நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
11. யாக்கையின் இழிதகைமை
நன்கன நாறுமி தென்றிவ்
வுடம்பு நயக்கின்ற தாயி
னொன்பது வாயில்க டோறு
முண்ணின் றழுக்குச் சொரியத்
தின்பதொர் நாயு மிழுப்பத்
திசைதொறுஞ் சீப்பில்கு போழ்தி
னின்பநன் னாற்ற மிதன்க
ணெவ்வகை யாற்கொள்ள லாமே.
எளிமையாக:
இது நன்கனம் நாறும் என்று
இவ்வுடம்பு நயக்கின்றது ஆயின்
ஒன்பது வாயில்கள் தோறும்
உள்நின்று அழுக்குச் சொரிய
தின்பது ஓர் நாயும் இழுப்பத்
திசைதொறும் சீபில்கு போழ்தின்
இன்ப நல் நாற்றம் இதன்கண்
எவ்வகையால் கொள்ளலாமே
Saying this body smells good
if we should desire it: (think of this)
Through its nine holes
it extrudes smelly stuff.
(When dead) eaten by dogs pulling it in
different directions and oozing pus:
Where can we find reason
to say it smells good?
(இ - ள்.) இது நன்கனம் நாறும் என்று - இது நன்றாக நறுமணம் கமழ்கின்றது என்று பாராட்டி;
இவ்வுடம்பு நயக்கின்றது ஆயின் - இந்த உடம்பு நம்மாற் பெரிதும் விரும்பப்படுமானால்;
ஒன்பது வாயில்கள்தோறும் உள்நின்று அழுக்குச் சொரிய - மற்றிவ்வுடம்பே அதன்கண் அமைந்த கண் முதலிய ஒன்பது தொளைகளின் வழிகளானும் அதனகத்தினின்றும் தீ நாற்றமிக்க அழுக்குகள் ஒழுகா நிற்பவும்;
ஒழுகா நிற்பவும் - ஒழுகும்
தின்பது ஓர் நாயும் - அதனைத் தின்னுமியல்புடைய நாய்களும்;
திசைதொறும் இழுப்ப - தம்முள் கலாம் கொண்டு வாயாற் கௌவி நாற்றிசைகளினும் இழுத்தலாலே;
கலாம் - Rivalry; competition; மாறுபாடு
சீபில்கு போழ்தின் - இவ்வுடம்பினின்றும் சீழ்வடிகின்ற பொழுது;
பில்கு-தல் - 1. To drip, as dew; சிறு திவலை வீசுதல். 2. To exude, as honey from flowers; பொசிதல், கொப்பளித்தல்
இதன்கண் இன்ப நல் நாற்றம் எவ்வகையால் கொள்ளலாம் - இவ்வுடம்பின்கண் மனமின்புறுதற்குக் காரணமான நறுமணத்தை எவ்வாற்றால் யாம் எய்துதல் கூடும்? கூறுமின்! என்பதாம்.
(வி - ம்.) இவ்வுடம்பு இயற்கையாகவே அருவருக்கத்தக்க தீ நாற்றம் உடையதேயாம்; இதன்கண் செயற்கையாலுண்டாகிய நறுமணத்தை அதன் மணமாகவே கருதி அறிவிலிகளாற் பாராட்டப்படுகின்றது. அதனியற்கை தீ நாற்றமே என்பதனை அதன்கண் அமைந்த ஒன்பது தொளைகளும் சொரிகின்ற அழுக்காலும் உயிர் போயவழி நாய் முதலியன பற்றி யிழுக்க அவ்வுடம்பினின்றும் ஒழுகும் சீழ் முதலியவற்றாலும் உணரலாம். ஆதலால் இவ்வுடம்பு விரும்பத்தகுந்த சிறப்பொன்று மில்லாதது என்பதாம்.
