Welcome..! Join us to Develop your Humanity
மந்திரா பருவாவின் (Mandira Baruah) - 16 வயதில் திருமணம், 32 வயதில் கணவனை இழந்தவர்- வாழ்க்கைப் போராட்டம் கடினமானதாக இருந்தாலும் 10,000 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை உயர்த்த உதவியுள்ளது.
அஸ்ஸாமில் உள்ள ஜோர்ஹாட்டில் வெறும் 16 வயதே ஆகி இருந்த மந்திரா பருவாவுக்கு (Mandira Baruah) அவரது பள்ளி முதல்வரே மந்திராவிற்கான திருமண யோசனையை அவரது குடும்பத்திடம் அளித்தார். அவளும் ஒப்புக்கொண்டாள், திருமணமும் நல்லபடியாக முடிந்தது. திருமணமான அன்று இரவு, கணவருக்கு இதய பிரச்சினை இருப்பது அவளுக்கு தெரிய வந்தது. அவரது மாமியார் இரண்டு விஷயங்கள் - வீட்டு சாவி மற்றும் கணவரின் ஆயுள் காப்பீட்டுக் திட்டத்தை ஒப்படைத்தார். இத்தனை ஆண்டுகள் மாமியார் பார்த்துக் கொண்டதைப் போல, மந்திராவும் பொறுப்பாக பார்த்துக்கொள்வாள் என்று எதிர்பார்த்தார். அவரது கணவர் தான் திருமணத்திற்கு தயாராக இல்லை எனவும் தனது தாயாருக்காகவே திருமணத்திற்காக ஒப்புக் கொண்டதாகவும் கூறினார். அவர் அவளிடம் ஒன்று தன்னுடன் வாழலாம் அல்லது அவள் திருமண வாழ்க்கையில் இருந்து சுதந்திரமாக வெளியேறிக் கொள்ளலாம் என்று இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கூறினார். மந்திரா ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அவள் செய்தாள். அவள் கணவனோடு வாழ ஆரம்பித்தாள்.
அவரது கணவர், அஸ்ஸாம் அரசாங்கத்தின் நீர்வளத் துறையில் நிர்வாகப் பொறியாளராக ஒரு நல்ல பொறுப்பில் இருந்தார். திருமணத்தின் ஆரம்ப ஆண்டுகளில், அவரது உடல் நிலை நிர்வகிக்கத்தக்கதாக இருந்தது. பிறகு மெல்ல மெல்ல அவர் நடப்பதும் நகர்வதும் கடினமாகத் தோன்றிய பின், அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவர்கள் தங்களது 10 வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு முன்பே, அவருக்கு படுக்கை ஓய்வு மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டது. கணவனைப் பார்த்துக் கொள்வதிலும், தங்கள் மகனை வளர்ப்பதிலும் அவர் தனது வாழ்க்கையின் அடுத்த பத்தாண்டுகளை அர்ப்பணித்தாள்.
"நான் என்னைக்கண்டு குறை கூறவோ பரிதாபப்படவோ நேரமில்லை. மாறாக எனது சூழ்நிலைகளை நான் சமாளிக்க வேண்டியிருந்தது, ”என்று அவர் நினைவு கூர்ந்தார். நிதி பற்றாக்குறையை உணர்ந்தாள், காலப்போக்கில், பண இருப்புக்களும் குறையத் தொடங்கின. அவர்களது குடும்ப வீடு அடமானம் வைக்கப்பட்டு விற்கப்பட வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. அவர்கள் வாடகைக்கு ஒரு சிறிய வீட்டிற்கு மாறினர். அவள் வீட்டில் இருந்து, வீட்டுக் கடமைகளை நிறைவேற்றி, கணவன், கைக்குழந்தையாக இருக்கும் மகன் மற்றும் மாமியார் ஆகியோரை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் அவளால் ஒரு வேலைக்கு கூட செல்ல முடியவில்லை.
