Welcome..! Join us to Develop your Humanity
ஸர்வம் தேச நலனுக்கே அர்ப்பணம்.
நூறு கரங்களில் பெற்று ஆயிரம் கரங்களில் கொடுக்க வேண்டும் என்ற அடைமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்- சி.பி.ஆர். பிரஸாத்
சி.பி.ஆர். பிரசாத் தான் ஈட்டிய சொத்துகளில் 97% சமுதாயத்திற்கும் 1% தனது மனைவிக்கும் 2% தனது மகளுக்கும் அளித்தவர்.
சி.பி.ஆர். பிரசாத் அவர்கள் 40 வருடங்களுக்கு முன் இந்திய விமானப் படையில் இருந்து பணி நிறைவு பெற்றவர்.. இவர் நமது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை சந்தித்து ரூபாய் 1.08 கோடிக்கான காசோலையை பாதுகாப்புத் துறைக்கு வழங்கியது தேசிய ஊடகங்களில் வெளிவந்தது.
ஹைதராபாத்தை சார்ந்த 75 வயதாகிய சி.பி.ஆர். பிரசாத் ஒரு ஒய்வு பெற்ற விமானி ஆவார். இவர் கிட்டத்தட்ட தனது வாழ்நாளின் மொத்த சேமிப்பையும் பாதுகாப்புத் துறைக்கு தானமாக வழங்கினார்.
"எனக்கு இந்திய இரயில்வேயில் சிறந்த பணி கிடைத்த காரணத்தால் ஒன்பது வருடங்களுக்கு பிறகு நான் இந்திய விமானப் படையில் இருந்து வெளி வந்து விட்டேன். எதிர்பாராத விதமாக அந்தப் பணியில் என்னால் சேர முடியாமல் போய்விட்டது. நான் என் வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறிய கோழிப்பண்ணையை தொடங்கினேன். அதிர்ஷ்ட வசமாக நான் அதை சிறப்பாகச் செய்தேன்" என்று அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
"எனது குடும்பக் கடமைகளை முடித்து விட்டு நான் இராணுவம் மூலம் என்னவெல்லாம் பெற்றேனோ அதை இராணுவத்திற்கே திரும்பித் தர வேண்டும் என நினைத்தேன். நான் இராணுவத்திற்கு 1.08 கோடியை கொடுக்க முடிவு செய்தேன்" என்று மேலும் திரு. பிரசாத் கூறினார்.
திரு. பிரசாத் கோழி பண்ணையை ஆரம்பித்து 30 வருடங்கள் கடுமையாக உழைத்தார். சமுதாயத்திற்கு உதவும் நோக்கத்துடன் இவர் ஒரு விளையாட்டு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். அவர் இந்திய விமானப் படையை விட்டு வருவதற்கு முன் அதில் ஒன்பது வருடங்கள் பணியாற்றினார்.
"உங்கள் முடிவை உங்கள் குடும்பம் ஏற்று கொண்டதா?" என்று கேட்டதற்கு அந்தப் போர் விமானி "முற்றிலும் எந்த பிரச்சனையும் இல்லை, நான் எனது மகளுக்கு சொத்தில் 2 சதவீதம், மனைவிக்கு 1 சதவீதம் கொடுத்து விட்டேன். நான் சமுதாயத்திற்கு தற்போது எனது பங்கை திருப்பித் தருகிறேன்" என்று கூறினார் .
தனது முழு வாழ்நாள் சேமிப்பையும் தானமாக கொடுத்த போதும் அவர் அதை பெரிது படுத்தவில்லை.
ஒரு சிறிய சிப்பாய் தனது மொத்த சேமிப்பையும் இராணுவத்திற்கு திருப்பித் தந்ததை கண்டு ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி அடைந்தார் என்று அவர் கூறினார்
இவருக்கு தனது சேமிப்பை இராணுவத் துறைக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? அது ஒரு பெரிய கதை என்று அவர் கூறினார்.
