Welcome..! Join us to Develop your Humanity
500 வருட பழமை வாய்ந்த 5000 வணிகர்கள் கொண்ட அனைத்து பெண்கள் மார்கெட் - மணிப்பூரில் பொருளாதாரத்தில் பெண்களின் ஆதிக்கம்
பெண்கள் முன்னேற்றம்! இது தொடர்பாக உலகளாவிய பல வேலைகள் நடந்தும், இது தொடர்பான உதவியோ, விழிப்புணர்வோ உலகின் எல்லா மூலைகளுக்கும் செல்லவில்லை. பெண்களில் பெரும்பாலானோர் உரிமை பெறவே இல்லை. ஆனால் இந்தியாவில், ஒரு இடம் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதாரணமாக திகழ்கிறது. பெண்கள் அதிகாரம் பெற்று இருக்க ஒரு மாநிலமே முழு ஆதரவையும் தருகிறது. இதை பற்றிய முழு விவரம் அறிய மணிபூர் மாநிலத்தில் உள்ள இமா கைதேல், என்ற இடத்திற்கு நாம் செல்ல வேண்டும். இங்கு 500 வருட பழமை வாய்ந்த, முழுவதும் பெண்களே ஆதிக்கம் செலுத்தும் அங்காடி உள்ளது. இங்கு பெண் அதிகாரம் என்பது பேச்சோடு மட்டும் அல்லாமல் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் அறியலாம்.
மிக சிறந்த துணி, பழங்கள், காய்கறிகள், திரவியங்கள் போன்றவை இருக்கும் இமா கைதேல் மார்கெட், இந்தியாவில் மற்றெங்கும் இருக்கும் அங்காடி போல் தான் என்று எண்ணி விடக் கூடாது. இது ஓர் வித்யாசமான மார்கெட் ஆகும். 5000 வியாபாரிகள் கொண்ட இங்கு, ஒவ்வொரு கடையும் பிரத்யேகமாக பெண்களாலேயே நடத்தபடுகிறது . இம்பால் மாநகரின் மையப் பகுதியில் இருக்கும் 500 வருட பழமை வாய்ந்த இந்த மார்கெட், வெகு நாட்களாக மணிப்பூரின் வியாபார மையமாக விளங்குகிறது.
இமா கைதேல் (அதாவது அன்னை அங்காடி) மணிப்பூர் வராற்றில் ஓர் இன்றியமையா வரலாற்று இடம் ஆகும். இது ஆசியாவின் மிகப்பெரிய அணைத்து மகளிர் அங்காடி ஆகும். உலகத்திலேயே மிகப்பெரிய மார்கெட் ஆக இருக்க கூட வாய்ப்பு உள்ளது.
இமா கைதேல் எப்போது தொடங்கப்பட்டது என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், அறிஞர்கள் இது 16ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாக இருக்க வைப்பு இருப்பதாக நம்புகிறார்கள். ஆய்வுகளின் படி மணிப்பூரில் முன்பு இருந்த லல்லுப் கபா என்ற கட்டாய தொழிலாளர் சட்டம் காரணமாக, ‘மித்தை’ என்கிற சமூகத்தின் ஆண்களை விவசாயம் மற்றும் போர் காரணங்களுக்காக, தொலைவான இடங்களுக்கு அனுப்பியதன் விளைவாக இந்த மார்கெட், அனைத்தும் பெண்களால் நிர்வகிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
காலனி ஆட்சியின் பொது ஆங்கில அரசாங்கம் மணிபூர் மீது பல வணிக சீர்திருத்தங்களை திணித்தது. உதாரணமாக, உள்ளூரில் விளைந்த பெரும்பகுதி அரிசியினை, உள்ளூர் தேவையை பொருட்படுத்தாமல், மணிபூர் அருகே தங்கி இருந்த ஆங்கில ராணுவ படை முகாமிற்கு அளித்தனர். இதை நுபி லேன் (பெண்களின் போர்) என்ற பெயரில், 1939ல் ஒரு போராட்டம் ஆரம்பித்து மணிப்பூர் பெண்கள் ஆக்ரோஷமாக எதிர்த்தனர்.
நுபி லேன் போராட்டத்தின் போது, இமா கைதேல் பெண் வியாபாரிகள், ஆங்கிலேயரின் கைக்கூலியாக விளங்கிய உள்ளூர் அரசின் பொருளாதார கொள்கையில் மாற்றத்தினை கொண்டு வரக்கோரி, கூட்டம், பேரணி, கடையடைப்பு போன்ற போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். இந்த போராட்டங்களை நசுக்க பிரிட்டிஷார், இமா கைதேல்-ன் கட்டிடங்களை அன்னியருக்கும், வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் விற்க முயற்சித்தனர். அதையும் இந்த பெண்கள் போராடி முறியடித்தனர். அவர்களுக்கு அது ஒரு மார்கெட் என்பதையும் தாண்டி, அவர்களின் சமூக கலாச்சார அடையாளதாகப் போற்றப்பட்டது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜப்பான் மற்றும் நேசநாடுகளின் போர்க்களமாக மணிபூர் ஆனதால், அந்த சமயத்தில் மட்டும் இந்த பெண்கள் போராட்டம் மந்தகதியில் இருந்தது.
