Welcome..! Join us to Develop your Humanity
மகேஷ் ஜாதவ் - வெறும் 23 வயதில், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட 55 குழந்தைகளின் தந்தை; ஏளனம் மற்றும் தாக்குதல்களையும் மீறி அவர்களின் வாழ்க்கையை மாற்றியவர்.
இவரது இந்த பயணம் 2008-ல் தொடங்கியது. அந்த வருடம் ரூபேஷ் எனும் நான்கு வயது நிரம்பிய பாலகனுடன் மகேஷ் ஜாதவிற்கு ஏற்பட்ட சந்திப்பு, அவரை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியது. "2008-ஆம் ஆண்டு குழந்தைகள் வார்டில் நான் ரூபேஷை சந்தித்த தினம், எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. எச்.ஐ.வி பாதிக்கப்பட்டு மரணபடுக்கையில் இருந்த ரூபேஷின் தாயைப் பற்றி மருத்துவர் எங்களிடம் கூறினார். முன்னதாக, எச்.ஐ.வி காரணமாக தன் தந்தை இறந்த பின்னர் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டு, தன்னை பார்த்துக்கொள்ள யாருமின்றி தவித்துக்கொண்டிருந்தான் ரூபேஷ். பிறக்கும்போதே எச்.ஐ.வி பாதிப்புடன் பிறந்த ஒரு அப்பாவி குழந்தையான அவன், ஏற்கனவே மோசமானவர்களை எதிர் கொண்டது குறித்து நான் அதிர்ச்சியடைந்தேன்," என்று 'தி பெட்டர் இந்தியா (TBI)' என்ற அமைப்புடன் நடந்த உரையாடலில் மகேஷ் நினைவு கூர்ந்தார்.
மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த மகேஷ், ரூபேஷை கவனித்துக் கொள்வதற்காகவே வாரம் ஒருமுறை செல்லத் தொடங்கினார். இப்படியாக இரண்டு வருடங்கள் உருண்டோடிய நிலையில், 2010 எனும் கொடூரமான ஆண்டு வந்தது. அப்போது ரூபேஷ் 6 வயது பூர்த்தியாகி இருந்தான். மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருந்த ரூபேஷின் தாய், கடைசியில் அதனிடம் சரணாகதி அடைந்தார். 6 வயது சிறுவனின் இப்படிப்பட்ட கடினமான காலகட்டத்தில், அவனுக்கு ஓர் ஆதரவு தூணாக மாறிய மகேஷ், குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் அனாதை இல்லங்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் நாடினார். துரதிர்ஷ்டவசமாக, அவர் தட்டிய ஒவ்வொரு கதவும், 'இல்லை' எனும் ஒற்றை வார்த்தையை அவர் முகத்தில் உமிழ்ந்தபடி இறுக சாத்தியது. ரூபேஷின் மோசமான மருத்துவ நிலையே அதற்கு காரணமாக இருந்தது. அவரது மாவட்டத்தில், எச்.ஐ.வி தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் மக்களின் அறியாமையினை அது உணர்த்தியது.
"ஒருவாறாக மாவட்ட ஆணையரின் உதவியுடன், ரூபேஷை ஒரு விடுதியில் சேர்த்தோம். ஆனால், வெறும் ஐந்து நாட்களுக்குள் ரூபேஷ் மீண்டும் மருத்துமனைக்கே திருப்பி அனுப்பப்பட்டான். அவன் எச்.ஐ.வி பாசிட்டிவ் என்று விடுதி அதிகாரிகள் அனைத்து குழந்தைகளுக்கும் தெரிவித்து இருந்தமையால் அனைவரும் அவனை ஒதுக்கி வைத்தனர். அந்த விடுதியில் எல்லோரிடமும் இணைந்து உணவருந்தக் கூட அவன் அனுமதிக்கப் படவில்லை. அந்த கசப்பான அனுபவத்தின் மூலம் மிகுந்த வேதனையடைந்த ரூபேஷ், அங்கிருந்து வந்து சில நாட்களிலேயே அவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. ரூபேஷ் இரு நாட்களுக்கு மேல் பிழைதித்திருக்க மாட்டான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்கிறார் மகேஷ்.
மகேஷ் மருத்துவமனைக்கு விரைந்து வந்தபோது, ரூபேஷ் அமைதியாக படுத்துக் கிடப்பதைக் கண்டார். காய்ச்சலால் தகித்துக் கொண்டிருந்த ரூபேஷ், தனது பார்வையாளரை வெறும் தலையசைத்து வரவேற்கவே, போதுமான பலத்தை சேகரிக்க கடுமையாக சிரமப்பட வேண்டியிருந்தது. நிசப்தத்தில் உறைந்திருந்த மகேஷ், மெதுவாக அவன் அருகில் சென்ற பொது, மிகுந்த போராட்டத்திற்கு பின்னர், பாதி மட்டுமே திறக்க முடிந்த கண்களுடன், ரூபேஷின் பலவீனமான வாயிலிருந்து சில வார்த்தைகள் வழுக்கி வந்தன, ‘தயவுசெய்து என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்’. அந்த தருணம், மகேஷ் ஜாதவ் எனும் மனிதனின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது.
