Welcome..! Join us to Develop your Humanity
“நமது பாரதநாட்டின் பலதரப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதில் 25 வருடங்களாக அயராது உழைத்துவரும் தேபால் தேப் (Debal Deb) அவர்களின் சாதனைப் பயணம்.”
1990களில் கல்கத்தாவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய சர்வதேச இயற்கை நிதியம் (World Wide fund for Nature) என்கிற தன்னார்வ அமைப்பில் தேப் (Deb) பணியாற்றி வந்த போது, நமது நாட்டில் 1960களில் பசுமை புரட்சி என்கிற திட்டம் கொண்டுவரப்படும் வரையில் ஒரு லட்சத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய உள்ளூர் பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டிருந்த பெருமையோடு நமது நாடு விளங்கியது என்பதை அவர் நினைவு கூர்கிறார். அதனைத் தொடர்ந்து வந்த இருபதாண்டுகளில் அந்த எண்ணிக்கை வெறும் ஏழாயிரம் ரகங்கள் என்கிற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏன் இந்த அவல நிலை என்று ஆராய்ச்சி செய்தால் பசுமைப் புரட்சி என்கிற பெயரில் திட்டம் தீட்டியவர்களும், வேளாண் விஞ்ஞானிகளும், இந்திய விவசாயிகளும் பாரம்பரிய நெல் உற்பத்தி ரகங்களை கைவிட்டு அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை நாடி ஓடி அதன் விளைவாக தற்போது நமது நாட்டில் 75 சதவீத நெல் விளைச்சலானது, வெறும் பத்திற்கும் குறைவான ரகங்களில் இருந்தே வருகிறது என்கிற அதிர்ச்சிகரமான உண்மை வெளிப்படும்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான தேப் (Deb) அவர்கள், இவ்வாறு நாட்டின் பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் அழிக்கப்பட்டு வருவதைக் கண்டு மிகவும் கலங்கி போயுள்ளார். அழிவின் விளிம்பில் உள்ள ஒரு புலியோ, ஒரு காண்டா மிருகமோ அல்லது வேறு ஏதாவது கவனத்தை ஈர்க்கும் ஒரு விலங்கோ வேட்டையாடப்படும் போது, அவற்றின் பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான டாலர்கள் செலவிடப் படுகிறது. ஆனால் நமது நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களின் இனப்படுகொலை நடந்திருப்பதை பார்த்தும், யாரும் ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்று பெட்டர் இந்தியா என்கிற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தேப் (Deb) வேதனையுடன் தெரிவித்தார்.
தேப் (Deb) ஒரு பயிற்சி பெற்ற வேளாண் நிபுணராக இல்லாமல் இருந்தாலும், நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்கள் அழிக்கப்படுவதைப் பற்றி இலட்சியம் செய்யாத வேளாண் விஞ்ஞானிகள் குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளார். பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்காமல், அதிக மகசூல் தரும் ரகங்களையும், உயர் ஒட்டு ரகங்களையும் மட்டுமே இந்த விஞ்ஞானிகள் முன்வைக்கிறார்கள்.
ஆகையால் 1990களில் வங்காளத்தில் மிச்சம் மீதி இருந்த பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிக் கண்டுபிடித்து பாதுகாக்கும் பணியில் தேப் (Deb) இறங்கினார். மேற்கு வங்க பகுதிகளில் அதிகாரபூர்வமாக 5 ஆயிரத்து 500 ரகங்களுக்கும் மேல் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மூன்று வருட முயற்சிகளுக்குப் பின் அவரால் வெறும் 350 ரகங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. சில நேரங்களில் நடைப் பயணமாகவும், சிலசமயம் பேருந்துகளின் மேற்கூரைகள் மீதும் பயணத்தை மேற்கொண்ட தேப், பசுமைப் புரட்சியின் தீமைகள் தீண்டி விட முடியாத, தொலைதூர, நீர்ப்பாசனத்தை அறியாத விளிம்புநிலை விவசாயிகளைத் தேடிப் பிடித்தார்.
