Welcome..! Join us to Develop your Humanity
வீரத்துறவி ஆர். ராமகோபாலன்ஜி - 70 ஆண்டுகளுக்கும் மேலான சமர்ப்பணமயமான வாழ்க்கை.
ஆயிரக்கணக்கான சங்க ஸ்வயம்சேவகர்களாலும், கார்யகர்த்தர்களாலும் அன்புடன் கோபால்ஜி என்று அழைக்கப்படும் திரு .ஆர் .ராமகோபாலன்ஜியின் மறைவால் தமிழ்நாட்டில் சங்கத்திற்கும், சங்கபரிவார் அமைப்புகளுக்கும், ஹிந்து தேசிய இயக்கங்களுக்கும் ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. சங்க பிரச்சாரக்கான கோபால்ஜி தான், தமிழகத்தில் வீறு கொண்டு இயங்கிவரும் ஹிந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். கோபால்ஜி தனது பழுத்த 94 ஆம் வயதில், 2020, செப்டம்பர் 30 ஆம் நாளன்று தனது சரீரத்தைத் துறந்து இறைவனின் திருவடிகளில் ஐக்கியமானார். அவரின் 70 ஆண்டு கால ஸமர்ப்பணமயமான வாழ்வு நிறைவு பெற்றது.
கோபால்ஜி ஒரு பன்முகத் திறன் பெற்ற வித்தகராக விளங்கினார். அவருடைய இந்த பன்முகத் தன்மையானது அவருடைய நிறைவாழ்வில் முழுவதும் மலர்ச்சி அடைந்து வெளிப்பட்டது.
ஒரு கொந்தளிப்பு மிக்க இளைஞராக கோபால்ஜி :
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில், 1927, செப்டம்பர் 19 இல் பிறந்த கோபால்ஜி சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள செங்கல்வராயா தொழில் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தபோது அவருடைய சக மாணவனால் சங்கத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவர் 1944 இல் இருந்து ஷாகாவிற்கு வரத் தொடங்கினார். நாடு பிரிவினையின் போது சிந்து பகுதியில் இருந்து தஞ்சமடைந்த ஹிந்து அகதிகள் தங்கியிருந்த ஆவடி அகதிகள் முகாமை அவர் பார்வையிட்டபோது கண்ட காட்சிகள் அவரது மனதில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தின. அகதிகளின் பரிதாபமான நிலைமை, அவர்கள் சந்தித்த கொடுமைகள் அவர்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் ஹிந்து சமுதாயத்தின் மேன்மைக்கு பணியாற்ற வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டு அவர் தன்னை சங்கப் பணிகளில் முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். வேலூருக்கு அருகில் உள்ள குடியாத்தம் என்னும் ஊரில் மின்சாரத் துறையில் பணியாற்றிய போது ,1947ஆம் வருடம் அவருடைய தேசப் பணியாற்றும் முனைப்பு முழு வடிவம் பெற்று, கோபால்ஜி சங்கத்தின் பிரசாரக் ஆக மாறினார்.
ஒரு தேர்ந்த சம்பர்க பிரமுக் அதாவது மக்கள் தொடர்பாளராக கோபால்ஜி :
சங்கத்தின் முழு நேர ஊழியராக, பிரசாரக்காக ஆன வெகு சீக்கிரத்திலேயே கோபால்ஜி மதுரை மாவட்டத்தின் ஜில்லா பிரசாரக்காக நியமிக்கப்பட்டார். அப்போது சங்கத்தின் இரண்டாவது தலைவராக விளங்கிய பரம பூஜனீய குருஜியின் 51வது பிறந்தநாளைக் கொண்டாட ஒரு பெரிய கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்திற்கு, மிகப்பெரிய தேசியவாதியும் ,நேதாஜியின் சீடராகவும் விளங்கிய தென்தமிழகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கோபால்ஜி தலைமை ஏற்க வைத்தார். இதன் மூலம் சமுதாயத்தின் அனைத்து தரப்புகளிலும் அவர் எந்த அளவிற்கு மக்கள் தொடர்பான சம்பர்க வேலையை செய்துள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அதன்பின் அவர் 1964இல் தமிழகத்தின் பிராந்த பிரசாரக் பொறுப்பிற்கு உயர்ந்தார்.
