பௌத்தமும் தமிழும்!
புத்தர், தம்மம், சங்கம்
(Buddha, Dhamma, Sangha)
புத்தர் ஒரு கடவுள் இல்லை. தன்னைக் கடவுள் என்றோ, கடவுளின் தூதுவர் என்றோ, கடவுளின் புதல்வன் என்றோ, கடவுளின் அவதாரமென்றோ புத்தர் எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை.
அவர் ஒரு மனிதர். ஆனால் அசாதாரண மனநிலையைத் தன் சொந்த முயற்சியினாலேயே அடைந்த ஆச்சரிய மனிதர்.
அந்த நிலை தான் நிப்பாண (Nibbana) நிலை.
அசைக்க முடியா நிதானம் (Eqanimity). களங்கம் இல்லா உள்ளம், அவா (greed), வெறுப்பு (hatred), அறியாமை (delusion) ஆகியவற்றிலிருந்து விடுபட்ட மனம்.
அளவிறந்த ஆசையை (greed), பகைமையை (ill-will), கோபத்தை (anger), துவேஷத்தை (hostility), வஞ்சனையை, பொறாமையை (jealousy), ஏமாற்றுதலை, பித்தலாட்டத்தை (fraud), பிடிவாதத்தை (obstinacy), அகந்தையை (presumption), அகம்பாவத்தை (conceit), இறுமாப்பை (arrogance), தற்பெருமையை (vanity), சோம்பலைக் (negligence) கைவிட்ட மனம்.
இந்த மாசுகளை (கிலேசங்களை kilesa/hinderances) எல்லாம் கைவிட்ட மனத்தில் மிஞ்சுவது என்ன? துக்கத்தின் முடிவு. பேரின்பம். அமைதி (Peace). இந்த மாசுகள் எங்கே உள்ளன? அகத்தில் தான் உள்ளன. புறத்தில் இல்லை.
இந்த அமைதியை அறிந்த பின்னர் சித்தார்த்த கௌதமர் புத்தர் என்று அழைக்கப் பட்டார்.
புத்தர் அந்நிலையை அடையத் தான் செய்த பயிற்சியை, தொடர்ந்த பாதையைப் பிறர் நலனுக்காக எடுத்துரைத்தார். அதுவே தம்மம் (Dhamma). அறம்.
காரண காரியத் தொடர்பினால் உண்டான அனைத்தும் மாற்றத்துக்கு (அநிச்சா- anicca நிலையின்மை) உட்பட்டவை. ஒரு சமயத்தில் நாம் தாயின் வயிற்றில் கருவாக இருந்தோம். மாற்றம் இல்லாதிருந்தால் பிறந்திருக்க மாட்டோம். பிறந்த இரண்டு மாதங்களில் தவழக் கூட முடிவதில்லை. மாற்றமில்லாவிட்டால் நடக்கப் பழகி இருக்க மாட்டோம். ஐந்து வயதுச் சிறுமியாக இருந்த போது நமக்குக் குழந்தைத்தனமான எண்ணங்கள் இருந்தன. மாற்றம் இல்லாவிட்டால் இன்று அறிவார்ந்த எண்ணங்களோடு பொறுப்பான வேலைகளில் ஈடுபடும் பெண்ணாக இருக்க முடியாது. மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. இது ஒரு உண்மை.
வாழ்க்கையில் துக்கம் (dhukka) உள்ளது. இதுவும் ஒரு உண்மை. வாழ்வே துக்கம் என்று சொல்லவில்லை. இங்கு துக்கம் என்றால் துயரம் என்பது மட்டும் இல்லை; அசௌகரியம், திருப்தியின்மை ஆகியவையும் துக்கத்தைச் சார்ந்தவையே. பிறப்பு துக்கம். பிறக்கும்போதே துக்கத்தை அனுபவிக்கிறோம். மூப்பு, பிணி, சாக்காடும் துக்கம். விரும்புவது கிடைக்காவிட்டால் துக்கம். பிடிக்காதவற்றுடன் வாழ்வதும் துக்கம். விரும்பியது கிடைத்தாலும் அது நிலைத்திருக்காது என்பதை நினைக்கும் போது அந்த மகிழ்ச்சியிலும் துக்கம் கலந்து விடுகிறது. எனவே துக்கம் உள்ளது என்பதும் ஒரு உண்மை.
