Welcome..! Join us to Develop your Humanity
தமிழ்நாட்டில் ஒரு பறவையின் கூட்டை பாதுகாக்க 50 நாட்களுக்கு மேல் தெரு விளக்குகளை எரியவிடாமல் நிறுத்தி வைத்த ஒரு கிராமம்.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொத்தகுடி என்ற கிராமம் ஒரு ஓரியண்டல் மாக்பி-ராபின் பறவை முட்டை இடுவதற்காகவும், அதன் கூட்டை எந்தத் தொல்லையும் இன்றி அமைதியாக வைக்க உதவுவதற்காகவும் 2020 ஜூன் முதல் 50 நாட்களுக்கு மேலாக அதன் தெரு விளக்குகளை நிறுத்தி வைத்துள்ளது.
இப்பகுதியில் தெரு விளக்குகளை இயக்குவதற்குப் பொறுப்பான பொத்தகுடியில் வசிக்கும் கருப்பு ராஜா, பிரதான சுவிட்ச்போர்டிலிருந்து ஒரு சிறிய பறவை பறப்பதைக் கவனித்தபோது தான் இது நிகழ்ந்தது.
“எனது வீடு 35 தெரு விளக்குகளுக்கான பிரதான சுவிட்ச் நிறுவப்பட்ட ஒரு தெருவின் முடிவில் அமைந்துள்ளது. நான் எனது சிறு வயது முதலே மாலை 6 மணிக்கு அவற்றை இயக்கிவிட்டு அதிகாலை 5 மணிக்கு அணைத்து வருகிறேன். ஒரு நாள் பிற்பகல் நான் என் வீட்டை விட்டு வெளியேறும்போது, ஒரு சிறிய நீல நிறப் பறவை சுவிட்ச்போர்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பறப்பதை நான் கவனித்தேன். ஆர்வத்துடன் நான் அருகில் சென்று பார்த்த போது அது குச்சிகளையும் வைக்கோல்களையும் சேகரிப்பதைக் கண்டேன். அது என்ன பறவை என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஒரு கூடு கட்டிக்கொண்டிருந்தது, ”என்கிறார் கருப்பு ராஜா.
அடுத்த மூன்று நாட்கள், அவர் தெரு விளக்குகளை இயக்கச் செல்லும் போதெல்லாம், பறவை அதன் குச்சிகளைக் கைவிட்டு பாதுகாப்பிற்காக பறந்து விடும். ஆனால், நான்காவது நாள், கூட்டில் பழுப்பு நிற புள்ளிகளுடன் மூன்று சிறிய பச்சை-நீல முட்டைகளைக் ராஜா கண்டார்.
பறவையை தொந்தரவு செய்யாமல் அடுத்து வரும் நாட்களில் அந்த பறவை அதே இடத்தில் தஞ்சமடைய அவர் விரும்பினார். ஆனால், அவ்வாறு செய்வதால் 100 வீடுகளுக்கு இடையே வைக்கப்பட்டுள்ள 35 தெரு விளக்குகளை அவரால் இயக்க இயலாது.
“கட்டியிருந்த அந்த கூட்டின் படத்தை நான் எடுத்து வாட்ஸ்அப் குழுவில் எனது வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்த பறவை அதன் முட்டையிடுவதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தை எவ்வாறு வழங்க விரும்புகிறேன் என்பதை விளக்கினேன், மேலும் மின் இணைப்பைத் துண்டிக்க அவர்களின் ஆதரவைக் கேட்டேன். பெரும்பாலான கிராமவாசிகள் இதை இயற்கை தாய்க்கு திருப்பித் தரும் வாய்ப்பாக கருதி ஒப்புக் கொண்டனர். ஆனால், சிலர் ஒரு சிறிய பறவைக்கு இது ஒரு தீவிரமான நடவடிக்கை என்று நினைத்தார்கள், ”என்கிறார் ராஜா.
கூட்டைப் பாதுகாத்தல்
அடுத்த நாள், அவர் கிராம பஞ்சாயத்து தலைவர்களான அர்சுனன் மற்றும் காளீஸ்வரி ஆகியோரை அணுகி அந்த இடத்தை பார்வையிடுமாறு வலியுறுத்தினார்.
“ஒரு பறவைக்காக மின் இணைப்பைத் துண்டிக்க சிறுவன் என்னிடம் கேட்டபோது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனவே, அதை நானே பார்க்க ஒப்புக்கொண்டேன். பறவை கூடு கட்டி முடித்திருந்தது. ஒரு புகலிடத்தை உருவாக்க இலைகள், புல் மற்றும் வைக்கோல்களைச் சுற்றி வைத்திருந்தது. பொது முடக்கத்தின் போது, தங்குவதற்கு இடம் இல்லாமல் பலர் தெருக்களில் கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். பறவைக்கும் இதே நிலையை நான் கொடுக்க விரும்பவில்லை அதனால் மின் இணைப்பைத் துண்டிக்க ஒப்புக்கொண்டேன்", என்கிறார் அர்சுனன்.
சுவிட்ச்போர்டில் தொடர்பு ஏற்படுத்தும் பிரதான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன், பறவைகள் நேரடி மின் இணைப்புடன் தொடர்பு கொள்ளாதவாறு உறுதிப்படுத்த டேப்பால் மூடப்பட்டிருந்தது. தவிர, பஞ்சாயத்துத் தலைவர்கள் வீடு வீடாகச் சென்று இரவில் விழிப்புடன் இருக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
கருப்பு ராஜா கூறுகையில், “பறவை முட்டையிட்டு 40 நாட்கள் ஆகிவிட்டன. இப்போது ஆரோக்கியமான மூன்று குஞ்சுகள் உள்ளன. அவை சிறிய இறக்கைகள் கொண்டவை, மேலும் இறகுகள் வளரத் தொடங்குகின்றன. ”
பொத்தகுடியின் மற்றொரு குடியிருப்பாளரான மூர்த்தி கூறுகையில், “கிராமத் தலைவர் ஒரு பறவையின் காரணமாக தெரு விளக்குகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க போகிறார் என்று கேள்விப்பட்டபோது, அதை நகைச்சுவையாக நினைத்தேன். ஆனால், முட்டையுடன் அதன் கூட்டில் பறவையைப் பார்த்த பிறகு, என் இதயம் உருகியது. அந்த நாள் முதல், நான் அந்தக் கூட்டை பார்க்க ஒவ்வொரு நாளும் சுவிட்ச்போர்டுக்கு வருகிறேன்.
கருப்பு ராஜாவின் கண்ணோட்டத்தில் பார்வையாளர்களால் பறவை தொந்தரவு அடையாமல் இருப்பதை உறுதி செய்ய யாரும் தனியாகவோ பெரிய குழுக்களாகவோ கூட்டுக்கு மிக அருகில் செல்வதில்லை.
பறவைகள் கூட்டைக் காலி செய்த பின்னரே தெரு விளக்குகளுக்கு மின்சாரம் மீட்டெடுக்க முடிவு செய்துள்ளதாக பஞ்சாயத்துத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.