என் தேகத்தில் சந்தேகம்..! - வசன கவிதை

Post date: Jul 21, 2011 4:09:15 AM

அழகிய நீர்நிறை குளத்தில்

வெண்தாமரை வீற்றிருப்பதை

கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...

இன்றோ சாலையில் காண்கிறேன்

ஓர் அழகிய வெண்தாமரை

நீரில் நனைந்தபடி..!

என்ன விந்தையடா..?

யார் செய்த மாயமடா..?

சாலையில் மழை பெய்து கொண்டிருக்க

வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!

தாமரையை நீர் நெருங்காதே...?

என் தேகத்தில் சந்தேகம் முளைக்க

அத்தாமரையை நெருங்கினேன்...

அருகில் சென்றபோதுதான் தெரிந்தது

அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?

அழகிய அன்னம் அற்புதமாக

மழையை ரசித்தபடி நின்றிருக்க

அதனிடம் வினவினேன்...

மழை கண்டு வந்தாயோ அன்னமே..?

இந்த மனம் வேண்டி வந்தாயோ

பொற்கிண்ணமே..?

பதிலில்லை...

அதற்கு பதிலாக

தன் வெண்முத்து பற்கள்

தெரியும்படி மின்னலாய்

சிந்திய புன்னகையை என் முகத்தில்

விசிறியடித்தது...

கிறங்கிப் போனேன்...

மழையே அழகு..!

அதில் நீ நனைவது அதைவிட அழகு

இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல

மழைக்கா..? உனக்கா..?

(தன் காதலி மழையில் நனைந்தபடி, மழையை ரசித்துக் கொண்டிருக்க... அவளது காதலனோ அவள் நனையும் அழகைக் கண்டு கவிதையாக உளறுகிறான்.. அதன் விளைவே இக்கவிதை...)