நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
12. இதுவுமது
மாறுகொள் மந்தர மென்று
மரகத வீங்கெழு வென்றும்
தேறிடத் தோள்க டிறத்தே
திறத்துளிக் காமுற்ற தாயிற்
பாறொடு நாய்க ளசிப்பப்
பறிப்பறிப் பற்றிய போழ்தி
னேறிய வித்தசை தன்மாட்
டின்புற லாவதிங் கென்னோ?
எளிமையாக:
மாறுகொள் மந்தரம் என்றும்
மரகத வீங்கு எழு என்றும்
தேறிட தோள்கள் திறத்தே
திறத்துளிக் காமுற்றது ஆயின்
பாறொடு நாய்கள் அசிப்ப
பறிப்பறிப் பற்றிய போழ்தின்
ஏறிய இத்தசைதன் மாட்டு
இங்கு இன்புறல் ஆவது என்னோ
மாறுகொள் - மாறுபடுதல் to be in contrast; முரணுதல்
மந்தரம் Mt. Mēru;
மரகதம் -Emerald, நவமணியு ளொன்றான பச்சை யிரத்தினம்.
வீங்கு-தல் -To increase in size; to become enlarged; பருத்தல்.
எழு² - Column, pillar; தூண்.
அசி-த்தல் - To eat, consume; உண்டல்.
பாறு - கழுகு.
பறிப்பறி - பிடுங்கிப் பிடுங்கி
பறித்தல் - பிடுங்குதல்
மாட்டு - இடம்.
That they are contrasting mountains
that they are big emerald pillars
say women with desire
when referring to a man's shoulders to listeners
When vultures and dogs eat the same body (after death)
tearing into it with their mouths (and beaks)
where in those big broad shoulders
would those women find pleasure?
(இ - ள்.) மாறுகொள் மந்தரம் என்றும் - ஒன்றனோடு ஒன்று வலமிடமாக மாறுபட்டிருக்கின்ற இரண்டு மந்தரமலைகளே இவைகள் என்றும்;
மரகத வீங்கு எழு என்றும் - பருத்த மரகத மணியா லியன்ற தூண்களே இவைகள் என்றும்;
தேறிட - கேட்போர் உணரும்படி;
தோள்கள் திறத்தே - ஆடவர்களுடைய தோள்களைக் குறித்து;
திறத்துளிக் காமுற்றது ஆயின் - மகளிர் முறையே அவாவுவதானால்;
பாறொடு நாய்கள் அசிப்ப - பருந்துகளும் நாய்களும் இவையிற்றை இரையாகத் தின்னுதற் பொருட்டு;
பறிப்பறிப் பற்றிய போழ்தின் - வாயாற் கௌவிக் கௌவி இழுத்த காலத்திலே;
ஏறிய இத்தசைதன் மாட்டு - பருத்துத்திரண்ட இந்த வறுந்தசையின் கண்;
இங்கு இன்புறல் ஆவது என்னோ - இவ்வுலகத்து அம்மகளிர் இன்புறுதற்கியன்ற பண்பு யாதோ? கூறுமின் என்பதாம்.
(வி - ம்.) இஃது ஆடவர்பாற் காமங்கொண்டு வருந்தும் மகளிர்க்குக் கூறியபடியாம். ஆடவர் உறுப்புக்களுள் வைத்து மகளிர் நெஞ்சைப் பெரிதும் கவர்வது அவர்தம் தோள்களேயாம். ஆதலால் அத் தோள்களையே கூறினார். மகளிரை ஆடவர் தோள்களே பெரிதும் கவரும்
இயல்புடையன என்பதனை,
“நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேலிணை
ஆக்கிய மதுகையான் றோளி லாழ்ந்தன
வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும்
தாக்கணங் கனையவ டனத்திற் றைத்தவே” -- மிதிலைக், 39
எனவரும் இராமாவதாரத்தானும் உணர்க.
எளிமையாக:
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே. -- மிதிலைக், 39
நோக்கிய- (அவ்வாறு சீதை) பார்த்த;
நோக்கு எனும் -பார்வையாகிய;
நுதிகொள் வேல் இணை - கூரிய இரண்டு வேல்கள்;
ஆக்கிய மதுகையான் - ஆக்கம் பெற்ற வன்மையுடைய இராமனின்;
தோளின் ஆழ்ந்தன - தோள்களிலே அழுந்தின;
வீக்கிய கணைகழல் - ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய;
வீரன் செங்கணும் - வீரனான இராமனுடைய சிவந்த கண்களும்;
தாக்கு அணங்கு - பிறரை வேட்கையால் தாக்குகின்ற மோகினியாகிய பெண் தெய்வத்தை;
அனையவள் - போன்ற சீதையின்;
தனத்தில் தைத்த - கொங்கைகளில் தாக்கின. Source 515
இராமன். சீதை ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பருகினர். ஓர் ஆவிற்கு இரு கோடுபோல ஒத்த காதல் கொண்டவராயினர். ‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’ - குறள்:1100
தாக்கணங்கு: பார்க்கின்ற ஆடவர்க்கு வேட்கையை விளைவித்து அதனால் அவர்களைத் தாக்கும் தேவதை. 36
வலத்தோளும் இடத்தோளுமாய் வேறுபட்டிருத்தலின் மாறுகொள் மந்தரம் என்றார். மந்தரம் - மந்தரமலை. மரகதம் - ஒரு மணி; மரக தத்தாலியன்ற எழு. வீங்கெழு என்று தனித்தனி கொள்க. எழு - தூண். பாறு - கழுகுமாம். உளி: ஏழாவதன்சொல் லுருபு. பறிப்பறி - பிடுங்கிப்
பிடுங்கி என்றவாறு. பறித்தல் - பிடுங்குதல். என்னோ என்னும் வினா ஒன்று மில்லை என்பது படநின்றது. (12)