Welcome..! Join us to Develop your Humanity
சுகாதாரப் பணியாளராக ஆக்கபூர்வ சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய உஷாசெளமார்
7வயதில் மலம் அள்ளும் தொழில் 42வயதில் பத்மஸ்ரீ விருது பெறுபவர் உஷா சௌமார், மலம் அள்ளுபவர்களின் வாழ்வை மாற்றியவர்.ஒரே பிறப்பில் நான் இரு வாழ்வை வாழ்ந்தேன் என 42 வயதான உஷா சௌமார் தன்னம்பிக்கை நிரம்பிய மகிழ்ச்சி உணர்வை அவர் குரலில் பகிர்ந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற சிறந்த நபர்களின் பட்டியலில் இடம் பிடித்து, மூன்று பிள்ளைகளின் தாயான இவர் சமுதாய மாற்றத்திற்கான உறுதியை வெளிப்படுத்துகிறார்.
தீண்டாமை என்னும் கருத்தியலில் இருந்து சமுகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என மன உறுதியுடன் சொல்கிறாள்.ஒரு முன்னாள் மலம் அள்ளுபவராக இருந்தவர், இன்று இந்தியாவின் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒர் கலங்கரை விளக்கம் என உஷா சௌமார் ஓரு நிஜ சூப்பர் ஹீரோவாய் எல்லா தரப்பிலும் தெரிகிறார்
"நான் என் வேலையை சற்று இளம்பருவத்திலே தொடங்கிவிட்டேன் அப்போது எனக்கு 7வயது இருக்கும்" என தனது தாயாரால் மலம் அள்ளும் வேலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தனது குழந்தைப் பருவ நாட்களை உஷா விவரிக்கிறார். ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள தீக் என்னும் கிராமத்தில் பிறந்த உஷா மற்றும் அவரது சமூகமும் தீண்டத்தகாதவர்களாக குறிப்பிடப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். .அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள், அவரது மூதாதையர் காலத்தில் இருந்து வழிவழியாய் இத்தகைய மனிதாபிமானமற்ற தொழிலில் ஈடுப்பட்டிருந்தனர் மற்றும் அதிலிருந்து வெளியேறும் வழியும் தெரியாது இருந்தனர். அவர்கள் சில விரைவான தருணத்தில் இச்சாபத்திலிருந்து விடுபட விரும்பியிருந்தாலும், இந்திய கிராமப்புற சமூகம் அவர்களின் சமூக அடுக்கு நிலையை அவர்களுக்கு நினைவூட்டுவதை உறுதி செய்தது.
உஷாவின் ஆரம்ப கால நினைவுகள் என்னவென்றால் அவரது தாய் அதிகாலையில் எழுந்து தனது கூடை, வாளி மற்றும் துடைப்பத்தை எடுத்து கொண்டு கிராமத்தில் உள்ள கழிவறைகளுக்கு செல்லத் தொடங்குவார்.
அவர் மறைமுகமாக கிராம தெருக்களில் நடந்து செல்லும் போது அவரிடம் ஒர் அழியாத அவமான உணர்ச்சி அவரை பற்றிக் கொண்டது. உஷா வளர்ந்தவுடன் அவர் தனது தாயுடன் வேலைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டார். ஏனெனில் அவரையும் கூடிய விரைவில் அந்த தொழிலில் சேர்த்து விடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
"எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களை போன்றோர்கள் அந்த நரக குழியில் மாட்டி வாழ்க்கை முழுவதும் அழுகி கொண்டு இருக்க வேண்டும் என்பது விதி" என்றார் உஷா. தனக்கு எழு வயது இருக்கும் போது மற்ற குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கு செல்லும் போது அவர் தன் தாயுடன் மலம் அள்ளும் வேலைக்கு சென்றார்.அவருக்கு பத்து வயதானதும் அவருக்கு திருமணம் செய்யப்பட்டது.
"நான் ஒரு குழந்தை மணமகள்.எனக்கு பதினான்கு வயது இருக்கும் போது நான் என் மாமியார் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்".
