நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
13. இதுவுமது
உறுப்புக் கடாமுடன் கூடி
யொன்றா யிருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய்
மயக்குவ தேலிவ் வுறுப்புக்
குறைத்தன போல வழுகிக்
குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின்
வேண்டப் படுவது முண்டோ.
எளிமையாக:
உறுப்புக்கள் தாம் உடன்கூடி
ஒன்றாய் இருந்த பெரும் பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய்
மயக்குவதேல் இவ்வுறுப்புக்
குறைத்தனபோல அழுகிக்
குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின்
வேண்டப்படுவதும் உண்டோ
Organs heaped together
in a big bag
covered in skin: If such a body be
cause for desire then when (after death) the organs
reduce and decay
and shrink, oozing liquids:
would such a disgusting sight
still cause desire?
(இ - ள்.) உறுப்புக்கள் தாம் உடன்கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை - கால்கை முதலிய புறத்துறுப்புக்களும் குடர் காற்றுப்பை முதலிய உள்ளுறுப்புக்களும் ஒருசேர ஓருடம்பாக இருந்த இந்தத் தோலாலியன்ற பெரிய பையானது;
மறைப்பில் - மேலே தோல் போர்த்துள்ள மறைப்பினாலே;
விழைவிற்குச் சார்வாய் மயக்குவதேல் - நந்தம் அவாவிற்குச் சார்பிடமாகி நம்மை மயக்கு மியல்புடையதென்னின்;
விழைவு - Desire; விருப்பம்
நந்தம் = நம் + தம் - நம்முடைய
உறுப்புக் குறைத்தனபோல - மற்றிவ்வுடம்பே உயிர் பிரிந்துழித் தன்னுறுப்புகள் துணிக்கப்பட்டன போல்வனவாக;
உழி¹ -1. Place, site; இடம்.??
அழுகிக் குறைந்து குறைந்து சொரிய - அழுகி நாளுக்கு நாள் தேய்ந்து தேய்ந்து வீழாநிற்ப;
வெறுப்பிற் கிடந்த பொழுதின் - கண்டோர் வெறுப்பிற் கிடனாகிக் கிடந்த காலத்து;
வேண்டப்படுவதும் உண்டோ - இவ்வுடம்பின்கண் யாம் அவாவுதற்கியன்ற தன்மையும் உண்டாகுமோ? கூறுதிர் என்பதாம்.
(வி - ம்.) “உறுப்பு. கண் முதலிய புறவுறுப்புக்களும், குடர் முதலிய உள்ளுறுப்புக்களுமாம். தோலாற் போர்த்து மறைக்கப்பட்டிருத்தலால் இது விழைவிற்குச் சார்வாய் மயக்குவது; அங்ஙனம் போர்க்கப் படாவிடின் அருவருக்கத் தக்கதேயாம் என்பாள் மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவது என்றாள். அங்ஙனம் மயக்குமேனும் இஃது அழுகிக் குறைந்து குறைந்து சொரியக் கிடந்த பொழுதின் இதன் கண் மயங்குவதற்குரிய தன்மை சிறிதும் இல்லையாம் என்றவாறு.
“என்புந் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டம்”
என்றார் மணிமேகலையினும். மணி. 6,107-109
தடி -Flesh; தசை.
வழு = வழும்பு² - Filth, impurity; அழுக்கு.
ஊன் - Flesh, muscle; தசை
பிண்டம் - lump or mass; உண்டை.
