Welcome..! Join us to Develop your Humanity
சுரங்கக் கிணறு நீர் வள ஆதாரத்தை அமைப்பதில் 50 ஆண்டு கால அயராத அர்ப்பணிப்பு - குஞ்சாம்பு.
வடக்கு கேரளம் மற்றும் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பூமிக்கு அடியில் சுரங்க குகைகளை தோண்டுவதன் மூலம் நீர் சேகரிப்பு செய்வது ஒரு பழமையான வழிமுறையாகும். இத்தகைய சுரங்க முறை தண்ணீர் கிணறு தோண்டும் வேலையில் கேரளத்தின் குஞ்சாம்பு மிகவும் கை தேர்ந்தவராக விளங்குகிறார். 67 வயதாகும் குஞ்சாம்பு மட்டுமே தனியாளாக கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள குந்தாஞ்சுழி என்கிற கிராமத்தின் குடிநீர்த் தேவையை கடந்த 50 ஆண்டுகளாக பூர்த்தி செய்து வந்துள்ளார்.
குஞ்சாம்பு தனது 14ம் வயதில் இருந்து இந்த சுரங்க கிணறு தோண்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நாட்டில் உள்ள மிகச்சில சுரங்க கிணறு தோண்டுபவர்களில் இவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார், ஏனெனில் இதுவரை இவர் ஆயிரம் சுரங்கக் கிணறுகளை தோண்டியுள்ளார்.
கன்னடத்தில் சுரங்கம் என்றும் மலையாளத்தில் துரங்கம் என்றும் அழைக்கப்படும் இக்குறுகிய குகை போன்ற கிணறுகள் குன்றுப் பகுதிகளில் கிடை மட்டத்தில், தரைக்கு இணையாக தோண்டப்படுகின்றன.
இத்தகைய அபூர்வமான குகை கிணறுகள் இரண்டரை அடி அகலம் கொண்டதாகவும் 300 மீட்டர்கள் வரை நீளம் கொண்டதாகவும் தோண்டப்படுகின்றன. ஊற்று நீர் கிடைக்கும் வரை பக்கவாட்டில் தோண்டப்படும் இக்குகைக் கிணறுகள் கேரளத்தின் பல பகுதிகளின் இடைவிடாத நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் அமைப்பாக உள்ளன.
இத்தகைய குகைகளில் இருந்து பெருகும் நிலத்தடி நீரானது அருகில் உள்ள சிறிய நீர்தேக்கத்திற்கு வாய்க்கால்கள் மூலம் அனுப்பப்படுகிறது. ஒரு முறை இந்த ஊற்று நீர் பெருக ஆரம்பித்து விட்டால் பல வருடங்களுக்கு இந்த நீரானது எந்த விதமான மின் மோட்டார்களோ, பம்புகளோ இன்றி தொடர்ந்து கிடைத்து வருவது இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
இத்தகைய இடைவிடாத நீர் சேகரிப்பு முறையானது ஆழ்துளை கிணறுகள் எனப்படும் போர்வெல் போடும் முறைகளினால் மெதுமெதுவாக தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து வருவது மிகவும் சோகமான விஷயம் ஆகும். இது மட்டுமின்றி இத்தகைய சுரங்க கிணறுகளின் அருகாமையில் போடப்படும் ஆழ்துளை கிணறுகளால் குகைகளில் உள்ள நீர் ஊற்றும் வறண்டு போகக் கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குஞ்சாம்புவின் இந்த நீண்ட நெடிய பயணமானது வலிமை மற்றும் விடாமுயற்சியின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பள்ளம் தோண்டப் பயன்படும் கோடாரியினையும் ஒரு மெழுகுவர்த்தியையும் எடுத்துக் கொண்டு இவர் வேலையில் இறங்கினால், ஒரே மூச்சில் ஒரு சுரங்கத்தை தோண்டி விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார். 300 மீட்டர் நீளத்திற்கு குகையைத் தோண்டும்போது பிராணவாயுவின் அளவு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. ஆகவே இவர் எப்போதும் தீப்பெட்டி மற்றும் மெழுகுவர்த்தி இல்லாமல் போவது இல்லை. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மெழுகு வர்த்தியை ஏற்றிப் பார்த்து அது தொடர்ந்து எரியா விட்டால் காற்றில் பிராணவாயு குறைந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறி குஞ்சாம்பு தன்னை பாதுகாத்துக் கொள்வார்.