இதனோடு,
“எழுகு றும்பி பெருகு காதை வள்ளை யென்ப ரிகழ்கரும்
புழுவ டர்ந்த குழலி ருண்ட புயல தென்பர் பூளைநீ
ரொழுகு கண்கள் குவளை யென்பர் தரள மென்ப ருயிரொடும்
பழுது றும்பல் லென்பை யின்ன பகர்வ தென்ன பாவமே”
எனவும்,
எளிமையாக:
எழு குறும்பி பெருகு காதை வள்ளை என்பார்; இகழ் கரும்
புழு அடர்ந்த குழலை இருண்ட புயல் என்பார்; பூளை
நீரொழுகும் கண்கள் குவளை என்பார்; தரளம் என்பார் உயிரொடும்
பழுதுரும் பல் எழும்பை. இன்ன பகர்வது என்ன பாவமே?
குறும்பி - Ear wax; காதுள் அழுக்கு
வள்ளை - கொடிவகை
கரும்புழு - பேன்
குழல் - Curling hair; மயிர்க்குழற்சி
புயல் - Cloud; மேகம்.
குவளை - Purple Indian water-lily மலர்வகை
தரளம் - Pearl; முத்து
உயிரொடும் பழுதுரும் பல் = சொத்தை பல்
பகர்வது - மொழிவது
“எச்சி றங்கு வாய்வி ளிம்பு பவள மென்ப ரெழுமிரண்
டச்சி லந்தி கொங்கை யானை யாகு மென்ப ரதுபெருங்
கச்சி லங்கி ருந்து மாவி கவரு கின்ற தென்பராற்
பிச்சி லங்க வர்க்கு நேர்பி ராந்தர் யாவர் பேசிலே.”
எனவும்,
எளிமையாக:
எச்சில் இறங்குகின்ற வாய் விளிம்பு பவளம் என்பார். எழும் இரண்டு
அச்சிலந்தி கொங்கை யானை யாகு மென்பர். அது பெரும்
கச்சிலங்கிருந்தும் ஆவி கவருகின்றது என்பரால்.
பிச்சி இலங்கவர்க்கு நேர் பிராந்தர் யாவர் பேசிலே.
வாய் விளிம்பு - உதடு
பவளம் - Red coral நவமணியுள் ஒன்று
சிலந்தி - Pimple, small boil; கொப்புளம்
கொங்கை - Woman's breast; முலை
கச்சு - A close-fitting undergarment, often reinforced by stays, worn to support and shape the waistline, hips, and breasts
கச்சிலங்கிருந்தும் - மறைக்கப்பட்டும்
ஆவி - Mind; மனம்
பிச்சி- Large-flowered jasmine. சாதிமல்லிகை.
இலங்குதல் - விளங்குதல்,
பிச்சிலங்கவர்க்கு - சாதிமல்லிகை சூடிய அவர்களுக்கு
“நாசி யூறல் கோழை யெச்சி னாறு மாமு கத்தையே
மாசு றாத பூர்ண சந்த்ர வட்ட மென்ப ரொட்டுவைத்
தேசு றாந ரம்பி னைக்கொ டென்பு கட்ட மைத்ததோள்
வீச வீச நெஞ்ச ழிந்து வேணு வென்பர் காணுமே”
எனவும்,
எளிமையாக:
நாசி ஊறல் கோழை எச்சில் நாறும் மாமுகத்தையே
மாசுறாத பூர்ண சந்திர வட்ட மென்பார். ஒட்டு வைத்து
தேசுராத நரம்பினைக் கொண்டு என்பு கட்டடமைத்த தோள்
வீச வீச நெஞ்சழிந்து வேணு வென்பர் காணுமே
நாசி - Nose; மூக்கு
ஊறல் - Oozing; percolation; discharge; ஊறுகை.
