Welcome..! Join us to Develop your Humanity
முடியாததை முடித்து காட்டியது தந்தை மற்றும் மகளின் அர்ப்பணிப்பு. பாழ் நிலம் மற்றும் தரிசு நிலங்கள் உயிரி / இயற்கை வேளாண்மை மூலம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன.
ஒரு துண்டு நிலமானது, ஒவ்வொரு நாளும் வாடியபடியே தனது மரணத்தை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அந்த நிலம் இருந்த பகுதி, ஒடிஷா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தில், ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்து, இன்று மெல்ல சீரழிவை சந்தித்தித்துக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அந்த பசுமை காடு, தனது வளமான மரங்களை விவசாயத்திற்காக இழந்து கொண்டு இருந்தது. பயிர் வளர ரசாயன உரம், பூச்சி கொல்லி பயன்படுத்துவதன் மூலம் நிலத்தின் வளம் குன்றியது.
பல ஆண்டுகளாக வரம்பு மீறிய ரசாயன பயன்பாடு நிலத்தை மலடாக்கி விட்டது. நிலத்தை மீட்டு எடுக்கவே முடியாது, அது மரணித்து விட்டது. ஆனால் முடியாததை முடித்து காட்டிட, சாத்தியமற்றதை சாதித்து காட்டிட தந்தையும் மகளும் உறுதி எடுத்தனர்.
அவர்கள்தான் தந்தை ராதா மோஹன் மற்றும் அவரது மகள் சபர்மதி. கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு முன்பு, திரு ராதா மோகன், தரிசான அந்த துண்டு நிலத்தை வாங்கி, இயற்கை விவசாய நுட்பங்களை செய்து அதற்கு புத்துயிர் கொடுக்க தொடங்கினார் .
“நானும் எனது தந்தையும் ஒருபோதும் அவைகளை தரிசு நிலங்கள் என்று நம்பவில்லை. ஆனால், அவை புறக்கணிக்கப்பட்டு வீணடிக்கப்படுகின்றன. எனவே அதை மாற்ற நாங்கள் இறங்கினோம்,” என்று சபர்மதி கூறுகிறார். அவர்கள், தங்கள் வாழ்க்கையை இப்பகுதியின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கு அர்ப்பணித்தனர்.
அந்த நேரத்தில், இயற்கை விவசாயம் கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று. எனவே அவர்களுடைய பயணம் முழுவதிலும், தொடர்ச்சியான ஊகங்களையும், அவநம்பிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இருவரையும் வீழ்த்தும் அளவுக்கு இது எதுவும் வலுவானதாக இல்லை.
ஆரம்பத்தில், கிட்டத்தட்ட அனைவரும் எங்கள் முடிவுக்கு எதிராக இருந்த்தார்கள். நாங்கள் சந்தித்த ஒவ்வொரு நிபுணரும், இந்த பணியை மேற்கொள்வதில் அவநம்பிக்கையையே வெளிப்படுத்தினர். இயற்கை விவசாய, முறைகள் மூலம் அத்தகைய நிலத்தை புதுப்பிக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால், நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அத்துடன் பல்வேறு இயற்கை விவசாய நுட்பங்களை தொடர்ந்து பரிசோதித்தேன். மூன்று வருட கடின உழைப்புக்குப் பிறகு, முடிவுகள் மெதுவாகத் தெரிந்தன. விரைவில் அது பசுமையான புற்களால் மூடப்பட்டது, இது பூச்சிகளை உள்ளே வர ஊக்குவித்து, சுற்றுச்சூழல் சமநிலை மீட்டெடுக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆனால் இந்த வெற்றி இருவருக்கும் ஒரு ஆரம்பம் மட்டுமே. அந்த ஒரு துண்டு நிலத்திலிருந்து, இப்போது 90 ஏக்கருக்கும் அதிகமான இயற்கை விவசாய சாகுபடிக்கு விரிவடைந்துள்ளனர். அங்கு 100 வகையான காய்கறிகளையும் 500க்கும் மேற்பட்ட நெல் வகைகளையும் வளர்க்கின்றனர். அவர்கள் இப்பகுதியில் 3 மழைநீர் சேகரிப்பு குளங்களை கட்டியுள்ளனர், அதே நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட விதமான தாவரங்கள் வசிக்கும் 5000 ஏக்கர் வனப்பகுதியையும் பாதுகாத்துள்ளனர்.