மிக வேகமாகத் தொடர்ந்து காண்பிக்கப்படும் புகைப்படங்கள் நமக்கு ஒரு தொடர்ச்சியான திரைப் படமாகத் தெரிகிறது. உண்மையில் கணத்துக்குக் கணம் மாறும் புகைப்படங்களைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு கம்பி மத்தாப்பைச் சிறுவன் ஒருவன் வேகமாகச் சுழற்றும் போது அதன் ஒளி இடைவிடாத வட்ட வடிவில் உள்ளதாகத் தெரிகிறது. உண்மையில் அது வட்ட வடிவில் இல்லை. வேகமாகச் சுழற்றுவதனால் ஏற்பட்ட மாயத் தோற்றமே அது. அது போலவே உடலின், மனத்தின் நிலைகளும் வேகமாகக் கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டே இருக்கின்றன. காரண காரியத் தொடர்பினால் உண்டாகும் இம்மாற்றங்கள் தொடர்ச்சியாக யாதொருவரின் கட்டுப்பாட்டினால் நடைபெறுவதாகவும், 'நான்' என்ற நிலையான ஒருவர் இவற்றைச் செயற்படுத்துவதாகவும், நம் கண்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒரு மாற்றமில்லா 'ஓட்டுனர்' நம்மை அனைத்தையும் செய்ய வைப்பதாகவும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் மாற்றமில்லா 'நான்' என்றோ 'தான்' என்றோ ஒன்றும் இல்லை. அப்படி நினைப்பது தவறான கருத்து, பிரச்சனைகளை உண்டு செய்யும் கருத்து என்று பௌத்தம் கற்பிக்கிறது (anatta, non-self- சாரமின்மை). இதுவும் ஒரு உண்மை.
இது போன்ற வாய்மைகளையெல்லாம் (Insights) படித்தால் மட்டும் அல்லது கேட்டால் மட்டும் போதாது. உடலின், மனத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீர விசாரித்து, பிரதிபலித்து, உள்ளப்பூர்வமாக உணர வேண்டும். பின் எங்கு திரும்பினாலும் யாரைச் சந்தித்தாலும் இவ்வுண்மைகளைக் காணலாம். எல்லாம் தம்மமாகிவிடும்.
துக்கத்தைப் புரிந்து கொண்டால் அது தோன்றுவதற்கான காரணத்தையும், அதன் முடிவினையும், முடிவிற்கு எடுத்துச் செல்லும் மார்க்கத்தையும் நாம் புரிந்து கொள்வோம் என்கிறார் புத்தர்.
நிப்பாண நிலையை அடைந்த மனத்தில் அசைவேதும் இருப்பதில்லை. இன்பத்தை நோக்கி ஓடுவதும் இல்லை, துன்பத்தை விட்டு விலக முயற்சிப்பதும் இல்லை. அத்தகைய மனம் உள்ளதை உள்ளபடி காண்கிறது. உதாரணமாக எதிரே வரும் ஒருவரைக் காணும் சாதாரண மனம் தனது மனக்குறிப்பின் (perception) பாதிப்பினால் அந்த மனிதர் மீது விருப்பு அல்லது வெறுப்புக் கொள்கிறது. ஆனால் தெளிவடைந்த மனம் இப்படி நல்லவன், கெட்டவன், சோம்பேறி, அறிவாளி என்றெல்லாம் கணக்குப் போடுவதில்லை. அது ஒரு உருவத்தை மட்டுமே காண்கிறது.
