Welcome..! Join us to Develop your Humanity
விகாஸ் மன்ஹாஸ் - கடந்த 20 ஆண்டுகளில் 200 தியாகிகளின் குடும்பங்களைச் சந்தித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் 42 வயதான விகாஸ் மன்ஹாஸ், கடந்த 20 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 11 மாதங்கள் பயணம் செய்து வருகிறார். இந்த பயணங்கள், பெருநகரங்களில் உள்ள வீடுகள் முதல், பரவலாக நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் வரை உள்ளன. இவை வேலை தொடர்பான சொகுசுப் பயணங்கள் அல்ல. கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களை சந்திக்கும் நோக்குடைய பயணங்கள் இவை.
கார்கில் போருக்குப் பிறகு, 1999 ஆம் ஆண்டில் இந்த முயற்சியைத் தொடங்கிய மன்ஹாஸ், 200க்கும் மேற்பட்ட தியாகிகளின் குடும்பங்களை சந்தித்துள்ளார். அவர்களில் பெரும்பாலோருடன் அவர் இன்றும் தொடர்பில் இருக்கிறார்.
அவர் தனது கோடை விடுமுறை நாட்களில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள தனது சொந்த ஊரான பதர்வாவிற்கு, ஒரு குடும்ப திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். அச்சமயம் எட்டு ஜவான்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, அவர்களில் ஏழு பேர் இறந்துவிட, தப்பிப்பிழைத்த ஒரே நபர் இரவு முழுவதும் போராளிகளுடன் சண்டையிட்டு, ராணுவ ஆயுதங்களைக் கொள்ளையடிக்கவிடாமல் காப்பாற்றியதை நினைவு கூர்ந்தார். இது கார்கில் போருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
“இறந்துபோன வீரர்களின் சடலத்தை, அவர்களுடைய குடும்பத்தினருக்கு, கடைசியாக ஒரு முறை கூட பார்க்க வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானேன். உடன் இருக்கும் வீரர்கள் இறந்தோரின் சடங்குகளை மேற்கொண்டு புகைப்படம் எடுத்து அனுப்பினர். ஆனால் என் மனம் வெறுமையை உணர்ந்தது. உடல்கள் தீப்பிழம்புகளால் நுகரப்படுவதைப் பார்த்தபோது, நான் துவண்டு அழுதேன் ” என்றார் மன்ஹாஸ்.
அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு தொடரும் ஒரு பயணம் தொடங்கியது. அவர் சந்தித்த முதல் வீடு, 18 கிரெனேடியர்ஸ் பிரிவின், 19 வயது கிரெனேடியர் உதயமான் சிங்கின் இல்லமாகும். கார்கில் போரில் 1999 ஜூலை 5 அன்று, அந்த இளம் சிப்பாய், துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். ஷாமச்சக்கில் உள்ள அவரது வீடு, விகாஸின் வீட்டிலிருந்து 20 கி.மீ தூரத்தில் இருந்தது.
இந்த பயணங்களை மன்ஹாஸ் எவ்வாறு நிர்வகிக்கிறார்?
2007ம் ஆண்டு முதல் 2011 வரை பெங்களூரைச் சேர்ந்த அறிவு சார் நிறுவனமான க்ராஸ் ஸ்ட்ரீம் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அவர் பணியாற்றியபோது, வேலை நிமித்தமான பயணங்களின் போது, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவர் அச்சமயங்களில் தியாக குடும்பங்களை சந்திப்பார். 2011ம் ஆண்டில் அவர் ஜம்மு திரும்பியதும், தலாப் டில்லோவில் தனது சொந்த பயண நிறுவனத்தைத் தொடங்கினார். தன்னுடைய யாத்திரீகர்களின் பயண அட்டவணையை, தனது பயணங்களுக்கு ஏதுவாக வைத்துக்கொள்கிறார் .
