Welcome..! Join us to Develop your Humanity
‘நூறு கரங்களில் பெற்று, ஆயிரம் கரங்களால் கொடு'
என்ற பொன்மொழிக்கேற்ப உள்ளது ஜெகதீஷ் லால் அஹுஜாவின் வாழ்க்கை!
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சொத்துக்களையும் விற்று தினசரி நூற்றுக்கணக்கான ஏழை குழந்தைகள், நோயாளிகள், அவர்களது உறவினர்களுக்கு தினமும் உணவளித்தவர் - ஜெகதீஷ் லால் அஹுஜா
இரவு ஏழு மணி இருக்கும், "பாபா லங்கர்"- ஐ (லங்கர் - பொது மடப்பள்ளி / ஏழைகளுக்கு உணவு வழங்கும் இடம்) எதிர்பார்த்து, சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (PGIMER) வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். "ஜகதீஷ் லால் அஹுஜா, PGI கடைக்காரர், சண்டிகர்" என்ற ஒரு வெள்ளை வண்டி வந்தவுடன், கூடியிருந்தவர்கள் அனைவரும் அங்கே அழகாக ஒரு வரிசையில் நிற்க துவங்குகிறார்கள். "லங்கர் பாபா" என்று அன்போடு அழைக்கப்படும் ஜெகதீஷ் லால் அஹுஜா மற்றும் அவரது உதவியாளர்கள் சிலர் ஒரு மேஜையை வைத்து, அதில் அலுமினிய பாத்திரங்களை வைத்து, மூன்று சப்பாத்திகள், சுண்டல் குருமா, அல்வா, ஒரு வாழைப்பழம் மற்றும் மேலும் சில இனிப்புகள், ரொட்டிகள் அடங்கிய இலவச உணவை விநியோகிக்கத் தொடங்குகிறார்கள்.
அஹுஜாவின் இந்த இலவச உணவு காட்சியை, கடந்த 20 ஆண்டுகளாக தினசரி மாலையில் PGIMER வெளியேவும், மற்றும் மதியத்தில் நகர அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திலும் காணலாம்.
"அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் பெரும் கவலையில் இருப்பார்கள். மருத்துவர்களை சந்திக்கவோ அல்லது அங்கே சிகிச்சை பெரும் உறவினர்களை பார்க்கவோ பாரதத்தின் முழுவதிலுமிருந்து வருகிறார்கள். சாலையோரத்தில் தூங்குகிறார்கள். பெரும்பாலும் ஏழைகளான அவர்கள், சிகிச்சைக்கான செலவை ஏற்க வேண்டி உள்ளதால், பசியுடனே இருக்கிறார்கள். வேறு எவரையும் விட இவர்களுக்கு தான் உணவு தேவை" என்று அவர் கூறுகிறார்.
தினசரி காலை, ஒரு டஜன் பணியாளர்கள், லங்கர் உணவைத் தயாரிப்பதற்காக சப்ஜி மண்டியில் உள்ள அஹுஜாவின் கடையில் கூடுகிறார்கள். 5000 சப்பாத்திகளுக்குகாக ஒரு குவிண்டால் மாவு குவிக்கப்படுகிறது. தனது இந்த சேவைக்கு ஆகும் செலவை கூற மறுக்கும் அஹுஜா, "லங்கருக்காக யாரிடமிருந்தும் ஒரு பைசா கூட வாங்குவதில்லை" என்கிறார். "இது கடவுள் எனக்கு தந்த கடமையாக கருதி செய்கிறேன். எவ்வளவு செலவு செய்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் யோசிப்பதும் இல்லை," என்று அவர் கூறுகிறார்.
தனது தொழிலில் இருந்து அவர் பணம் எடுப்பதில்லை. அதற்கு பதிலாக, அவர் தனது சில சொத்துக்களை விற்றுள்ளார். 1960களில் சில ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய, ஆனால் இப்போது பல கோடிக்கு மதிப்புள்ள சொத்துக்களை இந்த சேவைக்காக விற்றுள்ளார். 85 வயதான இவர், சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட தனது லங்கர் சேவையில் இருந்து ஓய்வு எடுக்கவில்லை. "மண்ணினில் பிறந்து மாண்டு விழும் இந்த மனித வாழ்க்கையில், என்னால் மற்றவருக்கு உதவ முடியுமென்றால், இந்த லங்கரின் வரிசையில் நின்ற ஒரு நபரை கூட பசியுடன் திரும்ப விடமாட்டேன்."
ஜெகதீஸ் லால் தோற்றுவித்த இந்த ஏழைகளின் மடப்பள்ளி, மிக உருக்கமான வரலாற்றைக் கொண்டது. பன்னிரெண்டே வயதில் தேச பிரிவினை காரணமாக அவர் தனது சொந்த நகரமான பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் இருந்து பாரதம் வர நேர்ந்தது.
