Welcome..! Join us to Develop your Humanity
பழங்குடியினருக்கு மருத்துவ சேவை செய்யும் மருத்துவ தம்பதி
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடிசையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கிய ஒரு மருத்துவ தம்பதி, இப்போது ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பழங்குடியினருக்கு சிகிச்சை அளித்து வருகிறது
25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஒரு மருத்துவ தம்பதியினர், டாக்டர் எம். ரெஜி மற்றும் டாக்டர் லலிதா ரெஜி, நாடு முழுவதும் மருத்துவ உதவி தேவைப்படும் மிக முக்கியமான பகுதிகளை ஆவணப்படுத்த முடிவு செய்து பயணிக்க துவங்கினர். அப்போது அவர்கள், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்டிலிங்கியில் வசிக்கும் ஒரு தனித்துவமான நாடோடி பழங்குடியான லம்பாடி சமூகத்தை எதிர்கொண்டனர்.
கல்வராயன் மற்றும் சித்தேரி மலைத்தொடர்களின் அடிவாரத்திற்கு அருகில் வசிக்கும் இந்த பழங்குடி சமூகம் நவீன உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது. டாக்டர் தம்பதியினர் இப்பகுதியில் சுகாதார வசதிகள் இல்லாத நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எந்தவொரு மருத்துவ அவசர காலத்திலும், இந்த மக்கள் 50 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் உள்ள சேலம் அல்லது தர்மபுரிக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த குக்கிராமம் 1,000 குழந்தைகளுக்கு 150 என்ற குழந்தை இறப்பு விகிதத்தை பதிவு செய்திருந்தது. இது இந்தியா முழுவதிலும் இந்த எண்ணிக்கை மிக உயர்ந்ததாக இருந்தது! சிட்டிலிங்கி பள்ளத்தாக்கிலுள்ள ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை முதல் வருடத்திற்கு முன்பாகவே இறந்து விடும் அவலம் இருந்தது. பல தாய்மார்கள் பிரசவத்தின்போது இறந்தனர்.
இந்த டாக்டர் தம்பதியினர் எளிதாக விலகிச் சென்று இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் அங்கேயே தங்கி ஒரு மருத்துவமனையைத் தொடங்குவதன் மூலம் சிட்டிலிங்கியைச் சார்ந்த இரண்டு லட்சம் பேருக்கு மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவதற்கு முடிவு செய்தனர். மருத்துவமனை ஒரு ஒற்றை அறையைக் கொண்ட குடிசையிலிருந்து செயல்படத் தொடங்கியது. இந்த அறையிலேயே உள் நோயாளி மற்றும் வெளி நோயாளி பிரிவும் செயல்பட்டது. 100 வாட்ஸ் விளக்கு மற்றும் நோயாளி படுக்க ஒரு பெஞ்ச் மட்டுமே அந்த அறையில் இருந்தது.
டாக்டர் ரெஜி கூறுகையில், “எங்களிடம் நிலம் வாங்க பணம் இல்லை. எனவே நாங்கள் அரசாங்க நிலத்தில் ஒரு சிறிய கிளினிக் அமைத்தோம். அது பழங்குடியினரால் கட்டப்பட்ட ஒரு சிறிய குடிசையே தவிர வேறொன்றுமில்லை. நாங்கள் மூன்று ஆண்டுகளாக இந்த குடிசையிலேயே, தரையில் பிரசவங்கள் மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உழைத்தோம்”
தொண்டுள்ளம் கொண்ட நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பத்து படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்ட நிதி வழங்கினர். இன்று, இது ஒரு சாதாரண ஓலைக் குடிசையிலிருந்து 35 படுக்கைகள் கொண்ட ஒரு முழு மருத்துவமனைக்கு மாறி உள்ளது. அதில் வேறு எந்த நவீன மருத்துவமனையையும் போல ஐ.சி.யூ மற்றும் வென்டிலேட்டர், ஒரு பல் மருத்துவமனை, ஒரு பிரசவ அறை, ஒரு குழந்தை பாதுகாப்பு அறை, ஒரு அவசர சிகிச்சை அறை, ஒரு முழுமையான செயல்பாட்டு வசதி உள்ள ஆய்வகம், ஒரு நவீன ஆபரேஷன் தியேட்டர் மற்றும் எக்ஸ்-ரே, அல்ட்ராசவுண்ட், எண்டோஸ்கோபி மற்றும் எக்கோ கார்டியோகிராபி போன்ற பிற வசதிகளும் உள்ளன.
இது தவிர, சிட்டிலிங்கியில் குழந்தை இறப்பு விகிதம் 1,000 க்கு 20 ஆகக் குறைந்துள்ளது. இது இப்போது இந்தியாவில் மிகக் குறைவான ஒன்றாகும். மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் பிரசவத்தில் எந்த தாய்மார்களும் இறக்கவில்லை!
இந்தத் தம்பதி இதை எவ்வாறு சாதித்தது?
இந்த பகுதிகளில் பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே நடந்தன. பிரசவ நேரத்தில் உண்டாகும் சிக்கல்கள் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு பற்றிய போதுமான அறிவின் பற்றாக்குறையே குழந்தை மற்றும் தாய்வழி இறப்பு விகிதத்திற்கு மிக அதிகம் வழிவகுத்தது.
