Welcome..! Join us to Develop your Humanity
கலவர பூமியிலும் இடைவிடாத சமூக சேவை
ஜாவேத் அஹ்மத் தக் - பயங்கரவாதிகளால் சுடப்பட்டு தீவிரமாக காயம் அடைந்த போதிலும், காஷ்மீரின் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தார்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகளின்படி, ஜம்மு-காஷ்மீரில் சுமார் மூவாயிரம் மாற்றுத் திறன் கொண்ட படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது அவர்களை குடும்ப வாழ்க்கையிலிருந்தும் விலக்கி வைக்கிறது, ஏனெனில் வேலை இல்லாததால் அவர்களுக்கு திருமண வாய்ப்பு எதுவும் கிடைக்காது. இதற்கிடையில், அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwD) மூன்று சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இடஒதுக்கீடு ஒரு பாராட்டத்தக்க கொள்கையாக உள்ளது, ஏனெனில் இது மாற்றுத்திறனாளிகளையும் பணியமர்த்த அனுமதிக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதைபற்றி விழிப்புணர்வு இல்லாததால், பலர் இந்த திட்டத்தால் பயனடையவில்லை. அரசு பள்ளிகளில் பார்வையற்ற குழந்தைகளுக்காக ஒரு பிரெய்லி பதிப்பு புத்தகம் கூட கிடைக்கவில்லை. பள்ளிகளில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு சிறப்பு கல்வியாளர்கள் கூட இல்லை.
"எங்கள் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக இல்லை. அவர்களுக்கு கழிவறையை பயன்படுத்துவதில் சில சங்கடங்கள் உள்ளதால் மாணவர்கள் எதையும் குடிக்க மற்றும் சாப்பிடக்கூட பயப்படுவதை நான் கண்டிருக்கிறேன்" என்று ஜாவேத் அஹ்மத் தக் கூறுகிறார்.
பள்ளத்தாக்கில் உள்ள ஏராளமான இடர்பாடுகளில் மாற்றுத்திறன் கொண்டவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மிகக்குறைவே. ஜாவேத் அஹ்மத் தக்கின் முயற்சியால் அவர்களில் பெரும்பாலானோர்க்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, எதிர்காலம் அவ்வளவு இருட்டாக இல்லை.
ஒரு தோட்டா இந்த மனிதனின் வாழ்க்கையை மாற்றியது. இருப்பினும் சமுதாயத்தில் பல தடைகளை எதிர்த்துப் போராடிய அவர், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த போராடி வருகிறார். ஒரு மோதலில் அடிபட்ட இந்த 43 வயதான மனிதர் இப்போது காஷ்மீரில் பல மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்து வருகிறார்.
ஸ்ரீநகரிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் தெற்கு காஷ்மீரின் பிஜ்பெஹாரா நகரில், அப்போது 21 வயதே ஆன தக் பயங்கவாதிகளின் தாக்குதலின் போது துப்பாக்கியால் சுடப்பட்டார்,. அது அவரது வாழ்க்கையை மாற்றியது. "இதனால் எனது முதுகெலும்பு மட்டுமல்ல, எனது சிறுநீரகம், கணையம் மற்றும் குடல்களும் சேதமடைந்தன, மேலும் நான் பல அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ள வேண்டியிருந்தது", என தற்போது 43 வயதாகும் அஹ்மத் தக் கூறுகிறார்.
தக்கின் பெற்றோர் அவர் ஒரு மருத்துவராக வேண்டும் என்று விரும்பினர், எனவே அவர் மருத்துவம் படித்தார். ”என் பெற்றோர் நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று விரும்பினர், ஆனால் விதி எனக்கு வேறொன்றை எழுதியது,” என்று அவர் கூறுகிறார். ‘வேறு ஏதோ’ என்பது துல்லியமானது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக மருத்துவமனையில் இருந்த அவர், மருத்துவமனை படுக்கையில் பட்டம் பெற்ற செய்தியைப் பெற்றார்.
சோகத்திற்குப் பிறகு, இயற்கையாகவே, அவரது மனநிலை பாதிக்கப்பட்டு குழப்ப நிலையில் இருந்தது. ஆறுதலை தேடி ஏதாவது செய்ய, அவர் கற்பிக்கத் தொடங்கினார். அவரது சுற்றுப்புறத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பதால், அவர்களுக்கும் இலவச கல்வியை வழங்கத் தொடங்கினார். இது தனது சொந்த படிப்பைத் தொடர அவரைத் தூண்டியது. இப்போது அவர் இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் மற்றும் கணினித் துறையில் இரண்டு பட்டங்களையும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். "ஒரு சமூக சேவையாளராக வெவ்வேறு நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், இந்த பாடத்திட்டத்தின் மூலம் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக எவ்வாறு பணியாற்றுவது என்பதையும் நான் அறிந்தேன்," என்று அவர் கூறுகிறார்.
அவர் அங்கேயே நிற்கவில்லை. அவர் பள்ளத்தாக்கில் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக உடனே பணியாற்றத் தொடங்கினார்.
“ஊனமுற்றதால்தான் உலகத்தைப் பற்றிய எனது பார்வை மாறியது. ஊனமுற்றோர் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் உணர்ந்தபோது அது என்னை மிகவும் பாதித்தது, ”என்று அவர் கூறுகிறார்.
