Welcome..! Join us to Develop your Humanity
சம்பந்த சிவாச்சார்யார் – பலநூறு ஆண்டுகால பனைஓலைச் சுவடிகளை, நவீனபுத்தகங்களாக்க 50 ஆண்டுகளுக்கு மேல் அயராது உழைத்தவர்
2014 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம் மற்றும் சைவ சித்தாந்த படிப்புகளில் வாழ்நாள் சாதனைகள் செய்ததற்காக சம்பந்த சிவாச்சார்யர்க்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. இது அவரது கடின உழைப்பு மற்றும் பூர்வஜன் புண்யம் ஆகியவற்றிற்கான வெகுமதி என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆயினும், நாம் வாழும் காலத்தில் இதுபோன்ற ஒரு அறிஞருடன் இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது நாம் செய்த புண்ணியமாகும்.
கடலூரைச் சேர்ந்த எஸ். சம்பந்த சிவாச்சார்யார் " ஒரு நாளில், நான் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கூட படிக்கவில்லை அல்லது பார்க்கவில்லை என்றால், அந்த நாள் வீணானதாக நான் நினைப்பேன்" என்றார். கோவில் சடங்குகள் குறித்து ஐந்து புத்தகங்களை எழுதியுள்ள அவர், ஒருகாலும் ஓய்வு பெறவிரும்பவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆதிசைவ மரபில் வந்த பல சடங்குகளும் நெறிமுறைகளும், தத்துவங்களும் பல்லாயிரக்கணக்கான நூல்களில் அச்சிடப்பட்டுள்ளன, அவற்றை பாதுகாக்கவும், பதுப்பித்து வெளியிடவும் இன்னும் பல வேலைகள் செய்யவும் அவர் பேரார்வம் கொண்டு பணி செய்து வந்தார்.
சம்பந்தசிவாச்சார்யார், சைவ சித்தாந்த ஆகமங்களின்படி செயல்படும் சிவன் கோவில்களில் பணியாற்றிய, பரம்பரை சிவாச்சார்யார்களின் சமூகமான ஆதிசைவ பிராமணர் குலத்தைச் சேர்ந்தவர் . அவரது சமூகம் தலைமுறைகளாகப் பாதுகாத்து வைத்திருந்த ஆகமங்களின் அவலத்தைக்கண்டு சம்பந்தசிவாச்சார்யார், அதை பாதுகாக்க முடிவு செய்தார். புறக்கணிப்பு மற்றும் பல கோயில் பூசாரிகளுக்கு அந்த வேதங்களைப் பற்றிய தீவிர ஆய்வுச் சாத்தியமின்மை, ஆகிவை காரணமாக பல பனை-இலை கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்படாமல் இருந்தது . அவை தென்னிந்தியாவின் வெப்பமான மற்றும் ஈரமான சீதோஷ்ண நிலையை தாக்குபிடிக்கக்கூடியதாக இருக்கவில்லை. சிறந்த மற்றும் முக்கியமான இந்திய நூல்களின் பழமையான கையெழுத்துப் பிரதிகள் பெரும்பாலும் நேபாளம் போன்ற குளிரான இடங்களில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சைவ கோயில் குருக்கள் குடும்பத்தில் பிறந்த சம்பந்தசிவாச்சார்யரின் இரத்தத்தில் இயல்பாகவே சைவ பாரம்பரியத்தின் மீதான பக்தி இருந்தது. அவரது தந்தை டி. சுப்ரமண்ய குருக்கள், அவரது முதல் ஆசிரியராக இருந்து , அவருக்கு ஏழு வயதிலேயே அடிப்படை கோவில் சடங்குகள் மற்றும் வேத மந்திரங்களைப் சொல்லிக்கொடுத்தார்.
சம்பந்தசிவாச்சார்யார், 1969 ஆம் ஆண்டில், தனது குடும்ப உத்யோகமான கோவில் குருக்கள் தொழிலை கைவிட்டு, சைவ சித்தாந்தத்தின் விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகளை காப்பாற்றுவது என முடிவு செய்தார். 1969 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரியில் சேர்ந்தார், பிரசித்தி பெற்ற சைவாகம அறிஞரரான என்.ஆர். பட், அவர்களின் தலைமையில் , அவர் சைவ சித்தாந்த நூல்களின் கையெழுத்துப் பிரதிகளை மிகக் கடினமாக சேகரித்தார், மேலும் இந்த விலைமதிப்பற்ற நூல்களின் விளக்க பதிப்புகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார், அத்துடன் நிறுவனத்தின் அறிஞர்களுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகித்தார். சைவசித்தாந்தத்தின் 28 முக்கிய நூல்களில் ஒன்றான சைவகாமங்களின் விமர்சன பதிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார், அதன் கோட்பாடுகளின் வரலாற்று பரிணாமத்தையும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சைவ சடங்கு முறையையும் கண்டறிந்துள்ளார். 300 க்கும் மேற்பட்ட பண்டைய சைவ கையெழுத்துப் பிரதிகளையும் அவர் பட்டியலிட்டு மொழிபெயர்த்தார்.
