Welcome..! Join us to Develop your Humanity
பாரத நாட்டின் ராணுவ படை வீரர்களுக்கு கடந்த 24 ஆண்டுகளாக ஊதியமின்றி போர்ப் பயிற்சி அளித்து வரும் அதிசய மங்கை- சீமா ராவ்!
இந்திய அதிரடிப் படை வீரர்களுக்கு ராணுவ தற்காப்பு கலை பயிற்சியாளராக பயிற்சி அளித்து வரும் ஒரே பெண் சீமா ராவ், தற்காப்புக் கலையில் ஏழாம் நிலை பிளாக் பெல்ட் தகுதி பெற்றவராவார்.
வெகு சமீபத்தில் கல்வான் பள்ளத்தாக்கில், சீனாவின் அத்துமீறலால் இருதரப்பு வீரர்களும், நேரடியான கைகலப்பில் ஈடுபட்டதை இந்த உலகமே அறியும். போர்ப்படை தாக்குதல்களில், தொலைதூர தாக்குதலைப் போல, நேரடியாக வெறும் கைகளில் மோதி தாக்குதல் நடத்தும் பயிற்சியும் மிகவும் முக்கியமானதாகும்.
நேரடியாக தாக்கும் போர் முறையில் சீமா ராவ், பெரும் நிபுணத்துவம் பெற்று உள்ளார். இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப் பிரிவுகளுக்கு, கடந்த 24 வருடங்களாக அதிரடிப்படை நேரடித் தாக்குதல் பயிற்சிகளை, ஊதியம் ஏதும் பெறாமலேயே இவர் அளித்து வருகிறார். தற்காப்பு பயிற்சி முறை மட்டுமின்றி, சீமா ராவ் ஒரு தேர்ந்த போர் முறை துப்பாக்கி சுடும் பயிற்சியாளராகவும் விளங்குகிறார். இதுமட்டுமின்றி, தீயணைப்புப் படை வீராங்கனையாகவும் விளங்குகிறார். மேலும் ஆழ்கடலில் முக்குளிப்பவராகவும் திறமை பெற்றுள்ளார். இவற்றோடு கூட மலையேற்றத்தில் இமாலய மலையேற்றக் குழு பயிற்சி நிறுவனத்தின் பதக்கம் பெற்றவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக திருமணம் ஆனவர்களுக்காக நடத்தப்பட்ட திருமதி. இந்தியா அழகிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வானவராகவும் இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, 1960களில் பெரும் சாகச வீரராகவும், தற்காப்புக் கலையில் புலியாக விளங்கியவருமான புரூஸ்லியால் உருவாக்கப்பட்ட ஜீத் குனே டோ (Jeet Kune Do) என்கிற சிறப்பான தற்காப்புப் போர் முறையில், உலக அளவில் 10 பெண்மணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக, பன்முகத் திறமை கொண்ட சீமாவும் விளங்குகிறார்.
போர்ச்சுகீசியரிடமிருந்து கோவாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த பேராசிரியர். ரமாகாந்த் சினாரியின் மகள் தான் இத்தனை திறமை வாய்ந்த சீமா ராவ் ஆவார். தேச பக்தியில் மூழ்கித் திளைக்கும் சீமா, சிறுவயது முதலே தேசிய விடுதலைப் போராட்டத்தின் கதைகளை கேட்டுக் கேட்டு வளர்ந்ததால், நமது நாட்டிற்கு சேவை புரிய வேண்டும் என்கிற விருப்பம் அவரது ரத்தத்திலேயே ஊறி இருந்தது. தேசத்திற்கு எவ்விதமாக சேவை செய்யலாம் என்று எண்ணியிருந்த நேரத்தில், சீமா தனது பதினாறாவது வயதில் தனது எதிர்காலக் கணவனாக விளங்கப் போகிற மேஜர் தீபக் ராவை சந்தித்த போது, அவருடைய எண்ணம் செயல் வடிவம் பெற்றது. தனது பன்னிரண்டாவது வயதில் இருந்து தற்காப்புக் கலையை பயின்று வருகிறார் மேஜர் தீபக் ராவ். அவர் சீமாவிற்கும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியதன் மூலம் அவரை சுயசார்பும், சுய வலிவும் கொண்டவராக மாற்றினார்.