ஜம்மு காஷ்மிரில் உடல் மற்றும் மனநலம் பாதித்த மக்களின் பரிதாப நிலைமைகளுக்கு எதிராக வாதிடும் பொது நல வழக்குகளை அவர் ஜம்மு காஷ்மிர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தொடங்கினார். பல வழக்குகளில், அவர் வெற்றி பெற்றார். உள்ளூர் மற்றும் தேசிய அளவில் மனித உரிமைகள் ஆணையங்களுக்கு புகார்களை எழுதத் தொடங்கினார்.
"நான் தாக்கல் செய்த ஒரு புகார் ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டது, இது ஸ்ரீநகரில் குஷ்டரோகி காலனியில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அரசு எந்த கவனத்தையும் செலுத்தவில்லை என்பதைப் பற்றியதாகும். மாநில மனித உரிமைகளின் தலைவர் புகாரை அறிந்து, அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார்", என்று தக் கூறுகிறார்.
பல்கலைக்கழகங்களில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் நிலையை உயர்த்தவும் அவர் பணியாற்றினார். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊனமுற்ற மாணவர்களுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தது.
"காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.டபிள்யூ (MSW) படிப்பில் நான் பயின்ற காலத்தில், நான் ஊனமுற்ற மாணவர்களை ஒருங்கிணைத்து, அதனால் அவர்களது உரிமைகளை நிவர்த்தி செய்ய பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடிந்தது," என்று அவர் கூறுகிறார்.
"குழந்தைகளுடன் பணிபுரிவது எனக்கு வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அளித்தது," என்று அவர் கூறுகிறார். "நான் தாக்குதலை சந்தித்திருக்காவிட்டால் நான் ஒருபோதும் மனித நேயத்திற்காக அத்தகைய அர்ப்பணிப்புடன் இருந்திருக்க மாட்டேன். இப்போதெல்லாம், எனக்கு என்ன நேர்ந்ததோ அவை, கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம் மற்றும் அவருடைய நித்திய இரக்கத்திற்காக நான் பாக்கியவானாக உணர்கிறேன். நான் கடுமையான ஊனமுற்ற நபராக இருந்தாலும், நான் கல்வி மற்றும் தொழில் ரீதியாக சமூகத்தில் செயல்படுகிறேன். எனது விடாமுயற்சி மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு நான் பல வெகுமதிகளைப் பெற்றுள்ளேன். ”என அஹ்மத் தக் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
தாக்குதலுக்குப் பிறகு மாநில அரசால் ரூ .75000 இழப்பீடாக பெற்றார். 2007 ஆம் ஆண்டில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்காக ஜீபா அப்பா நிறுவனம் என்ற பள்ளியைத் திறக்க அவர் அந்தப் பணத்தைப் பயன்படுத்தினார்.
இது பள்ளத்தாக்கின் முதல் மற்றும் ஒரே அனைத்து வித ஊனமுற்றோருக்கான பள்ளியாக உள்ளது. ஆரம்பத்தில், அவர் அதை ஐந்தாம் வகுப்பு வரை தொடங்கினார். இப்போது அவர் அதை எட்டாம் வகுப்புக்கு நீட்டித்துள்ளார், மேலும் எதிர்காலத்தில் இதை மேலும் நீட்டிப்பார் என்று நம்புகிறார். 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியின் மூலம் நேரடியாக பயனடைந்துள்ளனர். முதலில் 23 மாணவர்களைக் கொண்டிருந்தது, இது படிப்படியாக 100 மாணவர்களை தாண்டியது, அவர்களில் 17 பேர் தேசிய அளவிலான விளையாட்டுகளை விளையாடியுள்ளனர். மேலும் பூப்பந்து மற்றும் ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில் பங்கு பெற்றுள்ளனர்.
சுமார் 31 காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் பாகுபாடு அல்லது அவர்களுக்கேற்ற வசதிகள் இல்லாததால் கைவிடப்பட்டு, தக் பள்ளியில் சேர்ந்துள்ளனர். போக்குவரத்து வசதி இல்லாதது தான் தனது பள்ளி எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால் என்று தக் கூறுகிறார். "எங்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதி இருந்திருந்தால், எங்கள் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பார்கள்; பள்ளிக்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே வருகின்றன, அதற்காக நாங்கள் இன்னும் தவணைகளை செலுத்துகிறோம். " என்று அவர் கூறுகிறார்.
தக் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு கற்பிக்க ஒரு அறையை மட்டுமே வாடகைக்கு எடுத்திருந்தார். ஆனால் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து அவருக்கு கிடைத்த பெரும் உதவியினால், அவர் பின்னர் ஒரு கட்டடத்தையே வாடகைக்கு எடுக்க முடிந்தது.
ஒரு கடினமான சூழ்நிலையில், இதுபோன்ற தனிப்பட்ட வேதனையையும் சோகத்தையும் எதிர்கொண்ட பிறகும், ஜாவேத் அஹ்மத தக் போன்றவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியூட்டுவது மிகவும் அற்புதமான நிகழ்வாகும்.