தனது பயணங்களை அவர் தனது சொந்த செலவில் மேற்கொள்கிறார். பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் முடிந்தவரை, பல குடும்பங்களை சந்திக்க முயற்சிக்கிறார். அந்த குடும்பங்கள், அவருக்கு உறைவிடம் மற்றும் உணவை வழங்குகின்றன. அந்த வீரர்களின் படங்கள் மற்றும் கதைகள், சிறப்பு விஷயங்கள் மற்றும் அவர்களது பிறப்பு, இறப்பு ஆண்டு விழாக்கள் ஆகிவற்றை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகிறார்.
இந்தப் பயணங்களை அவர் எவ்வாறு திட்டமிடுகிறார் என்று கேட்ட போது, “துயரம் நடந்த ஆரம்ப வாரங்கள் அல்லது மாதங்களில், எந்தவொரு குடும்பத்தையும் நான் சந்திப்பதைத் தவிர்க்கிறேன். பலபேர் அவர்களை சந்திக்கும் காலம் இது " என்றார்
வழக்கமான பார்வையாளர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்குத் திரும்பும்போது, விகாஸ் வீரமரணம் அடைத்த வீரர்களின் குடும்பத்தை பார்க்க விரும்புகிறார். ஆரம்ப மாதங்கள் மட்டுமல்லாமல், அதன் பின்னரும் அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்படுவதால், அந்த நேரத்தை அவர் தேர்ந்து எடுக்கிறார்.
அவர் அவர்களைச் சந்திக்கும் போது, அந்தக் குடும்பத்தைச் சார்ந்த வீரரைப் பற்றிய பேச்சை முதலில் ஆரம்பிப்பதில்லை. வீரமரணம் அடைந்த மற்ற வீரரின் குடும்பங்களைப் பற்றி மிகவும் வேதனையான கதைகளைப் பேசுகிறார். பெரும்பாலான நேரங்களில், இது அவர்களின் வலியைக் குறைக்க உதவுகிறது.
கொல்லப்பட்ட வீரர்களின் கதைகளை ஒரு களஞ்சியம் அதாவது கேலரி மூலம் பகிர்ந்து கொள்ள மன்ஹாஸ் திட்டமிட்டுள்ளார். இது அந்த வீரர்களின், பதவி மற்றும் அவர்கள் வென்ற பதக்கங்களைப் பொருட்படுத்தாமல், அவர்களின் வீர சாகஸங்களைச் சொல்கிறது.
நிறைவாக அவர் கூறுகையில் “நீங்களும் நானும் நம் வீடுகளில் இருந்துகொண்டு பாதுகாப்பாக பேசும்போது, யாரும் நம்மை வேட்டையாடுவார்கள் என்று நாம் பயப்படவில்லை. ஒரு சிப்பாய் நம்மைக் காத்துக்கொண்டிருப்பதால் மட்டுமே அது சாத்தியமாகிறது. ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் அதிக சம்பளம் தரக்கூடிய வேலையை தேர்வு செய்யாமல், ஒரு இளைஞன் ஆயுதப்படையில் சேர முடிவு செய்தார். இந்த மாதிரி இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பை கைவிட்டுவிட்டார்கள், அதனால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். அவர்கள் எல்லையில் பரிதாபகரமான சூழ்நிலையில் வாழ்கிறார்கள், அதனால் தான் நாம் சுகமாக இருக்கிறோம். அவர்களுக்கு நம்முடைய நிதி உதவி தேவையில்லை, ஏனெனில் அரசாங்கம் அதை கவனித்துக்கொள்கிறது. ஆனால் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நாம் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்க வேண்டும். அதன் மூலம் தன் மகனின் தியாகம் வீணாகவில்லை என்று, எந்தத் தாயும் ஐயம் நீங்கப்பெறுவாள். அவர்களால் நேசிக்கப்பட்டவர்கள், உங்களுக்காகவும், எனக்காகவும் மற்றும் இந்த தேசத்துக்காகவும் செய்த தியாகத்திற்கு இது அர்த்தம் சேர்க்கிறது. ” என்றார்என்றார்