பெய்து சமைக்கப்பட்ட சோறு போன்று;
தினையரிசி - Husked millet; தினையின் அரிசி.
சிறியவும் மூத்தவும் ஆகி - உருவத்தாற் சிறியனவும் பெரியனவுமாய்;
நுனைய - கூர்த்த வாயினையுடையனவாகிய;
புழுக்குலந் தம்மால் - புழுக் கூட்டங்களாலே;
நுகரவும் வாழவும் பட்ட - தம்முடையதாகவே கொண்டு உண்ணவும் உறையுளாகக் கொண்டு வாழவும் படுகின்ற;
இனைய உடம்பினை - இத் தன்மையான இந்த உடம்பினை;
யான் எனது என்னல் ஆமோ - யான் என்றாதல் என்னுடையது என்றாதல் கூறுதல் கூடுமோ? கூடாதுகாண் என்பதாம்.
(வி - ம்) தினையரிசியாலாய சோறு, உடலிலுண்டாகும் சிறியவும் பெரியவும் ஆகிய புழுக்களுக்குவமை. புன்கம் - சோறு.
இதனை,
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம் -- புறநானூறு 168,5-11
எனவரும் செய்யுளினும் காண்க.
பதம் - செவ்வி - Season, opportunity, occasion, juncture; ஏற்றசமயம்.
குறவர் - the tribe of குறவர், ஓர் இனம்.
வித்து¹- தல் - To sow; விதைத்தல்.
பரூஉ - Thickness, greatness, largeness; பருமை, பரிய
குரல்¹ - Stalk, sheath of millet or plantain; தினை வாழை முதலியவற்றின் தோகை. பரூஉக்குரற் சிறுதினை (புறநா. 168, 6)
தினை - சிறுதானியவகை.
யாணர்¹ - Fresh income; புதியவருவாய்
தீம் -Sweetness, pleasantness; இனிமை.
மரையா - Wild cow.
தடி - Flesh; தசை
புழுக்கு - Well-boiled food; புழுங்கவெந்த வுணவு
புலவு - Flesh, raw meat, fish; புலால். (சூடா.) 3. Smell of flesh or fish; புலானாற்றம்.
குழிசி - Pot, cooking- vessel; பானை.
உலை - Pot of water set over the fire for boiling rice; சோறு சமைத்தற்காகக் கொதிக்க வைக்கும் நீர்
புன்கம்¹ - Boiled rice; சோறு.
நன்னாள் வரு பதம் நோக்கி - நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து;
குறவர் உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை - குறவர் அந்நிலம் உழாதே அதுவே யுழவாக வித்திய பரிய தோகையையுடைய சிறிய தினை;
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் - முற்பட
விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்ல நாளின்கண்ணே புதிதுண்ண வேண்டி;
மரையான் கறந்த நுரை கொள் தீம் பால் - மரையாவைக்
கறந்த நுரை கொண்ட இனிய பாலை;
மான்தடி புழுக்கிய புலவு நாறு குழிசி - மான் தடி புழுக்கப்பட்ட புலால் நாறும் பானையினது;
வான் கேழ் இரும்புடை கழாஅது ஏற்றி - நிணந்தோய்ந்த வெளிய நிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலை நீராக வார்த்து ஏற்றி;
சாந்த விறகின் உவித்த புன்கம் - சந்தன விறகான் உவிக்கப்பட்ட சோற்றை;
விதைத்தற்கும் விதைத்தவை முளைத்து விளைந்தபின்
அவ்விளைவை யுண்டற்கும் நன்னாள் பார்ப்பது வழக்கமாதலின், “நன்னாள் வருபதம் நோக்கி” யென்றும், “யாணர்நாள் புதி துண்மார்” என்றும் கூறினார். Source Lines 5-11
இந்த வுடலை யாம் எனதென்று கொள்வேம், இதன்கண் வாழுகின்ற புழுக்குவங்களும் தமதாகவே கொண்டு இதனை உண்டு இதனிடத்தேயே வாழ்கின்றன, ஆதலால் இத்தகைய வுடம்பினை யான் எனது என்று யாம் உரிமை கோடல் பேதைமையேயாம் என்றவாறு.
இன்னும்,
“சடமீது கிருமிப்பை நானென்றன் மலமோ
டிடர்மேவு புண்ணோ டெழக்கண்ட துண்டே
யுடன்மீதிவ் வுடல்போலு திக்கின்று புழுவைத்
திடமான மகவென்று சீராட லென்னே”
எனவும்,
எளிமையாக:
சட மீது கிருமிப்பை நான் என்றன் மலமோடு
இடர் மேவு புண்ணோடு எழக் கண்டது உண்டே
உடன் மீது இவ்வுடல் போல் உதிக்கின்ற புழுவை
திடமான மகவென்று சீராடல் என்னே?
இடர் மேவு - துன்பம் தரும்
புழு -Embryo; கரு
திடமான - சிறந்த
“ஊறுதுய ருஞ்சுகமு முற்றனுப விக்கும்
பேறுபெறு தன்னுடலு மாவிபிரி யுங்காற்
கூறுசிறு புன்னெழு குடம்பையென வப்பால்
வேறுபடு மென்னிலினி மெய்யுறவு யாதே”
எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களும் நினையற்பாலவாம். (14)
எளிமையாக:
ஊறு (துன்பம்) துயரம் சுகமும் உற்று அனுபவிக்கும்
பேறுபெறு தன்னுடலும் ஆவிபிரியும் கால்
கூறு (பங்கு) சிறு புண்ணெழும் குடம்பை (உடல்) என அப்பால்
வேறு படும் என்னில் (என்றால்) இனி மெய்யுறவு யாதே?