சங்கற்பங்கள் (பாலி மொழியில் சங்காரா)
Sankhara
பயன் படுத்தப்படும் சில இடங்கள்
1.
சங்கற்பங்கள் எல்லாம் நிலையற்றவை,
தோன்றி மறையும் தன்மையுடையவை,
தோன்றிய பின்னர் மறைகின்றன,
அவற்றைத் தோன்றா வண்ணம் செய்வதே அமைதி நிலை
என்பதைக் கேட்டிருக்கிறோம்.
2.
"சங்கற்பமும், உடலும் ஒன்றே" என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
3.
மணிமேகலையில் படிச்ச சமுபாதா என்ற கோட்பாட்டின் முதல் மூன்று வரிகள்:
"பேதைமை சார்வாச் செய்கை யாகும்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும் ... "
இது பாலி மொழியில் உள்ள
அவிஜ்ஜா பச்சயா ஸங்க்காரா
ஸங்க்கார பச்சயா விஞ்ஞானம்
விஞ்ஞான பச்சயா நாமரூபம் .." என்பதன் மொழி பெயர்ப்பாகும்.
பாலி மொழியில் வரும் "ஸங்க்காரா" மணிமேகலையில் "செய்கை" என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
4.
ஐந்து கந்தங்களின் நான்காவது கந்தம் "சங்கார" கந்தம் என்று கூறப்பட்டிருக்கிறது. (பஞ்சக்கந்தங்கள் என்ற வார்த்தையை இங்கு தேடவும்)
இந்த சங்காரா அல்லது சங்கற்பம் என்றால் என்ன?
விளக்கம் 1
புத்ததாச பிக்கு
Buddhadasa Bhikkhu
English Source
"சங்காரா" என்பது திரிபிடகத்தில் தோன்றும் ஒரு முக்கியமான பாலி வார்த்தை. இந்த வார்த்தைக்குப் பல பொருட்கள் இருப்பதால், பல விதங்களில் பயன்படுத்தப் படுவதால் பலருக்கும் இந்த வார்த்தை பிரச்சினையாக இருக்கிறது. மொழிகள் அப்படித்தான், சில சமயம் நம்பமுடியாதவையாக, ஒரு பொருளைச் சரியாக விளக்க முடியாதவையாகத் தோன்றுகின்றன. "சங்காரா" என்ற ஒரே வார்த்தை "தோற்றுவிக்கும் ஒன்று," நிலைமைகளுக்குக் காரணமாக இருப்பது என்றும்; "நிலைமை," காரணங்களால் தோன்றிய ஒன்று என்றும்; வினையிலிருந்து வினைப்பயனுக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை, அந்தச் செயல் தொடர் என்றும் பொருள் படும். செய்பவர், செய்தது, செயற்பாட்டுமுறை மூன்றும் "சங்காரா" என்ற வார்த்தையில் அடங்கும். இது சற்றுக் குழப்பமாக இருக்கலாம். எனவே "சங்காரா" என்ற வார்த்தைக்கு மூன்று பொருள்கள் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் சூழலுக்குத் தகுந்தார்ப்போல் சரியான பொருளைத் தேர்ந்து கொள்ள வேண்டும். இதை மட்டும் தெரிந்து கொண்டாலே அறத்தைப் பயிலும் போது மிக உதவியாக இருக்கும்.
