Welcome..! Join us to Develop your Humanity
டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் - சுமார் முப்பது ஆண்டுகளாக லட்சக்கணக்கான தொழு நோயாளிகளுக்கு உதவியவர்
பல ஆயிரம் ஆண்டுகளாக தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்திலிருந்து விலகியே உள்ளனர். இத்தகைய பாகுபாடுகள் சமீப காலம் வரை கூட இந்தியாவில் உண்மையாகவே இருந்து வருகிறது. எனவே, கடந்த 29 ஆண்டுகளாக தமிழகத்தில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் அவர்களின் அளப்பரிய சேவைப் பணியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
டாக்டர் திருமதி ராமகிருஷ்ணன் தனது பிரத்யேக பேட்டியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
சிறு வயது முதலே டாக்டராக வேண்டும் என்று அவர் கனவு கண்டு வந்தார். அவர் சொல்லும் போது, "நான் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் நான் ஒரு மருத்துவராக நடிப்பேன். அதுசமயம் நான் எல்லோருக்கும் போலி ஊசி போடுவேன்." தன்னை ஊக்குவித்து, ஆதரித்து வந்த தன் தந்தையே, தன்னுள் இந்த கனவை வளர்த்ததாக அவர் கூறியுள்ளார்.
அவரது எதிர்காலத்தை வடிவமைத்த அனுபவம்.
கும்பகோணத்தில் வளர்ந்த அவர் , தனது குடும்பத்தில் எல்லோரும் ராணுவத்தில் ஏதாகிலும் ஒரு பணியில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பிடுகிறார்..
தனது 16 ஆவது வயதில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் கூறுகையில், " அது மகாமகம் காலம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது: அனைத்து மக்களும் கும்பகோணத்தில் உள்ள கோயில் குளத்தில் புனித நீராடுவதற்காக ஒன்று கூடிய சமயம். நான் ஒரு சுற்று சுற்றி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஒரு கூட்டம் கூடியிருந்ததைக் கண்டேன். அது என்ன என்று பார்க்க உள்ளே எட்டிப் பார்த்தபோது, ஒருவருடைய உயிரற்ற உடல் முற்றிலும் நிர்வாணமான நிலையில் கிடப்பதை கண்டேன்."
அந்த மனிதன் இறந்து விடடிருந்தார்.; அவர் தண்ணீரில் ஒரு கையை வைத்திருந்தார், அவரது கால்கள் முற்றிலும் சிதைந்தநிலையில் இருந்தன. அந்த அதிர்ச்சியில் இருந்து மெதுவாக மீண்ட , ரேணுகா சுற்றிலும் பார்த்தபோது, அந்த இடத்தின் புனிதத்தன்மை சடலத்தால் பாதிக்கப்பட்டுவிட்டது என்று மக்கள் பேசுவதைக் கேட்டாள். "மக்கள் தங்கள் மூக்கை மூடிக்கொண்டு நடந்து கொண்டிருந்தனர், ஆனால் அவர்களில் ஒருவர் கூட அந்த உடலை மூடவில்லை," என்று அவர் கூறுகிறார்.
அந்த மனிதன் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை பின்னர் தான் அவர் அறிந்தார். அவர் தனது சொந்த துப்பட்டாவை பயன்படுத்தி அவரது உடலை மறைத்தும், அவருக்கு உரிய மரியாதையையும், கொடுத்தார்.
"உடலை நகர்த்த உதவுமாறு, அவரை ரிக்ஷாவில் வைக்க உதவுமாறு நான் மக்களிடம் கெஞ்சினேன், கடுமையான போரட்டத்தின். இறுதியில், சடலத்தை ரிக்ஷாவில் போட்டு சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றேன்" என்றார். "அது எனக்கு பயமாக இருந்தது. அதுவரை நான் ஒரு சடலத்தை பார்த்தது கூட இல்லை, ஆனால் அன்று ஒரு சடலத்துடன் தனியாக இருந்தேன், தொட்டேன். நான் அதை செய்ய வேண்டியிருந்தது. என்னைச் சுற்றி நான் பார்த்த அக்கறையின்மை என்னை மிகவும் பாதித்தது."
ரேணுகா அந்த உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றாலும், அந்த நபர் தொழுநோயாளி என்பதால் அதற்கு இறுதிச் சடங்கு செய்ய மறுத்து விட்டனர். அதனால் கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு இடுகாட்டிற்குச் செல்ல நேர்ந்தது.
