Welcome..! Join us to Develop your Humanity
எல்லையில் சாலை அமைத்து வழிகாட்டும் சோன்ஜோர்
நூறு கைகளால் பெற்று ஆயிரம் கைகளால் விநியோகிக்கவும்’ என்ற பழமொழிக்கு முன்மாதிரியாக விளங்கும் மற்றொரு கொடையாளியான சுல்ட்ரிம் சோன்ஜோர் (Tsultrim Chonjor) - தன் வாழ்நாள் சேமிப்பான ரூ. 57 லட்சம் மற்றும் தனது மூதாதையர் சொத்துக்களை விற்று 38 கி.மீ. சாலையை தனியொருவனாய் அமைத்துக் காட்டியவர்.
பீகார் மாநிலத்து கிராமவாசி தசரத மாஞ்சியின் கதையைப் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. யார் உதவியும் இன்றி தனி மனிதனாய் நின்று, ஒரு சிறு சுத்தியல் மற்றும் உளியை வைத்து ஒரு குன்றை குடைந்து பாதை அமைத்து கொடுத்த பரந்த மனம் படைத்த பாரதியன். பின்னடைவுக்கும் மனசோர்வுக்கும் இடமளிக்காது, விடாமுயற்சியையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் மாஞ்சியின் உண்மைக் கதையை கேட்ட ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும், அது ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு நிகரான ஒரு அர்ப்பணிப்பு மிகுந்த உண்மை சம்பவத்தை தன்னகத்தே கொண்டுள்ளார் மற்றொரு பாரதப் புதல்வன் சுல்ட்ரிம் சோன்ஜோர் (Tsultrim Chonjor) லடாக்கின் ஸான்ஸ்கர் பள்ளத்தாக்கிலுள்ள தொலைதூர கிராமமான ஸ்டோங்டேவை சேர்ந்த ‘மீமே சோன்ஜோர்’ என்று அழைக்கப்படும் 76 வயது நிரம்பியவர் சுல்ட்ரிம் சோன்ஜோர்.
1965 முதல் 2000 வரை மாநில கைவினைப்பொருட்கள் துறையில் பணிபுரிந்த இந்த முன்னாள் அரசு ஊழியர், தான் வாழும் நிலப்பகுதி, பாரதத்தின் மற்ற பகுதிகளில் இருந்து தொலைதூரமாகவும் எளிதில் அணுகமுடியாத வகையிலும் இருந்ததை எண்ணி கவலையுற்றிருந்தார். ஜான்ஸ்கர் வசிக்கும் நிலப்பகுதி, கார்கில் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 11,500 முதல் 23,000 அடி உயரத்தில் அமையப்பெற்றதால், அந்த முழுப் பகுதியும் பற்பல ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் மாநில நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில், எல்லைச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தார்ச்சா (Darcha ) நகரத்திலிருந்து, 16,500 அடி உயரத்தில் உள்ள ஷிங்குலா மலைப்பாதை வழியாக லடாக்கிலிருக்கும் ஸான்ஸ்கரின் நிர்வாக மையமான படூம் நகரம் வரை 140 கி.மீ. சாலையின் கட்டுமானத்தை நிறைவு செய்தது. மேலும், படூமிலிருந்து அந்த சாலை லே மாவட்டத்தில் உள்ள நிமூ எனும் கிராமதிற்கு செல்கிறது. தற்போதைக்கு, சிறியரக வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல முடியும் என்றாலும், NPD (Nimoo-Padum-Darcha) சாலை குடிமக்களின் நோக்கங்களுக்காக மட்டுமல்லாமல், நாட்டின் உள்கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும்.
2019 ஆம் ஆண்டில் சீன ஊடுருவல்களுக்குப் பிறகு, இந்திய படைகளின் துருப்புகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதை எளிமைப்படுத்துவதோடு அல்லாமல் வழக்கமான ராணுவ நடமாட்டங்களை உறுதி படுத்துவதாகவும் இந்த சாலை அமையும் என இந்திய ராணுவத்தால் பெரிதும் கருதப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் மூத்த B.R.O. அதிகாரி ஒருவர், "தற்பொழுது கார்கிலை அடைவதற்கு உள்ள ஒரே வழி, 474 கி.மீ நீளமுள்ள மணாலி-லே நெடுஞ்சாலை மட்டுமே. ஆனால் ஷிங்குலா கணவாயுடன் தர்ச்சா சாலையை இணைப்பதன் மூலம் இந்த தொலைவு கணிசமான அளவில் குறைவதால் இராணுவ வாகனங்கள் செல்வதற்கு இந்த புதிய சாலையே பிரதான தேர்வாக இருக்கும்," என்று கூறியது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக, மே 2014-இல் அங்கு சூழ்நிலைகள் வேறு விதமாக இருந்தன. இந்தப் பகுதியை மற்ற பிராந்தியங்களுடன் இணைக்கும் சரியான சாலை இணைப்பு இல்லாதது மிகவும் சிக்கலான பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தது. 292 கி.மீ தூரமுள்ள தர்ச்சா-ஷின்குலா-படூம்-நிமூ சாலை 2001-இல் திட்டமிடப்பட்டது. துரதிஷ்டவசமாக, துறைசார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், அந்நிலப் பகுதியில் சிறிய நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.
