Welcome..! Join us to Develop your Humanity
"வித்தியாசமான திருநங்கை" ஏழை எளியவர்களுக்காக தனது வருமானத்தில் முக்கால் பங்கு செலவு செய்தும் மற்றும் எட்டு அனாதை குழந்தைகளை தனியாளாக நின்று வளர்த்த திருநங்கை - ராஜ்குமாரி கின்னர் (Rajkumari Kinnar)
“ராஜ்குமாரி கின்னர் அம்மா” (Rajkumari Kinnar ma) என்று அன்போடு அழைக்கப்படும் திருநங்கை ராஜ்குமாரி கின்னர், ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோ (Bokaro) மாவட்டத்தில் உள்ள ரிதுதி (Ritudih) என்னும் கிராமத்து மக்களின் மரியாதைக்கு பாத்திரமானவர் ஆவார்.
இவர் எட்டு அனாதைக் குழந்தைகளுக்கு புதிய வாழ்க்கை அமைத்துத் தந்தது மட்டுமல்லாமல் ஏழைகளுக்கு உணவு மற்றும் துணி விநியோகம் செய்து வருகிறார். தனது வருமானத்தில் முக்கால் பங்கை ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொடுத்து உதவுகிறார். அதுமட்டுமல்லாமல் ரிதுதி-இல் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்காகவும் இவர் நிதி அளித்துள்ளார்.
"எனது வருவாயில் பெரும் பங்கு, அக்கம்பக்கத்தில் இருப்போர் வீட்டிற்குச் சென்று , பிறந்த குழந்தைகள்.புதுமணத் தம்பதிகள் என மக்களை வாழ்த்துவதில் இருந்து எனக்கு கிடைக்கிறது. ஏனெனில், சமுதாயத்தில் திருநங்கைகள் கையிலிருந்து ஆசி பெறுவது விசேஷமாக கருதப்படுகிறது. சில சமயம் நான் தெருக்களில் நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் மற்ற வேலைகளுக்கும் மக்களுக்கு உதவுவதற்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் எனது குடும்பத்திற்கு மளிகையோ காய்கறிகள் வாங்குவதற்கு போதியளவு பணம் இருந்ததில்லை. பல நல்ல உள்ளம் கொண்ட வியாபாரிகள் எங்களது நிலைமையை புரிந்து கொண்டு பொருட்கள் கொடுக்க முன்வருவார்கள். ஆனால் நான் ஒருபோதும் அவற்றை பெற்றதில்லை. மாறாக சில இடங்களில் வீட்டு வேலை செய்து அதன் மூலம் செலவுகளை ஈடு கட்டினேன்", என்று ராஜ்குமாரி கூறுகிறார்.
ரிதுதி மக்கள் இவரை பற்றி, “உதவி என்று வரும் ஒருவரைக்கூட இவர் திருப்பி அனுப்பியதில்லை. மேலும் இவர் அக்கம்பக்கத்தில் பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார்” எனக் கூறுகின்றனர்.
ராஜ்குமாரியின் அருகில் வசித்த பிஜிலி தேவி கூறுகையில், “இரண்டு வகுப்பினரிடையே ஏதாவது தகராறு ஏற்பட்டாலோ, யாராவது பிரச்சினை எழுப்பினாலோ, ராஜ்குமாரி அம்மா கண்டிப்பாக அவர்களை அமைதி படுத்துவதற்கு அங்கே இருப்பார். காதல் ஜோடியின் குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது ராஜ்குமாரி அம்மா அவர்கள் சார்பாக பேசி, தங்கள் குழந்தைகளை கைவிடக்கூடாது என்று சமாதானப் படுத்துவார், என்று கூறுகிறார்.
ஒரு திருநங்கையாக வாழ்வதற்கு நான் சிறிய வயதில் என்னை தயார்படுத்திக் கொண்டேன். ஆனால் என்னுடைய பெற்றோர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். தங்க இடமின்றி, ஒரு கோயில் வாசலில் தஞ்சமடைந்தேன். பொகாரோவில் உள்ள திருநங்கைகளுக்கான சமூகத்திலுள்ள சிலர் அன்புடன் என்னை ஏற்றுக்கொண்டு, உணவும் இடமும் கொடுத்தார்கள். நான் கடந்து வந்த இந்த கடின பாதையையும், அதில் சந்தித்த இன்னல்களையும் வேறு எவரும் சந்திக்க கூடாது என்பதற்காகவே நான் இவ்வாறு செய்கிறேன் என்கிறார்.
ராஜ்குமாரி பராமரித்து வரும் எட்டு குழந்தைகளில் ஐந்து பேர் சிறுமிகள். அதில் ஒரு ஒன்பது மாத சிறுவனே மிகவும் சிறியவன் ஆவான்.
.“எனது ஐந்து இளம் சிறுமிகள் பல வருடங்களுக்கு முன்னால் கைவிடப்பட்டவர்கள். நானும் ஒரு காலத்தில் கைவிடப்பட்டவள் ஆதலால் இவர்களின் வலியை உணர்ந்திருந்தேன். . எனது இரண்டு மகன்களை அனாதை ஆசிரமத்தில் இருந்து மிட்டு வந்தேன். மேலும் இன்னொருவனை அவனுடைய குடும்பம் சிறுவயதிலேயே விரட்டி விட்டார்கள்” என்று கூறும் ராஜ்குமாரி, அவர்களுள் அந்த ஐந்து பெண்களுக்கும் மூத்த மகன் அமரேஷுக்கும் இப்போது திருமணமாகிவிட்டது என்று கூறுகிறார்.