சுய மரியாதையுடன் இருந்ததால், அவள் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அணுகவில்லை, மேலும் தன் பெற்றோர்கள் தனது ஒரே மகளுக்கு தவறான முடிவை எடுத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதை இவள் விரும்பவில்லை. திருமணத்தின் ஆரம்ப காலகட்டத்திலேயே மந்திரா தனது சொந்தக் காலில் நின்று தன் குடும்பத்திற்கு எந்த கஷ்டமும் கொடுக்கக்கூடாது என்று உணர்ந்திருந்தாள்.
அவரது கணவர் சக்கர நாற்காலியில் இருந்தார், அவருக்கு செவிலியர் பராமரிப்பு தேவைப்பட்டது. அவரை தினமும் ஈ.சி.ஜி ஸ்கேன், ஊசி மற்றும் மருந்துக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஒரு முழுநேர செவிலியரை பணிக்கு வைக்க முடியாததால், மந்திரா உள்ளூர் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் நோரென் தத்தாவின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு குறுகிய பயிற்சியை மேற்கொண்டார். சமையல்வேலை, துப்புரவுவேலை, தோட்டவேலை, குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு வேலை என்பதைத் தவிர, அவர் ஒரு செவிலியராகவும் பணியாற்ற ஆரம்பித்தார். அவர் ஒரு மூத்த நிபுணரின் கீழ் இருதயவியல் உதவியாளராக பகுதிநேர வேலை செய்தார். சில கூடுதல் வருமானத்தை ஈட்ட, பேக்கிங், மலர் ஏற்பாடுகள் மற்றும் பிறந்தநாள் விழாக்களை ஏற்பாடு செய்தல் போன்ற பல வீட்டில் செய்யும் வேலைகளை முயற்சித்தாள். அவர் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு ஒரு இலகுரக வாகனம் வாங்க கடன் வாங்கினார். இது தனது கணவரை சக்கர நாற்காலியில் வைத்து சோதனைக்கு அழைத்துச் செல்ல அவளுக்கு எளிதாக இருந்தது. இந்த நேரத்தில், அவர் ஒரு தைரியமான முடிவை எடுத்தார். மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் வாகன ஓட்டுநராக பதிவு செய்ய அவள் முடிவு செய்தாள்.
அவர் கூறுகையில், "இவை நான் தொடர்ந்து தனக்குத்தானே சவாலாக இருந்து, கனவில் கூட நினைக்காத வேலைகளை முயற்சித்து எனது இலக்கை அடைய சுயமரியாதையுடன் என் குடும்பத்தின் நலன்களைப் பாதுகாப்பதாகும்."
அவர் 28 வயதாக இருந்தபோது, அவரது கணவருக்கு அரசாங்கத்தால் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நிலம் வழங்கப்பட்டது, அதில் அவர் தனது வீட்டைக் கட்டிக் கொள்ளலாம், மேலும் கணவர் ஓய்வு பெறும் வரை அங்கேயே வசித்து, பின்னர் அதை அரசாங்கத்திடமே திருப்பித் தரவேண்டும். மந்திரா இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். அவர் ஆறு மாதங்கள் பூந்தோட்டம் ஒரு காய்கறித் தோட்டம் மற்றும் ஒரு சிறிய குடிசை ஆகியவற்றைக் கொண்டு ஒரு சிறிய சோலையை உருவாக்கினார். இந்த ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு தரிசு நிலத்திலிருந்து அவள் உருவாக்கியதைப் பார்க்க மக்கள் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வரத் தொடங்கினர்.
அவளுக்கு வந்த அனுதாபம் மற்றும் புகழின் அலை அவளால் உண்மையில் மதிப்பு மற்றும் தகுதியை உருவாக்க முடியும் என்பதை உணர வைத்தது. இது தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றிய சிந்தனையை உருவாக்கியது. இதனால், சத்சரியின் யோசனை பிறந்தது. ஆகவே, 2001 ஆம் ஆண்டில் தனது கணவர் இறந்த பிறகு அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்தபோது, அவர் 'சத்சரி' தொடங்கத் தயாராக இருந்தார். அதாவது நேர்மை மற்றும் கண்ணியம் என்று பொருள். மேலும் பெண்களை மேம்படுத்துவதற்காக அறிவு, திறமை மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட அவரது தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு இது ஒரு பொருத்தமான பெயராக இருந்தது.