மணிபூரின் சமுதாய இயக்கங்களின் வரலாற்றில், இமா கைதேல்-ன் நுபி லேன், ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. சுதந்திரத்திற்கு பிற்பாடான சமூக-அரசியல் யோசனைகள் பரிமாறிக் கொள்ளப்படும் மையமாக, இந்த அனைத்து பெண்கள் மார்கெட் அமைந்தது. நாளேடுகள், அச்சு ஊடகங்கள் இல்லாமையால், முக்கிய நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ள, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து மக்கள் இங்கு வர ஆரம்பித்தனர். இம்பாலின் உள்ளூர் பொருளாதாரத்திலும், இமா கைதேல் பெண்கள், எப்போதும் பெரும் பங்கு வகித்து வருகிறார்கள்.
இங்கு வருபவர்களுக்கு இமா கைதேல் அனைத்தையும் வாரி வழங்கி வந்தது. கைவினை பொருட்களில் ஆரம்பித்து, நவீன உடை, உள்ளூர் தயாரிப்புகள், கருவாடு, மற்றும் பிரபலமான மரோக் மிளகாய் வரை அனைத்தும் இங்கே கிடைக்கும். ஆனால் மணிப்பூரில் 2016 ஜனவரி 4 ஏற்பட்ட பூகம்பம் இமா கைதேல்-க்கு ஓர் பெரும் இடியாக வந்தது .
பல் சமூக அங்காடி இடமான இங்கு, திருமணம் ஆன பெண்கள் மட்டுமே வியாபாரம் செய்யவும் கடை நடத்தவும் அனுமதிக்கப் பட்டனர். இந்த உரிமை வாழையடி வாழையாக, அடுத்தடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்டது. அவர்களில் சிலர் தூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வருகின்றனர். பெண்களுக்கு தங்கள் கடையை பரப்ப தலா ரூ.40/- வசூலிக்கப்படுகிறது.
இமா கைதேல் பெண்கள், இந்த அங்காடியை நிர்வகிக்கவும் பெண் வியாபாரிகளுக்கு கடன் வழங்கவும் சங்கம் நடத்துகின்றனர். பெண்கள் இந்த சங்கத்திடம் வியாபார பொருட்கள் வாங்க கடன் வாங்கி, விற்றவுடன் திரும்ப செலுத்தி விடுவார்கள்.
பல்நோக்கில் இந்த மாநகர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மையத்தை ஒரு அங்காடி என்று சொல்வது நியாயமாகாது. அதையும் தாண்டி – பல பெண்களுக்கு இது வாழ்வாதாரம், தகவல் பரிமாற்ற மையம், சமூக-அரசியல் ஆலோசனைகளின் ஆதார மையம், உண்மையில் இது பாலின நீதியின் சின்னமாகும்.
தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 70 வயது பிலாசினி தேவி என்ற வியாபாரி சொல்கிறார், “எங்கள் வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் இந்த அங்காடி முக்கிய அங்கம் வகிப்பதைக் கருதி, இமா கைதேல், ‘அங்காடிகளின் அரசி’ என்று அழைக்கப்படுகிறது“ என்கிறார். இவர் இங்கு கடந்த 45 வருடங்களாக பழம் விற்று வருகிறார். அவர் மேலும் கூறுகிறார் “இந்த மார்கெட் எனக்கு இரண்டாவது குடும்பம். தினம் இங்கு வருவதை நான் உளமார விரும்புகிறேன்“
மாநிலத்தின் வணிக மற்றும் சமூக-அரசியல் போராட்டங்களில் பெண்களே முன்னணியில் நிற்கும் இந்த மணிபூர் மாநிலத்தில், முழுவதும் பெண்களால் இயக்கப்படும் இமா கைதேல், மணிபூரின் வாழ்க்கையையும் நெறிமுறையையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. வித்தியாசமான கலாசார அனுபவமான இந்த பெரும் பேரரசிகளின் அங்காடி பெண்களின் பொருளாதார அதிகாரத்தன்மைக்கும், பாலின பாகுபாடின்மைக்கும் ஓர் அழகிய உதாரணமாக விளங்குகிறது.