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று - என்புந் தசையும் குருதியுமாகியவற்றை உடம்பு என்று, அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி - அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக்கூறி, வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து - வழுவுடன் கிடந்த புழுக்கள் மலிந்த ஊன் பிண்டமாகிய உடலில்; அன்புறு மாக்கள்-உடம்பினிடத்து அன்புமிக்க மாக்கள் ; மாக்கள் என்றார் ஐம்புல வுணர்ச்சியன்றி மனவுணர்ச்சி யில்லாதவர் எனற்கு, வழு - வழும்பு. யாக்கை என்பது என்பு முதலியனவே யென மாக்கட்குச் சாற்றிக்கிடந்த பிண்டம் என்க; Source மணி. 6,107-109
இன்னும், இவ்வுடம்பியல்பினை:--
“காலி ரண்டுநி றுத்தி மேலிரு கைபி ணைத்தொரு புறவெலும்
பாலி ணக்கிமு கட்டு மேல்வளை யடர்ந ரம்பெனு மாக்கையாற்
கோலி யிட்டப ழுக்க ழிக்கொரு குறைவு றாமல் வரிந்துமேற்
றோலி ணக்கிய கற்றை வேய்ந்துயர் சுவர்பு லால்கொ டியற்றியே”
“வந்து போகவி ரண்டு வாசல் வகுத்து மற்றெழு சாளரந்
தந்து சாக்கிர மாதி யீரிரு தளமெ டுத்ததன் மேன்மலர்க்
கொந்து லாவிய மாமு டிக்கன கும்பம் வைத்தவிர் கூந்தலா
முந்து நீள்கொடி மாட நாலு முகக்கண் மாளிகை முற்றினாள்”
எனவரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களும் (அவித்தியா - 13 - 14.)
எளிமையாக:
கால் இரண்டு நிறுத்தி மேல் இரு கை பிணைத்து ஒரு புற எழும்பால்
இணக்கி முகட்டு மேல்வளை அடர் நரம்பெனும் யாக்கையால்
கோலியிட்ட பழுக்கழுக்கு ஒரு குறைவுராமல் வரிந்து மேல்
தோல் இணக்கிய கற்றை வேய்ந்து உயர் சுவர் புலால் கொடி அற்றியே
முகட்டுவளை - Ridge piece; முகட்டு - உச்சியில் இருப்பது
கோலி¹ -Hair; மயிர்
வரிந்து - To bind, tie, fasten; கட்டுதல்
வேய்-தல் -To cover, as a building; to roof, thatch; மூடுதல்.
எளிமையாக:
வந்து போக இரண்டு வாசல் வகுத்து மற்று ஏழு சாளரந்
தந்து சாக்கிர மாதி ஈர் இரு தளம் எடுத்து அதன் மேல் மலர்க்
கொந்து உலாவிய மாமுடி கனகும்பம் வைத்து அவிர் கூந்தலாம்
உந்து நீள்கொடி மாடம் நாலு முகக்கண் மாளிகை முற்றினாள்
சாளரம் - பலகணி , window, ஜன்னல்
சாக்கிரம் -Waking state in which the soul is in the forehead with all its faculties active; ஆன்மா புருவமத்திடை நின்று தத்துவங்களுடன் கூடி விடய நுகர்ச்சியில் மெத்தெனநிற்கும் நிலை. consciousness?
சாக்கிர மாதி - சாக்கிரம் முதலிய
மாடம் நாலு முகக்கண் மாளிகை முற்றினாள் - நான்கு மாடிக் கட்டிடத்திற்கு சென்றாள்
கும்பம் - Upper part of the back between the shoulders; இருபுயங்கட்கும் இடையிலுள்ள முதுகின் மேற்பக்கம்.??
என்பினை நரம்பிற் பின்னி
யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து
மயிர்புறம் பொலிய வேய்ந்திட்
டொன்பது வாயி லாக்கி
யூன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்ச னல்லன்
மயங்கினார் மருள வென்றான்.
எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுளும் (1577) அறிவுறுத்துதலையும் ஈண்டு நினைக. (13)
(இ - ள்.) உதிரம் தோய்த்து - உதிரத்தைத் தோய்த்து; நரம்பின் என்பினைப் பின்னி - நரம்பினாலே என்பினைக் கட்டி; இறைச்சி மெத்தி - தசையை அப்பி; புன்புறம் தோலைப் போர்த்து - புன்மையான வெளிப்புறம் மறையத் தோலைப் போர்த்து ; புறம் பொலிய மயிர் வேய்ந்திட்டு - அப்புறம் அழகுற மயிராலே மூடி; ஒன்பது வாயில் ஆக்கி - ஒன்பது வாயிலைச் செய்து ; ஊன் பயில் குரம்பை - ஊன் பழகிய குடிலை; மயங்கினார் மருள - அறிவு மாறியவர்கள் மருளுமாறு; மன்பெருந் தச்சன் செய்தான் - மிகப் பெரிய தச்சன் இயற்றினான்; நல்லன் - (ஆதலால்) அவன் மிகவும் நல்லன் என்றெண்ணினான். Source 1577