ஒரு தலைசிறந்த திட்டமிடுபவராக கோபால்ஜி :
கோபால்ஜி தமிழகத்தில் 1975 ல் இருந்து 77 வரையிலான நெருக்கடி நிலை காலகட்டத்தில் சங்கத்தின் சக பிராந்த பிரசாரக் பொறுப்பில் மிகவும் முக்கியமான பங்கு பணியாற்றினார். எமர்ஜென்சி என்கிற நெருக்கடி நிலையை எதிர்த்து சங்கத்தை திறமையாகவும் ,வெற்றிகரமாகவும் வழிநடத்திச் சென்றது மட்டுமின்றி அனைத்து விதமான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். நெருக்கடிநிலை முடிவுற்ற பிறகு அந்நேரத்தில் செய்த பல்வேறு செயல்பாடுகளை ஒரு தேர்ந்த எழுத்தாளராக, மிகவும் சரளமான நடையில் ஒரு புத்தகமாக எழுதி அவர் வெளியிட்டார்.
தேசிய உணர்வை தட்டி எழுப்பும் வித்தகராக கோபால்ஜி :
கோபால்ஜி தமிழகத்தின் பிராந்த பிரசாரக் பொறுப்பில் இருந்தபோது, தமிழகத்தில் நிலவிய பல்வேறு தேச விரோத சக்திகளுக்கு எதிராக, தேசிய உணர்வை தட்டி எழுப்புவதற்காக பிரக்ஞா பிரவாஹ் என்னும் தேசிய சிந்தனைக் கழகத்தை தோற்றுவித்தார். அந்நேரத்தில் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் பிரச்சாரத்தால், தனித் தமிழ்நாடு எனவும், தனித் தமிழ் மொழி எனவும் பிரிவினைவாத கருத்துக்கள் பரப்பப்பட்டன. அதற்கு தக்க பதிலடி தரும் விதமாக கோபால்ஜி முன்னணி தமிழக அறிஞர்களை சந்தித்து, சங்க காலம் தொட்டு இருந்து வந்த தேசிய ஒருமைப்பாடு, தமிழ் இலக்கியங்கள் மூலம் தமிழகம் கலாச்சார, பண்பாட்டு ரீதியாக பாரததேசத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் விதத்தில், அவர்கள் மூலம் நூறு புத்தகங்களை வெளியிட்டு சமுதாயத்திலும், தமிழக அறிவுஜீவிகளிடமும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
தமிழும், தமிழ்நாடும், இந்துத்துவ தேசிய ஒருமைப்பாட்டின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை பரப்பிட, கோபால்ஜி நன்னெறி, தியாகபூமி ஆகிய கையெழுத்து பத்திரிகைகளைத் தொடங்கினார். பின்னாட்களில் தியாகபூமி வாரப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கி , பிறகு விஜயபாரதமாக மாறியது.
ஒரு தலைசிறந்த உற்சாகமூட்டுபவராக கோபால்ஜி :
கோபால்ஜி பிரச்சாரகராக பணியாற்றிய போது நூற்றுக்கணக்கான இளைஞர்களை சங்கத்தில் இணைத்தது மட்டுமின்றி அவர்களின் செயல்பாடுகளை நிரந்தரமான, அர்ப்பணிப்புடன் கூடிய உள்ளூர் கிளைகளாக தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் அவர் உருவாக்கினார். தற்போது உள்ள பா.ஜ.க , ஏ.பி.வி.பி, வி.எச்.பி , வித்யா பாரதி போன்ற சங்க பரிவார் அமைப்புகளின் முக்கிய தலைவர்களில் பெரும்பாலானோர் கோபால்ஜியால் சங்கத்திற்கு வந்தவர்களாகவோ அல்லது அவரால் வழிநடத்தப்பட்டவர்களாகவோ இருப்பார்கள்.
சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒரு ஹிந்துத் தலைவராக கோபால்ஜி :
1980இல் கரூரில் நடைபெற்ற சங்கத்தின் பிராந்த பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் அப்போது நிலவி வந்த ஹிந்து எதிர்ப்பு, பிரிவினைவாத சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இன்றளவும் இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து காத்துவரும் ஹிந்து முன்னணி என்கிற மாபெரும் அமைப்பினை ஏற்படுத்திடும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஹிந்துமுன்னணி உருவாவதற்கு முன்பாக தமிழகத்தில் ஹிந்து சமுதாயத்தின் நிலையைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். தமிழக ஹிந்துக்கள் பல்வேறு தேச விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்த ஆபத்தான சூழ்நிலை நாட்டின் எந்தப் பகுதியிலும் காணாத ஒன்றாக இருந்து வந்தது. கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலனி ஆதிக்க ஆங்கிலேய ஆட்சியாளர்களால், ஹிந்துக்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தும் நோக்கில் விதைக்கப்பட்ட பிரிவினைவாத விதைகள், மக்களிடம் செயற்கையான ஜாதி வேறுபாடுகளை ஏற்படுத்தி, குறிப்பாக தென் தமிழகத்தில் சமுதாய நல்லிணக்கத்தை குலைத்து வந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில், மதம் மாறிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தால், அவர்கள் அந்த மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்றுவதற்கு முயற்சி செய்யும் அளவிற்கு நிலைமை மோசமானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பல லட்சம் அப்பாவி ஹிந்துக்களை முஸ்லீமாக மதம் மாற்றம் செய்யப் போவதாக பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டனர்.
மறுபுறம் தமிழக ஆளும் கட்சிகளின் சித்தாந்த ரீதியிலான தோற்றுவாயாக விளங்கிய திராவிடர்கழகம் மிகவும் தரம் தாழ்ந்து ஹிந்துக் கடவுள்களை பொதுக்கூட்டங்களில் இழிவாகவும், ஆபாசமாகவும் பேசுவதும், ஹிந்து கடவுளான ராமன் மற்றும் தேவியர் உருவப்படங்களை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தியும் பெரும் அராஜகத்தை செய்தன.தமிழகத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த போதும் அவர்கள் அமைதி விரும்பிகளாகவும், ஆன்மீகவாதிகளாகவும் மட்டுமே இருந்தனர். அவர்கள் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாதவர்களாக , மௌன சாட்சிகளாக மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றனர். பெரும்பான்மை ஹிந்துக்கள் திராவிடர் கழகத்தின் இத்தகைய ஹிந்து விரோத போக்கினை எதிர்த்து யார் போராடுவார்கள் என யாருக்காகவோ காத்துக்கொண்டு இருந்தனர். கோபால்ஜியும் அவரால் ஏற்படுத்தப்பட்ட ஹிந்து முன்னணியும் அப்போது தமிழகத்தில் நிலவிய வெற்றிடத்தை நிரப்பும் விதமாக ஹிந்து சமுதாயத்தின் சாதிய தடுப்புகளை உடைத்து நொறுக்கியபடி, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியபடி, இந்துக்களை ஒருங்கிணைத்தனர். மிகவும் குறுகிய காலத்திலேயே ஹிந்து முன்னணி வெகுஜன இயக்கமாக மாறியது. பட்டி தொட்டிகளிலும், தொலைதூர கிராமங்களில் யாரும் போய் சொல்லாமலேயே ஹிந்து முன்னணியின் கிளைகள் தொடங்கியதற்கான பதாகைகளும், கொடிகளும் எங்கும் பளிச்சிட்டன. 1980க்கு பிறகு தமிழகத்தில் சங்கம் பரவுவதற்கு தேவையான கிரியா ஊக்கியாக இந்து முன்னணியின் தோற்றமும் ,பரவலும் அமைந்தது.
