Welcome..! Join us to Develop your Humanity
பரமேஸ்வரன் – பொறியியல் படிப்பை நிறைவு செய்யாமல் விட்டு விலகி, 300க்கும் மேற்பட்ட நாட்டு காய்கறி மற்றும் பழ ரகங்களை வளர்த்து வரும் இளம் விவசாயி.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குட்டியகவுண்டன்புதூர் என்ற கிராமத்தில் பரமேஸ்வரனின் ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. பயிர்களை நன்கு பராமரிக்க, இப்பகுதியில் வற்றாத நீர் ஆதாரம் இல்லை.ஆனால், விமானவியல் பொறியியலாளராக படிப்பைத் தொடங்கி, தற்போது 29 வயது விவசாயியான பரமேஸ்வரன், தனது தோட்டம் செழிக்கும், விவசாயம் செய்யலாம் என நம்பிக்கையுடன் உள்ளார். இந்த பகுதி வறண்டு இருந்தாலும், இவரது உள்ளூர் ரகங்களான நாட்டுப் பயிர்கள் கடும் வறட்சியிலும் தாக்குப் பிடிக்கும் என இவர் நம்புகிறார்.
விவசாயிகள் குடும்பத்தில் பிறந்த இவர், தனது பெற்றோர் வறண்ட குத்தகை நிலத்தில் உழவுத் தொழில் செய்வதைப் பார்த்து வளர்ந்தார். அவர் பொறியியல் படித்து வந்தாலும், மண்ணின் மீதான அவரது காதல், பட்டப்படிப்பையும் தாண்டி அவரை விவசாயம் நோக்கி அழைத்து வந்து விட்டது.
"சந்தேகத்திற்கு இடமின்றி, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மற்றும் பயிர்த்தொழில் மீதான பேரார்வம் ஆகியவற்றின் கலவை என் நான்காவது ஆண்டில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு என் கிராமத்தில் ஒரு முழுநேர இயற்கை விவசாயியாக மாற்றியது", என இவர் கூறுகிறார்.
அவரது முடிவால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர். அவரது பெற்றோர்கள் தங்கள் மகன் ஏன் ஒரு வசதியான வாழ்க்கைக்கான வாய்ப்பை விட்டு விட்டு உடலுழைப்பைத் தர வேண்டிய விவசாய வேலை ஏன் செய்ய வேண்டும் எனக் கேட்டனர்.
"எல்லா பெற்றோர்கலையும் போல. அவர்கள் ஆரம்பத்தில் ஏமாற்றமடைந்தனர், ஆனால் இப்போது, என் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, அவர்கள் என் முடிவைப் பற்றி மகிழ்ச்சியும் பெருமையும் படுகிறார்கள். இவர்களைத் தவிர, என் விவசாய பயணத்தில் என் மனைவி கயல் ஒரு வலுவான தூணாக இருந்து வருகிறார்", என மகிழ்ச்சியுடன் பரமேஸ்வரன் கூறுகிறார்.
2014-ல், பரமேஸ்வரன் குத்தகை எடுத்த ஆறு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வந்தார். பசுமை இயக்கப் போராளியும், வேளாண் விஞ்ஞானியும், சுற்றுச்சூழல் ஆர்வலரும்,, மற்றும் இயற்கை விவசாய நிபுணருமான ஜி.நம்மாழ்வார் மூலம் இவர் ஈர்க்கப்பட்டார். கரூரில் உள்ள வானகம் என்ற இடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அங்கு தான் சில விஷயங்களை கற்றுக் கொண்டார். தற்செயலாக, மரபின மாற்றுக் கத்தரி வகை அந்த நேரத்தில் பரபரப்பு செய்தியாக கொண்டிருந்தது. பாரம்பரிய விதைகள் சேமிக்கும் தனது பயணத்தை துவக்கும் வகையில், இளம் விவசாயியான பரமேஸ்வரன் , தமிழக கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து, நாட்டு காய்கறி ரகங்களை ஆவணப்படுத்த, நிபுணர்களுடனும், அனுபவ மிக்க விவசாயிகளுடனும் கலந்து உரையாடினார். இந்த பயணம் அவரது கண்களைத் திறப்பதாக இருந்தது.