கவலையில் மனம் உடைந்த மகேஷ், ருபேஷை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். வீட்டிலிருந்த மக்கள் எச்.ஐ.வி பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், ஏற்கனவே அவர்களுக்கு அதுபற்றி இருந்த மூட கருத்துக்கள் காரணமாகவும், ஆரம்பத்தில் ரூபேஷின் வருகைக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். மகேஷ் எச்.ஐ.வி பற்றி தெளிவாக எடுத்துக்கூறிய பின்னர், ரூபேஷை கவனித்துக்கொள்வதற்கான மகேஷின் முடிவை அவர்கள் ஆதரித்தனர். குறிப்பாக மகேஷின் அம்மா ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். அவரது உதவியுடன் ரூபேஷ் மெல்ல குணமடைய தொடங்கினார்.
வீட்டில் சமைத்த உணவு மற்றும் சரியான மருத்துவம், இவற்றுடன் மகேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் காட்டிய அதீத அன்பின் விளைவாக ரூபேஷ் புத்துயிர் பெற்றான். ஆனால், மகேஷ் மற்றொரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. ரூபேஷை முறைப்படி தத்தெடுப்பது என்ற அவரது திட்டம் எப்படியோ ஊடகங்களை அடைந்து, ஒரு தேசிய நாளிதழில் செய்தியாக வெளிவந்தது. அதன் பின்னர், எச்.ஐ.வி பாதிப்புள்ள இளம் குழந்தைகளுடன் பலர், அவர் வீட்டின் கதவை தட்ட துவங்கினர். இளகிய நெஞ்சம் படைத்த மகேஷ் ஜாதவ் அவர்கள் யாரையும் திருப்பி அனுப்பவில்லை. ஆகையால், அடுத்த ஆறு மாதத்தில் அவர் குடுமபத்தில் 26 புதிய உறுப்பினர்கள் இணைந்தனர். "2010 வாக்கில், நான் கிட்டத்தட்ட 55 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தேன்! (அப்போது அவர் வயது வெறும் 23)” என்று மகேஷ் உணர்ச்சிபொங்க கூறினார்.
அந்த 55 குழந்தைகளுக்கும் அதிகாரப்பூர்வமற்ற தந்தையாக இருந்த மகேஷ், முறையான சட்ட ஆவணங்கள் இன்றி, பல குழந்தைகளை தனது வீட்டில் தங்க வைப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்று உணர்ந்தார். இதன் விளைவாக 'மகேஷ் அறக்கட்டளை' என்று சட்டபூர்வமாக தொடங்க ஆயத்தப்பணிகளை தொடங்கினார். "பட்டம் பெற்ற பிறகு, நானும் எனது சில நண்பர்களும், ஒரு மென்பொருள் ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கினோம். நான் தொடர்ந்து அங்கு வேலை செய்தேன். அதேவேளையில், அறக்கட்டளை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டோம். முறையான பதிவு கோரி நான் குழந்தைகள் நலக் குழுவை (Child Care Committee) அணுகினேன். பல விதிமுறைகளுக்கு பின்னர் இறுதியாக 2012-இல், ஒரு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கான உரிமம் கிடைத்தது. இருப்பினும், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்று தெரிந்ததும் அனைவரும் எங்களை நிராகரித்ததால், வாடகைக்கு ஒரு இடத்தை கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டோம். ஆறு மாத தேடலுக்குப் பின், என்னை பற்றி செய்தித்தாள் ஒன்றில் வெளியான கட்டுரையை படித்த ஒரு தம்பதியினர் தங்கள் வசமிருந்த ஒரு காலியான வீட்டை அளிக்க முன் வந்தனர்," என்று மகேஷ் பகிர்ந்து கொள்கிறார்.
தங்கும் இடம் சரி செய்யப்பட்ட பின்னர், அடுத்த சவாலாக இருந்தது அந்த குழந்தைகளுக்கு கல்வி கற்க வழிவகை செய்வது. மகேஷிற்கு இலகுவான மற்றும் வெளிப்படையான தேர்வாக இருந்தது அரசு பள்ளிகள் தான். துரதிர்ஷ்டவசமாக, முன்னர் ஏற்பட்டதை போன்றே பல எதிர்ப்புகளை மகேஷ் சந்திக்க நேர்ந்தது. ஏனெனில், பள்ளி அதிகாரிகள் அந்த குழந்தைகளின் மருத்துவ நிலையினை காரணம்காட்டி, அவர்களை அனுமதிக்க மறுத்தனர். வேறு வழியின்றி, மகேஷ் மீண்டும் அரசு உயர் அதிகாரிகளின் உதவியை நாடினார். அதன் விளைவாக, குறிப்பிட்ட பள்ளியில் அந்த குழந்தைகளை சேர்ந்துகொள்ளவேண்டி, அந்த பள்ளி அதிகாரிகள் நிர்பந்திக்கப் பட்டனர்.