மேலும் கூறுகையில், “பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களைக் கண்டறிய 40 மற்றும் 50 வயதுகளில் உள்ள பழங்குடிப் பெண்களுக்கு சுகாதார உதவியாளர்களளாக பணியாற்ற நாங்கள் பயிற்சி அளிக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு பிரசவத்தின்போதும் அவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தனர். உதாரணமாக, தொப்புள் கொடி வெட்டி ஒழுங்காக கட்டப்பட்டிருக்கிறதா என்று அவர்கள் சோதித்தனர். ”
அவர் மேலும் கூறுகையில் சிக்கலான கர்ப்பத்தின் போது, தாய் பிரசவத்திற்குச் சென்றவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்களா என்று அவர்கள் உறுதி செய்வார்கள். இந்த பெண்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தை அறிய ஒரு வாரத்திற்குள் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் முதலில் ஆரம்பித்தபோது, எளிமையான நடைமுறைகளுக்கு கூட அவர்கள் நிதி திரட்ட வேண்டியிருந்தது. அவர்கள் குடும்பம் நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் தனிமையில் இருந்தனர். தவிர, அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தது ஆனால் அருகில் பள்ளிகள் இல்லை. எனினும் அக்குழந்தைகளை நான்காம் வகுப்பு வரை வீட்டிலேயே படிக்க வைத்தனர்.
பழங்குடியினரிடையே ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் பல ஆண்டுகளாக, அவர்களின் பணி மற்றும் கஷ்டங்களைப் பார்த்து, சமூகத்திற்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்காக, அந்த சமூகம் தம்பதியரை நம்ப ஆரம்பித்து உதவியது.
“அவர்கள் மருத்துவர்களைப் பார்த்தது இல்லை. ஒரு குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் இருந்தால், அது ஆவிகளால் பாதிக்கப்படுவதாக கிராமவாசிகள் நினைத்து சூனியக்காரரை தேடுவார்கள். பாம்பு கடித்தால், அவர்கள் ஒரு பூஜை செய்ய விரும்பினர். அவர்களின் நம்பிக்கைகளை ஒருபோதும் எதிர்க்காமல் அவர்கள் ஒரு பூஜை நடத்தப்பட வேண்டும் என்று கூறினால், நாங்கள் அதை படுக்கையின் அருகே செய்ய அனுமதிக்கிறோம். ”
தரமான சுகாதார சேவையை மலிவு விலையில் கிடைக்கச் செய்வது தான் எங்களின் யோசனையாக இருந்தது என்று டாக்டர் ரெஜி கூறுகிறார். இன்றும் கூட, பிரசவம் ரூ .1,000 க்கும் குறைவான செலவில் நடத்தப்படுகின்றன, மேலும் புறநோயாளிகள் சேர்க்கைகளில் 80-90 சதவீதம் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பின்னர் மருத்துவமனை எவ்வாறு இயங்குகிறது? வாழ்வது கடினம் என்றாலும் இந்த ஜோடி கைவிடவில்லை.
“நாங்கள் பெயரளவு தொகையை வசூலிக்கிறோம். பெரும்பாலான நேரங்களில், மக்கள் பணம் செலுத்துவார்கள், ஆனால் அவர்கள் தங்களிடம் உள்ளதை எங்களுக்குக் கொடுக்கும் நேரங்களும் உண்டு. எனவே மருத்துவமனையின் வருடாந்திர வருவாய், தொண்டுள்ளம் கொண்ட மனிதர்களிடமிருந்து நன்கொடைகள், பெரும்பாலும் இந்தியர்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் மற்றும் சி.எஸ்.ஆர் நிதிகளால், எந்தவொரு அரசாங்க உதவியும் இல்லாமல் இதை இயக்க எங்களுக்கு உதவுகின்றன. ”
"எங்கள் செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் எல்லாம் பழங்குடி சிறுவர் மற்றும் சிறுமிகள் தான். எங்களால் அல்லது மற்றவர்களால் பயிற்சி பெற்றவர்கள். இது பழங்குடியினரால் ஒரு பழங்குடியினருக்கான மருத்துவமனையாகும், இது 50 கி.மீ சுற்றளவில் இயங்குகிறது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மக்களுக்கு சேவை செய்கிறது. ”
மற்ற சுகாதார நிபுணர்களுக்கு அளித்த இறுதி செய்தியில், டாக்டர் ரெஜி கூறுகையில், “நாங்கள் தொடங்கியபோது எங்கள் மனதில் சந்தேகம் இருந்தது. நாங்கள் தொடங்கும்போது எங்களிடம் பணம் இல்லை, ஆனால் எங்கள் நோக்கத்தில் நேர்மை இருந்தது. சில நேரங்களில், நீங்கள் கண்களை மூடிக்கொண்டு, உங்களை நம்பித்தான் ஆகவேண்டும். நம் நாட்டில் அதிகமான தேவைகள் உள்ளது, நாம் தான் நமது உதவிக்கரம் நீட்ட வேண்டும். "