2002 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட சத்சரி இயற்கையாகவே வளர்ந்து, ஏராளமான புரவலர்களிடமிருந்து நிதியுதவியையும் ஆதரவையும் பெற்றது. மந்திரா விவரிக்கையில், "என்னைச் சுற்றியுள்ள பெண்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் வேலைகளை செய்துகொண்டு இருந்தேன். சத்சரியில் எத்தனை பெண்கள் உள்ளார்கள் என்பதை பற்றி நான் யோசித்ததே இல்லை, 2010 ஆம் ஆண்டில் 10,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர் என்று எனது குழு என்னிடம் கூறியபோது திகைத்துப் போனேன். ”
அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் வரத் தொடங்கியபோது, மரியாதைக்குரிய வேலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று கோரியபோது, அவர் தனது சொந்த அனுபவத்திலிருந்து, அடிப்படை நர்சிங் பராமரிப்பில் அவர்களுக்கு பயிற்சி அளித்தார். அவர் ‘மந்திரா சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை அமைத்து, அங்கு பெண்களுக்கு மருத்துவ இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் வேலை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. 2010 இல் அமைக்கப்பட்ட இது ஒவ்வொரு ஆண்டும் 25-30 சிறுமிகளுக்கு பயிற்சி அளித்தது. செவிலியர் பள்ளி அவளுக்கு நிதி பாதுகாப்பை வழங்கியது, அதே நேரத்தில் மற்ற முயற்சிகளைத் தொடர அவளுக்கு வழிவகுத்தது.
இன்றுவரை, கடந்த மற்றும் தற்போதைய உறுப்பினர்களின் குழுவுக்கு சொந்தமான தனது வேலையின் வேகத்தை குறைக்காமல் அப்படியே தொடர மந்திரா தனது சொந்த சேமிப்பிலிருந்து கொடுக்கிறார். அவளைப் பொறுத்தவரை, சத்சரியின் கொடியை நிலைநாட்டுவது முக்கியம். சத்சரியின் எதிர்காலத் திட்டம் அதிகமான பெண்களை பொருளாதார ரீதியாக நிலைநிறுத்தி, மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக மாற்றுவதாகும். இளம் அஸ்ஸாமிய பெண்கள் தங்கள் கலை மற்றும் கலாச்சாரத்தில் தொடர்ந்து பெருமை கொள்வார்கள், நவீனத்துவத்தின் பெயரில் அது மங்க விடக்கூடாது என்று அவர் நம்புகிறார். அவரது கணவர் இப்போது உயிருடன் இல்லை என்றாலும், அவர் தனது மாமியாருடன் நல்லுறவைப் பேணி வருகிறார், யாரிடமும் எந்தவிதமான எதிர்மறையான உணர்வும் இல்லை.
சமீப காலம் வரை சத்சரியுடன் அலுவலக பொறுப்பாளராக இருந்த டாக்டர் பிரதிமா தேவி சர்மா கூறுகையில், “இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தனித்துவமான விஷயம், மந்திரா பருவாவின் ஆளுமை மற்றும் அவரது எழுச்சியூட்டும் கதை. அவள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் போலவே இதையும் ஒரே ஆளாக நின்று கட்டி அமைத்துள்ளார். அசாமின் புறக்கணிக்கப்பட்ட சிறுமிகளும் பெண்களும் அவளை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால், அவர்களும் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தவறுகளையும் சரிசெய்ய முடியும் என்று நினைப்பது மிகையாகாது. இது ஒரு சக்திவாய்ந்த மற்றும் விசித்திரமான சக்தியாகும், இதுவே சத்சரியை நன்றாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. ”