ஏறக்குறைய 8 ஆண்டுகளாக, மகேஷின் குழந்தைகள் வாடகை வீட்டில் வசித்து வந்த வேளையில், அவர்கள் தங்குவதற்கு ஒரு நிரந்தர விடுதி கட்ட அரசு இடம் ஒன்றை கண்டுபிடிக்க, இடைவிடாமல் முயற்சி செய்தார் மகேஷ். மிகுந்த செல்வாக்கு படைத்த பலரும் இந்த முயற்சியை பற்றி கேட்ட போது வெகுவாக பாராட்டினார்களே தவிர, இந்த விஷயத்தில் உண்மையில் உதவ யாரும் முன்வரவில்லை.
"இது போன்ற காரியங்களை செய்துவருவதால் நானும் எச்.ஐ.வி பாதிப்படைந்த ஒரு நோயாளி என்று பலரும் தவறாக நினைத்தனர். பல உறவினர்களும் நண்பர்களும் என் உறவினை வெட்டிக் கொண்டனர். ஆனால், எனது தாயாரும், எனது சகோதரர்களும் எனக்கு பக்கபலமாக என்னுடன் நின்றனர். இந்த குழந்தைகளுக்கு ஒரு சரியான வீட்டைக் கண்டுபிடிக்க நான் தினமும் போராடுவதைக் கண்ட அவர்கள், ஒருநாள், 5,000 சதுர அடி பரப்பளவிலான எங்கள் மூதாதையர் வீட்டை குழந்தைகளுக்காகவும் காப்பகத்திற்காகவும், நன்கொடையாக வழங்குவதற்கான தங்கள் யோசனையை தெரிவித்தனர். முதலில் நான் தயங்கினேன், ஆனால் அவர்கள் வலியுறுத்தினர். என் குடும்பம் இப்போது ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளது” என்று மகேஷ் தனது அனுபவத்தை பகிர்கிறார்.
இத்தனை ஆண்டுகாலம் தான் சேமித்த தொகை மற்றும் ஒரு சிலரிடம் பெற்ற நிதிகளைக் கொண்டு, பெலகாவிக்கு அருகிலுள்ள கான்பர்கி எனும் கிராமத்தில் 2018-ஆம் ஆண்டில், நான்கு மாடி கட்டடத்தை கட்டினார். அந்த கட்டிடத்துள் ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 'உத்தர்கா கற்றல் மையம்' எனும் ஒரு தொடக்கப் பள்ளியும் உள்ளது. ஓர் ஆண்டிற்கு பின் அதே கட்டிடத்தில் தனது குழந்தைகளுக்காக 'ஆஷா கிரண்' என்று ஒரு விடுதியையும் தொடங்கினார். தனது குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் நேர்மறையான இடத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவு இப்போது நனவாகியுள்ளது.
இன்று, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, மகேஷின் குழந்தைகள் அனைவரும் நன்றாக உள்ளனர். அவர்களில் சிலர் யு.பி.எஸ்.சி-க்கு தயாராகி வருகிறார்கள், சிலர் கல்லூரிகளில் படிக்கிறார்கள், சிலர் பல்வேறு நிறுவனங்களில் கூட வேலை செய்கிறார்கள். இப்போது 16 வயதான ரூபேஷ் கூட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
"இவ்வளவு பெரிய பொறுப்புக்கு நான் மிகவும் இளையவனாக இருக்கிறேன்; தொடங்கிய இரண்டே வருடத்தில் காப்பகத்தை நடத்த முடியாமல் மூடிவிடுவேன் என்று பலரும் எண்ணினர். ஆனால், இன்று நாங்கள் பத்து ஆண்டுகளைக் கடந்தும் நிற்கிறோம். 55 குழந்தைகளின் தந்தையாக மாறுவது உண்மையில் சாதாரண விஷயமல்ல. ரூபேஷை பார்க்கும்போது என் மனம் பெருமிதத்தில் திளைக்கிறது. இரண்டு தினங்களே என்று கெடு விதிக்கப்பட்ட ரூபேஷ் இன்று, என் மற்ற குழந்தைகளைப் போன்று நன்றாக உள்ளான். எனவே, இது ஒரு பாக்கியம்!" என்று மகேஷ் புன்னகையுடன் முடிக்கிறார்.
தனது இளம் வயதிலேயே, இத்தகைய பாராட்டத்தக்க சேவைப்பணியின் காரணமாக, 2017-ஆம் ஆண்டில், அரசாங்கத்தால் குழந்தைகள் நலனுக்கான தேசிய விருது வழங்கப்பட்டு, மகேஷ் கௌரவிக்கப் பட்டார்.