"எனக்கு இருபது வயதிருக்கும். அப்போது நான் விமானப்படையில் வேலை செய்து கொண்டு இருந்தேன் . எனது அதிகாரிகள் கோயம்புத்தூரை சேர்ந்த நற்பண்பாளரும் விந்நாளியுமான ஜீ.டி.நாயுடுவை முதன்மை விருந்தினராக அழைத்து இருந்தனர்.. அவர் இந்தியா ஏன் சிறந்த நாடாக இருக்கிறது என்றால் நமது ரிஷிகள் நாம் நமது குடும்ப கடமைகள் முடிந்த பிறகு நாம் நமது சமுதாயத்திற்கு நமது பங்களிப்பைத் தர வேண்டும் என்று எண்ணினர் என்று கூறினார்.
ஜீ.டி.நாயுடுவின் வார்த்தைகள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அவரை தான் ஈட்டிய அனைத்தையும் சமுதாயத்திற்கு கொடுக்கத் தூண்டியது.
மேலும் திரு. பிரசாத் “நாம் எதையும் திரும்பி கொண்டு செல்ல கூடாது. ஏனென்றால் நாம் வரும் போது எதையும் கொண்டு வரவில்லை. நமது குடும்பத்திற்கான குறைந்த பட்ச தேவையை கொடுத்து விட்டு மற்ற பொருளையும், மீதி வாழ்க்கையையும் நமது சமுதாயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்”என்று கூறினார்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஜீ..டி. நாயுடுவின் ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கை சமுதாய மேம்பாட்டிற்காக அவரால் அர்ப்பணிக்கப்பட்டது. இவர் தனது பணியாளர்கள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கான நலத்திட்டங்களை கொண்டு வந்தார். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட ஆய்வாளர்களுக்கு நிதி வழங்கினார். இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரியான கோயம்புத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை 1945ல் உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார்.
அவரது போராட்ட நாட்களை நினைவுப்படுத்தும் போது திரு. பிரசாத் அவர்கள், "நான் எனது பாக்கெட்டில் 5 ரூபாயோடு வீட்டை விட்டு சென்றேன். 500ஏக்கர் நிலத்தை எனது உழைப்பால் மட்டுமே சம்பாதித்தேன். எனது மனைவிக்கு 5 ஏக்கர் எனது மகளுக்கு 10 ஏக்கர் கொடுத்துள்ளேன். மற்ற அனைத்தும் சமுதாயத்தின் நலத்திற்காக பயன்படுத்தி வருகிறேன்" என்று கூறினார்.
திரு.பிரசாத் கூறுகையில் "நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் அதை என்னால் வெல்ல முடியவில்லை. ஆகையால் தற்போது குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்".
"நான் விளையாட்டு பல்கலைக்கழகம் போன்ற வளாகத்தை என் ஐம்பது எக்கர் நிலத்தில் கட்டியுள்ளேன்.இன்னொரு ஐம்பது ஏக்கர் நிலத்தில் இன்னோரு விளையாட்டு பல்கலைக்கழகத்தை கட்டி வருகிறேன். எனது லட்சியம் இரண்டு விளையாட்டு பல்கலைக்கழகங்களை உருவாக்குவது. ஒன்று ஆண்களுக்கு இன்னொன்று பெண்களுக்கு .நான் குழந்தையாக இருக்கும்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது கனவாக இருந்தது அனால் என்னால் வெல்ல முடியவில்லை ஆதலால் கடந்த இருபது வருடங்களாக திறன் வாய்ந்த குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறேன்" என்று மேலும் கூறினார் .
ஜீ.டி. நாயுடுவின் ஒரு சொற்பொழிவு உண்டாக்கிய தாக்கத்தால் தனக்கு மிஞ்சியது தானம் என்றில்லாமல் தன்னையும் மிஞ்சி தான, தர்மங்களைச் செய்துள்ள திரு. சி. பி. ஆர். பிரசாத் மிகச் சிறந்த உதாரண புருஷராக விளங்குகிறார்.