சங்கற்பத்தின் இந்த மூன்று பொருள்களையும் இந்த உடலைப் பிரதிபலிக்கும் போதே தெரிந்து கொள்ளலாம். புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இல்லை. இந்த உடலே ஒரு சங்கற்பம் தான். பல நிலைமைகளின் காரணமாகவும், பல பொருட்களின் காரணமாகவும் தான் இந்த உடல் உண்டானது. எனவே "நிலைமை" என்ற பொருளில் உடலைப் பிரதிபலிக்கலாம். உடல் தோன்றிய பின் அது எண்ணங்கள், உணர்ச்சிகள், நடவடிக்கைகள் போன்ற பிற விஷயங்களைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாகிறது. உடல் இல்லாமல் இந்த எண்ணங்களும், நடவடிக்கைகளும் உண்டாகச் சாத்தியக் கூறுகளே இல்லை. ஆக உடல் ஒரு "தோற்றுவிக்கும் ஒன்று" என்ற பொருள் கொள்கிறது. இறுதியாக இந்த உடல் சங்கற்பமானது தோற்றுவித்துக் கொண்டே இருக்கும் செயல் தொடரும் கூட. உடல் மாறிக்கொண்டே இருக்கிறது. அதே போல உணர்ச்சிகள், மனக் குறிப்புகள் போன்ற மனத்தின் இயல்புகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆகவே சங்கற்பத்தின் மூன்று அர்த்தங்களையும் இந்த உடலிலேயே காணலாம். இது போலத் தெளிவாகச் சங்கற்பங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் அறத்தை மேலும் ஆழமாக அறிந்து கொள்ளச் சுலபமாகவும் வசதியாகவும் இருக்கும்.
* * * * *
இந்த சங்காரா அல்லது சங்கற்பம் என்றால் என்ன?
விளக்கம் 2
பிக்கு போதி
Bhikkhu Bodhi
English Source
"சங்கற்பங்கள் எல்லாம் நிலையற்றவை"
சங்கற்பம் என்பது பௌத்தத்தில் ஒரு முக்கியக் கருத்து. இந்த வார்த்தையின் பல பொருட்களை ஆராய்ந்தால் புத்தர் வாய்மைக்குத் தந்த விளக்கத்தை அறிந்துகொள்ள உதவும்.
சங்கற்பம் என்பது பாலியில் சங்காரா. இது இரண்டு வார்த்தைகளின் சேர்க்கை. சங்காரா = சம் + காரா. சம் என்றால் சேர்ந்து. காரா என்றால் செய்கை. ஆக, சங்காரா என்பது சேர்ந்து செய்வது, மற்ற நிலைமைகளுடன் கூட்டாகச் செய்வது அல்லது மற்ற நிலைமைகளின் இணைப்பின் விளைவு.
பௌத்த எண்ணப் போக்கில் இந்த வார்த்தையின் பொருளைத் திரிபிடகத்தில் பயன் படுத்தப்பட்ட விதத்திலிருந்து அறியலாம். மூன்று சூழல்களில் இது இடம் பெறுகிறது.
1. படிச்ச-சம்மூபாதா. பன்னிரண்டு நிதானங்கள் கொண்ட இந்தக் கோட்பாட்டில் சங்கற்பம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அறியாமையால் (அவித்தை) உருவானது சங்கற்பம். சங்கற்பங்களிலிருந்து விஞ்ஞானம் உண்டாகிறது. இந்தக் கோட்பாட்டின் சூழலின்படி சங்கற்பம் என்பது விருப்பத்துடன் செய்யப்படும் செய்கை. இந்தச் செய்கை தான் மறுபிறப்புக்குக் காரணமாகிறது. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற சம்சார சக்கரம் சுழல்வதை நீடிக்கக் காரணமாகிறது. இந்தச் சூழலில் சங்கற்பமும், கம்மா (பாலி), கர்மா (சமஸ்கிருதம்) அல்லது செய்கையும் ஒரே பொருள் கொண்டுள்ளன. (உடலாலும், பேச்சாலும், அறிவோடும், நோக்கத்தோடும் செய்வதுதான் கர்மா).