அஹுஜா அவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில்,
"நான் பெஷாவரை விட்டு வரும்போது எனக்கு 12 வயது. நாங்கள் பாட்டியாலா முகாமுக்கு வந்து, அம்ருதஸரஸ் அனுப்பப்பட்டோம். சில மாதங்கள் கழித்து மீண்டும் பாட்டியாலாவிற்கே திரும்பினேன்."
அவர் பாரதத்திற்கு வந்த காலத்தை நினைவு கூறுகையில், "வயிற்று பிழைப்புக்காக, தெருவில் பொருட்களை விற்கும் நிலைக்கு எனது தந்தை தள்ளப்பட்டார். இதில் நானும் அவருடன் சேர்ந்து கொள்வேன். ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ பாசிப்பருப்பு வாங்கி, சிறு சிறு பாக்கெட்டுகள் செய்து தெருவில் விற்க வேண்டியிருக்கும். நாள் முழுக்க இந்த வேலை செய்ததால், வீட்டிற்கு வரும்போது எனது கை கால்களில் கொப்புளங்கள் இருக்கும். சம்பாதிக்க வேண்டும் அல்லது பட்டினி கிடக்க வேண்டிய நிலை."
21 வயதில் தனது பெற்றோரை பிரிந்து, தனியே தள்ளுவண்டியில் இவர் ஆரஞ்சு பழங்கள் விற்கத் தொடங்கினார். பல ஆண்டுகளின் கடின உழைப்பினால் ஆரஞ்சு பழம் விற்பதில் இருந்து சொத்துக்கள் வாங்கும் நிலைக்கு முன்னேறினார்.
அவரது மகனின் எட்டாவது பிறந்தநாள் அன்று சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தைகளுக்கு ஒரு லங்கர்-ஐ ஏற்பாடு செய்தார். அதுவே அவரது வாழ்வின் திருப்புமுனை.
அதனை நினைவு கூறுகையில், "அன்று மார்க்கெட்டின் 26ம் பகுதியில் உள்ள 150 குழந்தைகளுக்கு உணவு சமைத்தோம். அவர்கள் முகத்தில் ஆனந்தத்தை பார்த்ததும், எனது குழந்தை பருவம் தான் எனக்கு நினைவு வந்தது. அப்போதே அதை தினசரி செய்வோம் என தீர்மானித்தேன்."
இவ்வாறே அரிசி, பருப்பு, சப்பாத்தி, இனிப்புகள், பலூன்கள் என சண்டிகரின் பல பகுதிகளில் கொடுக்க ஆரம்பித்தார். “கடினமான எனது வாழ்க்கையின் நடுவிலும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வது எனக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. ஒவ்வொரு முறை ஏழை மக்கள் வாழும் இடத்திற்கு செல்லும்போது மக்களும் குழந்தைகளுமாக கூட்டமாக வந்து என்னை சூழ்ந்து கொள்வார்கள். எனக்காக ஆவலுடன் காத்திருப்பார்கள்.” என அவர் கூறுகிறார்.
10 வருடங்களுக்கும் மேலாக குழந்தைகளுக்கு லங்கர் சேவை செய்த பின்னர், 2000-ம் வருடம், தனது லங்கரை 2 மருத்துவமனைகளில் இவர் துவங்கினார்.
சுயநலமற்ற இந்த தொண்டை பல வருடங்கள் செய்ததன் காரணமாக ஜெகதீஷ் லால் அவர்களுக்கு, நாட்டின் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் நாலாவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது ஜனவரி 2020-ல் வழங்கப்பட்டது.
இந்தியா டுடே பத்திரிகையில் அவர் கூறுகையில் "பத்மஸ்ரீ விருது எனக்கு வழங்கப்படும் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. டெல்லியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை! குடியரசு தின அணிவகுப்பிற்கு என்னை அழைத்தனர். ஆனால் உடல்நல குறைவு காரணமாக அங்கு செல்ல முடியவில்லை."
விருது பெற்றபின் தனது வருங்கால திட்டங்கள் குறித்து அவர், “நான் எளிமையை விரும்புகிறேன். ஒரு சாதாரண மனித வாழ்க்கையை வாழ்வேன். என்னிடம் இருந்ததில் இருந்து சமுதாயத்திற்கு ஒரு சிறு துளியை கொடுத்துள்ளேன். இந்த இலவச லங்கர் சேவை எனக்கு பிறகும் தொடர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். பசிப்பிணி ஆற்றும் மகத்தான பணியைச் செய்யும் ஜெகதீஷ் லால் அஹுஜாவைப் போன்றார் மனிதாபிமானத்தின் கலங்கரை விளக்கமாய்த் திகழ்கிறார்கள்.