Welcome..! Join us to Develop your Humanity
சாஜூ தாலுக்தார்- வாரத்திற்கு நான்காயிரம் ஜோடி உடைகள் வினியோகிக்கும் வாகன ஓட்டுனரின் கதை.
சாஜு தாலுக்தார் எனும் 47 வயது வாகன ஓட்டுனர் மேற்குவங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டம் சிலிகுரியிலிருந்து 100கிமீ தூரத்திலுள்ள டிம்டிமா தேயிலைத் தோட்டத்தில் பீர் பிர்சா முண்டா பெயரில் உடை வங்கி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த உடை வங்கி 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், சாஜு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக உடைகளை பெற்று ஏழைகளுக்கு வினியோகித்து வருகிறார். இன்று இந்த உடை வங்கியில் 50 ஆயிரத்திற்கு மேல் உடைகள் உள்ளன. மேலும் வாரத்திற்கு 3000 முதல் 4000 உடைகள் அருகிலுள்ள தேயிலைத் தோட்டங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்ற இடங்களில் விநியோகித்து வருகிறார்.
பள்ளி சீருடைகள் இல்லாத காரணத்தால், பள்ளிப்படிப்பை விடவேண்டிய சூழலே, இந்த சேவையை அவர் செய்ய காரணமாக அமைந்தது. மேலும் அவர் நினைவு கூறுகிறார், "அரசு பள்ளிகளில் அவர்களுடைய பெற்றோர்களே மாணவர்களுக்கு சீருடைகளை தர வேண்டி இருந்தது. நான் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தபோது, எனது தந்தையார் பழைய துணிகள் விற்கும் சந்தைக்கு என்னை அழைத்து சென்றார். அளவுகள் எடுத்து இரண்டு ஜோடி வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் தைத்து தந்து, என்னை பள்ளிக்கு அனுப்பினார். ஐந்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கு பிறகு, பழைய துணியில் தைத்த காரணத்தினால் எனது பள்ளி சீருடை கிழிந்து விட்டன. என்னுடைய தந்தையாரால் வேறு சீருடைகள் வாங்கித்தர முடியாத காரணத்தினால், நான் பள்ளியை விட்டு விலக வேண்டியதாயிற்று".
படிப்பினை மிக விரும்பியதால், எப்போதும் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், பள்ளியை விட்டு நீங்கிய வருத்தம் எப்போதும் அவர் மனதில் இருந்துகொண்டே இருந்தது.
"எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடந்து விட கூடாது என்பதற்காகவே இந்த சேவையை ஆரம்பித்தேன்" என்கிறார் சாஜூ.
தந்தையாரின் தையல் பணியில் சாஜு இணைந்தாலும், அவருக்கு அதில் நாட்டம் இருக்கவில்லை. பிறகு ஆற்றங்கரைகளில் உள்ள தாது பொருட்களை சேகரித்து தரும் மக்களிடமும், தாதுக்களை வாகனங்களில் நிறுவனங்களுக்கு கொண்டுசெல்லும் ஓட்டுநர்களுடனும் பழகி வந்தார். வாகனம் ஓட்டுவதை கற்றுக்கொண்டு அவர் ஓட்டுனராகவும் ஆனார். இந்த நாட்களில் அவருக்கு நாளொன்றுக்கு ரூபாய் 400 முதல் 700 வரை கிடைத்தது. 2008 இல் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு சரக்கு வாகனங்களை முழுநேரமாக ஓட்ட ஆரம்பித்தார். அச்சமயத்தில் தினசரி குப்பைத் தொட்டிகளில் உணவினைத் தேடி, துன்பத்தில் உழலும் அரைநிர்வாண மனிதர்களை கண்டார்.
"எனது பிள்ளைப்பருவ வாழ்க்கையை, இந்த மக்களிடத்தில் நான் கண்டேன். எனவே நான் உடைகளை சேகரிக்க ஆரம்பித்தேன். இவர்களுக்காக ஒவ்வொரு வீடாக சென்று உடைகளை சேகரிப்பது, மிகப்பெரும் சவாலாக இருந்தது. சில நேரங்களில் மக்கள் என்னை இந்த உடைகளை நான் கொண்டு சென்று விலைக்கு விற்று விடுவேன் என்ற சந்தேகத்துடன் பார்க்கவும் ஆரம்பித்தனர் எப்படியோ நான் சமாளித்துக் கொண்டு இந்த வேலையை செய்தேன்" என்கிறார்.
ஏழை மக்கள் வசிக்கும் காலனிகளுக்கும், தேயிலைத் தோட்டங்களுக்கும் சென்று வந்தபோது யாருக்கெல்லாம் உடைகள் தேவைப்படுகின்றன என கவனித்து வந்தார். பிறகு அங்கே வாழ்ந்த மக்களுக்கு உடைகளை வினியோகம் செய்ய ஆரம்பித்தார்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், உடைகள் தேவைப்படும் அனைவருக்கும் அவரிடம் இருந்த உடைகளை கொண்டு வினியோகம் செய்ய முடியவில்லை இது அவருக்கு மிகவும் வருத்தத்தை தந்தது என்கிறார்.