அவரது கணவர் அந்த ஊரில் உள்ள உள்ளுர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.அவரது மாமியாரும் மலம் அள்ளுபவர். வேறு வழியின்றி உஷாவும் அப்பணியை தொடர்ந்தார்.அந்த வேலையை பற்றி ஒரு சிறிதாவது சொல்ல வேண்டும் என்றால் அது ஒர் வெறுக்கத்தக்க வேலை .உஷா அவரது தாய் மற்றும் மாமியார் தங்கள் வாழ்நாட்களில் மற்றவர்களின் அசுத்தங்களை சுத்தம் செய்தனர்.
இவ்விதமாக வாழ்க்கை கழிந்த போதும் அவர்களுக்கு அடுத்த வேலை உணவு நிச்சயமில்லை.அவர்கள் வேலை செய்து முடித்த பிறகு மிகச் சொற்ப கூலியாக பத்து அல்லது 20 ரூபாய் கொடுப்பார்கள் அதை தருவதற்கே தயங்குவார்கள். அவர்களது மாத வருமானம் சொற்ப 200 அல்லது 300ரூபாயை தாண்டாது. குடும்பங்கள் சில சமயங்களில் மிஞ்சிய உணவை தருவார்கள்.துணி வாங்க அவர்ளிடம் பணம் இருக்காது. " நாங்கள் மற்றவர்கள் தந்த துணிகள் அல்லது வேண்டாம் என போட்ட துணிகளை அணிந்தோம்" என்று உஷா பகிர்ந்தார்.
அப்போது உஷாவிற்கு வாழ்க்கை இருண்ட பாதை போல் இருந்தது. தனது பிறப்பு தன்னை தள்ளி விட்ட அவமான புதைகுழியிலிருந்து மீள வழியின்றி இருந்தார். 2003ஆம் ஆண்டு அவர் ஏற்கனவே தாயாக இருந்தார்.தனது மலம் அள்ளும் தொழில் மூலம் வாழ்வை ஓட்டிக் கொண்டு இருந்தார். தனது வாழ்வில் பெரிய மாற்றம் வரும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
முனைவர் பிந்தேஷ்வர் பதக் சுலப் இண்டர்நேஷனல் என்ற அமைப்பில் இருந்து எங்கள் கிராமத்திற்கு வந்து எங்களை மலம் அள்ளுபவர்களை சந்திக்க வலியுறுத்தினார். அதற்கு முன் என் கணவரைத் தவிர எந்த ஒரு ஆணிடமும் பேசும் தைரியம் எனக்கு இல்லை. ஆனால் அவர் எங்களை இன்னும் ஏன் இந்த வேலையை செய்கிறீர்கள் என்று கேட்ட போது நான் பதிலளிக்க வேண்டி இருந்தது.
சுலப் இண்டர்நேஷனல் நிறுவனரான பதக்கிடம் உஷா தைரியமாக "என்னை போன்ற பெண்களை வேறு வேலை செய்ய அனுமதிப்பதில்லை" என்று கூறினார். உஷா தனது மாத வருவாயைப் பற்றி கூறும் போது பதக் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உஷா இப்போதும் நினைவு கூர்ந்தார்.முனைவர் பதக் மாற்று வாழ்க்கை முறையை உஷாவிற்கும் அவர் உடனிருந்தவர்களுக்கும் முன் வைக்கும் போது அவர்கள் ஆச்சரியத்தில் நகைத்தனர்.காலம்காலமாக அப்பட்டமாக சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்களுக்கு வேறு தொழிலில் அமர்த்தப்படுவதென்பது அபத்தமான யோசனை ஆகும். உஷா சமூக சேவர்களோடு அல்வாரின் புறநகர்ப் பகுதியில் உள்ள புறக்கணிக்கப்பட்ட தனது சேரிக்கு சென்றார்.பெண்கள் ஒன்று சேர்ந்து வேறு தொழிலில் ஈடுபடுவதென்பது தங்களுக்கு சாத்தியமற்ற யோசனை என்பதை விளக்க முற்பட்டாள்.