மேலும் சங்காரங்கள் நல்வினை, தீவினை, வினையற்ற செய்கைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அறியாமையும், அவாவும் இருக்கும் வரை, உடலாலும், பேச்சாலும், அறிவோடும் நோக்கத்தோடும் செய்யும் செய்கைகளுக்கு விளைவு ஏற்படுத்தும் சக்திகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானதொரு சக்தி இறந்த பின் விஞ்ஞானத் தொடரைப் புதுப்பிக்கிறது. சங்கற்பங்கள் தான் அறியாமையின் ஆதரவோடும் அவா என்ற எரிபொருளோடும் விஞ்ஞானத் தொடரை மறுபிறப்புக்குத் தள்ளுகிறது. எங்கு இந்த விஞ்ஞானம் நிலைநாட்டிக் கொள்ளும் என்பது சங்கற்பங்களின் வினைப் பயனிலிருந்து முடிவாகும். நல் வினை செய்வோரின் விஞ்ஞானத் தொடர் நல்ல இடத்தில் மறுபிறப்பெடுக்கும். தீவினை செய்வோரின் விஞ்ஞானத் தொடர் கெட்ட இடத்தில் மறுபிறப்பெடுக்கும். தியானப் பயிற்சியினால் வினை அல்லாத செய்கை செய்யக் கற்றுக் கொண்டவர்களின் மறுபிறப்பு உருவம் இல்லாத (மனம் மட்டும் உள்ள) இடத்தில் மறுபிறப்பெடுக்கும்.
2. சங்கற்பங்கள் தோன்றும் இரண்டாவது சூழல் ஐந்து கந்தங்களில் உள்ளது. இதில் நான்காவது சங்கார கந்தம் என்று அழைக்கப் படுகிறது. இந்தச் சூழலில் சங்கற்பம் என்பது செய்கை மட்டுமில்லாமல் அதன் விளைவுகளையும் உள்ளடக்குகிறது. மேலும் நோக்கமற்ற செயல்களும் இதில் அடங்கும். பரிசம், கவனம், எண்ணம், ஆற்றல், நல்ல குணங்களான தயாள குணம், அன்பு, மெய்யறிவு, தீய குணங்களான பேராசை, வெறுப்பு, மாயை போன்றவை எல்லாம் இதில் அடங்கும். அதாவது தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்யும் செய்கைகளும் அதன் விளைவுகளும் இதில் அடங்கும்.
3. மூன்றாவது சூழலில் சங்கற்பம் என்றால் பல பொருட்களின் காரணமாக உண்டான ஒன்று என்பது. இந்தச் சூழலில் சங்கற்பம் செயற்படாத பொருள் கொண்டுள்ளது. ஐந்து கந்தங்களும் உருவாக்கப் பட்டவை என்பதால் நான்காவது கந்தம் மட்டுமல்லாது, அவை அனைத்தும் சங்கற்பத்தில் அடங்கும் இந்தப் பொருளில் உருவாக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் சங்கற்பங்கள் என்பதால் புறப் பொருட்களும் இதில் அடங்கும். மலைகள், காடுகள், வயல்கள்,ஊர், நகரம், உணவு, குடி, ஜவுளி, வாகனம், கணினி எல்லாம் சங்கற்பங்கள் தான்.
ஐந்து கந்தங்களான இந்த உடல், வேதனா (நுகர்ச்சி), சஞ்ஞா (மனக் குறிப்பு), சங்கற்பங்கள், விஞ்ஞானம் - இவற்றை 'நாம்' என்று நினைக்கின்றோம். இவை அனைத்தும் காரணங்களால் உண்டானவை. இவையும் சங்கற்பங்களே.
புறத்தில் உள்ள பொருட்களெல்லாம் (மலைகள், காடுகள், ஆறுகள் போன்றவை) பௌதீகக் கோட்பாடுகளுக்கு இணையத் தோன்றலாம், ஆனால் நம்மைத் தோற்றுவித்த சங்கற்பங்கள் - அதாவது ஐந்து கந்தங்கள் - எல்லாம் நமது முன் வாழ்க்கையில் நாம் செய்த செய்கைகளினால் தோன்றியவை. மேலும் இந்த வாழ்விலும் நாம் ஈடுபடும் கம்மச் செயல்களினால் இந்த ஐந்து கந்தங்கள் பராமரிக்கப்பட்டு, புதுபிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு மேலும் எதிர்காலப் பிறப்புக்குக் காரணமாகின்றன. உடலும் உள்ளமும் கொண்ட இந்த உயிர், காரணங்களால் தோன்றிய, ஐந்து கந்தங்களில் உள்ள சங்கற்பங்கள் மட்டுமே.
