யாது மூரே யாவருங் கேளிர்
புறநானூறு 192/400
கணியன் பூங்குன்றனார்
மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் சித்தாந்த கலாநிதி,
ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய விளக்க வுரை
(பௌத்த நோக்கில்: பௌத்த கருத்துக்கள் உள்ளடங்கிய பாடல் இது. கீழ் உரை காண்க)
கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள மகிபாலன்பட்டி யென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப் பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க்கோயில் கல்வெட்டால் அறிகிறோம். பூங்குன்றம் இப்போது குடகமலை யென வழங்குகிறது. மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாராகிய தமிழ்ப்பேராசிரியரும் இவ்வூரினராவர்; இவ்வூர் பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.
இச் சான்றோர், இடரினும் தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும் எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ்செய்தாரென ஒருவரைப் பாராட்டலும், தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும் இல்லாதவர். இவ்வாறே பெரியோரென ஒருவரைப் புகழ்தலும், சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்தும் தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும், உயர்வும் தாழ்வும், செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களானும் நடைமுறையாலும் நன்கறிந்தவர். இப் பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர். இதனைக் கண்ட அக்காலச் சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று. சிலர் முன் வந்து, "பாடுபெறு சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?" என்றாராக, மேலே கூறிய தம் கருத்துக்களை யமைத்து இப்பாட்டைப் பாடியுள்ளார்.
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுங் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னோடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
திணை: பொதுவியல் துறை: பொருண் மொழிக் காஞ்சி (Poem Categorization)
கணியன் பூங்குன்றன் பாட்டு.
சற்று எளிய நடையில் (நன்றி Project Madurai)
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
The Sages To us all towns are one, all men our kin,
Life's good comes not from others' gifts, nor ill,
Man's pains and pain's relief are from within,
Death's no new thing, nor do our blossoms thrill
When joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much-praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightning's flash from darkened skies.
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise !
We marvel not at the greatness of the great;
Still less despise we men of low estate.
Kaniyan Pungundranar, Purananuru - 192
(Translated by G.U.Pope, 1906) From Wikipedia
உரை:
யாதும் ஊர் - எமக்கு எல்லாம் ஊர்; யாவருங் கேளிர் - எல்லாரும் சுற்றத்தார்
(பௌத்த நோக்கில்: எந்த இடத்தின் மீதும் பற்றுக்கொள்ள வேண்டாம், இனம், ஜாதி, உறவினர் மீதும் பற்றுக்கொள்ள வேண்டாம்.)
தீதும் நன்றும் பிறர்தர வாரா - கேடும் ஆக்கமும் தாமே வரி னல்லது (வருமே ஒழிய) பிறர் தர வாரா;
(பௌத்த நோக்கில்: அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து செய்திகள் #5
என் செய்கைக்கு நானே உரிமையாளன்.
என் செய்கைக்கு நானே வாரிசு
என் செய்கையினால் நான் பிறந்தவன்
என் செய்கைக்கு நான் சொந்தக்காரன்.
என் செய்கையின் ஆதரவோடு நான் நிலைத்து நிற்கிறேன்.
நல்லதோ கெட்டதோ என் செய்கைக்கு நான் வாரிசாகிறேன்.
செய்கை - கம்மா(பாலி மொழியில்), கர்மா (சமஸ்கிரதம்), நடத்தை
"உடலாலும், பேச்சாலும், அறிவோடும் நோக்கத்தோடு செய்வதுதான் கர்மா." )
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன - நோதலும் அது தீர்தலும் அவற்றை யொப்பத் (மேல் கூறிது போல) தாமே வருவன;
(பௌத்த நோக்கில்: தம்மபதம் 1-2
எண்ணங்கள் மனதிலிருந்து உண்டாகின்றன. அவைகளுக்கு மனதே முதன்மையானது.
எண்ணங்கள் மனதினாலே உண்டாக்கப் படுகின்றன. ஆகையினால் ஒருவன் தீய எண்ணங்களோடு பேசினாலும் சரி, தீய செய்கைகளைச் செய்தாலும் சரி, அவற்றினால் உண்டாகும் துக்கங்கள், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின் தொடர்ந்து போகும் வண்டிபோல, அவனுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்றித் தொடர்கின்றன.
எண்ணங்கள் மனதிலிருந்தே தோன்றுகின்றன. எண்ணங்களே முக்கியமானவை. அவை மனத்தினாலே உண்டாக்கபடுகின்றன. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும் சரி, செய்தாலும் சரி அவற்றினால் உண்டாகும் நன்மைகள், எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடர்கின்றன.)
