Welcome..! Join us to Develop your Humanity
ஜார்கண்டின் தண்ணீர் மனிதர்
ஸைமன் ஒரொன் - அறுபது ஆண்டுகளாக மரம் நடுவதற்கும் நீர் சேமிப்பிற்கும் வாழ்க்கையை அற்பணித்தவர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்த 88 வயது பெரியவர், பெரிய அளவில் மேற்கொண்ட மரம் நடுதல் மற்றும் நீர் சேமிப்பு முயற்சியினால், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆயிரமாயிரம் கிராமவாசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். கடந்த 60 ஆண்டுகளில் ஸைமன் ஒரொனின் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றம் ஏதுமில்லை.
88 வயதில், அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து, வயலுக்கு சென்று, கிராமத்தில் தான் நட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டு, பின்னர், பல இன்னல்களின் நடுவே, தான் வளர்த்த காடுகளை சுற்றி வந்து, நண்பகல் உணவிற்கு வீடு திரும்புவார்.
சுற்றுவட்டாரத்தில் பாபா என்று அழைக்கப்படும் ஸைமன் ஒரொன், ஜார்க்கண்டின்
நீர் மனிதன் எனவும் ஊடகங்களால் அழைக்கப்படுகிறார்.
கிணறு மற்றும் குளம் வெட்டுதலை மேற்கொண்டு மழை நீர் சேகரிப்பு முறையை ஏற்பாடு செய்தவர். ஸைமன் ஒரொன், ரான்ச்சி நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் பீரோ பகுதியில் உள்ள காக்ஸி தோலீ என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். பீரோ பகுதியிலுள்ள 51 கிராமங்களில், இயற்கை தாவரங்களை பாதுகாப்பதில் பல தசாப்தங்கள் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. முரணாகத் தோன்றினாலும், பச்சைப்பசேலென இருக்கும் காடுகள் நிறைந்திருந்தாலும், ஜார்க்கண்ட் மாநிலம் தண்ணீர் பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கியிருந்தது. கண்மூடித்தனமான காடழிப்பு மற்றும் ஒழுங்கற்ற வானிலை மாற்றங்கள் மாநிலத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தி, விளைச்சலை நாசம் செய்தன. இது போன்ற பல அழிவுகளை சந்தித்த போதிலும், ஸைமன் அவர்கள் காடுகள் வளர்ப்பதிலிருந்தும், நீர் சேமிப்பிலிருந்தும் தனது இலக்கை விட்டுவிடவில்லை. அவர் முன்பெடுத்த முயற்சி இன்றும் பலன் தருகின்றன. பயன்பெற்ற 51 கிராமங்களும் தங்களது விவசாய மறுமலர்ச்சிக்கு அவர் ஏற்படுத்திய நீர் சேகரிப்பு முயற்சிக்கு கடமைபட்டிருக்கின்றன.
இன்று, அவருடைய கிராமம் மாநிலத்தில் உள்ள விவசாய உற்பதி மையங்களில் ஒன்று. அங்கிருந்து 25,000 டன் காய்கறிகள் ஜார்க்கண்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் அருகாமையிலுள்ள இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
ஸைமன் அவர்களின் பயணம் 1961-ல் துவங்கியது. பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டு, பெற்றோருக்குத் துணையாக வயலில் வேலை செய்ய முனைந்தார். அவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்தவிடத்தில், வானம் பொய்த்து பூமி வறண்டு கிடந்தது. நீர் பற்றாக்குறை அவரது பூமிக்கு விரக்தியையும் பசியையும் விளைவித்தது.
அங்கு வாழும் பழங்குடியினர் நீண்ட காலம் தொட்டு ஒரே பயிராக நெற்பயிரை மட்டுமே வளர்த்தனர். அதிலும் பல முறை தோல்வியையே சந்தித்தனர். காடுகளை அழிப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் தீங்கினை அவர்கள் அறியவில்லை. ஒவ்வொரு வருடமும், நெல் விதைத்த பின், ஸைமன் அவர்களின் தந்தையாரும், மாமாவும், நகரத்திற்கு வேலை தேடிச் சென்றனர். ஸைமன் அவர்கள் குடும்பத்தை பேணிக்காக்கவும், வயலில் வேலை செய்யவும் முற்பட்டார்.
வறுமையின் கொடுஞ்சுழலில் வளர்ந்தார். விளைச்சல் குன்றியதைப் பார்த்தார். அதனால் வயதில் முதிர்ந்தோரும், பச்சிளங்குழந்தைகளும் பசிக்கு இரையாவதைக் கண்டார். இளவயது ஸைமன், இந்த வாழ்க்கை மற்றும் இறப்பாகிய சுழற்சியை, வருடந்தோறும் நிகழ்வதை கண்டார்.
