Welcome..! Join us to Develop your Humanity
தனியாளாக குளங்களை வெட்டியவர் - காமே கெளடா
காமே கௌடா – 84 வயது நபர் தனியொருவனாக தன் வாழ்வின் முழு சேமிப்பையும் செலவழித்து 16 குஎங்களை வெட்டினார்.- பரிசுத் தொகையுடன் விருது.
உற்சாகமுள்ள ஆர்வலரான காமே கெளடா குளங்களைத் தன் குடும்ப நபர் போலக் கருதுகிறார். இவர் “நான் எவ்வளவு வயதானாலும் குளங்களை வெட்ட விரும்புகிறேன்” என்கிறார்.
சிலர் குடிக்கிறார்கள். சிலர் சூதாடுகிறார்கள். வேறு சிலர் ஆவேச சாஹஸங்களின் வழி செல்கிறார்கள். ஆனால் 84 வயது காமே கௌடாவோ வித்யாஸமான அதீத ஈடுபாட்டைக் கொண்டிருக்கிறார். அதுதான் குளம் வெட்டுவது.
தாசனதொட்டி என்ற மாண்டியா ஜில்லாவின் கிராமத்தைச் சேர்ந்த ஆடுமேய்க்கும் விவசாயியான இவர தானே தனியாளாக தன் கிராமத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பதினாறு குளங்களை வெட்டினார். இவரது கடின உழைப்பின் பயனாக இவரது கிராமம் நாற்பது ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சனையைச் சந்தித்ததேயில்லை.
சமீபத்தில் காமே கௌடா பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பாராட்டப்பட்டார்.
“காமே கௌடா சாதாரண விவசாயி ஆனாலும் அபாரமான ஆளுமை பெற்றவர். அவர் தனியாகச் செய்த சாதனை என்பது எவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியது” என்று தன் நிகழ்ச்சியில் பிரதமர் கூறினார்.
ஆனால் கர்நாடதத்தின் இந்த ஏரிமனிதன் இந்த திடீர் நட்சத்திர அந்தஸ்தாலும், திக்குமுக்காடச் செய்யும் விளம்பரத்தாலும் அசந்து விடவில்லை. பகட்டான புகழ் வெளிச்சங்களிலிருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்ட இந்த 84 வயது தன்னார்வலர், தன் வாழ்வின் லட்சியமான குளங்களையும் ஏரிகளையும் ஏற்படுத்தும் பணியை இன்றும் தொடர்கிறார்.
விலங்குகள், பறவைகள் நிலையைக் கண்டு பரிவு காட்டியவர்
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தாசன தொட்டி என்ற குண்டின்பெட்டா மலையடிவாரத்திலிருந்த கிராமம் அதிதீவிர தண்ணீர்ப் பஞ்சத்தில் வாடியது. அப்போது அங்கு குளங்களோ ஏரிகளோ இல்லை. கிராமத்தில் குடியிருந்த மக்கள் வறண்ட கோடைக் காலங்களில் கடும் துயரம் அடைய வேண்டியிருந்தது. இது போதாதென்று மழை நீர்வரத்தும் குறைவு. மழைநீர் அநேகமாக மேடுகளிலிருந்து வழிந்து தரைக்கு வரும் போது ஒன்று ஆவியாகும் இல்லையேல் நிலத்தால் உறிஞ்சப் படும்.
காமே கௌடாவின் மருமகள் கிரிஜா "பெட்டர் இந்தியாவுடன்" தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது “என் மாமனார் பறவைகளுக்கும், விலங்குகளுக்காகவும்தான் குளம் வெட்ட ஆரம்பித்தார். அவர் ஆடு மேய்க்கப் போகும் போது மலையடிவாரங்களில் விலங்குகள், பறவைகள் நீர் அருந்த குட்டைகள் கூட இல்லை.உற்றுக் கவனித்த போது வாயில்லா ஜீவன்கள் கடும் கோடைக் காலத்தில் பொசுக்கும் வெயத்தால் எவ்வளவு கஷ்டப்படுகின்றன என்பதைக் கண்டுகொண்டார்.அதனால் அவற்றிற்காகக் குளங்கள் வெட்ட ஆரம்பித்தார்.” என்றார்.
காமே கௌடா சூரிய உதயத்துக்கு முன்பே வீட்டை விட்டுக் கிளம்பி முழுநாள் உழைப்பைத் தந்து பின்னிரவில்தான் வீடு திரும்புவார்.
