கனிந்த மனம் வீழ்வதில்லை

கனிந்த மனம் வீழ்வதில்லை

கவிஞர் கண்ணதாசன் வரிகள்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்

கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும். ஹோய்.. ஹோய்...

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னையிளம் கீற்றினிலே ஏ..ஏ..ஏ..

தென்னையிளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது

தென்னைதனைச் சாய்த்து விடும் புயலாக வரும் பொழுது.

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடிநிற்கும் நாணழகு

காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை

.............

இங்கு நாணழகு என்பது நாணல் புல்லின் அழகைக் குறிக்கும். நாணல் ஆற்றங்கரையின் மணற்பாங்கான பகுதிகளில் சுவர் போல வளர்ந்திருக்கும் புல். இளம் காற்றில் அவை அசைந்து வளைவது அழகான காட்சி. காற்றுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. ஒடியாது. சூறாவளிக் காற்றில் தென்னை மரங்களெல்லாம் ஒடியும் போதும், நாணல் புல்லுக்கு - அதன் வளையும் தன்மையால் - ஒன்றும் நேராது. காற்று நின்றதும் நிமிர்ந்து நிற்கும்.

கனிந்த மனம் என்பது பண்பட்ட மனம். மென்மையான மனம். பயிற்சிபெற்ற மனம். யாரிடம் எப்படிப் பழகுவது என்று உணர்ந்த மனம்.

பௌத்த நோக்கில் வெறுப்பு விருப்பு என்று இரண்டோடும் பற்றுக்கொள்ளாத மனம். தென்னையைப் போல விரைத்து நின்று சேதப்படாமல் நாணலைப் போல வளைந்து கொடுத்து நிலைத்து நிற்கும் மனம்.