Welcome..! Join us to Develop your Humanity
மனு பிரகாஷ் - உயர் தொழில்நுட்ப கருவிகளை அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் குறைந்த விலையில் எளிய வடிவமைப்புகளில் கண்டுபிடிப்பதில் மிகவும் பிரபலமானவர்.
பாரதத்தை சேர்ந்த மனு பிரகாஷ் அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் தனது திறமை மற்றும் அறிவுநுட்பத்தின் மூலம் உயர் ரக தொழில்நுட்பங்களை எளிய முறையில் அனைவரும் பயன்படுத்த கூடிய வகையில், அதே வேளையில், மிகக் குறைவான விலையில் வடிவமைப்பதன் மூலம் அடிக்கடி செய்திகளில் இடம்பெறக் கூடியவர். இவரின் சமீபத்திய கண்டுபிடிப்பான மீண்டும்-பயன்படுத்தக்கூடிய முகக்கவசமானது 'ஸ்நோர்கெல்லிங் கியர்' எனப்படும் தண்ணீருக்குள் பயன்படுத்தக்கூடிய முகக்கவசத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. இந்த புதிய முகக்கவசம் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவமனைகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய வகை முகக்கவசத்தில் மாற்றி அமைக்கப்பட்ட ஸ்நோர்கெல் மாஸ்க்குடன் 3D முறையில் அச்சிடப்பட்ட காற்றோட்ட வசதியும், மருத்துவ முறையில் சுத்திகரிக்கப்படும் காற்று வடிகட்டியும் உள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு கொரோனா நோயாளிகள் மத்தியில் சேவை செய்யும் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பான, சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்க வழிவகுக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதத்தை சேர்ந்த அமெரிக்க பயோ இன்ஜினியரிங் பேராசிரியரான இவர் 50,000 புதிய முகக்கவசங்களை திட்டமிட்டுள்ளார். பாரம்பரிய PPE கவச சாதனங்கள் இல்லாத பட்சத்தில் இந்த புதிய வகை முகக்கவசத்தினை பயன்படுத்த முடியும். எளிதில் கிருமிகளை அழித்து சுத்தம் செய்து மீண்டும் உபயோகப் படுத்த முடியும் என்பதால் இவை பலதரப்பட்ட தொற்று வீதங்களைக் கொண்ட பகுதிகளுக்கு இடையில் சுதந்திரமாகப் பகிரப்படலாம் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீரட்டில் பிறந்து, கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி-யில் கணினி பொறியியல் பயின்று, பின்னர் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பயன்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மனு பிரகாஷ் ஒரு முறையான விஞ்ஞானி அல்ல. ஆனால் தனது அசாதாரமான கண்டுபிடிப்புகள் மூலம் அறியப்படும் இவரது படைப்புகள் அறிவியல் செயலாக்கத்தை உலகில் உள்ள அனைத்து மக்களும் எளிதாக்கும் வகையில் உள்ளது.
மென்-பொருள் இயற்பியலில் உள்ள தனது நிபுணத்துவத்தை பயன்படுத்தி, புரிந்துகொள்ள எளிதான, அதே சமயம் விளக்குவதற்கு கடினமான உயிரியல் மற்றும் இயற்பியல் சூழல்களில் உள்ள கோட்பாடுகளை எளிமைப்படுத்தும் மனு பிரகாஷ், தற்போது உலக சுகாதாரம், அறிவியல் கல்வி மற்றும் சுற்றுசூழல் கண்காணிப்பு முதலிய துறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி வருகிறார். குறைவான வளமை உடைய சமூகத்தை சேர்ந்தவர்களும் அறிவியலின் அனுபவத்தை உணர உந்தும் இவர், நமது கிரகத்தில் உள்ள மாறுபட்ட வாழ்க்கை வடிவங்கள் மற்றும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிய ஆர்வமாக உள்ளார்.
ஆரம்பம் முதலே மனு பிரகாஷ் மற்றவர்களிடையே உள்ள புதிய கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக உள்ளார். 2002 ஆம் ஆண்டில், இவர் இந்தியாவில் உள்ள அனைத்து பொறியியல் பள்ளிகளுக்கும் ஒரு புதிய பொம்மை வடிவமைக்கும் போட்டியைத் தொடங்கினார். பாரம்பரிய பொம்மைகளைப் பற்றி படித்துக் கொண்டிருந்தபோது வேடிக்கையாக இவர் கண்டுபிடித்த ரோபோ பொம்மலாட்டம் மேற்கு பாரதத்தின் புகழ்பெற்ற மற்றும் மெல்ல அழிந்து கொண்டிருக்கும் பொம்மலாட்டத்தினை உயிரூட்டும் முயற்சியாக அமைந்தது. இந்த கண்டுபிடிப்புற்காக தனது முதல் இந்திய காப்புரிமையை மனு பிரகாஷ் பெற்றார்.