கோழை Phlegm;
தேசு -. Beauty; அழகு -- தேசுராத - அழகில்லா
என்பு - எலும்பு
தோள் - shoulder
வீச வீச - hand swingng
நெஞ்சழிந்து - (பெண்கள்) நெஞ்சு கரைந்து
வேணு - Bamboo மூங்கில்
“குடர்ந ரம்பு தசைவ ழும்பு குருதி யென்பு சுக்கில
முடைகி டந்த பொந்தின் மேலொர் தோல்வி ரித்து மூடியே
யடர்வு றும்பஃ றுளைக டோறு மருவ ருப்ப றாமலம்
படர்தல் கண்டு மதனை யேகொன் மகளிரென்று பகர்வதே”
எனவும்,
எளிமையாக:
குடல் நரம்பு தசை அழும்பு குருதி என்பு சுக்கிலம்
முடை கிடந்த பொந்தின் மேலோர் தோல் விரித்து மூடியே
அடர்வுறும் அஃதுளைகள் தோறும் அருவருப் பறா மலம்
படர்தல் கண்டும் அதனையே கொன் மகளிர் என்று பகர்வதே
அழும்பு - கொழுப்பு
குருதி - Blood; இரத்தம்.
சுக்கிலம் Semen virile; இந்திரியம்
முடை- Flesh; புலால்
கொன் - Greatness, vastness; பெருமை
“கூராரும் வேல்விழியார் கோலாக லங்களெல்லாந்
தேராத சிந்தையரைச் சிங்கிகொள்ளு மல்லாமல்
நேராயு ணிற்கு நிலையுணர்ந்து நற்கரும
மாராய் பவருக் கருவருப்ப தாய்விடுமே”
எனவும்,
எளிமையாக:
கூர் ஆரும் வேல் விழியார் கோலாகலங்களெல்லாம்
தேராத சிந்தையரைச் சிங்கிகொள்ளுமே அல்லாமல்
நேராய் உள் நிற்கும் நிலை உணர்ந்து நற்கருமம்
ஆராய்பவர்க்கு அருவருப்பே ஆய்விடுமே.
ஆரும் - பொருந்திய
விழியார் - (பெண்கள்) கண் உடையவர்கள்
சிங்கி - பின்னல்
“வால வயதின் மயக்கு மடந்தையருங்
கால மகன்றதற்பின் கண்டெவரு மேயிகழ
நீல நறுங்குழலு நீடழகு நீங்கியவர்
கோலதொரு கையூன்றிக் கொக்குப்போ லாயினரே”
எனவும்,
எளிமையாக:
வால வயதின் மயக்கு மடந்தையரும்
காலம் அகன்றதன்பின் கண்டு எவருமே இகழ
நீல நறுங்குழலும் நீடழகு நீங்கியவர்
கோல் அது ஒரு கை ஊன்றி கொக்குபோல் ஆயினரே
மடந்தை பெண். Woman between the ages of 14 and 19;
நறுங்குழலும் - நறுமணம் கொண்ட கூந்தல்
நீடழகு = நீழ் (ஒளி)+ அழகு
“கிட்டா தகன்மின் கிடப்பதிதிற் பொல்லாங்கென்
றிட்டா ரலரே லிலங்கிழையார் தம்முடம்பிற்
பட்டாடை மேல்விரித்துப் பாதாதி கேசாந்த
மட்டாய் மறைத்துவரு மார்க்கமது வென்கொண்டோ”
எனவும்,
எளிமையாக:
கிட்டாத அகன்மின் கிடப்பதிதில் பொல்லாங்கு என்று
இட்டார் அலரே இலங்கிழையார் தம் உடம்பில்
பட்டாடை மேல்விரித்து பாதாதி கேசாந்த
மட்டாய் மறைத்துவரும் மார்க்கம் அது வென் கொண்டோ.
பொல்லாங்கு pollāṅku , n. < பொல்லா-மை. 1. Evil, vice, vileness, wickedness; தீது.
பொல் லாங்கென்பவை யெல்லாந் தவிர் (கொன்றைவே.). 2. Defect, fault;
அலர் - பலர் பழி தூற்றுகை
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர் அறியார் பாக்கியத் தால். குறள் - 1141.
இலங்கிழை -Literally, glittering ornaments, figuratively applied to denote a woman adorned with jewels; பெண்.