இவர் தேடிப் பிடித்த பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ, பாசனத்திற்கு மின்சார பம்பு செட்டுகளையோ உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு வறுமை நிலையில் உள்ளவர்கள் ஆவர். ஆகவே இவர்கள் இத்தகைய எந்த நவீன வசதிகளும் தேவைப்படாத உள்ளூர் பாரம்பரிய ரகங்களை பயிரிட்டு வந்தனர். இத்தகைய கிராமங்களுக்கு செல்லும் போது தேப் (Deb) முதலில் அவர்களிடமிருந்து ஒரு கைப்பிடி அளவு நெல்லை பெற்றுக் கொள்வார். அவர்கள் இத்தகைய பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிடுவதை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிட வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்வார்.
இவ்விதம் 25 வருடங்கள் தொடர்ந்து அரும்பாடுபட்டு இந்த நெல் போராட்ட வீரர் 1420 உள்ளூர் பாரம்பரிய நெல் ரகங்களை நாட்டின் 12 மாநிலங்களில் இருந்து சேகரித்துள்ளார். இது மட்டுமன்றி பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், தாய்லாந்து, கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்தும் ஒரு சில நெல் ரகங்களையும் சேகரித்துள்ளார்.
இவருடைய பெருமுயற்சியால் நாட்டிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒரே ஒரு பாரம்பரிய விதைநெல் வங்கியை வ்ருத்தி என்கிற பெயரோடு விவசாயிகளின் நலன் கருதி நடத்தி வருகிறார். இது மட்டுமன்றி ஒதிஷா மாநிலத்தில் நியம்கிரி மலை அடிவாரத்தில் பசுதா (Basudha) என்கிற 1.7 ஏக்கர் பரப்பு கொண்ட மாதிரி நெல் ஆராய்ச்சி நிலையத்தை நடத்தி வருகிறார். இதில் இவர் ஒவ்வொரு கைப்பிடியாக தேடிச் சேகரித்த 1420 பாரம்பரிய நெல் ரகங்களையும் சிறிய சிறிய பாத்திகளில் விளைவிக்கிறார்.
இவ்விதம் இவர் இத்தகைய பாரம்பரிய மீட்டெடுப்பு பணியை தொடங்கிய போது 1998இல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பிறகு 2009இல் ஐலா புயலினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், மேற்கு வங்கத்தின் சுந்தர்பனில் அடியோடு அடித்துச் செல்லப்பட்ட 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான விளை நிலங்களுக்கும், இவர் வீடு தேடிச் சென்று தன்னுடைய பாரம்பரிய நெல் வகைகளின் விதைகளைத் தந்து, நிலைமையை மீட்டெடுக்க உதவினார்.
ஒருமுறை தேப் (Deb) அவர்கள் மேற்கு வங்காளத்தில், சின்சுராவில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு, தன்னுடைய சில ரகங்களை தானமாகத் தர விரும்பி அங்கே சென்றபோது அவருடைய கொடையை அவர்கள் நிராகரித்தார்கள். இதனால் மனம் தளராத தேப் (Deb) நிலையத்தின் இயக்குனரை அணுகி அவருடைய நோக்கத்தைச் சொன்னபோது, அவர்கள் இவரை எள்ளி நகையாடினார்களே தவிர இவரது விதைநெல்லை பெற்றுக்கொள்ளவில்லை. மேலும் இவர் ஒரு வேளாண் விஞ்ஞானியைப் போல் பழைய நெல் ரகங்களை பெற்று வருவதும் வீண் வேலை என்று குறை கூறினார்கள். இதன்மூலம் விவசாயிகள் மீண்டும் பழைய கற்கால நிலைக்குத் தள்ளப்படக் கூடும் என்கிற ஆதாரமற்ற புகாரைத் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட தேப் (Deb) அவர்கள், நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த 'அதிமேதாவிகளுக்கு' இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் எவ்விதம் அனைத்து பருவ நிலை மாற்றங்களையும் தாங்கி, எவ்வித ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இல்லாமல், அடிப்படை வேளாண் முறைகளிலேயே நல்ல பயனைத் தரும் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், அதன் இயக்குனர் இதை ஏற்காமல் நவீன மரபணு மாற்றத்தின் மூலம் இத்தகைய பண்புகளை ஏற்படுத்திவிட முடியும் என்று கூறிவிட்டார். இத்தகைய நிராகரிப்புகள் ஏற்படுத்திய நிராசையால் இதுநாள் வரை எந்த ஒரு அரசாங்க அல்லது தனியார் வேளாண் ஆராய்ச்சி அமைப்புகளையும் நிதி உதவிக்காகவோ, அறிவுப் பரிமாற்றங்களுக்காகவோ நாடுவது இல்லை என உறுதிபூண்டு விட்டார்.