"மதியம் நான் அடுத்த சுடுகாட்டிற்கு எடுத்து சென்று விட்டேன், என் பாக்கெட்டில் வெறும் 10 ரூபாய் மட்டுமே இருந்தது, நான் அங்குள்ள முதியவர் ஒருவரை தேவையான உதவி செய்ய கேட்டுக்கொண்டேன். நான் அவர் காலில் விழுந்து உதவி கேட்டேன். அவர் ஒரு அன்பான மனிதர், அவர் இறுதி சடங்குகளைச் செய்ய ஒப்புக்கொண்டார்," என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அவர் வீட்டிற்கு வந்த பிறகும் அது அவளுக்கு எளிதாக தோன்றவில்லை. அவர் தன் தந்தைக்கு அன்றைய நிகழ்வுகளை விவரித்தார், அதற்கு அவர் அமைதியாக இருக்கவும் அதை மறந்துவிடவும் அறிவுரை கூறினார்.
" சரியான நேரம் வரும் வரை, நான் யாருக்கு என்ன செய்தேன் என்று சொல்லக்கூடாது என்று அவர் என்னிடம் கூறினார். மக்கள் அதை பற்றி அறிந்தால் நான் ஒதுக்கப்படுவேன் என்று அவர் கூறியிருந்தார். ஆனால், எத்தனை கல்வி பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தொழுநோய் நோயாளிகளுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் என்று அவர் என்னை உறுதி ஏற்க வைத்தார்." என்று அவர் கூறுகிறார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை வலுவடைந்தது. இளம் ரேணுகா, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் கல்லூரியில் தகுதிஅடிப்படையில் மருத்துவ பட்டம் பெற கடுமையாக உழைத்தார். படிப்பை முடித்த பிறகு, டாக்டர் ரேணுகா அவர்கள் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை மற்றும் தொழுநோய் மையத்தில் சேர்ந்தார்.
அவர் கூறுகையில், "நான் தோல் மருத்துவத் துறையில் இருந்தேன், ஆனால் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக அங்கு அவசர பிரிவில் இரவு கணிசமான நேரம் வேலை பார்த்து வந்தேன். அதனால் எனக்கு கொஞ்சம் கூடுதல் பணம் கிடைத்தது, நான் அதை தொழுநோய் நோயாளிகள் நலனுக்காக பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்."
அதன் பின்னர் டாக்டர் ரேணுகா திருமணம் செய்து கொண்டார். ''திருமணத்துக்குப் பிறகு சென்னைக்கு வந்து ஷெனாய் நகரில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் தொழுநோயாளிகாக வேலை செய்தேன். தொழுநோயாளிகளுக்காக மட்டுமே பணியாற்ற விரும்புகிறேன் என்று என் கணவரிடம் மிகத் தெளிவாக கூறிவிட்டேன்" என்று அவர் கூறுகிறார்.
தொழுநோயாளிகளை ஏன் மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்துகின்றனர்?
"பெரும்பாலான நபர்களுக்கு, தொழுநோயாளியுடன் தொடர்பு இருந்தால் தொழுநோய் வரும் என்று ஒரு ஆதாரமற்ற பயம் உள்ளது. அது ஏன் உண்மையல்ல என்பதற்கு நான் ஒரு சிறந்த உதாரணம். துரதிருஷ்டவசமாக, தொழுநோயில் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன, அதனால் நோயாளியிடம் கடுமையான தேய்மானபாதிப்பிற்கு வழிவகுக்கிறது. அவர்களுடைய வடிவத்தை குலைத்து விடுகிறது. இது மக்களை அவர்களிடமிருந்து விலகி முகம் சுளிக்க செய்கிறது" என்று பதில் சொல்கிறார் டாக்டர் திருமதி.ராமகிருஷ்ணன்.
எல்லோரையும் உள்ளடக்கிய உலகை உருவாக்க டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் பாடுபட்டு வருகிறார்.
"எல்லா தரப்பு மக்களும் தங்கக்கூடிய ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்பதே எனது கனவு. நான் அதை நிர்வகிக்க முடியும் என்றால், நான் இந்த வாழ்க்கையில் கணிசமாக பங்களித்தது போல் நான் உண்மையிலேயே உணர்கிறேன்."
இந்தியாவில் தொழுநோய் ஒழிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன என்றாலும், டாக்டர் திருமதி. ராமகிருஷ்ணனிடம் பேசும்போது, ஒருவரால் அடிப்படை யதார்த்தங்களை புரிந்து கொண்டுள்ள முடியும். பல விருதுகளும், பாராட்டுகளும் பெற்று கொண்டிருந்த நிலையில், டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன், இறுதியாக சொல்வது "விருதுகளும், பரிசுகளும் எனக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதில்லை. என் பணியில் நான் மிகுந்த மனநிறைவுடன் அதை தொடர்ந்து செய்வேன். "