ஒரு நாள் அவரது நண்பரும் உணவக உரிமையாளருமான பிரதீப் குப்தா, முகநூல் கணக்கு ஒன்றினை துவங்க அவருக்கு யோசனை கூறினார். ஆனால் அவரிடம் இன்டர்நெட்டும் ஸ்மார்ட் போனும் இருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக அதே நண்பர் ஸ்மார்ட்போன் ஒன்றை பரிசளித்து, முகநூல் கணக்கு எப்படி துவங்குவது என்பதையும் சொல்லிக்கொடுத்தார். பொதுமக்களிடமிருந்து உதவியை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, முகநூல் பக்கம் ஒன்றை ஜூன் 2014ல் துவங்கினார். பல இடங்களிலிருந்து அவருக்கு அதிகமாக உதவிகள் வரத்துவங்கின. உடனே இந்த சேவையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல விரும்பினார். அப்போது தான் அவருக்கு இந்த உடை வங்கி என்கின்ற யோசனை உதித்தது.
ஜனவரி 2017 சாஜு, பிர்சா முண்டா பெயரில் உடை வங்கியை துவங்கி ஒரு பெயர்ப் பலகையையும் வைத்தார். இதை பார்த்த மக்கள் அவருக்கு உடைகளை நன்கொடையாக தர ஆரம்பித்தனர். உடைகள் தேவைப்படுவோரும் அவரை அணுகி பெற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். இது தினசரி வழக்கமாயிற்று. உடைகளை பெற்றுக்கொள்ளவும் விநியோகிக்கவும் 2015-ல் ராஜு ஒரு நான்கு சக்கர வாகனத்தை வாங்கி இருந்தார். அதில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல ஆரம்பித்தார். திரும்பி வரும்போது வழியில் மக்களிடம் உடைகளை நன்கொடையாக பெற்றுக்கொள்வார். அவர் நாள்தோறும் செல்லும் வழித்தடங்களை முகநூல் பக்கத்தில் பதிவிடவும் ஆரம்பித்தார். இவ்வாறு பெற்ற துணிகளை பந்தாபனி, ராம்ஜோரா, கதல்குரி மற்றும் அருகிலுள்ள தேயிலைத்தோட்டங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களிலும் விநியோகித்தார்.
குழந்தைகள், ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கான தனித்தனி ஸ்டால்களை நிறுவினார். அவர் அதனை வரிசைப்படுத்தி அடுக்கும் வரையில் யாரும் தொடமாட்டார்கள். சரியான முறையில் அடுக்கி வைத்த பின்பு, அவர்களுக்கு தேவைப்படும் உடைகளை அவர்களே எடுத்துக் கொள்ள சொல்வார். ஒருவேளை ஓரிருவர் உடைகளை ஒன்றிரண்டு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் அப்படியே விட்டுவிடுவார்.
பனிக்காலங்களில் மூன்றாயிரம் போர்வைகள் மற்றும் மெல்லிய மெத்தைகள் பல்வேறு அமைப்புகளில் இருந்து கிடைத்துவந்தது. இவை கைக்குக்கை நேரடியாக வினியோகிக்கப்பட்டது.
ததாகிரி எனும் பெங்காலி வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனை ஆயிற்று. அதில் இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலியுடன் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதன் பிறகு கிடைத்த பிரபல்யத்தின் காரணமாக, அவரது பணிச்சுமை பலமடங்கு அதிகரித்தது. உடைகள் மாநிலத்தில் இருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பகுதிகளில் இருந்தும் கூட வரத் துவங்கின. தற்போது சாஜூ வாரத்திற்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் உடைகள் வரை தேவைப்படுவோருக்கு விநியோகிக்கிறார். இதனை ஒரு ரூபாய் பணம் கூட வாங்காமல் தான் செய்து வருகிறார். இந்த முயற்சியில் அவரது மனைவி மமோனி தாலுக்தார் மற்றும் அவரது கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் முழு மனதுடன் உதவி செய்து வருகின்றனர்.
ஆயிரக் கணக்கான பழைய உடைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுத்தாலும் அம்மக்கள் புதிய உடைகளை தரித்துக் கொள்ள தகுதியானவர்கள் என சாஜு நினைக்கிறார். இன்றும்கூட தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பண்டிகை காலங்களில் புதிய உடைகள் அணிவதில்லை. இந்த குழந்தைகளுக்கு வசதி படைத்த குடும்பங்களில் உள்ள குழந்தைகள் அணிவதை போன்ற புதிய உடைகளை பண்டிகை நாட்களில் வாங்கி தர விரும்புகிறார். எனவே புதிய உடைகளுக்கான வங்கி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
உடை வங்கி மட்டுமின்றி ஆதரவற்ற முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இல்லம் ஒன்றை ஆரம்பித்து, உணவு உடை போன்றவற்றையும் வழங்கி பராமரித்து வருகிறார். இத்தனை பெரிய சேவைக்கான புகழ் யாதொன்றையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. "இவை அனைத்தும் மக்களால்தான் நடைபெற்றது. இது கடவுளின் காரியம்" என்கிறார்.