பாரம்பரிய நெல் ஆராய்ச்சி பணிகளில் மேற்கொண்டு முழுமூச்சுடன் ஈடுபடும் நோக்கில், கிழக்கு பிராந்தியத்திற்கான சர்வதேச இயற்கை நிதியத்தில் முதுநிலை திட்ட அலுவலராக கல்கத்தாவில் பணிபுரிந்து வந்த தனது பணியை, நல்ல சம்பளம் பெற்று வந்த நிலையிலும் தேப் (Deb) விட்டுவிட்டார்.
இதற்குப் பிறகுதான் இவர் பாரம்பரிய நெல் ரகங்களை உருவாக்கி, அதிகப்படுத்தி, பாதுகாத்து, வினியோகிக்கும் திட்டமான பசுதாவை (Basudha) ஆரம்பித்தார். இவருடைய பணிகளில் நம்பிக்கை வைத்து இவருக்கு நிதி உதவி செய்யும் தொண்டு மனப்பான்மை கொண்டவர்கள் ஆதரவில்தான் இவரது பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
முதல் 20 ஆண்டுகள் வங்காளத்தை மையமாக வைத்து வேலை செய்தாலும், தேப் (Deb) கடந்த 10 ஆண்டுகளாக தனது களத்தை ஒதிஷாவிற்கு மாற்றிக் கொண்டு விட்டார். இவரால் உருவாக்கப்பட்ட வ்ருத்தி என்கிற ஆராய்ச்சிப் பண்ணையில் 16 உள்ளூர் ரகங்கள் எந்தவிதமான ரசாயன உரங்கள் பயன்பாடு இன்றி, நவீன ஒட்டு ரக வீரிய நெல் ரகங்களின் விளைச்சலை மிஞ்சும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயமாகும்.
ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய பாரம்பரிய ரகங்களைக் கொடுக்கவும், தேப் (Deb) உருவாக்கியுள்ள ரகங்களைப் பெறவும் அவரது நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு வருகிறார்கள். 2018ல் நடத்திய சிறப்பு மாநாட்டில் பசுதாவிற்கு (Basudha) 1900-க்கும் மேற்பட்ட வேளாண் பெருமக்கள் வருகை புரிந்தனர். அதற்கு முந்தைய ஆண்டில் 2000 விவசாயிகள் வந்திருந்தனர். 2019-ல் தமிழகத்திலிருந்தும், மிகவும் ஊக்கம் கொண்ட 30 விவசாயிகளின் குழு ஒன்று பசுதாவிற்கு (Basudha) சென்று, ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களை பெற்று வந்துள்ளனர். இந்த நெல் ரகங்களின் மரபணு ரீதியான தனித் தன்மையை உறுதி செய்திட தேப் (Deb) அவர்களே இவற்றை விளைவிக்கும் முறைகளுக்கான பயிற்சியையும் தருகிறார். இத்தகைய முயற்சியில் இந்தப் பாரம்பரிய நெல் ரகங்களின் உற்பத்தி பெருக்கத்தில் வெற்றி என்பது, செங்குத்தான மலை ஏற்றத்திற்கு ஒப்பான சவாலாக விளங்கினாலும், இத்தகைய பரஸ்பர பரிமாற்றங்களினால் குறைந்தபட்சம் 500 பாரம்பரிய ரகங்களையாவது மீட்டெடுக்க முடியும் என்று தேப் (Deb) உறுதியாக நம்புகிறார்.
தேபால் தேப் (Debal Deb) அவர்களின் இத்தகைய முயற்சியானது, மேலும் பல போராட்ட வீரர்களுக்கும், சாதனையாளர்களுக்கும், வேளாண் பெருமக்களுக்கும் உந்துசக்தியாக விளங்கி நமது நாட்டின் பாரம்பரிய பயிர் முறைகளை மீட்டெடுக்கும் இப் போரில், நாம் வெற்றி அடைவோம் என்று மனதார நம்புவோம்.