Welcome..! Join us to Develop your Humanity
தொலைந்து போனவர்களின் மீட்பாளர்: பூலே பட்கே திவாரி
“கும்பமேளாவில் தொலைந்து போன 22,000 குழந்தைகள் மற்றும் 12,50,000 பேர்களை தம் அன்புக்குரிவரிடம் இணைக்கும் பணியில் 70 ஆண்டுகளாக ஒரு குடும்பம்.”
நாம் பல திரைப்படங்களில் கதாநாயகர்கள், தங்களின் அன்பிற்குரியர்களை கும்பமேளாவில் தொலைத்துவிட்டு, பின்னர் மிகவும் நாடகத்தனம் நிறைந்த சூழ்நிலையில் அவர்களோடு இணைவதை பார்த்து வளர்ந்து இருப்போம் .
ஓவ்வொரு ஆறு வருடங்களுக்கும் அல்லது ஓவ்வொரு மாமாங்கத்திற்கும் (12 வருடம்), நான்கு இடங்களில் கும்பளேமா நடைபெறும். இவற்றில் அலகாபாத்தில் நடைபெறும் ப்ரயாக்ராஜ் கும்பமேளா மிகப்பெரிய நிகழ்வு ஆகும், 2013ம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் சுமார் 1.20 கோடி மக்கள் கலந்து கொண்டனர் .
வெகுஜன மகிழ்ச்சிக்கு மத்தியில், நேசிப்பவரை தொலைத்துவிடுவது பொதுவான ஆபத்து ஆகும். அலகாபாத்தில் 1946 ஆம் ஆண்டு, ராஜாராம் என்ற 18 வயது இளம் விவசாயி, கும்பமேளாவில் காணாமல் போனோரை மீட்பதில் தம் வாழ்வின் நோக்கம் பொதிந்து உள்ளதை உணர்ந்தார்.
அலகாபாத் கும்பமேளாவில் அவர் திரிந்துகொண்டிருந்தபோது தம் உற்றாரை தொலைத்துவிட்டு, தவித்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியைக் கண்டார். அந்த மூதாட்டி தன் வீட்டை சென்றடைவதற்கு ராஜாராம் உதவினார். அந்த மூதாட்டி, அவர் காலில் விழுந்து வணங்கினார். நெகிழ்ந்துபோன ராஜாராம் அன்றுமுதல், இது போன்று இன்னல்படுவர்களுக்கு தாம் உதவுவது என தீர்மானித்தார்.
அடுத்த நாள் முதல், அவர் ஒரு தகர ஒலிபெருக்கியுடன் சென்று, ௯ட்டத்தில் காணாமல் போனவர்களின் பெயர்களைக் கூவி அறிவித்தார். அந்த ஆண்டு, அவர் 800க்கும் மேற்பட்டவர்களை மீண்டும் ஒன்றிணைக்க முடிந்தது, இதன் விளைவாக பூலே பட்கே ‘தொலைந்து போனவர்களை மீட்கும்’ திவாரி எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
கும்பமேளா தலம் முழுவதும் சுமார் 150 தன்னார்வலர்களை கொண்ட குழு கடந்த 73 ஆண்டுகளில் இதுவரை 22,000 குழந்தைகள் மற்றும் 12,50,000 பேர்களை தம் உறவினருடன் சேர்வதற்கு உதவி செய்துள்ளது. இது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
இன்று அவர் அந்த பொறுப்பை தன் இளைய மகன் உமேஷ் திவாரியிடம் ஒப்படைத்துள்ளார். ஆக்க பணிகள் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆர்த் கும்ப மேளா (6 ஆண்டுளுக்கு ஒருமுறை வருவது) அல்லது மகா கும்ப மேளாவிலும் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்) பக்தர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்த்து உமேஷ் வளர்ந்தார்.
தி பெட்டர் இந்தியாவுடன் பேசிய உமேஷ், “எனது தந்தை மிகவும் நற்பண்புள்ளவர், அவருடைய மகனாக இருப்பது ஒரு பாக்கியம். எதையாவது நல்ல காரியத்தைத் தொடங்குவது சிறப்பு என்றாலும், அதைத் தொடர்வது இன்னும் அத்தியாசியமாகும். இதனால்தான் என் தந்தை குடும்பத்தின் மற்றவர்களையும் இந்த வேலையில் ஈடுபடுத்தினார். அவருடன் நான் 1995 ஆம் ஆண்டில் என்னுடைய 20ம் வயதிலிருந்தே பணியாற்றத் தொடங்கினேன், ஆனால் என் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதைத் தாண்டி, என்னைத் தூண்டியது திருப்தி உணர்வு மட்டுமே. ஒவ்வொரு முறையும், யாரோ ஒருவர் தங்கள் அன்புக்குரியவருடன் மீண்டும் ஒன்றிணைகிறார். புன்னகையும் ஆசீர்வாதங்களும் என் இதயத்தை நிரப்புகின்றன. இதுதான் என்னை, தொடர்ந்து செயல்படவைக்கறது. எங்கள் குடும்பத்தின் தலைமுறைகளை இது வழிநடத்தும்” என்றார்.
கும்பமேளா 2019
2016 ல் தனது தந்தை இறந்த பிறகு, முகாமின் முழுப் பொறுப்பையும் உமேஷ் ஏற்றுக்கொண்டார். அவரது 18 வயது மகன் அசுதோஷ் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து 150 உறுப்பினர்களின் உதவியுடன், இப்போது அவர் ‘கடவுளின் திருப்பணி’ என்று அழைக்கும் இப்பணியை செய்கிறார்.