ஒரு பொருளாதார பேராசிரியராக தொடங்கி, இப்போது ஓய்வுபெற்ற மாநில தகவல் ஆணையராக, இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான 77 வயதான ராதா மோகன், கடந்த பல பத்தாண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
என் வாழ்நாள் முழுவதும், ஒரு தந்தை உட்பட பல பொறுப்புகளில் நான் பயணம் செய்திருக்கிறேன். மேலும், அந்த பொறுப்புகளில் பொதுவான காரணி எப்போதும் சமூக மாற்றத்தை வளர்ப்பது மற்றும் வழிநடத்துவதாகும். எனவே ஓய்வுக்குப் பிறகு, இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த எனது ஈடுபாடு இயல்பாகவே வந்தது. நான் என்ன செய்கிறேன் என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டாலும், சாத்தியமற்றது என்பதற்கு அவர்களின் வரையறையானது, அதிக சாத்தியக்கூறுகளுக்கான எனது நுழைவாயில் ஆகும் என்பதை நான் அறிவேன். எனது முதல் தரிசு நிலத்தில் செய்த வேலை, அந்த விமர்சனங்களை தவறு என்று நிரூபிப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்,” என்று அவர் கூறுகிறார்.
ஆகவே, சாத்தியமற்றது என்று தோன்றிய விஷயம், ஒரு வருடத்திற்குப் பிறகு சாத்தியமானது. ராதா மோகன், தனது மகள் சபர்மதியின் உதவியுடன், சம்பவ் (பொருள் - சாத்தியமானது) என்ற இலாப நோக்கற்ற அமைப்பைத் தொடங்கினார். இயற்கை வேளாண்மை நுட்பங்கள் மற்றும் விதைகளை பரிமாறிக்கொள்வது குறித்து தங்களை பயிற்றுவிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இது ஒரு வள மையமாகவும், அறிவுக்களஞ்சியமாகவும் விளங்குகிறது
சம்பவ் அமைப்பின் இடைவிடாத முயற்சிகளின் மூலம், கருப்பு அரிசி, தடி அவரை (winged beans), ஹேக் பீன்ஸ், காம்பு கத்திரிக்காய் (t-clove beans), வாள் அவரை (sword beans) போன்ற உள்நாட்டு வகை தானியங்கள் மற்றும் காய்கறிகள் புத்துயிர் பெற்றன. இந்த மாற்றம் நயாகர் மாவட்டத்தை சுற்றி உள்ள 60 கிராமங்களில் மட்டுமல்லாமல் மாநிலம் மற்றும் நாடு முழுவதும் பரவிற்று.
“ஆயிரக்கணக்கான விவசாயிகளை, சம்பவ் இயற்கை விவசாயிகளாக மாற்றியது. இயற்கை வேளாண்மை போதுமான லாபம் ஈட்டாது என்ற பொதுவான எண்ணத்தை மெதுவாகவும், உறுதியாகவும் மாற்றியமைக்கிறது," என்கிறார் 51 வயதான சபர்மதி. தனது நேரத்தை சம்பவிற்கு அர்ப்பணிக்க, 1993ல் ஆக்ஸ்பாமில் திட்ட அதிகாரியாக தனது வேலையை விட்டு விலகினார்.
ஜனவரி 25, 2020 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, வேளாண் துறையில் அவர்கள் செய்த பணிக்காக, இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவில் கவுரவமான பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்படடது. சீரழிந்த நிலத்தை ஒரு பரந்த உணவுக் காடாக மாற்றுவதில் அவர்களின் சாதனை, நிலையான வளர்ச்சி மற்றும் பாலின நீதி என பிற துறைகளிலும் சம்பவின் பணிகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டன.
இது ஒரு மரியாதை, ஆனால் அது ஒரு தனிநபருக்கானது மட்டுமல்ல. இந்த விருது பூமியின் புத்துயிர் பெற உதவுவதற்காக, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அனைத்து இயற்கை விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குமானது. பல பத்தாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு, இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் இறுதியாக அதன் தகுதியான அங்கீகாரத்தைப் பெறுகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் ராதா மோகன்.
இயற்கை வேளாண்மையில் இந்தியாவின் எதிர்காலத்தின் வரைபடத்தை உருவாக்க முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணித்த பின்னர், 70வது வயதை கடந்தும், சம்பவ்வின் நிறுவனர் மற்றும் கவுரவ உறுப்பினராக தனது பங்கைத் தொடர்ந்து செய்கிறார்
சம்பவ் அமைப்பு மற்றும் அவரது தந்தையின் வேலையைப் பற்றி நிறைவாக சபர்மதி பேசுகையில், “உண்மையில், சுற்றுச்சூழலை இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக மாற்றுவதற்கான, என் தந்தையின் முழு பயணத்திலும், சம்பவ் ஒரு சிறிய புள்ளிதான். அவரது இந்த போராட்டம் என்னை மட்டும் இந்த பணியை நோக்கி நகர்த்தவில்லை. நேரம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சீரழிவுக்கு எதிரான போரில் சேர, என்னுடன் இன்னும் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது.”