அவர் ஒவ்வொரு குளமாக வெட்ட வெட்ட அவரது சேமிப்பும் தேவையான உபரணங்கள் வாங்கப் பயன் படுத்தியதால் குறைந்து வந்தன. சில தடவை அவர் ஆட்டை விற்றார். சில தடவை தினக் கூலிக்காக வேறு வேலை செய்தார். சில முறை தான் தன் சொந்த வீடு கட்டும் திட்டத்தையே தள்ளி வைத்தார்.இவையனைத்தும் குளங்கள் வெட்டும் பணிக்காகவே செய்தார்.
அவரது உறவினர்களே அவருடைய ஆர்வத்தைக் கண்டு நகைத்தார்கள். சிலர் உறவையே முறித்தும் கொண்டும் விட்டார்கள்..கிராமத்தைச் சேர்ந்த சிலர் 'இது அரசு நிலம்.' என்றெல்லாம் சொல்லியும் இவர் வேலையைத் தடுக்கவும் செய்தனர்.
ஆனால் இவை எதுவுமே பறவை விலங்குகளுக்கான ஆக்கபூர்வமான சூழலை உருவாக்கும் இவரது ஆர்வத்தையும் லட்சியத்தையும் தடுக்க முடியவில்லை.
அவர் வெறுமனே குளங்களை மாத்திரம் வெட்டவில்லை. அரச மரம், விளாம்பழ மரம் போன்றவற்றை நட்டு வெவ்வேறு பகுதியிலிருத்தது சேகரித்த புற்களைக் கொண்டு ஏற்படுத்திய புல்வெளி இவற்றையும் உருவாக்கினார்.செடிகொடிகள் மண்ணின் ஈரப்பதத்தைக் காக்க உதவியதோடு கிராமத்தையே பசுமை நிற வர்ணம் பூசியதாய்ச் செய்தது. கால்நடைகள் குளங்களிலிருந்து நீர்பருகின. பறவைகளோ சுற்றியிருந்த மரங்களை நாடின. எண்ணிக்கையில் பல்கிப் பெருகின.
ஆரம்பத்தில் எல்லா வேலைகளையும் இவர் தானேதான் செய்து வந்தார்.. தன் வயது ஏற ஏற சில வேலையாட்களையும் தனக்கு உதவியாக இந்தப் பணியில் சேர்த்துக் கொண்டார்.
ஆச்சரியப்படும்படியான அவரது தனித் திறமை எப்படிப் பட்டதென்றால் அவர் வெட்டிய குளங்கள் இணைக்கப்பட்டிருந்தன. பள்ளிக்கூடத்துக்கே போகாத இந்த நபர் சுற்றியிருந்த பாறைகளில் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாசகங்களை எழுத வைத்திருந்தார்.
“அவர் நீர்நிலைகளைத் தன் குடும்ப உறவினர் போல பாவித்தார். சில குளங்களுக்குத் தன் பேரன்களின் பெயரையும் சூட்டினார்” என்று விளக்கினார் அவரது மருமகள் கிரிஜா. தினசரி கால்நடையாகவே கிராமத்தைச் சுற்றிச் சுற்றி வந்து வயதான காலத்திலும் குளங்களைக் கவனித்து வந்தார்.
அவரது சொந்த வீடு இரண்டு ஏக்கர் பரப்பில் ஒரு சிறு பரப்பில் கட்டப்பட்டும் முழுமை அடையாததாகக் காட்சியளிக்கிறது. ஏனென்றால் இந்த ஆடு மேய்ப்பவர் தன் வாழ்நாளின் சேமிப்பை குளங்களுக்காகவே செலவிட்டிருக்கிறார்.
அவர் 2017 ம் ஆண்டு பசவஸ்ரீ விருது பெற்று ரூபாய் ஐந்து லட்சம் பரிசுத் தொகை பெற்ற போதும் அவர் அதை தன்னால் இணைக்கப் பட்ட நீர்நிலைகளை விரிவுபடுத்த அதை அன்பளிப்பாகத் தந்து விட்டார்.
2018ம் ஆண்டு ராஜ்யோத்ஸவா விருதால் கௌரவிக்கப் பட்டார்.
காமே கௌடா இப்படிப்பட்ட தனித்துவமான விருதுகளால் பாதிக்கப்படாமல் தன் வாழ்நாள் கடைசி மூச்சு வரை தனக்கு மிகவும் பிடித்தமான குளங்களை வெட்டும் வேலையைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்..
இன்று எல்லாருடைய மகிழ்ச்சியும் என்ன வெற்றால் எத்தகைய கடுமையான கோடை என்றாலும் அவர் வெட்டிய குளங்கள் எப்போதும் வற்றுவதில்லை.
காமே கௌடா வளர்த்த மரங்கள், செடிகள், புல்தரை இவற்றிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இவை தாசனதொட்டியை பசுமைச் செழிப்பால் அனைவரையும் ஈர்க்கும் இடமாக மாற்றியிருக்கிறது.