Welcome..! Join us to Develop your Humanity
டாக்டர் நாச்சியப்பன் நாராயணன் மற்றும் சாந்தி - தேவைப்படுபவர்களுக்கு உதவுவதன் மூலம் ஒருவர் தங்கள் தனிப்பட்ட வெற்றிகளை எவ்வாறு பெருக்க முடியும் என்பதற்கு இவர்கள் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு
உயர் படிப்புக்காக அல்லது தாங்கள் எப்போதுமே கனவு கண்ட ஒரு வேலைக்காக ஒருவர் தன் சொந்த ஊரை விட்டுவிட்டுச் செல்வதால் , அவர் தனது வேர்களை மறந்துவிட்டடார் என்று அர்த்தமல்ல. தேவைப்படுபவர்களுக்கு உதவுவதன் மூலம் ஒருவர் தங்கள் தனிப்பட்ட வெற்றிகளை எவ்வாறு பெருக்கிக் கொள்ளலாம் என்பதற்கும், ஒரே நேரத்தில் பல சேவையாளர்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் நாச்சியப்பன் நாராயணன் தம்பதியர்.
டாக்டர் நாச்சியப்பன் நாராயணன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர். டாக்டர் நாச்சி தமிழ்நாட்டின் சிவகங்கா மாவட்டத்தின் கந்திரமாணிக்கம் கிராமத்தை தனது தாயகமாகக் கொண்டவர். அமெரிக்காவில் தனது மேற்படிப்பைத் தொடர, அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது, அதன் காரணமாக அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.!
தி பெட்டர் இந்தியா- விற்கு பேட்டி அளித்த டாக்டர் நாச்சி, “நான் கந்திரமாணிக்கம் கிராமத்தில் வளர்ந்தேன், உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். 1986 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற ரோட்டரி இன்டர்நேஷனல் வழங்கும் “பசியில் இருந்து விடுதலை ஸ்காலர்ஷிப்பிற்காக” (Freedom from hunger scholarship) நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் தகவல் அமைப்புகளில் பி.எச்.டி முடித்தேன், வர்ஜீனியா டெக் மற்றும் எச்.எஸ்.பி.சி உடன் 15 ஆண்டுகள் பணியாற்றினேன். ” என்கிறார். பின்னர், அவர் தனது மனைவி சாந்தியுடன் இணைந்து மாண்டிசோரி அகாடமி மற்றும் கற்றல் மையம் என்ற தனது சொந்த தொழிலைத் தொடங்கினார்.
அமெரிக்காவில் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தாலும் கூட, தம்பதியினர் தங்கள் வேர்களுடன் இணைந்திருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கிராமத்திற்கு வருவதை உறுதியாக கொண்டு இருந்தனர்.
அவர்களின் பயணங்களின் போது, அங்கு வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் கவனிப்பார்கள், மேலும் அவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய முடியுமா என்று படிப்படியாக யோசிக்கத் தொடங்கினர்.
“நாடோ, கிராமமோ எனக்காக என்ன செய்தன என்று கேட்பதற்குப் பதிலாக, நாட்டிற்காக, கிராமத்துக்காக நான் என்ன செய்தேன் என்று கேட்க விரும்பினேன். இந்த நோக்கத்தை மனதில் கொண்டு, எனது கிராமத்தில் மட்டுமல்ல்லாது, அருகாமையில் அமைந்துள்ள பல கிராமங்களின் தொகுப்பிற்காகவும் நாங்கள் மேற்கொள்ளக்கூடிய புதிய மற்றும் புதுமையான திட்டங்களைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன், ”என்று டாக்டர் நாச்சி பெட்டர் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
விரைவில் அதற்கான ஒரு நல்லத் திட்டத்தையும் கண்டறிந்தார் .
தமிழகத்தின் பல கிராமங்கள் கடுமையான மின்வெட்டினை எதிர் கொள்கின்றன. அதன் விளைவாக கிராம வாசிகள் பல மணி நேரங்கள் மின்வசதி இல்லாமல் வாழ நேரிடுகிறது. மறுபுறம், மாநிலத்தில் ஆண்டு முழுவதும் ஏராளமான சூரிய ஒளி கிடைக்கிறது . எனவே, இத்தகைய கிராமங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக் கட்டமைப்புகளை நிறுவுவது மேற்கூறிய பிரச்சினையை சமாளிக்க மிகத் தெளிவான தீர்வாகும்.
"பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கட்டுவது, மின்சார வாரியத்தின் அலுவலகத்திற்கு ஒரு கட்டடம் வழங்குவது, கண் சிகிச்சை முகாம்கள் மற்றும் பல கோயில் புனரமைப்புத் திட்டங்களை நடத்துவது போன்ற சிறிய வழிகளில் முதலில் நாங்கள் உதவத் தொடங்கினோம்" என்று விவரிக்கும் டாக்டர் நாச்சி “பின்னர் சூரிய மின்சக்தி திட்டம் என் நினைவுக்கு வந்தது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் அதே நேரத்தில் கிடைக்கும் ஏராளமான சூரிய ஒளி இவை , மக்களுக்கு ஏதேனும் புதுமையான முறையில் உதவ வேண்டும் என்ற என் குறிக்கோளுக்கு பொருத்தமானதாக இருந்ததால் இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்னும் அடிப்படையில் “சூரிய கிராம அறக்கட்டளை” (Solar village Foundation) என்ற அறக்கட்டளையைத் இந்தியாவில் தொடங்கினோம் ”, என்று கூடுதல் விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பத்தில், இந்த தம்பதியர்கள் இத்திட்டத்திற்கு ரூ . ஐந்து லட்சம் நன்கொடை அளித்தனர். விரைவில் இந்த தம்பதியினர் , அறக்கட்டளையின் மற்ற நன்கொடையாளர்களுடன் சேர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்களில் சூரிய மின்சக்தி தீர்வுகளை வழங்கத் தொடங்கினர். சூரிய மின்விளக்குகளை நிறுவுவதன் மூலமும் பணியை தொடங்கியவர்கள், நன்கொடையாளர்களின் வேண்டுகோளின் பேரில் கோயில்களில் சூரிய மின் நிலையங்களையும் தொடங்கினர். சூரிய சக்தி முகவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் உள்ளூர் கிராமவாசிகளுடன் சூரிய ஆற்றலின் நன்மைகளைப் பற்றி விவாதிக்க அவர்கள் முகாம்களையும் நடத்தினர். இதுவரை, இந்த தம்பதியினர் 25 க்கும் மேற்பட்ட சூரிய தெரு மின்விளக்குகள் மற்றும் இரண்டு சூரிய மின் நிலையங்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளனர்.
உண்மையில், இந்த பணியில் இருந்த குழுவிற்கும் கிராமவாசிகளுக்கும் இந்த திட்டத்தால் ஏற்பட்ட ஒரு அனுபவம், சூரிய மின் விளக்குகள் எவ்வாறு ஒரு சமுதாயத்திற்கு வரமாக இருக்கிறது என்பதை அவர்களுக்கு நிரூபித்தது. “25 விளக்குகள் நிறுவப்பட்ட ஒரு நாள் கழித்து, ஒரு கோவில் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பிரதான விழாவிற்கு ஒரு நாள் முன்பு இரவு நேரத்தில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த முக்கியமான நாளில், மின்வெட்டு இருந்தாலும் எங்கள் சூரிய சக்தி வீதி விளக்குகள் போதுமான வெளிச்சத்தை வழங்கின, இதனால் மக்கள் எந்த பிரச்சினையும் இன்றி கோவில் பணிகளுக்காக ஓடி ஆடி பணி செய்ய முடிந்தது . இது எல்லா கிராம மக்களின் பாராட்டைப் பெற்றது!" என்று அவர் தெரிவிக்கிறார்.
நேரமும், அதிக ஆதரவும் கிடைத்தால், தமிழகத்தில் அதிக கிராமங்களை சூரிய மின்சக்தியுடன் மேம்படுத்த முடியும் என்று டாக்டர் நாச்சி மற்றும் சாந்தி ஆகியோர் நம்புகிறார்கள். இரண்டாவது திட்டம் மூலம் பள்ளிகள் மற்றும் சில பிரபலமான கோயில்களுக்கு சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவி அதன் மூலம் அவர்களின் மாதந்திர மின் கட்டணத்தில் ரூ. 2000 த்தில் இருந்து ரூ 5000 வரை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது . அந்த கிராமங்களுக்கு சூரிய சக்தி வீதி விளக்குகள் வழங்குவதோடு இந்த திட்டமும் செயல் படுத்தப்படும்.
மூன்றாவது திட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு சூரிய சக்தி ஸ்மார்ட் வகுப்பை (Solar Smart Class) வழங்குவது அடங்கும். இந்த திட்டத்தின் கீழ், அனைத்து சமச்சீர் கல்வி உள்ளடக்கங்களுடனும் கூடிய 42 " எல்சிடி தொலைக்காட்சி பெட்டியை செல்கோ வழங்கும். ஆசிரியர்களுக்கு இக்கருவியின் செயல்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்படும். மேலும் செல்கோ - இந்த உபகரணங்களின் பராமரிப்பு மற்றும் உள்ளடக்கத்தின் .புதுப்பித்தல் பணியை 5 வருடங்களுக்கு வழங்கும்.
இத்தகைய முயற்சிகளை பார்க்கும் போது டாக்டர் நாச்சியப்பன் நாராயணன் சாந்தி தம்பதியினர் கிராம வளர்ச்சியிலும், தற்சார்பிலும் முன்னேற்றம் கண்டிட மிகவும் சிறப்பானதொரு செயல் திட்டத்தோடு பணிபுரிந்து வருவது நல்லதொரு முன்னுதாரணத்தினை ஏற்படுத்தியுள்ளது.