தாங்கள் தையல் வேலை செய்த துணியை யார் வாங்குவார் தாங்கள் காய்கறி விற்றால் யார் வாங்குவார் என்று யதார்த்தமான கேள்விகளை எழுப்பினர்.அதற்கு முனைவர் பதக், சுலப்பின் சார்பாக வாங்குபவர்களை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.மேலும் 1500ரூபாய் மாத சம்பளமாக தருவதாக உறுதியளித்தார் தனது இதயத்தில் தோன்றிய பயம், பாதுகாப்பின்மையை மீறி உஷா அந்த திட்டத்தில் இனைந்தார் மற்ற பெண்களும் அதைப் பின்தொடர்ந்து இனைந்தனர். விரைவில் சுலப் நயீ திஷா என்ற உள்ளுர் அரசு சாரா நிறுவனத்தை முன்னாள் துப்புரவு பணியாளர்களுக்காக டெல்லியில் அமைத்தார்.அங்கு அவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. உஷா விற்கு புதிய வாழ்க்கை உருவாக தொடங்கியது.இவருக்கு இனிமேல் தினமும் மற்றவர்கள் கழிவை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.அவரது வாழ்க்கை தினமும் குளியலுடனும் புதிய துணிகளுடனும் தொடங்கும். பிறகு மையத்திற்கு செல்வார். சிரிப்புடனும் மகிழ்ச்சியுடனும் அந்த பெண்கள் பை தைப்பது ,விளக்கு செய்வது அல்லது ஜாம் செய்வது, ஊறுகாய் மற்றும் அப்பளம் செய்யும் கலைகளை கற்றனர்.மேலும் அவர்களுக்கு தேநீர் மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டது.
அவர் டெல்லியில் இருந்து திரும்பியதும் அவர் மற்ற பெண்களையும் மலம் அள்ளும் வேலையை விட சம்மதிக்க வைத்தார் .தன் மாமியார் உட்பட.ஆனால் ஒரு பெண் அந்த வேலையை விட்டால் வேறொரு பெண் அந்த பணியை செய்ய நிர்பந்திக்கப்படுவார். இது எல்லை இல்லாத ஒர் தீய சுழற்சி போல் தோன்றியது.இந்த பிரச்சினையின் ஆணி வேர் கிராமத்தில் சரியான சுகாதார அமைப்பு இல்லாததுதான். பழைமையான கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருந்தது நல்ல நிலையில் இருந்த எந்த மனிதனும் அதை செய்ய தயாராக இல்லை.அதுமட்டுமின்றி பல நூறு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கும் வழக்கம் அவர்களின் அவலநிலையையும் விரக்தியையும் கூட்டியது.அப்போது தான் சுலப் நிறுவனம் கிராமத்தில் உள்ள எல்லா வீட்டிலும் கழிப்பறைகளை கட்ட வலியுறுத்தியது. அதன் முலம் மலம் அள்ள வேண்டிய தேவை மொத்தமாக இல்லாமல் போனது.உஷா 2003இல் தன்மீது சுமத்தப்பட்ட பணியில் இருந்து வெளியேறினார். அரசு சாரா நிறுவனத்தில் அவர் காட்டிய நேர்மையும் உழைப்பும் அவரை தலைமை பொறுப்பிற்கு கொண்டு சென்றது.அவர் அந்த மையத்தின் தலைவரானார்.நூற்றுக்கணக்கான மக்கள் அவர் தலைமையின் கீழ் வந்தனர்.
அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. இது அவரது வாழ்நாளில் சிறந்த அங்கிகாரம் ஆகும். "அனைவரிடமிருந்தும் அழைப்புகளும் வாழ்த்து செய்திகளும் தொடர்ந்து வருவது தன்னை மகிழ்ச்சியில் ஆற்றியது" என்று உஷா கூறினார்.அவரது தெருவில் உள்ள மக்கள் அவரை மரியாதையுடனும் பிரமிப்புடனும் பார்க்கின்றனர். தனது கிராமத்தில் ஒர் உயர் நிலை பள்ளி தொடங்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு அங்கு நிறைய பெண்கள் பருவ வயதில் பள்ளியை விட்டு விடுகின்றனர். தனது கனவு விரைவில் நனவாகும் என்று அவர் நம்புகிறார்.
"மனிதர்கள் மலம் அள்ளுவதை நம் சமுதாய அமைப்பிலிருந்து மொத்தமாக அகற்றுவது என் நோக்கம். நான் எல்லா பெண்களும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் மூலமே தீண்டாமை இல்லாத ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்" என்று வைராக்கியத்துடன் உரத்த குரலில் உஷா செளமார் கூறினார்.
உஷாவின் வாழ்க்கை நம்பிக்கை இன்றி கஷ்டபடும் அனைவருக்கும் ஒரு உத்வேகம் தருவதாக இருக்கிறது.