இவ்வாறு இருக்கையில், மற்றவர்களை போல் மீமே சோன்ஜோர் ஒரு காத்திருக்கும் மனிதர் அல்ல. தனது முயற்சிகள் தன் சக கிராமவாசிகளுக்கு மட்டுமல்லாமல் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்றவர்களின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மே 2014 முதல் ஜூன் 2017 வரை, ஜம்மு-காஷ்மீர் பக்கம், ஷிங்குலா கணவாய் பிராந்தியத்தில் உள்ள ராம்ஜாக் எனும் பகுதியில் இருந்து ஸான்ஸ்கர் பிராந்தியத்தில் முதலில் வரும் கார்கியாக் என்ற பெயர்கொண்ட ஒரு முறையான கிராமத்திற்கு 38 கி.மீ நீளமுள்ள சாலையை அமைப்பதற்கான முயற்சிகளை மீமே சோன்ஜோர் தனியாக நின்று வழிநடத்தினார்.
தன் கையிலிருந்த வாழ்நாள் சேமிப்பு பணம் ரூ. 57 லட்சத்துடன், தன் மூதாதையர் வீட்டை விற்று ஒரு ஜே.சி.பி இயந்திரத்தையும் , ஐந்து கழுதைகளையும் வேலையில் இறக்கி சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். பின்னர், எல்லை சாலைகள் அமைப்பு (BRO) அந்த சாலையை விரிவு படுத்தும் பணியை எடுத்துக்கொண்டது. சாலை அமைப்பதற்கு ஆதரவாக மீமே சோன்ஜோர் உள்ளூர் மக்களிடம் நிதி பெற்றார். அவர்களில், உள்ளூர் கவுன்சிலர் ரூ. 5 லட்சமும், உள்ளூர் வணிகர் ஒருவர் 2.5 லட்சமும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. "மற்றவர்களின் வேதனையையும் துன்பத்தையும் கண்கூடாகப் பார்த்ததே இந்த சாலையை நிர்மாணிக்க என்னைத் தூண்டியது" என்று மீமே சோன்ஜோர் கூறுகிறார்.
சாலை கட்டுமானத்தை தொங்கியவேளையில் ஒருசில ஆரம்ப சவால்களை சோன்ஜோர் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த சாலையை நிர்மாணிக்க தேவையான நிதி எங்கிருந்து பெறுகிறார்கள் என்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினர் விசாரித்தனர். "எனது நிதி ஆதாரத்தைப் பற்றி நான் அவர்களுக்கு விளக்கமளித்தேன். அதற்கு மேல் ஆட்சேபனை எதுவும் இல்லை" என்று மீமே சோன்ஜோர் கூறுகிறார்.
மேலும், குறிப்பிடத்தக்க காலநிலை சவால்களும் இருந்தன. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 3500 மீட்டர் உயரத்தில் சாலை அமைப்பது கடினமாக இருந்தது. தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அதே ஸான்ஸ்கரில் வாழ்ந்திருந்தாலும், மீமே சோன்ஜோரின் ஆரோக்கியத்தை அந்த சாலைப்பணி பாதித்தது. ஏனைய சவால்களில், நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை குறுகிய வேலை காலமும் அடங்கும். ஏனெனில், கடுமையான குளிர்கால மாதங்களில் அந்த பகுதிகளின் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரி செல்சியஸாக குறையும் போது, சாலை அமைக்கும் பணியை தொடர்வதற்கு துளி கூட வாய்ப்பில்லை. இருப்பினும், இதையெல்லாம் அவர் பொருட்படுத்தவேயில்லை.
தனது வாழ்நாள் சேமிப்பை முழுமையாக சாலைக்கெனவே செலவழித்தபின், மீமே சோன்ஜோர் எவ்வாறு பொருளாதார ரீதியாக தன் வாழ்க்கையை சமாளிக்கிறார் எனும் வழக்கமான கேள்விக்கு, "நான் எளிமையான வாழ்க்கையை நம்புகிறவன். எனவே, எனக்கு பெரிய நிதி உதவி எதுவும் தேவையில்லை. ஒருவருக்கு உண்மையில் எவ்வளவு தேவை? நான் அரசாங்கத்திடமிருந்து பெறும் வழக்கமான மாத ஓய்வூதியத்தில் நான் வாழ்கிறேன்,” என்று அவர் பதிலளிக்கிறார்.
குடியரசு தினத்தன்று, கார்கிலில் உள்ள 'லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்' மற்றும் மாவட்ட நிர்வாகமும் இனைந்து, படூமுக்கும் தர்ச்சாவிற்கும் இடையேயான பாதையை அமைக்க தனிமனிதனாய் இருந்து ஒரு அசாதாரண பங்களித்தமைக்காக, மீமே சோன்ஜோரை கௌரவித்தன. மேலும், அவரை பொது நலனில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் சோன்ஜோரின் சமர்ப்பணத்தையும் வெகுவாகப் பாராட்டின. இவ்வாறு தன்னலம் கருதாத பண்புடையாளர்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருவது நமக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.