இவ்விதமான சுரங்க குகைகளை தோண்டுவதற்கான சரியான இடத்தை தேர்ந்தெடுப்பதும், குகைகள் உள் பக்கம் சரிந்து விழாமல் இருப்பதை விழிப்புடன் பார்ப்பதற்கும் இயற்கையோடு இணைந்த விழிப்புணர்வும், கண்காணிப்பும் தேவை என்று இவர் கூறுகிறார். செடி கொடிகளின் செழிப்பை வைத்தும், நிலத்தில் காணப்படும் ஈரப்பதத்தை வைத்தும் இவர் சரியான இடத்தை தேர்வு செய்கிறார். இத்தகைய அறிவு, அனுபவத்தாலும், இயற்கையின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையாலும் வருவதாக குஞ்சாம்பு நம்புகிறார்.
குஞ்சாம்பு கேரளத்தில் குந்தாஞ்சுழி கிராமத்தில் தனது வேலையை 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்த போது இது அப்பகுதியின் பண்பாட்டோடு ஒன்றிணைந்த ஒரு முறையாகவும் விவசாயத் தேவைகளை ஈடுசெய்யும் வழிமுறையாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் காலம் செல்லச் செல்ல ஆழ்துளைக் கிணறுகள் எனப்படும் போர்வெல்கள் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் இந்தப் பழமையான பாரம்பரிய வழிமுறை தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. இதனால் வேலை வாய்ப்பும் குறைந்து போக தொடங்கியுள்ளது.
ஆழ்துளை கிணறுகளோடு ஒப்பிடும்போது சுரங்க கிணறுகளை உருவாக்க மனித உழைப்பு அதிகமாக தேவைப்படுவதால் உருவாக்கும் செலவும் அதிகமாகிறது. செலவு அதிகமாகும் ஒரு காரணத்தினாலேயே மக்கள் ஆள்துளை கிணறுகளுக்கு மாறத் தொடங்கி விட்டதாக குஞ்சாம்பு நினைக்கிறார். இவரைப் போன்று சுரங்க கிணறு தொழிலாளர்கள் ஆழ்துளை முறையை ஆதரிக்கவில்லை, ஏனெனில் இத்தகைய தொழிலாளர்கள் சுரங்க கிணறு தோண்டுவதை அவர்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்கள்.
சுரங்க கிணறு முறையை ஆழ்துளை கிணற்றோடு ஒப்பிடும்போது ஆழ்துளை கிணறுகள் இயற்கைக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். பூமியில் செங்குத்தாக குடையும் போது நாம் பூமியின் இதயத்தையே துளைத்து விடுகிறோம். இதன் மூலம் நிலத்தடி நீர் முழுவதும் வெளியே வந்துவிடுகிறது. இது மட்டுமின்றி இது சுற்றிலும் உள்ள நிலப் பகுதிகளை பலவீனப்படுத்தி அவை பூகம்பத்தால் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தி விடுகிறது. மாறாக சுரங்கக் கிணறுகள் உழவர்களுக்கு நீண்டகால நீர் ஆதாரமாக விளங்கக் கூடியவை ஆகும். இவை இடைவிடாத நீர் உற்பத்திக்கு தோற்றுவாயாக விளங்குகின்றன. கேரளத்தின் காசர்கோடு போன்ற பகுதிகளில் பூமியானது உள்ளுக்குள் நொறுங்கிப் போகும் வாய்ப்பு உள்ளதால் ஆழ்துளை கிணறுகள் சுரங்கக் கிணறுகளுக்கு மாற்றாக அமைய முடியாது.
தற்போது காசர்கோடு பகுதியில் ஐந்தாயிரம் சுரங்க கிணறுகள் இருந்தாலும் பெரும்பாலானவை ஆழ்துளை கிணறுகளின் வரவால் பயனில்லாமல் போய் உள்ளன. இருப்பினும் குஞ்சாம்பு போன்ற பாரம்பரியமான, இயற்கை வழி தொழிலாளர்கள் தங்களின் வேலை முறையினை கைவிடுவதாக இல்லை.
சுரங்க கிணறு ஊற்றுக்கள் மெதுவாக அழிந்து வந்தாலும் தன்னால் முடியும் வரை இந்த வேலையை பூமியின் கிடைமட்ட குகைகளில் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இந்தப் பாரம்பரிய நீராதாரத்திற்கான வழிமுறையை மீட்டெடுக்க முடியும் என்று குஞ்சாம்பு உறுதியாக நம்புகிறார்.