பாதாதி கேசாந்தம் மட்டாய் - பாதமிருந்து உச்சந்தலை வரை
மட்டு - அளவு, எல்லை.
“வீசியதுர்க் கந்தம் வெளிப்படுத்தும் மெய்யிலெனக்
கூசி மறைப்பதன்றேற் கோற்றொடியா ரங்குமெங்கு
நாசி மணக்க நறுங்குங் குமசுகந்தம்
பூசி முடித்தல்பசி போக்கும் பொருட்டேயோ”
எனவும்,
எளிமையாக:
வீசிய துர்க் கந்தம் வெளிப்படுத்தும் மெய்யிலெனக்
கூசி மறைப்பது அன்றேல் கோற்றொடியார் அங்கும் எங்கும்
நாசி மணக்க நறும் குங்கும சுகந்தம்
பூசி முடித்தல் பசி போக்கும் பொருட்டேயோ
கந்தம் - Scent, odour, fragrance; வாசனை.
மெய் - உடல்
கூசி - கூச்சப்பட்டு
கோற்றொடி Bangles of fine workmanship; வேலைத்திறமமைந்த கை வளையல்.
குங்குமம் - Saffron powder worn on the forehead; நெற்றியிலிடுங் குங்குமப்பொடி.
சுகந்தம் - Perfumes, aromatics; வாசனைப் பொருள்.
“மாற்றரிய தம்மூத்தை வாய்திறக்கு முன்னமெழு
நாற்ற மறைக்கவன்றே னாவழித்துப் பல்விளக்கிக்
கோற்றொடியார் நன்னீருங் கொப்புளித்துப் பாகுசுரு
டீற்றுவது மென்குதலை தீர்க்கு மருத்தென்றே.”
எனவும்,
எளிமையாக:
மாற்றரிய தம் ஊத்தை வாய் திறக்கும் முன் எழும்
நாற்றம் மறைக்க அன்றே நாவழித்துப் பல்விளக்கி
கோற்றொடியார் நன்னீரும் கொப்புளித்துப் பாகு சுருல்
தீற்றுவது மென் குதலை தீர்க்கும் மருத்தென்றே
மாற்றரிய - மாற்ற முடியாத
ஊத்தை - unclean; அழுக்கு.
பாகு சுருள் - பாக்கு வெற்றிலை
தீற்று-தல்-To feed by small mouthfuls; ஊட்டுதல்.
குதலை - வாய்
“பட்டாடை சாத்திப் பணிமே கலைதிருத்தி
மட்டா யவயவங்கள் மற்றவைக்கு மேற்கும்வண்ணம்
கட்டாணி முத்தங் கனகமணிப் பூடணங்க
விட்டா லலதவருக் கென்னோ வியலழகே”
--மெஞ்ஞான விளக்கம், 10 - 19
எனவும் வரும் செய்யுள்கள் ஒப்புநோக்கற்பாலன. (11)
எளிமையாக:
பட்டாடை சாத்தி பணி மேகலை திருத்தி
மட்டாய் அவயவங்கள் மற்றவைக்கும் ஏற்கும் வண்ணம்
கட்டாணி முத்தும் கனகமணிப் பூடணங்கள்
விட்டால் அல்லது அவர்க்கு என்னோ இயல் அழகே
பணி - Jewel; ornament; ஆபரணம்
மேகலை - A jeweled girdle of 7 or 8 strands; மாதர் இடையிலணியும் ஏழு அல்லது எட்டுக்கோவையுள்ள அணிவகை.
திருத்து -தல் -To deck oneself properly in; to dress sprucely; செம்மைபெற அணிதல்.
மட்டாய் - As much as is needed; வேண்டியவளவாக.
அவயவங்கள் - உடலுறுப்புக்கள்.
கட்டாணி - Pin or screw for fastening a woman's ear-ring; காத ணிமுதலியவற்றின் கடைப்பூட்டாணி.
கனகம் - Gold; பொன்
பூடணம் -Ornament, jewel; ஆபரணம்