'சிறுவனாக இருக்கும் போது, நான் பீரோ பகுதியில் மரங்களை வெட்டி பெரிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அந்த பெரிய இயந்திரங்களை பார்த்த போது, முதலில் நான் கவரப்பட்டேன். ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு, 1961-ல் விளைச்சல் முழுவதும் தோல்வியுற்றபோது, காடுகளை அழிப்பதால் ஏற்படும் அளவற்ற தீங்கினை நான் உணர்ந்தேன். காக்ஸி தோலி கிராமத்து வாசிகளை அழைத்து, சிந்தனையின்றி மரங்களை வெட்டுவதற்கு எதிராக துணைநிற்கும்படி விழைந்தேன்,' எங்கிறார் ஸைமன் அவர்கள்.
'எங்கள் கிராமத்தில் முதலில் துவங்கினோம். செவி வழி செய்தி பரவியதால் மற்ற கிராமங்களும் ஒன்று சேர்ந்தன, மரம் கடத்துபவர்களை எதிர்ப்பது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. ஆனால், காடுகளை சூரையாடுபவர்களையும், மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களையும் முறியடித்தோம்,' என தொடர்ந்தார் ஸைமன் அவர்கள்.
அவருடைய முயற்சிகள், நேரம் கடந்தாலும், பயனளித்தன. காடுகளை வளர்ப்பு செய்வது மட்டுமின்றி, ஸைமன் அவர்கள், தன் பகுதியில் உள்ள, 51 கிராமங்களுக்கும் வருடந்தோறும் நீர் கிடைக்க வழிவகை செய்தார். அவருடைய ஆக்கப்பூர்வமான யுக்திகளால் இந்த செயற்கரிய செயல் சாத்தியமாயிற்று.
மழைநீர் சேகரிப்பு மற்றும் பருவகால நதிகளில் அணை கட்டி, நீரோட்டத்தை தடுத்து, நீர் சேமிப்பு பணியினை செவ்வனே முடித்தார். 1960-ல் அவர் கட்டிய முதல் அணை தன்னுடைய கிராமத்திற்கு அருகில் உள்ள நர்பட்னாவில் தான். அடுத்த மழைக்காலத்தில் அந்த அணை அடித்து செல்லப்பட்டது. ஆரம்பகாலத்தில், பல அணைகள் மழைக்கால வெள்ளத்தைத் தடுக்க முடியாமல் உடைந்து போயின. பிறகு, நீர் வளத்துறையின் உதவியால், அணைகளின் அளவு மற்றும் உயரம் அதிகமாக்கி கலவையால் வலுவூட்டப்பட்டன.
அவ்வாறு உருவாக்கப் பெற்ற அணைகள் விரிசல் காணவில்லை. ஜாரியா, நர்பட்னா, காரியா ஆகிய இடங்களில் மட்டுமின்றி, கைகாட், தேஷ்பலி மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலும், ஸைமன் மற்றும் அவரது குழுவினர் அணைகள் கட்டினர். நீர் தேக்கங்களை அணைகளுடன் இணைத்து, கிராமவாசிகளுக்கு நீர் பற்றாக்குறை இன்றி கிடைக்க வழி செய்யப்பட்டது.
'நாங்கள் கடினமாக உழைத்துக் காடுகளை மீண்டும் நிலைநாட்டியுள்ளோம். காட்டு தெய்வங்களின் அருளினால் தான் 2100 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுதோறும் நெல் மட்டுமின்றி மேலும் மூன்று பயிர்களை பயிரிட்டு, 1600-க்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இதனால் இடம்பெயர்வு இல்லை. மேலும், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவிற்குக் காய்கறிகள் வினியோகம் செய்கிறோம். காடுகள் வளர்ப்பதாலும், நீர் சேமிப்பதாலும் தான் இவ்வாறு எங்களால் செய்ய இயலுகிறது,' என்கிறார் ஸைமன் அவர்கள்.
பத்மஸ்ரீ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி கருத்து கேட்ட போது, அவர் புன்முறுவலுக்கிடையே, 'ஊடகத்தில் இருக்கும் நண்பர் மதியம் கூப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கும்வரை, எனக்கு இந்த விருது பற்றி ஒன்றும் தெரியாது. சமூகத்தின் ஒத்துழைப்பால் தான் இதனை செய்ய முடிந்தது. இந்த விருதை நான் தனியாக எவ்வாறு பெற முடியும்? இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட அனைவருக்கும் தான் இந்த பத்மஸ்ரீ,' என்றார்.
எளிய வாழ்க்கை மற்றும் உயரிய சிந்தனை என்று தான் ஸைமன் ஒரொன் அவர்களின் வாழ்க்கையை விவரிக்க இயலும். அவர் வாழ்க்கையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. சிறு வீட்டில் வாழ்ந்து கொண்டு, ஆண்டுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் என்ற குறிக்கோளுடன் தொடற்கிறார். 'நடப்பதற்கு சக்தி மற்றும் வேலை செய்ய வலுவிருக்கும் வரை, நான் மரக்கன்றுகள் நடுவேன். இந்த மரங்கள் நமக்கு உயிர் கொடுக்கின்றன. இவைகளைப் பாதுகாப்பது நம்முடைய கடமை. பசுமை புரட்சி மற்றும் வளர்ச்சிக்காக, மரங்களை நமது கூட்டாளிகளாக்க வேண்டும்,' என்று முடிக்கிறார்.