இதுபோன்று தனது கண்டுபிடிப்புகள் மூலம் பிரகாஷ் அவர்கள் பல காப்புரிமைகளை பெற்றுள்ளார். மேலும் பல காப்புரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இது அறிவியல் மற்றும் இயற்கை உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. மலிவான பொருட்களைப் பயன்படுத்தி உயர் தொழில்நுட்ப கருவிகளைக் கண்டுபிடிப்பதில் முன்னோடியாக திகழும் டாக்டர் பிரகாஷ், தனது படைப்புக்களை சுருக்கமாக 'எளிய மற்றும் மலிவு அறிவியல்' என்று அழைக்கிறார். அவரது கண்டுபிடிப்புகள் மிகக் கடினமான சிக்கல்களைத் தீர்க்க வடிவமைக்கப் பட்டிருந்தாலும், அவற்றின் மலிவான விலை மற்றும் எளிய வடிவமைப்புகள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக அமைகின்றன. கற்பனை கண்டுபிடிப்புகள், அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கை கோபுரத்திலிருந்து விஞ்ஞானத்தை விடுவிப்பதாக பிரகாஷ் உறுதியாக நம்புகிறார்.
வெறும் 5 டாலர் மதிப்பிலான மைக்ரோஃப்ளூயடிக் வேதியியல் ஆய்வகத்தைக் உருவாக்கி காட்டியுள்ள பிரகாஷ் அவர்கள், முன்னதாக ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்தையும் தான் உருவாக்கிய பாக்கெட் மைக்கிரோஸ்கோப் மூலம் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 'ஃபோல்டுஸ்கோப்' (Foldscope) என பெயரிடப்பட்ட 'அச்சிடக்கூடிய, மற்றும் பயன்படுத்தி தூக்கியெறியக்கூடிய' அந்த மைக்கிரோஸ்கோப் முழுக்க முழுக்க காகிதத்தால் ஆனது. ஆயினும் ஒரு சொட்டு ரத்தத்தில் இருந்து மலேரியா நுண்ணுயிரிகளை கண்டறியும் திறன் கொண்டது. இருப்பினும் அதன் விலை அரை டாலர் மட்டுமே. இன்றைய இந்திய நாணயமதிப்பில் வெறும் ரூ.35 மட்டும்.
இவரது ஓ-ஸ்கேன் எனப்படும் 3-D தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு (add-on) பாரதத்தில் உள்ள நாற்பது சதவீத புற்றுநோய் இறப்பிற்கு காரணமான, வாய்வழி புற்றுநோய்களை கண்டறிய உதவுகிறது. டாக்டர் பிரகாஷ் தனது மாணவர்களுடன் இணைந்து உருவாக்கிய கணினியானது முழுக்க முழுக்க நீர்துளிகளைப் பயன்படுத்தி இயங்கக்கூடியது. உடல் கூறுகளை துல்லியமாகக் கட்டுப்படுத்தவும் கையாளவும் கூடிய புதிய வகை கணினிகளை வடிவமைப்பதே அவர்களின் குறிக்கோள்.
ஒரு சிறிய குழுவின் உதவியுடன் இவர் கண்டுபித்த, பயணத்திற்கு இலகுவான மேலும் சிறிய வடிவிலான மற்றும் மலிவான இன்குபேட்டர், குறைமாத குழந்தைகளை நம்பமாகவும் பாதுகாப்பாகவும் கொண்டுசெல்ல பயனுள்ளதாக உள்ளது. இதன்மூலம் உலகில் உள்ள எல்லா குறைமாத மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அளவிற்கு விரிவாக்கம் செய்ய இயலும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளார்.
CBA Fablab திட்டத்தின் மூலம் கானா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் போது, பாதரசம் இல்லாத தெர்மோமீட்டர்களின் தேவை, பூர்த்தியடையாததை பிரகாஷ் உணர்ந்தார். பயன்படுத்தி தூக்கியெறியும் தெர்மோமீட்டர்களின் உலகின் பல இடங்களில் அசாதாரண பொருளாக உள்ளதால், மறுபயன்பாட்டில் உள்ள தெர்மோமீட்டர்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இது நோயாளிகளின் மத்தியில் தொற்றுகளை பரப்ப காரணகமாவும் அமைகிறது என்று பிரகாஷ் விளக்குகிறார். உணவு மூலங்களை மாசுபடுத்துவதற்கு வழிவகுக்கும் பாதரச கசிவுகளின் உண்மையான ஆபத்தை சமாளிக்க, பிரகாஷ் ஒரு திறந்த மூல திட்டமாக ஒரு ஸ்டிக்-ஆன் மைக்ரோஃப்ளூய்டிக் தெர்மோமீட்டரை வடிவமைத்தார், இது தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஃபேப்லாப்களில் சோதிக்கப்படுகிறது.
ஒரு தனித்துவமான பாரதீய மூளையை கொண்ட டாக்டர் மனு பிரகாஷ் பணத்திற்கு பின் ஓடாமல், தனது அரிய மற்றும் மலிவு விலை படைப்புகள் விஞ்ஞான உலகிற்கும், குறிப்பாக பொது மக்களுக்கும், மாணவ சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.