ராஜ்குமாரியின் பதிமூன்று வயது மகன் சுபம் தனது அம்மாவை பற்றி மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறர். “மெக்கானிக்கல் இன்ஜினியராக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், எனது அம்மா போல மக்களுக்கு உதவ வேண்டும் என்றே விரும்பினேன். பண கஷ்டம் இருந்தாலும் அவர் யார் எது கேட்டாலும் அவற்றை கொடுத்து உதவினார். மேலும் எங்களுக்கு எந்தவித குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்" என்று சுபம் கூறினார்.
தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்க முயன்றதால் திருநங்கையர்கள் குழுவில் ராஜ்குமாரி பெரும் எதிர்ப்பை சந்தித்தார்.
"ஒரு குடும்பமாக இருப்பதும், சமூக சேவை செய்வதும், திருநங்கையர் சமூகத்திற்கு எதிரானது என கருதி, எனது திருநங்கைக் குழுவினர் எனது பிழைப்பைக் கெடுக்கும் விதமாக நான் சென்று மக்களை வாழ்த்தி பணம் பெறும் இடங்களையெல்லாம் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். நான் காவலர்கள் இடம் புகார் அளித்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை", என்று ராஜ்குமாரி தனது சமுதாயம் தன் மீது இழைத்த கொடுமைகளைப் பற்றிக் கூறினார்.
“பிறர் இடையே அன்பை உருவாக்குவது, எப்போதும் மற்றவர்களுக்கு பிடிக்காது என்பதை நான் விரைவில் அறிந்து கொண்டேன். எனவே உதவுவதை மட்டுமே நான் நோக்கமாகக் கொண்டு இருந்தேன்” என அவர் கூறுகிறார்.
சுற்றுவட்டாரத்தில் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்படும் ராஜ்குமாரியிடம் பலர் வந்து அறிவுரைகளையோ, உதவியையோ, பணத்தையோ நாடி வருவர்.
“பணக்கார குடும்பங்களுக்கு வாழ்த்து கூறும் போது அவர்கள் அதற்கு நகையை கொடுப்பார்கள். அப்படி பெறும் நகைகளை ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களின் திருமணத்திற்கு நான் திருமண அன்பளிப்பாக கொடுத்து விடுவேன். வீட்டில் இருந்து துரத்தப்பட்ட ஏழைகளுக்கு உணவும் உடையும் அளிக்க பல சமயங்களில் நகைகளை அடகும் வைத்து உள்ளேன்” எனக் கூறுகிறார்.
கொரோனா கால கட்டுப்பாடுகள் ராஜ்குமாரியை பாதித்த போதிலும் தன்னால் முடிந்தவரை மக்களுக்கு உதவி கொண்டே இருந்தார். கடந்த சில மாதங்களில் அவருடைய சேமிப்பு, அவருக்கு வந்த நன்கொடைகள் என எல்லாவற்றையும் பயன்படுத்தி 2 வேளை உணவும் உடைகளையும் இல்லாதவர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் அவர் ஒரு லட்சம் ரூபாய் அளவு உணவுப்பொருட்களை 300 பேருக்கு கொடுத்ததாக கூறுகிறார்.
“தினமும் என்னுடைய சேமிப்பிலிருந்து ஐநூறு ரூபாய் எடுத்து காய்கறிகளையும் அத்தியாவசிய பொருட்களையும் வாங்குகிறேன். இன்றும் கூட என் சுற்று வட்டாரத்தில் இருக்கும் 20 நபர்களுக்காவது தினமும் அரிசியும் பருப்பும் கொடுத்து வருகிறேன். கோயில் அருகே தங்கியிருக்கும் சில முதியவர்களும் வந்து உணவு பெற்றுச் செல்வார்கள்” என்று அவர் கூறுகிறார்.
பஞ்சாயத்து உறுப்பினரான பைஜிநாத் மாதோ(Baijnath Mahto) ராஜ்குமாரியின் சிறந்த தொண்டை, “உணவும் உடையும் கொடுப்பது மட்டுமல்லாது, கல்யாண செலவுக்கு கொடுப்பது, குளிர்காலங்களில் வீடு இல்லாதவர்களுக்கு போர்வைகள், துண்டு போன்றவற்றையும் கொடுப்பது எனவும் ராஜ்குமாரி செய்கிறார்.” என பெருமிதத்தோடு கூறுகிறார்.
சேவை செய்வதில் அவரது மிகுதியான ஆர்வம் மற்றும் அன்பு உள்ளம் - மற்றவர்களில் இருந்து அவரை தனித்துக் காட்டினாலும், ராஜ்குமாரி கின்னர், "பிறக்கும் போது எதையும் கொண்டு வராத நான் இறக்கும்போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. எனவே வாழும் காலத்தில் சில நல்ல வேலைகளை செய்து சமுதாயத்திற்கு திருப்பி கொடுப்போம்" என்று பணிவோடு கூறுகிறார்.