ரசாயனப் பொருள் இல்லாத உணவு வகைகளை வளர்ப்பதுடன், 300-க்கும் மேற்பட்ட நாட்டு காய்கறி மற்றும் பழ விதைகளைக் கொண்ட ஆதியாகை (தமிழில் முதன் முதலாக பூக்கும் என்று பொருள்) என்ற பெயரில் ஒரு விதை வங்கியையும் உருவாக்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆவணப்படுத்தப்பட்டு சேகரித்த பழ மற்றும் காய்கறிச் செடிகளின் விதைகளை அவர் இப்போது அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளுக்கும், நகரங்களில் உள்ள, இளைஞர்களுக்கும் விநியோகித்தார்.
"தமிழ்நாட்டில் 500 க்கும் மேற்பட்ட கத்தரிக்காய் ரகங்கள் பெயர்களை அறிந்து நான் வியப்படைந்தேன். அதேபோல் வெண்டைக்காயில் பல வகைகள் உள்ளன, இவை மூன்று ஆண்டுகள் வரை மகசூலைத் தரும். கொங்கு மண்டலத்தில் இளஞ்சிவப்பு நிற வெண்டைக்காய் வகையும் இருக்கிறது", என்று இவர் கூறுகிறார்.
துரதிருஷ்டவசமாக, இந்த இரகங்கள் பல, பயிர் சாகுபடி இல்லாத காரணத்தால் அழிந்து விட்டது. இதனால், அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற அவர் உறுதி கொண்டார். தற்போது அவரது விதை வங்கியில் 13 வகை வெண்டைக்காய்,, 30 வகை கத்தரிக்காய், 30 ரகத்திற்கும் மேற்பட்ட சுரைக்காய், 10 வகையான நாட்டுச் சோள வகைகள், அரிய வகை நாட்டு ரகங்களான கிராம்பு பீன்ஸ், இறக்கை அவரை, பட்டை அவரை ஆகியவை உள்ளன.
அவர் சேகரித்த பல இரகங்கள், விவசாயிகள் தங்கள் கொல்லைப்புறத்தில், சொந்ததேவைக்காக வளர்க்கப்பட்டு வந்தவை. மற்றவை உள்ளூர் விதை சேகரிப்பாளர்களிடமிருந்தும் மற்றும் விவசாயத் திருவிழாக்களிலும் சேகரித்தவை. இந்த ரகங்களை, சிறு சிறு நிலங்களில், பயிரிட விவசாயிகளை இவர் ஊக்குவிக்கிறார். தனது பண்ணையின் பணிகளைப் பற்றி விவரித்துச் சொல்லும் பரமேஸ்வரன், ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கிறார். மீதமுள்ள மூன்று ஏக்கரில், தக்காளி, மிளகாய்,, கிராம்பு பீன்ஸ், இறக்கை அவரை, பட்டை அவரை , வெண்டை, சுரைக்காய், புடலங்காய், கத்தரி உள்ளிட்ட உள்நாட்டு ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நாட்டு ரகங்களுக்கு கூடுதல் கவனம் தேவையில்லை, எனவே அவர் எருவை பயன்படுத்துவதில்லை.
"எங்கள் நிலம் வறண்ட நிலப்பகுதியின் கீழ் வருகிறது. இங்குள்ள விதைகள், இயற்கையாகவே வறட்சியைத் தாங்குவதாகவும், பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் இருக்கும். இவைகளுக்கும் உரம் தேவையில்லை. எப்போதாவது பெய்யும் ஒரு சுமாரான மழையிலேயே இவைகள் நன்கு வளர்ந்து, நல்ல மகசூல் கொடுக்கும்,'' என்கிறார் இவர்.
எப்படி அவர் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறார்?