புத்தரை வழிபடுவது அவருக்கு நாம் காட்டும் மரியாதையின் காரணமாக மட்டுமே. அவர் கண்ட அமைதி நிலையை நாமும் காண வேண்டும் என்ற நோக்கம் நமது மனத்தில் தோன்ற வேண்டும். ஆனால் நோக்கத்தை அடைய எடுக்க வேண்டிய முயற்சிகளெல்லாம் நம் கையில் தான் உள்ளது. அவர் வரம் கொடுக்கும் சாமி இல்லை. நல் வழிகாட்டும் நண்பர். அவரை வழிபடுவதால் மட்டுமே நாம் நிப்பாண நிலையை அடையமுடியாது. பாதையில் செல்வதும் செல்லாததும் நமது கையில் தான் உள்ளது.
அவர் காட்டிய வழியே அஷ்டாங்க மார்க்கம். எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை. சுருக்கமாக ஒழுக்கம் (சீலம்- sila/morality)), பாவனை (சமாதி- samadi/concentration), நுண்ணறிவு (பஞ்ஞா- panna/wisdom) சம்பந்தப்பட்டது எனலாம்.
ஒழுக்கம் என்பதில் நற் பேச்சு (right speech), நல் வாழ்க்கை (right livelihood), நன்னடத்தை (right action) ஆகிய அஷ்டாங்க மார்க்கத்தின் மூன்று பிரிவுகள் அடங்கியுள்ளன. நாம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது உயிரினங்கள் மீதான கருணையின் காரணமாகத்தான்.
பாவனை என்பது மனத்தைப் பக்குவப் படுத்துதல் (mental discipline). அதில் நல் முயற்சி (right effort), நல் அறி நிலை (right mindfulness) மற்றும் நல் மன ஒருமைப்பாடு (right concentration) ஆகிய மேலும் மூன்று அஷ்டாங்க மார்க்கத்தின் பிரிவுகள் அடங்கியுள்ளன.
நுண்ணறிவு என்பதில் நற் பார்வை (right view) மற்றும் நல்லெண்ணம் (right intention) ஆகிய மீதமுள்ள இரண்டு அஷ்டாங்க மார்க்கத்தின் பிரிவுகளும் அடங்கும்.
புத்தர் சொன்ன அறவழி நடப்போர் தான் சங்கம். தம்மத்தைக் கடைப்பிடிப்போர் தாமாகவே பிறர் நலன் பேணுவது தம்மத்தின் ஓர் இயல்பு. சுய நலத்திற்காக மட்டுமே அறத்தைப் பயில்வது என்பது புத்தரின் தம்மம் அல்ல.
புத்தர் சொன்னபடி சரிவரப் பயின்றால், ஜாதி மத பேதமின்றி, குடும்ப அந்தஸ்து, பால், அதிகார வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும், புத்தர் கண்ட அமைதியை, பேரின்பத்தை இவ்வுலகிலேயே, இப்பிறப்பிலேயே காண்பது நிச்சயம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் பௌத்தப் பயிற்சி என்பது கருணை (compassion) மற்றும் நுண்ணறிவு (wisdom) ஆகிய இரண்டையும் ஒருசேர வளர்த்தல் தான். கருணை என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. நுண்ணறிவு என்பது சித்தம் சம்பந்தப்பட்டது. கருணையை வளர்த்து நுண்ணறிவை வளர்க்கா விட்டால் நல்லுள்ளம் கொண்ட முட்டாளாகி விடுவோம். நுண்ணறிவை மட்டுமே வளர்த்துக் கருணையை வளர்க்காவிட்டால் கல்நெஞ்சங்கொண்ட அறிவாளியாகத்தான் இருப்போம்.
இவ்விரண்டு பண்புகளையும் ஒருசேர வளர்த்துக் கொள்வதே நமது வினையாக இருத்தல் வேண்டும்.
நமக்கும் நன்மை உண்டாக்குவது, பிறருக்கும் நன்மை உண்டாக்குவதுதான் இவ்வினையின் பலன்.
* * * * * *
ஐந்து ஒழுக்கங்கள் The 5 precepts
எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல்
To refrain from killing living creatures
கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்
To refrain from taking what is not given
தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்
To refrain from sexual misconduct
தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; (பொய் சொல்வதும்,
வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும்
தவிர்த்தல்)
To refrain from harsh and false speech
போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல்
To refrain from taking intoxicating liquor and drugs