“எங்கள் வீட்டு வாசலுக்கு வரும் மக்கள், எங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் அல்லது ‘பூலே பட்கே’(தொலைந்து போனவர்கள்), நாங்கள் அவர்களை அன்புடன் இலவச உணவு, போர்வைகள் மற்றும் அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைப்போம் என்ற வாக்குறுதியுடன் வரவேற்கிறோம். பல சந்தர்ப்பங்களில், வழியிழந்த யாத்ரீகர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கான பயணச்சீட்டுகளை கூட நாங்கள் முன்பதிவு செய்துள்ளோம்” என்று அவர் பெருமித குரலில் கூறினார். உரத்த மைக்ரோஃபோன் அறிவிப்புகளுடன், மார்ச் 4, கடைசி நாள் வரை அவர் தொடர்ந்து மேளாவின் காற்று மண்டலத்தை நிரப்புவார் .
ஒரு சராசரி நாளில், இவர்களது முகாம் கிட்டத்தட்ட 250 பேரை மீண்டும் ஒன்றிணைக்கிறது. மேலும் பௌர்ணிமா போன்ற சிறப்பு நாட்களில் இந்த எண்ணிக்கை 1700 பேரை எட்டும். செயல்முறை ஒரு மணிநேரமும் ஆகலாம், அல்லது சில நாட்களுக்கும் நீடிக்கலாம். மேலும், இவை அனைத்தும் இலவசமாக செய்யப்படுகின்றன.
இந்த முகாமில் பயனாளிகள் சிலரும் கருணையுடன் நன்கொடை அளித்துள்ளனர். முகாம் கட்டமைப்பு மற்றும் இலவச மின்சாரம் மற்றும் நீர் போன்ற பிற அடிப்படை வசதிகள் கூட அரசாங்கத்தால் எங்களுக்கு வழங்கப்படுகின்றன," என்று உமேஷ் கூறினார்.
இந்த ஆண்டு (2019) ஜனவரி 15 முதல் ஆர்த் கும்பமேளாவில் முழு வீச்சில், உத்தரபிரதேச காவல்துறையினர் முகாமுடன் கைகோர்த்து முழு வீச்சில் ஈடுபட்டு இதுவரை 24,000 பேரை மீண்டும் ஒன்றிணைத்துள்ளனர்.
இந்த முகாமை ஷிவிர் என்று அழைக்கின்றனர். ஷிவிர் அதிக செயல்திறனுக்கான தொழில்நுட்ப உதவிகளையும் ஏற்றுக்கொண்டது. ஆனால், கணினிமயமாக்கப்பட்ட முறைகள் (சமூக ஊடகங்கள் போன்றவை) ஒரு அளவிற்கு பயனுள்ளதாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் பாரம்பரிய முறைகள் மூலமே மீட்கப்படுகிறார்கள் என்று உமேஷ் குறிப்பிடுகிறார். இந்த பாரம்பரிய முறைகள் என்னென்ன? ஷிவிர் பெரிய மஞ்சள் பலூன்களால் ‘பூல் பட்கே சிவிர்’ என்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளது. இது யாத்ரீகர்கள் தூரத்திலிருந்து பார்க்க முடியும் மேலும் அவர்களின் உதவியை நாடவும் முடியும்.
மக்கள் தங்களுடன் வந்து தொலைந்து போனவர்களின் பெயர்களைக் கொண்ட சிட்களுடன் வருகிறார்கள், தன்னார்வலர்கள் மைக்ரோஃபோன்களில் அந்த பெயர்களை அறிவிக்கிறார்கள், அவை பகுதி முழுவதும் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் எதிரொலிக்கின்றன.
"150 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் முக்கியமான இடங்களில் உள்ளனர், அவர்கள் தொலைந்த பக்தர்களைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும், இந்த பக்தர்கள் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள். தொழில்நுட்ப வசதியை பயன்படுத்த தெரியாதவர்கள். அதனால்தான் இந்த முறை எப்போதும் உபயோகமாக இருக்கிறது ”என்றார் உமேஷ்.
இரண்டு கும்பமேளா நிகழ்வுகளும் அவர்களின் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களுக்கு கடுமையான வேலையை உருவாக்குகிறது, அவை நிகழாத ஆண்டுகளில், அவர்களின் குடும்பம் அதன் வழக்கமான விவசாயத் தொழிலுக்கு செல்கிறது.
தனது தந்தையைப் போலவே, உமேஷும் ஒரு மீட்பர் என்று அழைக்கப்படுவதில் அவருக்கு விருப்பமில்லை. அவர் மிகுந்த தன்னடக்கத்துடன், “மனிதர்களாகிய நாம், துன்பத்தில் இருக்கும் மற்ற மனிதர்களுக்கு உதவ வேண்டும். ஒரு வேலை எப்போதுமே உங்களுக்கு பணம் சம்பாதித்து கொடுப்பது மட்டுமல்ல, அது உங்களுக்கு திருப்தியையும் அன்பையும் கூட சம்பாதித்து கொடுக்க வேண்டும்” என்றார் அவர். இது எங்களின் மறுமைக்கு உதவுகிறது, எனவே எங்களுக்கு பாராட்டுக்கள் தேவையில்லை. அதிக உதவியும் ஆதரவும் மட்டுமே தேவை, இதனால் அதிகமான மக்கள் மீட்கப்படுவார்கள்” என்று ஒரு உண்மையான கதாநாயகனைப் போல பேசினார்!