மதங்கபரமேஸ்வராகமம், சூக்ஷ்மாகமம் , அஜிதாகமம், ரௌரவாகமம், தீப்தாகமம் மற்றும் பஞ்சவர்நஸ்தவம் ஆகியவை அச்சிடப்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன, அவை சைவ சித்தாந்த பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள வாசகர்களால் வாங்கப்படுகின்றன. இவற்றில் பல நூல்கள், குறிப்பாக ரௌரவாகமம் மற்றும் மதங்கபரமேஷ்வராகமம், ஆகியவை நமது பாரத பாரம்பரியத்தின் மிக முக்கியமான படைப்புகளாகும், அவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை பாதுகாக்கப்பட்டு அப்படியே உள்ள இந்திய மீமெய்யியல், முக்தி தத்துவம், இயக்கவியல, தத்துவ விவாதங்கள் மற்றும் சடங்குகள் ஆகிவற்றை உள்ளடக்கிய நூல்களாகும்.
பாரம்பரிய அறிஞர்களின் சிறந்த பிரிதிநிதிகளுள் சம்பந்த சிவாச்சார்யாரும் ஒருவர். தமிழ், கிரந்தம், தெலுங்கு, மலையாளம், திகலாரி, ஷரதா, நந்திநாகரி மற்றும் நெவாரி ஆகிய லிபிகளை படிப்பதில் பயிற்சி பெற்றார். சைவ நூல்களின் மிக முக்கியமான கையெழுத்துப் பிரதிகள் தமிழ்நாட்டிலிருந்தும் காஷ்மீர் மற்றும் நேபாளம் போன்ற வெகு தொலைவு பகுதிகளிலும் காணப்படுகின்றன, இது ஷரதா மற்றும் நெவாரியின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
அவருடைய சமஸ்கிருத ஆய்வுகளுக்கும், ஈடு இணையற்ற பங்களிப்புக்கும், 2009 ஆம் ஆண்டில் சர்வதேச அங்கீகாரம் வாய்ந்த "பாம்ஸ் அகாடெமிக்ஸ்" விருது மற்றும் " இக்குஓ ஹிராயமா" விருதும் வழங்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியர்கள் நல சங்கம், அந்த சமுதாயத்தின் முன்மாதிரியான மனிதராக சம்பந்த சிவாச்சார்யார் அவர்களை கௌரவித்தது. சென்னை சமஸ்கிருத கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் அங்கு சமஸ்கிருத இலக்கியம் மற்றும் பாரம்பரிய வேத ஆய்வுத்துறையாகிய மீமாம்சா ஆகியவற்றில் ஷிரோமணி பட்டங்களை பெற்றார். காஞ்சி காமகோட்டி பீதாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளிடமிருந்து "கலாசால ரத்னம்" அதாவது “கல்லூரியின் மாணிக்கம் ” என்னும் அவரது செயலுக்கு ஏற்புடைய பட்டத்தைப் பெற்றார்.
மற்ற அமைப்புகள் தாமே முன்வந்து உதவித்தொகை வழங்குகின்றன ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவித்தொகை அல்லது விருதினைப் பெற தனிநபரால் விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்று சம்பந்தசிவாச்சார்யார் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் விருதுக்கு விண்ணப்பிக்க தயங்கிய சிவஸ்ரீ சம்பந்தசிவாசார்யார் இறுதியில் அவரது நலம் விரும்பிகள் மற்றும் அபிமானிகளின் வேண்டுகோளை ஏற்று அரசிடம் விண்ணப்பித்தார். இவரைபோன்றவர்கள் நம்முடைய பாரம்பரியத்தின் மீது உள்ள ஆழ்ந்த நிலையான ஆர்வத்தின் காரணமாக மட்டுமே இவரும்பணிகளை செய்கிறார்கள். அவரைப் போன்ற பாரம்பரிய அறிஞர்களின் உழைப்பை அங்கீகரிக்க சிறந்த வழி, நாம் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதுமான ஊக்கத்தொகை வழங்கி அவர்களது வேலை தடைபடாமல் பார்த்துக்கொள்வதேயாகும்.
சம்பந்தசிவாச்சார்யார் தன்னுடைய 92 வயதில் கடலூரில் உள்ள தனது வீட்டில் 2019 ம் வருடம் ஜூன் 16ம் நாள், முழுமையாக பழுத்த பழம் தரையை நோக்கி விழுதல் போல் முழுமையாக பழுத்த அவரது ஆன்மா இறையைச் சென்றடைந்து.