தடுக்க முடியாத தாக்கம்

தடுக்கமுடியாத தாக்கம்/மலைகள் பற்றிய உவமானம்

Irresistible Force/The Simile of the Mountains

பப்பாதோபமா சூத்திரம்

Pabbatopama Sutta

English

மரணம் நிகழ்வதற்கு அண்மையில் உள்ளதென்பதை [1] நினைவுறுத்தியும், ஆதலால் அறத்தினைப் பயிற்சி செய்யவேண்டியதன் முக்கியத்தை [2] வலியுறுத்தியும் பசேனதி மன்னருக்கு ஒரு வலிமையான உவமானத்தோடு விளக்குகிறார் புத்தர்.

[1] எந்தவயதிலும், எவரும் இன்னும் எத்தனை காலம் வாழ்வோம் என்று உறுதியாகக் கூற முடியாது.

[2] வாழ்க்கையில் எந்தச் சிக்கலான சூழலில் இருந்தாலும், எத்தகைய துயரமான செய்தியைக் கேட்டாலும், பெரும் இழப்பு ஏற்பட்டாலும் நிலைகுழைந்து விடாமல் இந்த மனிதப் பிறவி எடுத்தது மிகவும் அரியது என்பதை நினைவு கூர்ந்து

நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்தச் சூத்திரம் விளக்குகிறது.

Translated from the Pali by Thanissaro Bhikkhu

பாலி மொழியிலிருந்தது மொழி பெயர்த்தவர் தணிசாரோ பிக்கு

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

சாவத்தியில் கோசல மன்னன் பசேனதி ஆசீர்வதிக்கப் பட்டவரை (புத்தரை) ஒரு நாள் மதிய வேளையில் அணுகி அவருக்கு அஞ்சலி செலுத்தி ஒரு புறமாக அமர்ந்தார். அப்படி அமர்ந்தவரிடம் புத்தர் , "சொல்லுங்கள் மாமன்னரே, இந்த மதிய வேளையில் எங்கிருந்து வருகின்றீர்கள்?," என்று கேட்டார்.

"அண்ணலே, இப்போது தான், ஏகாதிபத்தியப் போதையில் மூழ்கியிருக்கும், புலன் இன்பங்களின் பேராசையால் ஆட்டிப் படைக்கப் பட்டிருக்கும், நாட்டை நிலையான கட்டுப் பாட்டில் வைத்திருக்கும், பூமியின் பெரும் பரப்பளவை வென்று ஆட்சிசெய்யும் முடி சூடப்பட்ட அரசருக்குரிய விவகாரங்களில் ஈடுபட்டிருந்தேன்."

"நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மாமன்னரே? ஒரு நம்பிக்கைக்குரிய மனிதன் கிழக்குத் திசையிலிருந்து வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வந்தவன், "மகாராஜாவே, நான் கிழக்குத் திசையிலிருந்து வருகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு முகிலைத் தொடும் அளவு உயரமான ஒரு பெரிய மலை இவ்வழியில் வருவதைக் கண்டேன். வரும் வழியில் அது எதிர்ப்படும் அனைத்து உயிரினங்களையும் நொறுக்கி அழித்துக் கொண்டு வருகிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ செய்யுங்கள்," என்கிறான். பின் இரண்டாம் மனிதன் மேற்கிலிருந்து ... பின் மூன்றாம் மனிதன் வடக்கிலிருந்து... பின் நாலாம் மனிதன் தெற்கிலிருந்து வந்து: "மகாராஜாவே, நான் தெற்கிலிருந்து வருகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு முகிலைத் தொடும் அளவு உயரமான ஒரு பெரிய மலை இவ்வழியில் வருவதைக் கண்டேன். வரும் வழியில் அது எதிர்ப்படும் அனைத்து உயிரினங்களையும் நொறுக்கி அழித்துக் கொண்டு வருகிறது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ செய்யுங்கள்,” என்கிறான். புத்தபிரான், “மாமன்னரே, இப்படிப்பட்ட பேரழிவு உண்டாக நேர்ந்தால், இப்படிப்பட்ட பெரும் மனித உயிர்ச்சேதம் நிகழுமானால் - மனிதப் பிறவி எடுப்பது மிகக் கடினமான ஒன்று - என்ன செய்ய வேண்டும்?

"அண்ணலே அத்தகைய பெரும் ஆபத்து எழுமானால், பெரும் மனித உயிர்ச் சேதம் நிகழுமானால் - மனிதப் பிறவி எடுப்பது மிகக் கடினமான ஒன்று – அப்போது அற நெறியைக் கடைப்பிடித்தல், நன்னடத்தை, திறமையான செயல்களைப் புரிவது, புண்ணியம் சேர்க்கும் காரியங்களைச் செய்தல்." ஆகியவற்றைத் தவிர வேறு என்ன செய்வது?"

" மாமன்னரே! உங்களுக்குத் தெரிவிக்கிறேன். உங்களுக்கு அறிவிக்கிறேன்: மூப்பும், மரணமும் உங்களை நோக்கி உருண்டோடி வந்து கொண்டிருக்கின்றன. மூப்பும், மரணமும் உருண்டோடி வரும்போது, மாமன்னரே, என்ன செய்தல் வேண்டும்?"