சாதலும் புதுவ தன்று - சாதலும் புதி தன்று, கருவிற் றோன்றிய நாளே தொடங்கி யுள்ளது;
(பௌத்த நோக்கில்: அஜான் சா "நீங்கள் நோய்க்குப் பயந்தாலும், மரணத்திற்குப் பயந்தாலும் அந்த பயம் எங்கிருந்து வருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். எங்கிருந்து வந்தது அந்தப் பயம்? பிறப்பிலிருந்து வந்தது தான். அதனால் யாராவது இறந்தால் வருத்தப்படாதீர்கள் - அது இயற்கை. இந்த வாழ்க்கையில் இறந்தவரின் துயரம் முடிந்து விட்டது. நீங்கள் வருத்தப்பட வேண்டுமானால் யாராவது பிறக்கும் போது வருத்தப்படுங்கள்: "அட! மறுபடியும் வந்து விட்டான். மறுபடியும் துக்கம் அனுபவித்து மரணமடையப் போகிறான்!")
வாழ்தல் இனிதென மகிழ்ந் தன்றும் இலம் - வாழ்தலை யினிதென்று உவந்தது மிலம்; (மகிழ்ச்சி அடைவயது இல்லை)
முனிவின் இன்னா தென்றலும் இலம் - ஒரு வெறுப்பு வந்த விடத்து இன்னாதென்று இருத்தலும் இலம்; (முனிவு - வெறுப்பு, இன்னா - துன்பம்)
(பௌத்த நோக்கில்:
இவை உலகில் எளிதாக மாறக்கூடிய இயல்புகள். "நான் பாராட்டப் பட்டேன், நான் இகழப் பட்டேன். நான் நன்கு அறியப் பட்டவன், என்னை யாருக்கும் தெரியவில்லை. நான் வெற்றி பெற்றேன். நான் தோல்வியுற்றேன். எனக்கு லாபம் உண்டானது, எனக்கு நட்டம் உண்டானது. நான் செல்வம் சேர்த்தேன். நான் எல்லாவற்றையும் இழந்தேன்," எல்லைகளில் இருக்காமல், மையத்தில், அசைவில்லா இடத்தில் இருக்கச் சொல்கிறார், புத்தர். Equanimity உபேக்கை )
மின்னோடு வானம் தண் துளி தலைஇ - மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான் (பெய்வதால்); ஆனாது - அமையாது;
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று - கல்லை யலைத்
தொலிக்கும் (கல்லில் நீர் பட்டு உண்டாகும் ஒலியொடு) வளவிய பேரியாற்று (பேர் ஆறு);
நீர் வழிப் படூஉம் புணை போல் - நீரின் வழியே போம் மிதவை (படகு) போல;
ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது - அரிய வுயிர் ஊழின் (வினைப்பலன்) வழியே படும் என்பது;
(பௌத்த நோக்கில்: நிகழ்காலத்தை, கடந்த காலச் செயல்களும் நிகழ்காலச் செயல்களும் பாதிப்பதாகவும், நிகழ்காலச்செயல்கள் வருங்காலத்தையும் நிகழ்காலத்தையும் பாதிப்பதாகவும் பௌத்தர்கள் கருகின்றனர். ஆகவே நிகழ்காலச் செயல்கள் செய்ய, சுதந்திரமாகத் தெரிவு செய்ய உரிமை (free will) இருக்கிறது. இதையே பௌத்த மதத்தில் அடையாளச் சின்னமாக ஓடும் நீராகக் காண்பிப்பார்கள். சில சமயம் வெள்ளத்தின் (நமது பழங்கால செயல்களினால் ஏற்பட்ட) வேகம் அதிகமாக இருந்தால் ஓர் இடத்தில் இறுக்கிப் பிடித்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. பிற சமயங்களில் வேகம் அதிகமாக இல்லாத போது நீர் ஓட்டத்தைத் தடுத்து எந்த திசையிலும் திருப்பி விடலாம். )
திறவோர் காட்சியின் தெளிந்தனம் - நன்மைக் கூறுபாடறிவோர் (வேறுபாடு அறியோர்) கூறிய நூலானே தெளிந்தே மாகலான்;
மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலம் - நன்மையான் மிக்கவரை மதித்தலும் இலம்;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலம் - சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினு மிலம் எ - று (என்றாவது)
தலைஇ யென்பதனைத் தலைய வெனத் திரிக்க. "முனிவி னின்னாதென்றலு மிலமே" என்றதற்கு, முன்னே கூறிய வாழ்தலை வெறுப்பான் இன்னாதென்று இகழ்ந்திருத்தலு மில்லே மெனினும் அமையும்.
விளக்கம்: யாவரும் கேளிராகியவழி அவருறையு (வாழ்கின்ற) மிடமெல்லாம் ஊராதலின், "யாதும் ஊரே" யென்றார். பிறர் தர வாரா வெனவே தாமே வரு மென்பதும், புதுவ தன்றெனவே கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்பதும் வருவிக்கப்பட்டன. ஊழின் உண்மையும் அதன் செயற்கூறும் காட்சியளவையானன்றிக் கருத்தளவையானறிந்து நூல்களால் குறிக்கப்பட்டிருத்தலின், "திறவோர் காட்சியிற் றெளிந்தன" மென்றார். மாட்சியிற் பெரியவர் - மாட்சியால் மிக்கவர். மாட்சியாற் குறைந்தவர் சிறியவர். தலைஇ யென்பது தலைஇய வென்பதன் திரிபாதலால், "தலைஇ ...திரிக்க" என்றார்.
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
First Edition 1947