ஓர் அஞ்சாத தலைவராக கோபால்ஜி :
மீனாட்சிபுரம் மதமாற்றங்களால் ஏற்பட்ட ஹிந்து சமுதாயத்தின் சினத்தின் வெளிப்பாட்டை தமிழகத்தில் ஹிந்து மறுமலர்ச்சி உண்டாக்கிடும் உந்துசக்தியாக கோபால்ஜி மடை மாற்றினார். கோபால்ஜியின் வெற்றியால் கலக்கமுற்ற ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் தமிழகமெங்கும் ஹிந்து செயல் வீரர்களுக்கு எதிரான முன்னெப்போதும் கண்டிராத வன்முறையில் இறங்கினர். மத அடிப்படைவாத சக்திகள் ஹிந்து செயல் வீரர்களை குறிவைத்து தாக்கி கொண்டிருந்தபோது, திராவிடக்கட்சிகளை அடிநாதமாகக் கொண்டிருந்த தமிழக அரசும் கலவரங்கள் ஏற்படும்போது, ஹிந்து செயல் வீரர்களை மட்டுமே குறிவைத்து கைது செய்து வந்தது. அனைவரும் அறிந்தபடி கோபால்ஜியின் உயிரைப் பறிக்கும் விதமாக அவர் மீது பல முறை வன்முறைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. 1984இல் மதுரை ரயில் நிலையத்தில் அவர் மீது நடத்தப்பட்ட மூர்க்கத்தனமான கொலைவெறித் தாக்குதல் காரணமாக அவரது தலையில் நிரந்தரமான வடு ஏற்பட்டது. இதனாலெல்லாம் கலங்கி விடாத கோபால்ஜி அவர்கள் இரட்டிப்பு உற்சாகத்துடன் தமிழகம் முழுவதும் ஓய்வு ஒழிச்சலின்றி சுற்றுப்பயணம் செய்து கொண்டே இருந்தார். இதனால் மக்கள் இவரை வீரத்துறவி என்றே அழைக்கத் தொடங்கினர்.
1993 இல் சென்னை சங்க காரியாலயத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தக் காரணமான அதே நபர்கள், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஹிந்து முன்னணி காரியாலயத்தின் மீதும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். வெகு சமீபத்தில் கூட தமிழகத்தின் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஹிந்து முன்னணி காரியாலயங்கள் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தகைய போராட்டச் சூழலில்தான் கோபால்ஜி ஹிந்து முன்னணி அமைப்பை வெற்றியுடன், திறம்பட செலுத்திக்கொண்டு வந்தார்.
பெண்களில் பொதிந்துள்ள ஆற்றலை வெளிக் கொணரும் வெற்றியாளராக கோபால்ஜி :
ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பதில் பெண்களின் முக்கிய பங்கு பணியை உணர்ந்த கோபால்ஜி பெண்கள் பங்கேற்கும் விளக்கு பூஜை நிகழ்ச்சிகளுக்கு புத்துயிர் ஊட்டினார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்றிணைந்து ஹிந்துக்களின் மீது நடத்தப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
வெகுஜன இயக்கங்களை உருவாக்கியவராக கோபால்ஜி :
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவலிங்கப் பிரதிஷ்டை ,பல்லாண்டுகளாக நின்று போயிருந்த திருவாரூர் தேரை ஓடச் செய்தது, தனுஷ்கோடி , ராமஸேது ஆகிய புனித இடங்களை மீட்டது போன்ற வெகுஜன இயக்கங்களை கோபால்ஜி திறம்பட நடத்தி வெற்றி கண்டார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கோபால்ஜியால் தொடங்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா வெகு குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுவதும் பரவியது. 1983இல் திருவல்லிக்கேணியில் ஒரு விநாயகரோடு ஆரம்பித்த இந்த வெகுஜன இயக்கம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் விசர்ஜன ஊர்வலங்களாக நடந்து வருகின்றன.