"மூப்பும், மரணமும் என்னை நோக்கி உருண்டோடி வரும்போது, அற நெறியைக் கடைப்பிடித்தல், நன்னடத்தை, திறமையான செயல்களைப் புரிவது, புண்ணியம் சேர்க்கும் காரியங்கள் செய்தல் ஆகியவற்றைத் தவிர வேறு என்ன செய்வது?"

"அண்ணலே, ஏகாதிபத்தியப் போதையில் மூழ்கியிருக்கும், புலன் இன்பங்களின் மீது நாட்டம் கொண்டிருக்கும், பேராசையால் ஆட்டிப் படைக்கப் பட்டிருக்கும், நாட்டை நிலையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், பூமியின் பெரும் பரப்பை வென்று ஆட்சிசெய்யும் முடி சூடப்பட்ட அரசர்கள் யானைப் படைகளைக் கொண்டு போர் நடத்துகின்றனர்; ஆனால் மூப்பும் மரணமும் உருண்டோடி வரும் போது அந்த யானைப் படைகளினால் பயன் ஏதும் இல்லை. அதே போலக் குதிரைப் படைகளோடு போர்........தேர்ப் படைகளுடன் போர்...காலாட்படைகளோடு போர்..ஆனால் மூப்பும் மரணமும் உருண்டோடி வரும் போது இந்தக் காலாட்படைகளோடு போர் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. எனது மந்திரி சபையில் சமயோசிதமாகத் சாதுர்ய வார்த்தைகளைப் பேசி எதிரிகளைப் பிரிக்கக் கூடிய அறிவார்ந்த மந்திரிகள் இருக்கின்றனர்; ஆனால் மூப்பும் மரணமும் உருண்டோடி வரும் போது கூர்மையான பேச்சு வார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை. இந்த இராஜ சபையில் ஏராளமான தங்கக் கட்டிகளும், வெள்ளிப் பாளங்களும், தங்க நாணயங்களும் நிலவறையிலும், பொக்கிஷங்களிலும் குவிந்து கிடக்கின்றன. இவைகளைக் கொண்டு எதிரிகள் வந்தால் அவர்களை விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால் மூப்பும் மரணமும் உருண்டோடி வரும் போது இவைகளால் எந்தப் பயனும் இல்லை. மூப்பும் மரணமும் உருண்டோடி வரும் போது அற நெறியைக் கடைப்பிடித்தல், நன்னடத்தை, திறமையான செயல்கள் புரிவது, புண்ணியம் சேர்க்கும் காரியங்கள் செய்தல் ஆகியவற்றைத் தவிர வேறு என்ன செய்வது?"

"அப்படித்தான் மாமன்னரே! அப்படித்தான்! மூப்பும் மரணமும் உருண்டோடி வரும் போது அற நெறியைக் கடைப்பிடித்தல், நன்னடத்தை, திறமையான செயல்கள் புரிவது, புண்ணியம் சேர்க்கும் காரியங்கள் செய்தல் ஆகியவற்றைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?"

இவ்வாறு ஆசீர்வதிக்கப் பட்டவர் கூறினார். ஆசிரியர் மேலும் கூறியதாவது:

மாபெரும் பாறைகள்,

வானத்தைத் தொடும் மலைகள்

எல்லாத் திசைகளிலிருந்தும் நகர்ந்து வந்து,

நாலா பக்கங்களையும் நொறுக்கிக் கொண்டு வருவதைப் போல,

முதுமையும், மரணமும்

எல்லா உயிரினங்கள் மீதும் உருண்டோடி வருகின்றன:

மேன்மையான வீரர்கள், பிராமணர்கள், வணிகர்கள்,

தொழிலாளர்கள், சாதியிலிருந்து விலக்கப்பட்டோர், குப்பை அள்ளுவோர்

எவரையும் விடுவதில்லை.

எல்லோரையும் மிதித்து நசுக்குகிறது.

யானைப்படையினரும் தடுக்க முடியாது

தேர்ப்படையினரும், காலாட்படையினரும்,

சாதுர்ய வார்த்தைகளும்,

செல்வமும் வெல்ல முடியாது.

எனவே அறிவுள்ள ஒருவன்

தனது நலம் கருதி

அசைக்கமுடியாத உறுதியோடு

புத்தர், தம்மம், சங்கத்தின் மேல் நம்பிக்கை கொள்கிறான்.

அறத்தைத் தன்

மனத்தாலும், பேச்சாலும், நடத்தையாலும் பயில்பவன்

இன்மையிலும் பாராட்டப்படுவான்;

மறுமையிலும் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுறுவான்.

* * * * * *

©1997 Thanissaro Bhikkhu.

"Pabbatopama Sutta: The Simile of the Mountains" (SN 3.25), translated from the Pali by Thanissaro Bhikkhu. Access to Insight (Legacy Edition), 30 November 2013, http://www.accesstoinsight.org/tipitaka/sn/sn03/sn03.025.than.html .