"ஒரு பயிர் சாகுபடிக்குப் பதிலாக, நாங்கள் பல பயிர்களைப் பயிரிடுகிறோம், இதனால் பயிர்கள் பூச்சிகளால் பாதிக்கப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளது. இது பூச்சிக் கட்டுப்பாடு தேவையை நீக்குகிறது. அதன் நோக்கம் பல்வேறு பகுதிகளில் விதவிதமான உள்நாட்டு பயிர் வகைகளில் முதலீடு செய்யவதே", என்று பரமேஸ்வரன் குறிப்பிடுகிறார்.
விவசாயம் தவிர, மக்கள் வருமானத்திற்கு மாடித்தோட்டம் மற்றும் கொல்லைப்புற தோட்டங்களை அமைக்க உதவுகிறார். 200க்கும் மேற்பட்ட இடங்களில் தோட்டக்கலைப் பற்றய வகுப்புகளை நடத்தி இருக்கிறார்.
"சென்னை, மதுரை போன்ற நெருக்கடியான நகரங்களில் கூட, மக்கள் பசுமை இடங்களை உருவாக்க உதவுகிறோம். எங்கள் வகுப்புகளில் பெரும்பாலும் அனுபவ அடிப்படையில் மக்கள் கொல்லைப்புற தோட்டங்கள் அல்லது மொட்டை மாடி தோட்டங்கள் அமைக்க உதவுவதில் கவனம் செலுத்துகிறோம். எங்கள் விதை வங்கியில் இருந்து விதைகளைக் கொடுக்கிறோம், அவற்றைப் பயன்படுத்தியவுடன், அவற்றில் சில விதைகளைச் மீண்டும் சேகரித்து கையிருப்பை ஈடுசெய்கிறோம். . ஆகவே, இது ஒரு பரஸ்பர வெற்றிச் சூழல் ஆகும்!" என பரமேஸ்வரன் கூறுகிறார்.
நாட்டு இரகங்களை பாதுகாப்பது ஏன் முக்கியமாகிறது?
அதற்கு அவர் கூறுகையில், "கலப்பு ஒட்டு ரகங்களின் எந்தவித விதைகளும் விவசாயிகளுக்கு, கிடைக்காமல் போகிறது, அவற்றை வாங்கவும் முடியாமல் உள்ளனர். ஒரு சராசரி விவசாயி தனது வருமானத்தில் 20 சதவீதத்தை விதைகளுக்கு மட்டும் செலவிடுகிறார். கலப்பு ஒட்டு ரக வெண்டையின் ஆயுட்காலம் 100-120 நாட்கள் தான் என்றாலும், நாட்டு ரகங்களின் ஆயுட்காலம் நீண்ட காலம் நீடிக்கும், ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை மகசூல் பெறலாம். இவை நமது விவசாயிகளுக்கு உதவும், மேலும் இந்த விதைகள் இடம் சார்ந்தவை என்பதால், அவற்றைப் பாதுகாக்க இளைஞர்களை அணிதிரட்ட வேண்டிய அவசரத் தேவை உள்ளது."
விவசாயம் செய்ய இளைஞர்கள் தேவை என்பதை வலியுறுத்துகிறார் பரமேஸ்வரன். அவர் கூறுகையில், "தினமும் 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நிகழ்வை மாபெரும் இந்திய வேளாண் அறிவு இழப்பு என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய தலைமுறை ரீதியான நிலைமைகளை நமது இளைஞர்களுக்கு நாம் தெரியப்படுத்த வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
அவர்களுக்கு முதலில் மண் வளம், மழைப் பொழிவு கால முறைகள், பயிர்வளர்ப்புப் பயன்பாடுகள் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, நீர் பற்றாக்குறையின் தீவிரத்தன்மை மற்றும் பண்டைய கால நீர் சேகரிப்பு முறை பற்றி அவர்களுக்கு வலுவூட்ட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
"விவசாயத்தை நமது பிரதான கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் ஆக்கினால் மட்டுமே, அது விவசாய சமூகத்திற்கு ஒரு சிறிய மகிழ்ச்சியைக் கொண்டு வர முடியும்," என்று பரமேஸ்வரன் முடிக்கிறார்.