நிலைமைகளால் தோன்றிய சங்கற்பங்களைப் பற்றி முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், அவை எல்லாம் நிலையற்றவை. "சங்கற்பங்கள் எல்லாம் நிலையற்றவை" மொத்தமாகப் பார்க்கும்போதும் தோன்றி மறைகின்றன, நுணுக்கமாகப் பார்க்கும்போதும் தொடர்ந்து தோன்றுவதையும் ஒரு கணப் பொழுதில் உடைந்து மறைவதையும் காணலாம். "தோன்றி மறையும் தன்மையுடையவை." எனவே புத்தர் சங்கற்பங்கள் எல்லாம் துக்கம் என்று கூறினார். இந்தத் துக்கம் உடல் வலித் துக்கத்தைக் குறிக்கவில்லை. நிலையற்ற தன்மையினால் ஏற்படும் துக்கத்தைக் குறிக்கும். "தோன்றிய பின்னர் மறைகின்றன." மறைந்துவிடுவதால் நிலையான மகிழ்ச்சியும், பாதுகாப்பும் தரமுடியாது.
துக்கத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற - சங்கற்பங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். சங்கற்பங்களுக்கு அப்பால் உள்ளது, சேர்த்து வைக்கப் படாதது, கூட்டாகச் செய்யப் படாதது, நிலைமைகளினால் தோன்றாதது - அது தான் நிப்பாணா (சமஸ்கிரதத்தில் நிர்வாணா). இந்த நிலை சங்கற்பமும் இல்லை, சங்கற்பங்களினால் தோன்றியதும் இல்லை.
எனவே கர்மச் செயல்களினால் ஐந்து கந்தங்களிலுள்ள (இந்த உடலும் உள்ளமும்) சங்கற்பத்தினை உருவாக்குகிறது. இந்த ஐந்து கந்தங்களை ‘நாம்’ என்று தவறாக (அறியாமையின் காரணமாக) நினைக்கும் வரை, அவற்றில் மகிழ்ச்சி தேடும் வரை (அவாவின் காரணமாக) நாம் வினைப் பயனுக்குத் தொடர்ந்து உரு கொடுக்கிறோம். இதனால் எதிர்காலக் கந்தங்கள் உருவாகின்றன.
அறத்தினைப் பயிலும் போது நாம் சங்கற்பங்கள் தொடர்ந்து உருவாவதை நிறுத்த முற்படுகிறோம். சங்கற்பங்களின் உண்மையான இயல்பையும், ஐந்து கந்தங்களும் உறுதியற்ற தன்மையையும், காரணங்களால் தோன்றும் எல்லா செயல் தொடர்களும் யாரொருவர் கட்டுபாட்டிலும் இல்லாமல் நடக்கின்றன என்பதையும் அறிகிறோம். அறியாமை மற்றும் அவாவின் காரணமாக ஓடும் வண்டியையும், கர்மச் செய்ல்களினால் உற்பத்தியாகும் சங்கற்பங்களையும் நிறுத்துகிறோம். காரணங்களால் தோற்றுவிக்கப்பட்ட எதார்த்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போது, அந்த எப்பொதும் உள்ள, கட்டப்படாத, நிலைமைகளால் உண்டாக்கப்படாத ஒன்றின் கதவைத் திறக்கிறோம். இதுவே நிம்பாணம், இறப்பில்லா ஒன்று, நிலையற்றதிலிருந்தும், மரணத்திலிருந்தும் இறுதி விடுதலை. எனவே நாம் கடைசியாகச் சொல்வது "சங்கற்பங்களைத் தோன்றாவண்ணம் செய்வதே அமைதி நிலை!"
* * * * *