திறமைகளின் உறைவிடமாக விளங்கிய கோபால்ஜி :
கோபால்ஜி இயல்பாகப் பெற்ற திறமைகளும், பிறகு கற்றுத்தேர்ந்த திறமைகளுமாக அவர் பல்வேறு திறமைகளின் உறைவிடமாக விளங்கினார். மிகவும் தீவிரமான படிப்பாளி, எழுத்தாளர், கவிஞர், வம்சி - புல்லாங்குழல் வாசிப்பவர் என பல திறமைகள் அவரிடம் இருந்தன. அவரது இளமைக் காலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞரான ஜி. என். பாலசுப்ரமண்யத்தின் இடமிருந்து கர்நாடக சங்கீதம் பயில வேண்டும் என்கிற ஆவல் அவருக்கு இருந்தது. இருப்பினும் விதியானது அவருக்காக வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக் கொடுத்தது. சங்கத்திற்கு வந்தாலும் அவரது குன்றாத இசை ஆர்வத்தால் அவர் நூற்றுக்கணக்கான ஸ்வயம் சேவகர்களை தேசபக்திப் பாடல்கள் பாடுபவர்களாக உருவாக்கினார். அவரால் எழுதப்பட்ட தேசபக்திப் பாடல்கள் சங்க ஸ்வயம் சேவகர்களையும், காரியகர்த்தர்களையும் இன்னும் பல வருடங்களுக்கு புத்துணர்ச்சி பெறச் செய்யும் சாகாவரம் பெற்றவை ஆகும். அவரின் ஒரு சில பாடல்கள் சங்க ஸ்வயம் சேவகர்களின் மனதில் அழியா இடத்தைப் பெற்றுள்ளன.
கோபால்ஜி மிகுந்த ஆராய்ச்சி மனப்பான்மையோடும், ஈடுபாட்டோடும் எழுதிய நூல்கள் வாசகர்களை அப்படியே ஈர்த்துவிடும் தன்மை கொண்டவை ஆகும். அவர் எழுதிய அவசரநிலை காலகட்டத்தைப் பற்றிய பெரிய புத்தகமும் அவரின் எழுத்துத் திறனுக்கு சான்று பகர்வது ஆகும். அவர் தனது 75 ஆவது வயது வரையிலும் ஆர்வத்துடன் வம்சி வாசித்து வந்தார். ஹிந்து சமுதாயம் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்த சிறு சிறு புத்தகங்களும், பிரசுரங்களும் பாமர மக்களையும் சென்றடையும் வண்ணம் அவருடைய தலைமையின் கீழ் வெளியிடப்பட்டன. அத்தகைய பிரசுரங்களின் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின. படிக்க வேண்டிய குறிப்புகளை தனித்தனியாக, புள்ளி வாரியாக பட்டியலிட்டு, படிப்பவரின் மனத்தில் ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கையேடுகளை உருவாக்கி வெளியிடுவதில் கோபால்ஜியின் பாணி அலாதியானது ஆகும். இவ்விதம் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான கையேடுகளும், பிரசுரங்களும் திராவிட விஷமப் பிரச்சாரம், கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம் மற்றும் மத அடிப்படைவாத பிரசாரங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பதாக பல்லாண்டுகளுக்கு திகழ்ந்தது.
எடுத்துக்காட்டான வாழ்க்கையின் இடையறாத ஊற்றுக்கண் கோபால்ஜி :
ஹிந்து சமுதாயத்தின் நலன்களுக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த கோபால்ஜி தனது 90வது வயதிலும் செயல் திறனுடன் விளங்கினார். ஹிந்துக்களின் ஒட்டுமொத்த விழிப்புணர்ச்சியும், எழுச்சியும் ஏற்படும்வரை கோபால்ஜியின் சமுதாய ஒருங்கிணைப்பு திறன்களும், சமர்ப்பண மயமான வாழ்க்கையும் தமிழகத்தில் உள்ள ஹிந்து காரியகர்த்தர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் காலம் தோறும் இருந்து வரும்.