மேஜர் தீபக் ராவும், சீமா ராவும் ஆயுதமற்ற நேரடி சண்டைப் பயிற்சியின் முன்னோடிகளாக விளங்குகிறார்கள். இந்திய ராணுவத்திற்கு 20 வருடங்களாக சேவை ஆற்றியதற்கான குடியரசுத் தலைவரின் தர விருதை 2011இல் மேஜர் தீபக் பெற்றார். இதேபோன்ற விருதைப் பெற்றவர்களுள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
திருமணத்திற்குப் பிறகும் ராவ் தம்பதியினர் தற்காப்புப் போர் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், ஆயுதத்தை பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் மேலும் கற்றுத் தேர்ந்து சிறந்து விளங்கினர். தங்களின் இந்த ஆற்றலை எவ்விதம் தேசப்பணியில் ஆக்கபூர்வமாக ஈடுபடுத்துவது என சிந்தித்தனர். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இருவரும் சேர்ந்து இந்திய ராணுவத்திற்கு சிறப்பான தற்காப்பு பயிற்சியை, ஊதியம் ஏதும் இன்றி அளிப்பது என்கிற மேலான முடிவிற்கு வந்தனர்.
1996இல் இவ்விருவரும் முப்படைத் தளபதிகளையும், எல்லை பாதுகாப்பு படை மற்றும் தேசிய பாதுகாப்பு படையின் தலைவர்களையும் அணுகி தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். தம்பதியினரின் அர்ப்பணிப்பு உணர்வைக் கண்ட ராணுவ அதிகாரிகள் இவர்களின் பயிற்சி திட்டத்திற்கு அனுமதி தர முடிவு எடுத்தனர். அதன் பின் இவர்களின் வாழ்வில் தொடர்ந்து முன்னேற்றம் தான்.
இவ்விதம் சீமா ராவ் இந்திய பாதுகாப்புப் படைகளின் கௌரவ முழுநேர தற்காப்பு பயிற்சியாளராக 24 வருடங்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளார்.
இவர்களின் சாதனைப் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. திருமணமான புதிதில் பல பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும், இவர்கள் இராணுவ சேவைக்கு பணம் பெறக் கூடாது என்கிற நிலைப்பாட்டை உறுதியாக கடைப்பிடித்தார்கள். மேலும் மோசமான வானிலைகளிலும், மோசமான நிலப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு வந்ததால், அவரால் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் இத்தகைய கடுமையான பயிற்சி சூழலில் தாய்மைப் பேறு என்பது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் என்பதால், தானே குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தைக் ௯ட கைவிட்டு, அவர் முழு மனதுடன் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார். இது மட்டுமின்றி அவருடைய பணிச்சூழலில் பல காயங்களையும் அவர் தாங்கியுள்ளார். ஒரு முறை அவரின் முதுகெலும்பில் சிறிய முறிவும், தலையில் பலமான காயமும் ஏற்பட்டதால், அவரது கணவரைத் தவிர வேறு யாரையும் ஞாபகத்தில் இல்லாத அளவிற்கு அவரது நினைவாற்றல் பாதிக்கப்பட்டது. இருப்பினும் பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் நலம் அடைந்தார். ஒருமுறை படைக் களத்தில் ஊடுருவல்காரர்களால் சுடப்பட்டு காயமடைந்தாலும், தேசத்திற்கு சேவை ஆற்ற வேண்டும் என்கிற அவரது உறுதி சிறிதும் குறையவில்லை.
சீமா ராவ் தனது கணவரோடு இணைந்து இந்திய ராணுவத்தின் தேசிய பாதுகாப்பு படையின் கருப்பு பூனைகள், மார்க்கோஸ் பிரிவினர், கருட் (Garud) பிரிவினர், சார்புநிலை அதிரடிப்படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், ராணுவப் படை பிரிவுகளில் அதிரடி பிரிவினர் ஆகிய அனைத்து பிரிவுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த வீரர்களின் குழுக்களுக்கு தற்காப்புப் படை பயிற்சி அளித்துள்ளார். இதுமட்டுமின்றி தேசிய காவல் பயிற்சி நிறுவனம், ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறுவனம், நாட்டின் ஒவ்வொரு தலைநகரிலும் உள்ள காவல் துரித நடவடிக்கை படைப்பிரிவுகள் உட்பட்ட அனைத்து பிரிவின் தலைமை அலுவலர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்துள்ளார்.
பெண்களின் சுய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ள சீமா ராவ், பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல், பாலியல் ரீதியான தாக்குதல், மற்றும் பலாத்காரம் ஆகியவற்றை எதிர்கொள்ள பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட பயிற்சி முறைகளையும் உருவாக்கியுள்ளார். இந்தப் பயிற்சி முறையானது டேர் (DARE) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பலாத்காரம் மற்றும் பாலியல் சீண்டலுக்கான தற்காப்பு முறைகள் இடம்பெற்று பெண்களை மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலிமை கொண்டவர்களாக மாற்றுகிறது.
இதுநாள் வரை இந்திய ராணுவத்தில் சீமா ராவ் 15 ஆயிரம் வீரர்களுக்கு நேரடி சண்டைப் பயிற்சிகளை (close quarter battle) கற்பித்து உள்ளார் . அவரைப் பொறுத்தவரை இப்போதைக்கு இப் பணியிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் ஏதும் இல்லை. இவரது சாகசப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.